Saturday, December 27, 2008

ஒபயாஷி (தமிழில் படுத்தியிருக்கேன்)

இந்த எலிம் தேவாலைய வேலை இன்னும் சரியாக ஆரம்பிக்காத நிலையில் பொழுதை போக்குவது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது.வேலையிடத்தில் உள்ள தலையும் கண்டுக்கவில்லை (ஒரு வேளை அவருக்கே சரியான வேலை இல்லையோ என்னவோ!)

இப்படியே 1 மாதம் போன நிலையில் முன்பு நேர்காணல் செய்ய ஜப்பானிய நிறுவனம் "ஒபயாஷி" நிறுவனம் தொலைப்பேசி,வேலைக்கான ஆர்டரை வாங்கிச்செல்லுமாறு கூறியது.அவர்களிடம் இப்போது நான் சேர்ந்திருக்கும் வேலையை சொன்ன போது, வருகிறாயா அல்லது வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளவா என்று கொஞ்சம் கடுமையாக கேட்டார்கள்.இப்போதிருக்கும் நிறுவனத்தை விட பெரியது,சம்பளமும் அதிகம்,தொடர்ந்து வேலை இருக்கும் என்ற தொலை நோக்கில் எண்ணிப்பார்த்து, சரி வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றேன்.

தற்போது இருக்கும் இந்த நிறுவனத்திடம் எப்படி சொல்வது? அதுவும் என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் பெருந்தலையிடம்? ஆரம்பமானது சிக்கல்.முதல் இரண்டு நாள் மனைவியிடம் மட்டும் ஆலோசனை செய்தேன்.நல்ல வாய்ப்பை நழுவவிட மனசில்லாமல்,ராஜினாமா கடிதத்தை சைட்டின் தலையிடம் கொடுத்தேன்.அதை பார்த்துவிட்டு கூப்பிட்டு பேசினார்,ஒளிவு மறைவு இன்றி மொத்த தகவலையும் சொன்னேன்.கேட்டு விட்டு இன்னும் 1 வாரம் நன்றாக யோசித்துவிட்டு உன் முடிவை சொல் என்றார்.சொல்லி இரண்டாம் நாள் அவரிடம் போய் ,நான் முடிவு செய்துவிட்டேன் அங்கு போய் சேரப்போவதாகவும் இன்னும் 1 வாரம் இங்கிருப்பேன் என்றேன்.வேறு வழியின்றி சரி என்றார்.நான் கடிதம் கொடுத்த விஷயத்தை பெருந்தலையிடம் கொடுக்காமல் எப்படியாவது என்னை சரிகட்ட முடியுமா என்று பார்த்திருக்கார்.

அன்று, மாதம் ஒரு முறை நடக்கும் குத்தகைக்காரர்,கிளைன்ட் & கன்செல்டன்ட் மீட்டிங் நடந்துகொண்டிருந்த்து அதற்கு பெருந்தலையும் வந்திருந்தார்.எப்படியாவது அவரை சந்திப்பதை தவிர்க்கவேண்டும் என்று அங்கும்மிங்குமாக போய்கொண்டிருந்தேன்.விதி யாரை விட்டது. அவர் கிளம்பியிருப்பார் என்று நினைத்து நான் வெளியே வர அவர் என் எதிரே வர..

"என்ன? வேலை போரடிக்குதா?" என்றார்

"ஆமாம்" என்றேன்.

சரி வா மேலே மீட்டிங் நடக்குது உன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைகிறேன் என்று நான் வாய் திறப்பதற்கு முன்பு என்னை அங்கு இழுத்துப்போய் அவர்களிடம் சொல்லிவிட்டார்.எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை,வெறுமனே சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.பாவம் என்னை ரெக்கமன்ட் செய்தவரிடம் கூட சொல்லாமல் வந்துவிட்டேன்.என்னுடைய பைனல் பேமண்டை கூட அலுவலகத்து செல்லவிடாமல் சைட்டிலேயே கொடுத்துவிட்டார்கள்.

ஒபயாசி கம்பெனியில் வந்து சேர்ந்தேன்.இந்த சமயத்தில் கட்டுமானத்துறை வேலைகள் அவ்வளவாக இல்லை என்றாலும் சில கம்பெனிகளுக்கு மட்டும் வேலை இருந்துகொண்டிருந்தது அதில் ஒன்று தான் ஒபயாசி (Obayashi Construction Pte Ltd).மேல் நிலைகளில் ஜப்பனியர்கள் தான்.கீழ் நிலைகளில் பல நாட்டு மேற்பார்வை மற்றும் பொறியாளர்களும் வேலைபார்த்தார்கள்.

நான் சேர்ந்த்து சைனிஷ் ஸ்கொயர் என்னும் கடைத்தொகுதி கூடிய அலுவலக கட்டிடம்.இங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டினார்கள்.சில பழைய கட்டிடங்களை மேம்படுத்தி அப்படியே வைத்துவிட்டார்கள்.எங்கள் வேலை 2 பேஸ்மென்டுடன் 14 மாடி கட்டிடம்.



நன்றி:ராபர்ட் தாமஸ்

ஜப்பனியர்களை பற்றி சொல்லவேண்டாம் வேலை என்ற விஷயத்தில்,விடிய விடிய 2 மணி வரை வேலை செய்தாலும் காலை 7 மணிக்கு வந்து அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பார்கள்.முகத்தில் ஒரு அயர்ச்சி இருக்காது.நேரம் தவறாமை இவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்.அதே மாதிரி தலையை மதிக்கும் செயலை மிகவும் எதிர்பார்ப்பார்கள்.புதிய தலைமுறை மக்கள் சிறிது மாறுவது போல் தோன்றுகிறது.

