Sunday, January 27, 2008

தமிழுக்கு ஆதரவு.

கடல் கடந்த நாடுகளில் தமிழை பிரபலப்படுத்த பல முயற்சிகளை சில நாடுகள் எடுத்து வந்தாலும் அதில் சிங்கப்பூரின் பாணியே தனி தான்.அவர்கள் இலக்கு எல்லாம் குழந்தைகள் தான்.

குழந்தைகளை தமிழில் பேச வைத்துவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்ட சந்தோஷம் கிடைக்கும்,அதற்குப்பிறகு வீட்டிலும் பேச வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு வந்துவிடும்.தமிழை ஓரளவு கட்டிக் காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணத்துடம் சிஙக்ப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சி தான் கீழே உள்ளது.

பார்த்து மகிழுங்கள்.




வழக்கம் போல்,நன்றி: வசந்தம் சென்ரலுக்கு.

சிங்கைக்கு டிக்கெட்

ராஜ்பூராவில் இருந்து சென்னை வந்த முதல் வாரம் மலேசியாவில் இருந்து வந்த சாமான்கள் முகவர் மூலமாக கொடுக்க வேண்டியதை கொடுத்து வெளியே எடுத்தேன்.அடுத்த வாரம் அதை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது சிங்கையில் இருந்து அந்த உறவினர் மூலம் தகவல் வந்தது.

அந்த நிறுவனத்தில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்க திரு சோங்க் (Mr Chong Fook Soon)என்பவர் வருவதாகவும் அவரை இந்த முகவரியில் பார்க்கலாம் என்றார்கள்.

அந்த நாளும் வந்தது.அந்த கால வழக்கப்படி தேவையான சர்டிபிகேட்களை எடுத்துக்கொண்டு,அதோடு ஒரு போட்டோ ஆல்பம் எடுத்துக்கொண்டேன்.அதில் இது நாள் வரை நான் செய்த வேலைகளின் படங்களின் தொகுப்பு இருந்தது.

வெளிநாட்டுக் கம்பெனியின் நேர்காணல் என்பதால் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டேன்.அதை பார்த்த என் மனைவி இது ஒங்களுக்கு சரியாக இல்லை என்றார்.பிறகு அரை மனதுடன் பரவாயில்லை போட்டுக்கிட்டீங்க கயட்டவேண்டாம் அப்படியே போய் வாருங்கள் என்றார்.

அவர்கள் கொடுத்த முகவரி ஏதோ ஜெமினி பாலத்துக்கு பக்கத்தில் இருந்ததாக ஞாபகம்.அந்த சாலை கொஞ்சம் உள்ளடங்கியிருந்தது.முகப்பிலேயே பல ஆட்கள் கொத்து கொத்தாக நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.அவர்களிடம் பேச்சு கொடுத்த போது சிலர் ஏற்கனவே சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்கள் என்றும் மீண்டும் போகப்போவதாக சொன்னார்கள்.

திரு சோங்க் பெயரை சொல்லி விஜாரித்துக்கொண்டு மாடியை நோக்கி போனேன்.அங்கு தான் வேலை ஆட்களை நேர்கானல் நடந்துகொண்டிருந்தது.இரு சீனர்கள் ஒருவர் தமிழர்.அவர்களை பொதுவாக் நோக்கி “திரு சோங்க” என்றேன்.

அதில் ஒருவர் சுமாரான உயரம்,கண்ணாடி அணிந்திருந்தார்,கையை நீட்டினார். அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன்.

சரி இங்கு இடம் இல்லை,வா வாசல் பக்கம் போகலாம் என்றார்.வாசல் என்றால் அங்கு ஏதும் அறையில்லை.தெரு தான் இருந்தது.

என் வெளி நாட்டுக்கான நேர்காணல் தெருவில் தான் நடந்தது.

வழக்கமான கேள்விகள் பிறகு என் போட்டோ தொகுப்பை பார்த்து கொஞ்சம் மனம் திருப்தி அடைந்தார் என்று நினைக்கிறேன்.

சம்பளம் எவ்வளவு வேண்டும் என்றார்? சொன்னவுடன் சில நொடிகள் யோசித்துவிட்டு,நீ கேட்டதை கொடுக்கிறேன் ஆனால் போக்குவரத்து அலவன்ஸ் என்று சொல்லி கொஞ்சம் பிச்சி கொடுப்பேன் என்றார்.

எப்படியோ நான் கேட்டது கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் சரி என்று சொன்னேன்.

சிங்கப்பூர் வர எவ்வளவு நாள் ஆகும் என்றார்.