இங்கு தான் நான் முதன் முதலில் ஒரு பொறியாளர் பட்டம் பெற்ற மனிதர் அதற்கு தகுந்த நிலையில் இல்லாததை கண்டு நம் கல்வி நிலை மிகவும் தரம் தாழ்ந்து வருகிறதோ என்ற எண்ணம் வந்தது.அதை ஒரு மேற்பார்வையாளர் கண்டு கொண்டு என்னை கூப்பிட்டு இவனுக்கு சொல்லிக்கொடு என்று அவனை இழிவுபடுத்தினார்.எனக்கு இருதலைகொல்லி மாதிரி ஆனது.என்ன தான் நண்பர் என்றாலும் அதை வேறொருவர் வந்து சொல்லிக்கொடு என்பது மிகவும் அவமானச் சொல் அல்லவா!!

நான் முதலில் அவனிடம் சொன்னது "தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லி கற்றுக்கொள்- தெரிந்த மாதிரி சொல்லி மாட்டிக்கொள்ளாதே".நாங்கள் எல்லோருமே ஏதோ விதத்தில் அவமானப்படுத்தப்பட்டே கற்றுக்கொடுக்கப்பட்டோம் என்று சொல்லி அந்த வேலைக்கு தேவையான விபரங்களை சொல்லிக்கொடுத்தேன்.இப்போது அவன் நல்ல சம்பளத்தில் வேலையில் உள்ளான்.இந்த சூழ்நிலைக்கு பிறகு நம்நாட்டில் இருந்து வரும் பல பொறியாளர்களை உற்றுப்பார்த்து கவலை படவேண்டியிருக்கு.நமது கல்விச்சாலை சரியாக சொல்லிக்கொடுக்க பயன்படுத்தப்படுவதில்லையோ என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.ஆசிரியர்களுக்கு அடிப்படை தகுதியில்லாமல் சொல்லிக்கொடுக்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது.இது ஒரு விதத்தில் நம் தேசத்தின் மீது உள்ள வெளிநாட்டவரின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவருகிறது. மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம்.

இவன் இப்படி இருந்த பட்சத்தில் ஒரு உள்ளூர்காரனுக்கு வேலை கற்றுக்கொடுத்து அவன் வேலையையும் சேர்த்து பார்த்துக்கொண்டிருந்த என்னையே பிறரிடம் போட்டுப்பார்த்து என் வேலைக்கு உலை வைத்த ஆட்களையும் இங்கு யோசித்துப்பார்க்க வேண்டிவந்தது.முதுகில் குத்தும் வேலை என் துறையிலும் உண்டு.

இந்த கம்பெனியில் இந்த வேலையில் சுமார் 3 வருடங்கள் இருந்தேன்.இது முடிவடையும் நேரம் திரும்பவும் வேலை பிரச்சனை ஆரம்பமானது.கட்டுமானத்துறையில் இருந்த சுணக்கம் இன்னும் மீண்டபாடில்லை என்பது என்னை மீண்டும் வேலையில்லாதவனாக்கியது.

ஒபயாசியில் இருந்த காலம்வரை நல்ல சம்பளம் கிடைத்தது.மேற்பார்வையாளர்களுக்கும் ஓவர் டைம் கிடைக்கும் என்ற நிலையை இந்த நிறுவனத்தில் மட்டுமே பார்க்கமுடிந்தது.

பயணம் தொடர்கிறது.

Wednesday, December 24, 2008

எலிம் தேவாலயம்

கொஞ்ச நாளாக துபாய் பதிவாக போட்டுக்கொண்டிருந்த்தால் இந்த சொந்தக்கதை தேங்கிவிட்டது.

இதன் முந்தைய பதிவு இங்கே.


புது நிறுவனத்தில் சேரும் நாளும் வந்தது.அவர்கள் வேலை நடக்கும் இடம் சிரங்கூன் சாலையில் இருக்கும் எலிம் தேவாலயத்துக்கு நேரே வரச்சொல்லிவிட்டார்கள்.வேலை இன்னும் அவ்வளவாக ஆரம்பிக்காத நிலை.வேலையிடம் மண் மிகவும் இளகிய தன்மையுடன் இருந்ததால் அதை
கெட்டிப்படுத்த ஜெட் கிரவுட்டிங் என்னும் முறையில் சிமிண்டை மண்ணுக்குள் செலுத்தி அதை மேம்படுத்தினார்கள்.

இதன் மேல் விபரங்கள் படங்களுடன் அழகாக இங்கு கொடுத்திருக்கார்கள்,ஆர்வம் உள்ளவர்கள் போய் பார்க்கலாம்.

அதன் தொடர்பில் சில படங்கள் கீழே..





இந்த வேலையிடத்தில் இதை சுமார் 12 மீட்டர் ஆழத்திலிருந்து செய்ததாக எண்ணம்.அதில் எனக்கு அவ்வளவாக வேலையில்லை பொழுது போக வரப்போகும் கட்டிடத்தின் வரைபடங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்படியே சுமார் 1 மாதம் ஓடியது

துபாய் மெட்ரோ

துபாய் கடந்த சில வருடங்களாக பொதுபோக்குவரத்துக்கு மதிப்புக்கு மரியாதை கொடுத்து பல திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்துவருகிறது.அதில் ஒன்று தான் மெட்ரோ.இதன் குத்தகை மதிப்பு 5.5 பில்லியனாம்.

இங்குள்ள பல முக்கிய சாலை வழியே மெட்ரோ போவதால் அங்கங்கு தடுப்புகள் வைத்து சாலை போக்குவரத்தை சரி செய்கிறார்கள்.

ஒரு நாள் இங்குள்ள விரைவுச்சாலையில் போய்கொண்டிருக்கும் போது சாலையின் நடுவில் தலைக்கு மேல் ஒரு கான்கிரீட் பிளாக் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்தபோது அசந்தே போய்விட்டேன்.அப்போதிலிருந்தே இதை எப்படி செய்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.அதன் மூலம் தெரிந்த வந்த தொழிற்நுட்பம் இது தான்.

சரி,நம்முடைய கட்டுமானத்துறையில் இதை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போமா?

இப்படி தூண் எழுப்புவது வரை எல்லா இடங்களில் செய்வது போல் பைலிங் அதன் மீது அஸ்திவாரம் மற்றும் தூண் என்பது தான்.



அதற்குப்பிறகு தான் நிஜ வேலையே.கீழே உள்ள Pre-cast ஸ்லேப் தான் வண்டி ஓடக்கூடிய வாய்கால் மாதிரியான அமைப்பு.இதை ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் கானிகிரீட் போட்டு இதை தூக்கி நிறுத்தக்கூடிய இடத்துக்கு கொண்டுவருகிறார்கள்.



மேலே உள்ள படத்தை பெரிதுபடுத்தி பார்த்தால் இதில் உள்ள தொழிற்நுட்பம் தெரிந்துபோகும்.இதில் தெரியும் பல வகை துளைகளுக்குள் தான் இதை ஒரு யுனிட்டாக நிலைநிறுத்தக்கூடிய ரகசியம் அடங்கியிருக்கிறது.

இரண்டு தூண்களுக்கிடையே இந்த மாதிரி பிரேம் வைத்து அதற்கு மேல் நகரக்கூடிய அமைப்புடன் இன்னொரு பிரேம் இருக்கும்.அதிலிருந்து தொங்கக்கூடிய வைகையில் இந்த Pre-cast சிலாபுகளை ஒவ்வொன்றாக தூக்கி ஒன்றோடு ஒன்று இருக்கி பிறகு தூணின் மீது வைக்கிறார்கள்.எல்லா சிலாபுகளையும் இணைக்க Post-tensioning முறைப் படி செய்கிறார்கள்.

சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

ஆரம்ப நிலை



இன்னும் பக்கத்தில் பார்க்க..



தூணுக்கு பக்கத்தில் உள்ள அமைப்பு



மற்றொரு கோணத்தில்



கீழே உள்ள படத்தில் மேலே உள்ள தாங்கிப்பிடிக்கும் பிரேமும் சிலாபுகள் வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.



மூன்று ஸ்பேன்கள் நிறுவப்பட்ட நிலையில்..



அடுத்த நிலைக்கு தயாராகி சாலையின் மேல் நீட்டிக்கொந்திருக்கும் ஸ்டீல் பீம்கள்.

Thursday, November 27, 2008

சரிவு- இது கான்கிரீட்டில்

இப்ப உலகம் முழுவதும் நிதிநெருக்கடியால் பல வேலை இழப்புகள்,கம்பெனிகள் மூடல் அது இது என்று சரிவுகளின் ராஜ்யமாக இருக்கு, ஆனால் நான் சொல்லப்போவது கான்கிரீட்டில் சரிவு.

பெரிய பெரிய வேலைகளில் தினமும் கான்கிரீட் வந்துகொண்டிருக்கும் இதெல்லாம் பெரிய பிளான்டுகள் மூலம் போட்டு மிக்ஸ் செய்திருந்தாலும் போடும் இடத்துக்கு வரும் போது அது சரியான நிலையில் தான் இருக்கா என்று பார்க்க ஒரு சின்ன சோதனை இருக்கு,அதுக்கு பேரு சரிவுச்சோதனை (SLUMP TEST)

அதை எப்படி செய்கிறார்கள் என்பதை என்னுடைய தொலைப்பேசி மூலம் எடுத்து ஏற்றிருக்கிறேன் அதனால் தரம் ஓரளவே இருக்கும் என்று நினைக்கிறேன்.



முதலில் அந்த கோனை வைத்து அதனை மூன்று முறையில் நிரப்பவேண்டும்,ஒவ்வொரு முறையும் அந்த கம்பி(16 மி.மீட்டர் விட்டம்) யால் 24 முறை குத்த வேண்டும்.முடிந்த பிறகு மேல்மட்டத்தை சம்மாக வைத்துவிட்டு அந்த கோனை மெதுவாக எடுக்கவேண்டும்.
எடுத்த பிறகு அந்த கம்பியை மேல் வைத்து அதன் கீழ்மட்டத்தில் இருந்து கான்கிரீட்டின் மேல் முனைவரை அளக்கவேண்டும்.இது பொறியாளர் கொடுத்திருக்கும் அளவுக்குள் இருந்தால் கான்கிரீட்டை அனுமதிக்கவேண்டும் இல்லையென்றால் தூக்கிப்போடவேண்டியது தான்.தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் கான்கிரீட் இந்த சோதனையில் தோல்விஅடையும்.

நிரம்ப சொல்வதற்கு இருந்தாலும் போர் அடிக்கும் என்பதால் மேலோட்டமாக சொல்லியுள்ளேன்.

Wednesday, November 26, 2008

கான்கிரீட் குயூப்

போடுகிற கான்கிரீட் பொறியாளர் நிர்ணயம் பண்ண அளவில் தான் இருக்கா என்று கண்டுபிடிக்க கீழே உள்ள நகர் படத்தில் காண்பித்துள்ள மாதிரி சின்ன சின்ன குயூபாக கான்கிரீட் சிலவற்றை போட்டு அதை தண்ணீரில் மூழ்கவைத்து, ஏழாவது நாளிலும் இருபத்தியெட்டாவது நாளிலும் சோதனை செய்வார்கள்.இந்த சோதனைக்கு குயூப் அழுத்தச்சோதனை என்று பெயர்.