உங்கள் கடிதம் கிடைக்கும் நாளில் இருந்து ஒரு மாதம் என்றேன்.

இன்று வெள்ளி,நாளை நான் சிங்கை போய் உனக்கு குரியர் அனுப்புகிறேன்,திங்கள் காலை எட்டு மணிக்கு உங்கள் வீட்டில் என்னுடைய ஆர்டர் இருக்கும் என்றார்.இதற்கிடையில் என்னுடைய கடவுச்சீட்டை வாங்கி விசாவுக்காக தேவையானவற்றை செய்யச்சொல்லி அங்குள்ள ஏஜென்டிடம் கொடுத்தார்.முன்னப்பின்ன தெரியாத ஆளிடம் எப்படி பாஸ்போர்ட் கொடுத்தேன் என்று பார்க்கிறீர்களா?

இனி நான் எங்கே வெளிநாடு போகப்போகிறேன் என்ற நினைப்பில் கடவுச்சீட்டின் மதிப்பு தெரியாமல் கொடுத்துவிட்டேன்.வீட்டிலும் கேட்டார்கள்,என்னடா இப்படி கடவுச்சீட்டை தெரியாத ஆளிடம் கொடுத்துவிட்டு வந்திருக்காயே திரும்ப வருமா? என்றெல்லாம் போட்டு குடைந்தார்கள்.நல்ல வேளை அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

பதிவு நீளமாகிவிட்டது.. ஆர்டர் வந்ததா?தடலாடியாக பேசிய ஆள் சொன்ன வார்த்தையை காப்பாற்றினாரா? இல்லையா?

அடுத்த பதிவில் பார்ப்போம்.

Tuesday, January 8, 2008

கட்டிப்போட்ட சிலை

சில சமயங்களில் சிற்பங்கள் நம்மை அப்படியே கட்டிப்போட வைத்து சிற்பின் காலத்துக்கு இழுத்துப்போகும்.எவ்வளவு நுணுக்கம்,அங்கங்களின் அளவு & வளைவு என்று நம்மை சில நிமிடங்களாவது அந்த இடத்தில் நிற்க வைத்துவிடும்.

அந்த வரிசையில் நான் பார்த்த சில பொட்டானிகள் கார்டனில் உள்ள சிலைகள் கீழே.பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.



கீழே உள்ள இந்த மிதிவண்டி பெண்- என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.நேர்த்தியான வார்ப்பு.


இப்படி எல்லாவற்றையும் எடுத்து முடித்து இஞ்சி தோட்டம் மற்றும் ஆர்கிட் தோட்டத்துக்கு போகும் முன் ஒரு நல்ல காட்சியை எடுக்கலாம் என்று கிளிக்கினால்.. "Disk Error" என்று வாய் பிளந்துவிட்டது கேமிரா.

எனக்கு தெரிந்த அவ்வளவும் செய்து பார்த்தும் ஹூகும்,மசியவில்லை.

இந்த அளவுக்காவது படங்கள் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

Friday, January 4, 2008

பொட்டானிகல் கார்டன்-2

இதற்கு முந்தைய பதிவு இங்கு.

உள் நுழைந்தவுடன் பலவிதமான பூ/மரங்களை பார்க்க பார்க்க கண்ணுக்கு அழகு என்று தோனியதெல்லாம் கிளிக்கினேன்.அவற்றில் சில கீழே.

இந்த படத்தை முதலிலேயே போட்டிருக்கனும் மறந்துவிட்டேன்.பூங்காவைப் பற்றி



இதிலிருந்து வரும் சில படங்கள் சிற்பிகளின் செதுக்கல்கள் அதுவும் மரத்தில்.வேலை நுணுக்கம் ஆச்சரியப்பட வைக்கிறது.



எனக்கு பிடித்தது கீழே உள்ள கழுகு.







இவ்வளவு பெரிய தோட்டத்தில் தேசிய மலருக்கு இடம் இல்லாமல் இருக்குமா? அது கீழே.தூரத்தில் ஒரு ஜோடி கண்ணில் பட்டால் அதற்கு நான் பொருப்பல்ல. :-)




இதற்கிடையில் அங்கங்கு சின்ன சின்ன சிலைகள் வைத்து அழகை மேலும் கூட்டியிருந்தார்கள் அதில் ஒரு சிலை என்னை சில நேரம் அங்கு கட்டிப்போட வைத்தது.

அது அடுத்த பதிவில்.