ஏழாவது நாளில் செய்யப்படும் சோதனையில் அதன் நிர்ணயப்பட்ட அளவில் சுமார் 80 விழுக்காடு இருக்கனும்.28 நாட்களில் அதன் தர நிர்ணய அளவை அடைந்துவிடவேண்டும்.பொதுவாக 7 நாளிலேயே 28 நாள் அளவை அடைந்துவிடும்.

இந்த குயூபின் அளவு 150x150x150 மி.மீட்டர்.இதனுள், வண்டியில் வரும் கான்கிரீட்டில் இருந்து கொஞ்சம் எடுத்து சிறிது சிறிதாக போட்டு அதற்கென்று உள்ள கம்பியால் குத்தி பிறகு சமப்படுத்துவார்கள்.இது போட்டு முடிந்த பிறகு 24 மணி நேரம் கழித்து பிரித்து எடுத்து தண்ணீரில் ஊற வைப்பார்கள்.



பட உதவி: இணையம்.

சிறிய வீடுகளில் போடப்படும் கான்கிரீட் அளவு குறைவு என்பதால் இப்படிப்பட்ட சோதனைகள் செய்வதில்லை.தரமான கான்கிரீட்தானா என்பதை நிர்ணயம் செய்துகொள்ள இது தான் முதற்படி.

Tuesday, November 11, 2008

துபாய் சித்தாள்

இது தான் துபாய் சித்தாள். :-)
இங்கு, அதுவும் கட்டுமானத்துறை வேலையிடங்களில் சித்தாள் அல்லது உதவியாளர் வேலையில் சித்தாள் என்பவரை பார்க்கவே முடியாது.சிங்கையில் வேலைசெய்யும் இடங்களில் அபூர்வமாக ஓரிருவரையாவது இந்த நிலையில் பார்க்கமுடியும்.
இந்த குறையை சாதனங்கள் மூலம் சரி செய்துக்கொள்கிறார்கள்.நான் தினமும் வரும் வழியில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வேலையிடத்தில் இந்த சாதனத்தை பார்த்தேன்.இதன் மூலம் சிமின்ட்/மணல் முதலியவற்றை தரையில் இருந்து வேலையிடத்துக்கு தூக்கிச்செல்ல இது உதவுகிறது.மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டர் மூலம் இந்த வேலையை செய்யமுடிகிறது.




அருகில்






எளிமையான டிசைன் மற்றும் துரிதமாக மாட்டி/கழற்றக்கூடிய முறை என்றபட்சத்தில் இது ஒரு வரப்பிரசாதம் போலவே தோன்றுகிறது.இதன் மூலம் டவர் கிரேனோ அல்லது வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் பிளாட்பாரமோ தேவையில்லாமல் போகிறது.

Thursday, November 6, 2008

MTR- உடனே சாப்பிடலாம்

நீங்க பிரம்மச்சாரியா அதுவும் துபாயில் ஒரு மூலையில் வேலையா?மதிய சாப்பாடு கையில் எடுத்துப்போகமுடியாத நிலையா? இப்படியெல்லாம் இருந்தா இது தான் சரியான சாப்பாடுக்கான வழி- எனக்கு தெரிந்தவரை.
சிஙகையில் இருந்த போது எப்போதாவது என் சமையல் மீதே எனக்கு வெறுப்பு வரும் போது இதைத்தான் நான் பெரிதும் நாடினேன்.


நன்றி:பிகேபி
இங்கு வந்ததும் முதலில் தேடியதும் இதைத்தான் ஆனால் கிடைக்கவேயில்லை.
எல்லாம் கிடைக்கும் நம்ம பிகேபி குழுமத்தில் இதைக்கேட்ட போது அங்கு வந்த திரு ஆசாத் அது கிடைக்கும் இடங்களை பட்டியலிட்டிருந்தார்,அதில் ஓரிடம் நான் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் அது கிடைக்கவில்லை.



இப்படியே அலைந்துகொண்டிருக்கும் போது கராமா என்ற இடத்தில் நம் தேவைக்கு ஏற்ற மாதிரி அறை எதுவும் கிடைக்குமா? என்று பார்க்க சுற்றிக்கொண்டிருக்கும் போது ஏதேச்சையாக இந்த கடைக்குள் நுழைந்தேன்.அப்படியே சுற்றிய போது நான் தேடிய எம்.டி.ஆரின் பலவகை "உடனடியாக" சாப்பிடலாம் வகை உணவுகள் கிடைத்தது.

உங்களுக்கும் தேவைப்பட்டால் இங்கு போய் வாங்கிக்கொள்ளலாம்.என்னதான் சமயத்துக்கு உடனடியாக சாப்பிடலாம் என்றாலும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.

Sunday, November 2, 2008

தண்ணீர் உறிஞ்சி

கட்டுமானம் கடலுக்கு பக்கத்திலா அல்லது தண்ணீர் மட்டம் தரைக்கு அருகில் இருக்கிறதா? இந்த மாதிரி நிலைமையில் அஸ்திவாரம் போடவேண்டும் என்றால் அதுவும் 3 அல்லது 4 மாடி கீழேயே இருக்கும் நிலைவந்தால் இதைவிட சிறந்த முறை இதுவரை நான் காண்வில்லை.

இந்த முறையில் தரைக்கு கீழே உள்ள தண்ணீர் மட்டத்தை நாம் வேலை செய்யப்போகும் நிலைக்கு கீழே கொண்டு செல்லமுடியும். எப்படி?வாங்க பார்க்கலாம்.

இதற்கு தேவை சில பிளாஸ்டிக் பைப்புகள்,இணைப்பு பைப்புகள் ஒரு சிறந்த பம்ப்,அவ்வளவு தான்.

செயல்முறை:கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




தண்ணீர் மூலம் நாம் அடையவேண்டிய ஆழத்துக்கு ஒரு துளை போடவேண்டும்.அந்த தண்ணீர் வேகம் இருக்கும் போதே நீலக்கலரில் இருக்கும் பைபையும் சொருகிவிடவேண்டும்.இது மிக எளிதான பணி.பைபை வைத்தவுடன் தண்ணீரை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பைபை சுற்றி சிறிது ஜல்லி(10மி.மீட்டர் அளவு) கொட்டவேண்டும்.

கீழே உள்ள படம் தான் அந்த பிளாஸ்டிக் பைப்பின் மண்ணுக்கு அடியில் இருக்கும் பகுதியை காண்பிக்கிறது.பெரிதாக்கி பாருங்கள் அந்த பைப்பில் 2 மி.மீட்டர் கணத்துக்கு வெட்டிவிட்டிருப்பார்கள்.இது தண்ணீர் அந்த பைப்பினுள் போவதற்கு உண்டான வழியை ஏற்படுத்திக்கொடுக்கிறது.



கீழே உள்ள படம் சில பைப்புகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையை காண்பிக்கிறது.



இப்போது இந்த பைப்புகளை ஒரு பெரிய பைப் மூலம் இணைக்கவேண்டும்.முக்கியமாக வெளிக்காற்று இந்த பெரிய பைப்பினுள் போகக்கூடாது.


இப்போது சிறிய பைப்பை பெரிய பைபுடன் இணைத்துவிட்டார்கள்.


இது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட படம்.


இது தான் காற்று/மற்றும் தண்ணீரை வெளியேற்றும் பம்பு.
வெளிக்காற்று பெரிய பைபினுள் போகாத நிலையில் அந்த பைப்பினுள் உள் இருக்கும் தண்ணீர் தொடந்து வெளியேறிக்கொண்டு இருக்கும்,இதனால் நில நீர்மட்டம் தரை மட்டத்தில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும்.

இதே முறையை நான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு காக்கிநாடாவில் பார்த்திருக்கேன்,அப்போது படம் எடுக்கும் கருவியில்லாத்தால் விரிவாக சொல்லமுடியவில்லை .

Saturday, November 1, 2008

மண் தோண்டி

போன பதிவில் சுற்றுச்சுவரை எப்படி எழுப்புவது என்று பார்த்தோம் அதில் உபயோகப்படும் இயந்திரம் மண்ணுக்கு அடியில் எப்படி வேலை செய்யும் என்பதை வெளியில் வைத்து எடுத்த நகர்படம் இங்கே.



இதன் மத்திய பகுதியில் இருந்து பென்டோனைட் தண்ணீர் கலந்து மண்ணை கரைக்கும் பிறகு அதையே வெளியேற்றி அதினிலிருந்து மண்ணை எடுத்து பென்டோனைட் தண்ணீரை மறுபயணீடு செய்வார்கள்.

Sunday, October 26, 2008

டையபரம் வால் (சுற்றுச்சுவர்)

ஒரு கட்டிடம் அதுவும் தரைக்கு கீழே 5 மாடி அளவுக்கு போனால் இது மாதிரி சுற்றுச்சுவர் எழுப்பவேண்டியது அவசியமாகிறது,அதுவும் பாலைவன மணல் இருக்கும் இடத்தில் இது கட்டாயம்.

அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போமா?

சுமார் 18 மீட்டர் ஆழத்தில் தான் அஸ்திவாரம் அமையப்போகிறது என்று தெரிந்தவுடன்,மண் தண்மையை பொறுத்து எவ்வளவு ஆழத்துக்கு இந்த சுற்றுச்சுவர் வேண்டும் அதன் அகலம் எவ்வளவு இருக்கவேண்டும் என்று பொறியாளர்கள் முடிவு செய்வார்கள்.இந்த சுவரை சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கு முதலில் தற்காலிக சுவர் சுமார் 1.50 மீட்டர் உயரத்துக்கு எழுப்புவார்கள்.இதனுள் தான் மண் தோண்டும் இயந்திரம் இறங்கி வேலை செய்யும்.எளிதாக சொல்வதென்றால் Guide Wall என்பார்கள்.

இது மண் தோண்டும் முதல்கட்ட வேலை.



சுற்றுச்சுவர் மண்தோண்டும் வேலை ஆரம்பிக்கிறது.



சுவருக்கான கம்பி இறக்கும் பணி



சுவரின் நீளம் அதிகம் என்பதால் இந்த பணி முடிந்ததும் பக்கத்திலேயே ஆரம்பிக்க மாட்டார்கள்,சில மீட்டர் விட்டு மீண்டும் தோண்டுவார்கள்.



ஆமாம் இந்த மாதிரி தோண்டும் கீழே மணல்/மண் சரியாதா என்று தோன்றினால் உங்கள் எண்ணம் சரி தான்.நிச்சயம் சரியும் அதை ஓரளவுக்கு கட்டுப்படுத்த பெப்டோனைட் எனப்படும் கலவையை தண்ணீருடன் கலந்து இயந்திரத்தின் உதவியுடன் தோண்டுவார்கள்.இந்த பென்டோனைட் மண் சரிவை ஓரளவு கட்டுப்படுத்துவதுடன் மணலை கொஞ்சம் இறுகப்படுத்தும்.

கீழே கொடுத்துள்ள இயந்திரம் இந்த வேலையை செய்யப்பயண்படுத்தப்படுகிறது.



இதன் அடிப்பாகத்தில் உள்ள சக்கரம் சுழல சுழல மண் மற்றும் பாறைகளை உடைத்து தண்ணீருடன் கலந்து இருக்கும் இடத்தில் இருந்து மேலே உள்ள தொட்டிக்கு ஏற்றிவிடும்.



இது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்குவதை பார்க்கலாம்.