Thursday, January 3, 2008

ராஜ்புரா - சென்னை

ராஜ்புரா வாசம் 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தது.இந்த வேலை ஏற்கனவே இருக்கும் சாலையை மேம்படுத்தி இரண்டு லேன் வழியாக மாற்ற வேண்டும்.நடுவே வரும் சிறிய வாய்காலுக்கு பாலம் கட்டவேண்டும்.இந்த வாய்காலில் மழை காலத்தில் கூட தண்ணீர் ஓடுமா என்று சந்தேகம் தான்.இந்த வேலை பார்க்க என்னுடைய முன்னைய அனுபவம் தேவை என்று இங்கு அனுப்பியிருந்தார்கள்.சரி பாலமாவது அகலமாக இருக்குமா என்று பார்த்தால்... நான் முயற்சித்தால் நீளம் தாண்டுதல் மூலமாகவே தாண்டிவிடலாம். 



இந்த வேலையிடத்தில் இருந்தவர்கள் எனக்கு பழக்கமில்ல்லாதவர்கள்.ஹிந்தி அவ்வளவாக தெரியாவிட்டாலும் அவர்கள் பேசுவது ஓரளவு புரிந்தது,பதில் சொல்வதில் தான் பிரச்சனை.சாப்பாடு், சப்பாத்தியும் பரோட்டாவும் தான்.எப்படியோ ஓட்டினேன்.


இப்படி ஒரு நாள் சாலை ஓரத்தில் சர்வே வேலையில் மூழ்கியிருந்த போது பொது ஜனம் ஒருவர் வந்தார்.சகஜமாக பேச ஆரம்பித்து அவரும் பக்கத்து ஊரில் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அந்த வாழ்கை பிடிக்காமல் இப்படி சுற்றிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.பலவற்றை 45 நிமிடங்களுக்கு பேசிவிட்டு போகும் போது “You are a Good Fellow “ என்று சான்றிதழ் கொடுத்துவிட்டு சென்றார்.முன் பின் தெரியாதவர் அதுவும் எனக்கு பாஷைதெரியாத ஊரில் என்னிடன் ஏன் பேச வேண்டும்? எனக்கு எதற்கு சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்று புரியாத புதிராக இருக்கிறது.அதன் பிறகு அவரை பார்க்கமுடியவில்லை.

இதற்கிடையில் வீட்டில் இருந்து டெலிகிராம் வந்தது.மலேசியாவில் இருந்து வரவேண்டிய பொருட்கள் வந்துவிட்டதாகவும் அதை வெளியில் எடுக்க நான் அங்கு போகவேண்டும் என்று.அன்றிரவு வீட்டுக்கு தொலைப்பேசிய போது சிங்கை கம்பெனிகாரர் சென்னை வருவதாகவும் நேர்காணலை அங்கே வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தாகவும் என் உறவினர் தகவல் கொடுத்தாக என் தந்தை சொன்னார்.

நேர்காணல் நாளை குறிப்பில் வைத்து இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.அதற்கு முன்பு டெல்லியில் உள்ள சித்தப்பா பையனுக்கு தொலைப்பேசி சென்னை செல்ல புகைவண்டியில் பயணச்சீட்டு கிடைக்குமா என்று முயற்சிக்கச்சொன்னேன்.

டெல்லி சென்று சேர்ந்தபிறகு தான் பயணச்சீட்டு கிடைக்காத விபரம் தெரிந்தது.பரவாயில்லை தனி ஆள் தானே எப்படியேனும் தொற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.

டெல்லியில் சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ”சிங்கையில்” ஒரு வாய்ப்பு வருகிறது என்ன செய்யலாம் என்று அவரின் யோஜனை கேட்டேன்.அவரோ உன் தந்தைக்கு 60 வயதை நெருங்குகிறது,இந்த வயதில் மனது ஒரு நிலையில் இருக்காது அதனால் நீ போவது அவ்வளவு நல்லதாக படவில்லை என்று சொல்லிவிட்டு, “நீ என்ன முடிவு செய்திருக்காய்?” என்றார்.

நான் போவதாக முடிவெடுத்துள்ளேன் என்றேன்.

யோசித்து முடிவெடு என்று சொல்லி விட்டு விட்டார். என்னை கட்டாயப்படுத்தவில்லை.யாரிடமும் அவ்வளவாக பேசாதவர் என்னிடம் மட்டும் சில வார்த்தைகள் பேசுவார்.முதன் முதலில் டெல்லி போன போது “என்னடா மீசை எல்லாம் வைத்துக்கொண்டு?” நன்றாக இல்லையே என்று சொல்லிவிட்டு எனக்காக ஒரு தடவை இங்கு இருக்கும் போது மீசையை எடுத்துவிடு என்றார்.