கம்பி இறக்குவதை கீழுள்ள படங்களில் பாருங்கள்.கொஞ்சம் உண்ணிப்பாக பார்த்தால் இது தூக்கப்படும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை காணலாம்.





ஒரு பாகம் முடிந்து நம்மாள் வெளியே வருகிறார்.சுவர் இருக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கியிருப்பதையும் காணலாம்.


ஒரு சுவர் 6~7 மீட்டர் நீளத்துக்கு போட்டபிறகு,சுமார் 20 மீட்டர் தள்ளி அடுத்த சுவர் போட மேல் சொன்னமாதிரி ஆரம்பிப்பார்கள்.இந்த சுழற்சியை கீழ்கண்ட படங்கள் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
இந்த சுவருக்கு கான்கிரீட் போடும் முறை...கீழே
இரண்டு பக்கமும் கான்கிரிட் இருக்கும் போதும் இந்த இயந்திரம் மண் தோண்டமுடியும்.


தோண்டியதும் மறுபடியும் கம்பி இறக்குதல்
கான்கிரீட் போடப்படுகிறது

இப்போது முழு சுவரும் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மண் தோண்டப்பட்டு கட்டிடம் வெளிவரும்.

18 மீட்டர் உயரம் உள்ள சுவருக்கு முட்டு வேண்டாமா?
வேண்டும் அது செய்யும் போது சொல்கிறேன்.இதை இங்கு வேறுவிதமாக செய்கிறார்கள்.

Sunday, October 19, 2008

படங்கள்

துபாயில் அவ்வப்போது நண்பர்கள் மூலம் வெளியில் போகும் போது எடுத்த படங்கள் சில கீழே..

கோல்ட் சோக் பக்கம் பொழுது போகாமல் சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த கார் நடைப்பாதை மேல் ஏற்றியிருந்தது வித்தியாசமாக இருந்தது ஆனால் இப்போது பழக்கமாகிவிட்டது.வண்டி நிறுத்த இடமில்லாததால் ஏற்றிவிடுகிறார்கள்.



நடைப்பாதை மேம்பாலத்தில் இருந்து எடுத்தது.இப்படி போக்குவரத்து இருக்கவேன்டும் என்று பிரம்பபிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.



ஐகியா கடைத்தொகுதியின் நுழைவாயிலில் உள்ள அலங்கார விளக்குகள்.



மறுபகுதி.



பாம் ஜுமாரியா போன போது கடலை தூர்ந்தெடுத்து பல விடுதிகளை அமைத்துள்ளார்கள்.ஐரோப்பியா உள்ள மாதிரி வடிவமைத்து வீடு கட்டி/கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.வீடு ஒவ்வொன்றும் மில்லியனுக்கு மேல் போகுதாம்.



இந்த கடலில் விரைவுப் படகு சேவை நடந்துகொண்டிருக்கிறது.

Wednesday, October 15, 2008

பாலைவனத்தடங்கள்

இங்கு வந்த சில நாட்கள் கழித்து வேலைசெய்யும் இடத்துக்கு காலை 8 மணிக்கு போகும் போது ஓரிடத்தில் இந்த தடங்களை பார்த்தேன்.

என்ன தான் பாலைவனமாக இருந்தாலும் இங்கும் பலவிதப்பட்ட பறவைகளும் மிருகங்களும் வாழுகின்றன அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ முற்படுகின்றன.

ஆச்சரியமான இயற்கை!!

விஜயதசமி

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த நிலையம் குழந்தைகள் பலருக்கும் கலை சார்ந்த பலவற்றை கற்றுக்கொடுத்து வாழவைத்து வருகிறார்கள்.

விஜயதசமி அன்று மாலை அங்கு வருமாறு அழைந்த உறவினர் அங்கு கச்சேரி நடக்கும் என்று சொல்லவில்லை,சொல்லியிருந்தால் அந்த பக்கமே போயிருக்கமாட்டேன்.எனக்கும் கர்நாடக சங்கீததுக்கும் ரொம்ப தூரம்.

இடத்தை கண்டுபிடித்து கதவை திறந்த போது வந்த வயலின் சத்தம் என் காதையே துளைப்போட்டு விடும் போல் இருந்தது.எப்படி இவ்வளவு சத்தமாக வைத்து ஒரு சிறிய அறையில் 25 பேர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வியந்தேன்.

சில நொடிகளிலேயே நெளிய ஆரம்பித்துவிட்டேன் இருந்தும் படத்தில் இருக்கும் பெண்ணை உற்சாகப்படுத்த சிறிது நேரம் உட்காந்துவிட்டு வந்தேன்.


Thursday, October 9, 2008

புர்ஜ் துபாய் கோபுரம்

இங்கு(துபாய்) வந்த கொஞ்ச நாள் வரை இந்த கோபுரம் எங்கு இருக்கிறது தேடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வேலை முடிந்து சைட்டைவிட்டு வெளியேறும் நேரத்தில் எதேச்சையாக திரும்பிய போது மங்கலாக ஏதோ தெரிந்தது.நடந்து பஸ் நிறுத்தம் போனபிறகு சற்று சூரியன் கீழிறங்கியவுடன் அந்த கோபுரத்தின் மேல் நிற்கும் பாரம் தூக்கியும் தெரிந்தது.இது தான் இப்போதைக்கு உலகத்திலேயே உயரமான கோபுரம் (600 மீட்டருக்கு மேல்).

பகல் முழுவதும் ஒரு மாதிரியான மணல் காற்று வீசிக்கொண்டு இருப்பதால் தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சரியாக தெரிவதில்லை.

கீழே உள்ள படம் நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து எடுத்தது...உங்கள் பார்வைக்காக.



இந்த ஊரைவிட்டு கிளம்பும் முன்பு இதன் மேல் ஒரு தடவையாவது ஏறிவிடவேண்டும்.

Monday, September 15, 2008

வானம் வசப்படும்.

வான்வெளி - இதைப் பற்றி எப்போது அன்னாந்து பார்க்க ஆரம்பித்தேன்? நினைவை அப்படியே கொஞ்சம் பின்னோக்கி இழுத்துப்பார்த்தால்....

நாகப்பட்டினம், வயது 13 அல்லது 14 இருக்கும்.வீட்டின் முற்றத்தில் என் தாத்தா சேரில் உட்கார்ந்திருக்கார்,என் அப்பா வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக இருக்கார்.மணி இரவு 8 மணியிருக்கும்.அப்போதெல்லாம் இரவு சாப்பாடு 7 மணிக்கே முடிந்துவிடும் படுக்கும் வரை வெளியில் தான் இருப்போம்.அப்படி நான் தெருவுக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருக்கும் வேளையில் என் தாத்தா கூப்பிட்டு “இந்த நட்சத்திரம் பற்றி ஏதாவது தெரியுமா?” என்றார்.

அப்போது தான் மேலேவே பார்க்க ஆரம்பித்தேன்.அவர் கற்றுக்கொண்ட விதத்தில் எனக்கு சொல்லிக்கொடுத்தார்.அன்று ஆரம்பித்தது இந்த பழக்கம்.சிங்கை வரும் வரை சந்திரனின் தேய்பிறை/வளர்பிறை எப்படி என்று யோசித்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.நின்று பார்த்தால் இப்படியா அல்லது படுத்துக்கொண்டு அதன் அச்சில் பார்க்கவேண்டுமா? என்று பலவித குழப்பங்கள்.

ஒரு வழியாக பல நூலக புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் என் சந்தேகம் தீர்ந்தது.

இந்த அடிப்படையிலேயே இதைப் பற்றி எழுதும் திரு ஜெயபாரதன் மற்றும் குருவி ஆகியோர் பதிவுக்கு அடிக்கடி செல்வதுண்டு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைநோக்கி வாங்கிய போது அதன் மூலம் என்னுடைய புரிதல் இன்னும் பன்மடங்காயிற்று.இருந்தாலும் பல புத்தகங்களில் வரும் மேப்பை பார்க்கும் போது தலைச்சுற்றும்,இதை வீடியோ மூலம் யாராவது சொல்லிக் கொடுக்கமாட்டார்களா? என்று தேடி அலைந்து விட்டுவிட்டேன்.

நேற்று பிபிசியின் ஒரு நகர்படம் பார்க்க நேர்ந்தது அதில் வந்த ஒரு காட்சி எனக்கு என்ன தேவையோ அதை அப்படியே அழகாக சொல்லியிருந்தார்கள்,அது உங்கள் பார்வைக்காக....

ஆர்வம் உள்ள்வர்கள் பார்த்து மகிழுங்கள்.



நன்றி:பிபிசி4

Sunday, September 7, 2008

மறுபடியும் வேலை போச்சு (கி.பி.2000)

இதன் தொடர்பில் உள்ள முந்தைய பதிவு.
அடையாள அட்டை போய் வேறு புதிய அட்டை கிடைத்த கொஞ்ச மாதங்கள் வரை பழைய அட்டையாள் எந்த பிரச்சனையும் வரவில்லை.
ஒரு நாள் அஞ்சல் பெட்டியை திறந்து கடிதங்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு வரும் போது,தொலைப்பேசி நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.(அந்த சமயத்தில் (தொலை அழைப்பான்)பேஜர் மட்டுமே வைத்திருந்தேன்.முதலில் பார்க்கும் போது ஏதோ விளம்பரத்துக்காக அனுப்பியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்திருந்தேன்.வரி வரியாக பார்க்கும் போது சுமார் 183 வெள்ளிக்கு என் பெயரில் பில் இருந்தது.இதென்னாடா கூத்து? என்று முதலில் அதிர்ந்தேன்.தொலைப்பேசி நிறுவனத்தை அழைத்து இப்படி ஒரு நிலுவை வந்திருக்கு இந்த தொலைப்பேசி நான் வாங்கவில்லையே என்றேன்.அவர்கள் என்னுடைய அடையாள அட்டை இதற்கு முன்னால் தொலைந்து போனதா? என்று கேட்டார்கள்.அதன் பிறகு தான் எனக்கே உறைத்தது.அட பாவி மக்களா? என்று நினைத்து அவர்களிடமே நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று கேட்டவுடன்,உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.அது ஒரு வழியாக சுமூகமாக முடிந்தது.

அடுத்து வேறொரு நிறுவனத்திலும் கைவரிசையை காட்டியிருந்தார்கள் அது எனக்கு 6 வருடங்கள் கழித்து தான் தெரியவந்தது அதுவும் இது போல் செய்து சரி செய்தேன்.

அதற்குப்பிறகு இன்று வரை வேறொரு பிரச்சனையும் வரவில்லை.

இதற்கிடையில் நான் பார்த்த கம்பெனியில் வேலைகள் இருந்தாலும் ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் வேலை செய்யவேண்டியிருந்தது.வெளி நிலவரம் வேலைக்கு மனு செய்வதற்கு ஏற்ற நிலையில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சில நிறுவனங்களுக்கு தொடர்ந்து மனு போட்டுக்கொண்டிருந்தேன்.அதில் ஒரு நிறுவனம் அழைத்தது,அளவில் சிறியது ஆனால் அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனர், ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டியது.