என்ன சித்தப்பா? இது ஒரு வேலையா? என்று மறுநாளே எடுத்துவிட்டேன்.ஒரு வேளை, நம் சொல்லை மதிக்கிறானே என்று என்மேல் ஒரு Soft Corner வோ என்னவோ தெரியாது.

எதிர்பார்த்தது போல் டிரைனில் இடம் கிடைக்கவில்லை.இருப்பது ஒரே சூட்கேஸ்.ஒரு பெட்டியில் கீழே வைத்து பூட்டி விட்டு விஜயவாடா வரை கழிப்பறை அல்லது வாசல் பக்கம் என்று மாறி மாறி உட்கார்ந்து பொழுது போக்கினேன்.விஜயவாடா வந்தது சில படுக்கைகள் காலியாக இருந்தது,அதில் கொஞ்சம் களைப்பாறிவிட்டு சென்னை வந்தேன்.


மீதி அடுத்த பதிவில்.

Tuesday, January 1, 2008

Botanic Garden

விடுமுறை என்று அதுவும் இரண்டு நாட்கள் சேர்ந்தால் போல் வந்தால் மிகவும் திணற வேண்டிவரும் இங்கே,அதுவும் எனக்கு.வெளியில் சுற்றுவதில் அவ்வளவு நாட்டம் இல்லை ஏனென்றால் தேவையில்லாமல் செலவு செய்யவேண்டும் என்பது முதல் காரணம் அடுத்ததாக தேவையில்லாமல் நம்மை அதில் ஈடுபடுத்திக்கொள்வது.

எது எப்படியோ, போன பதிவில் சிங்கையை சுற்றியதைப்பற்றி எழுதிய போது நமது பதிவர் துளசி பொட்டானிகல் கார்டன் போகவில்லையா? என்று கேட்டிருந்தார்.வந்த 13 வருடங்களில் அந்த பக்கம் போய் பார்க்கவில்லை.

சரி இப்போது இவ்வளவு நாள் விடுமுறை கிடைத்திருக்கும் நேரத்தில் அங்கு போய்வரலாம் என்று இன்று மதியம் 2.30 மணிக்கு கிளம்பி ஆர்சட் MRT எனும் ரயில் சேவை நிலையத்துக்கு போய் சேர்ந்தேன்.அங்கிருக்கும் வழிகாட்டியில் எந்த இடத்துக்கு எப்படி போக வேண்டும் என்று விரிவாக இருந்ததால் அவர்கள் சொல்லியபடி "B" வெளியேறும் வழியாக வந்தேன்.பேருந்து நிலைய எண் 3 சாலையின் மறுபக்கம் இருந்ததால் சாலை விளக்கு சிகப்புக்கு மாறும் வரை காத்திருந்தேன்.அப்போது தான் பார்த்தேன் அந்த ரயில் சேவை நிலையத்துக்கு மேல் பெரிய ஸ்டீல் தூண்கள் நிறுத்தப்பட்டு கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்தது.இது Top Down முறையில் நடைபெறுவதாக தோனுகிறது.படம் கீழே.



தடம் எண் 123 யில் ஏறி 6 வது நிறுத்ததில் இறங்கினால் எதிர்புறம் தான் இந்த தோட்டம் இருக்கிறது.அதிக வெயில் இல்லாமல் கொஞ்சம் மேக மூட்டம் மற்றும் சுகமான காற்றும் இருந்ததால் அவ்வளவு களைப்பு ஏற்படவில்லை.



பலவிதமான செடிகள்/பூக்கள்/மரங்கள் இருந்ததன.ஒவ்வொன்றுக்கும் அதன் உண்மை பெயரும் வழக்கு பெயரும் கொடுத்திருந்தார்கள்.இது பாம் மரமாம்.மலேசியாவில் இது அதிகம்.



முழுவதும் நடந்தே காணவேண்டியிருப்பதால் அங்கங்கு நிறைய வழிகாட்டி படங்கள் மற்றும் கழிப்பறைகளும் உள்ளன.

கீழே உள்ள இடத்துக்கு மேல் ஏறி வரும் போது இந்த வியூவில் அழகாக இருந்தது.CVR பார்த்தால் இன்னும் மெருகேற்றி கொடுப்பார்.அதற்கு இப்போது நேரம் இல்லாததால் அப்படியே பாருங்கள்.



இன்னும் சில படங்கள் இருப்பதால் அதை அடுத்த பதிவில் போடுகிறேன்.