அந்த நிறுவனத்தின் தலைவர் கூப்பிட்டு நாம் ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து பேசலாம் என்று சொல்லி நேரத்தையும் குறித்துக்கொண்டார்.அவர் சொன்ன இடம் அவர் நிறுவனத்தின் ஒரு பகுதி.அந்த நாளில் சுமார் மாலை 6.30 மணிக்கு போனேன்.அவர் மட்டும் தான் இருந்தார்.பொதுவான விபரங்களை பேசிவிட்டு காத்திருக்கும் போது இன்னும் இருவர்கள் உள்ளே வந்தார்கள்.அந்த அறையில் ஏற்கனவே இருந்த சிகரேட் நொடி இன்னும் போகாமல் அடம் பிடித்தது.அதுவும் குளிர்சாதனம் வேறு இருந்ததால் உள்ளே இருந்த காற்றில் அப்படியே தங்கிவிட்டது.இது போதாது என்று மீண்டும் சிகரெட் பற்ற வைத்தார்கள், எனக்கு உள்ளுக்குள் புகைய ஆரம்பித்தது.
பொதுவான விஜாரிப்புகள் முடிந்தவுடன்
கேட்ட முதல் கேள்வி
இப்ப நமக்கு ஒரு சைட் கிடைத்திருக்கு,முதலில் என்ன செய்வாய்? என்றார்.

சிங்கப்பூரை பொருத்தவரை எங்கள் வேலையிடத்துக்கு முதல் முக்கிய தேவை நுழையும்/வெளியேறும் வழி தான்.இதில் சறுக்கினால் அந்த வேலை முடியும் வரை தலைவலி தான்.அது பல வேலைகளில் பார்த்ததால் என்னுடைய அனுமானத்தையே பதிலாகவும் சொன்னேன்.

ஒரு சில வினாடிகள் கழித்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்காத குறையாக மற்ற இரு அதிகாரிகளைப் பார்த்து நான் அப்போதே சென்னேன் பார்த்தீர்களா? என்று பரவசப்பட்டார்.அவர் மனதில் இருந்த எண்ணம் அப்படியே என்னிடம் வெளிப்பட்டதால் அவருக்கு பயங்கர சந்தோஷம்.அப்போதே என்னுடைய வேலை முடிவாகிவிட்டது,இருந்தாலும் அப்படி இப்படி என்று நேர்காணல் ஒரு மணி நேரம் ஓடியது.வேலை மேலாண்மைப் பற்றிய விபரங்கள் அது இது என்று கேட்டு சம்பள விஷய்த்தில் வந்து நின்றது.நான் கேட்ட சம்பளமும் அவர்கள் கொடுப்பதாக சொன்னதும் சரியாகவரவில்லை.அதிகமான சம்பளம் கொடுப்பதில் உள்ள பிரச்சனையை அவர்கள் சொன்னார்கள்.அதிக வருடங்கள் தொடரும் பட்சத்தில் வேறுமாதிரி உயர்த்திக்கொடுப்பதாக சொன்னார்கள்.எனது மனம் கணக்கு போட்டது.இப்போது இருக்கும் நிறுவனம் இருக்கும் நிலமை சரியில்லை அதோடு சம்பளமும் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் மாதிரியில்லை.
இந்த சூழ்நிலையில் நிறுவனம் மாறும் போது சம்பள உயர்வு இல்லாதது உறுத்திக்கொண்டு இருந்தது,அதோடு இந்த நிறுவனத்துக்கு இன்னும் 5 ஆண்டுகளுக்கு வேலை இருக்கும் என்ற உறுதி மொழிவேறு என்னை ஆட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தது.

வருவது வரட்டும் என்று அவர்கள் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு இன்னும் ஒரு மாதத்தில் சேர்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இதற்கிடையில் மற்றொரு ஜப்பானிஸ் நிறுவனத்துக்கு சென்ற நேர்காணல் முடிவு பற்றி ஒன்றும் தெரியாமல் இழுத்துக்கொண்டிருந்தது.

வேலை விலகல் கடிதம் கொடுத்து நோட்டிஸ் கால வரையான 1 மாதம் முடிவுக்காக காத்திருந்தேன்.

Sunday, August 24, 2008

கான்கிரீட் பக்கெட்

போனமாதத்தில் யாரோ ஒருவர் துபாயில் வேலை செய்யும் தொழிலாளர்பிரச்சனை எழுதி ஒரு படம் போட்டிருந்தார்,அதில் கான்கிரீட் போடும் பக்கெட்டில் ஆள் இருப்பதாக இருந்தது.அந்த விதிமுறை எனக்கு தெரிந்தவரை சிங்கையில் அனுமதியில்லை.

போனவாரம் கோமளவிலாஸ் சாப்பாட்டுக்கடையில் உட்கார்ந்து மசாலா தேநீர் குடித்துக்கொண்டு இருக்கும் போது கண்ணில்பட்டது,உங்கள் பார்வைக்காக.

படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.


இன்னும் பக்கத்தில்..



பாரந்தூக்கி அந்த பக்கெட்டை அதற்கு மேல் கொண்டுவரமுடியாததால்,எதுவரை முடியுமோ அங்கு கொட்டி பிறகு ஆட்கள் மூலம் பக்கத்தில் உள்ள தூணுக்கு கான்கிரீட் போடுகிறார்கள்.கான்கிரீட் பக்கெட்டை திறக்க கைப்பிடியில் ஒரு கயறு கட்டியிருப்பதையும் பார்க்கலாம்,இதன் மூலம் ஆட்கள் அந்த பக்கெட்டின் மீது நிற்கவேண்டிய அவசியம் கிடையாது.

முதுகெலும்பு

கட்டுமானத்துறையின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் பாரம்தூக்கியை நிறுவ இன்னொரு பாரம்தூக்கி உதவுகிறது.

இது என்னுடைய வீட்டின் அருகே நடக்கும் கட்டுமான இடத்தில் பிடித்தது.



இன்னும் நெருக்கத்தில்...