Saturday, February 19, 2011

Exercise- உடல் நலம்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.

தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.

விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.

சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.






துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.






வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.

Friday, February 18, 2011

மதுராந்தகம்.

எப்பவோ இளமை கால நிகழ்வுகளை மனைவிடம் சொன்னதை தவறாமல் ஞாபகம் வைத்து அவ்வபோது இங்கு போகனும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.நேரமும் சரியான போக்குவரத்தும் இல்லாத்தால் தள்ளிப்போய்கொண்டிருந்தது.ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நான் முதன் முதலில் பெண் பார்க்க போன இடம் தான் இந்த மதுராந்தகம்.பெண்ணை கண்ணில் காட்டாமல் திண்ணையில் வைத்தே பேசி அனுப்பிவிட்டார் பெண்ணின் அப்பா,தப்பித்தேன் அப்போதைக்கு.நான் போன சமயம் மதியம் என்பதால் கோவிலை பூட்டிவிட்டார்கள், மாலை வரை காத்திருக்க முடியாததால் ராமரை சேவிக்க முடியாமல் போனது.
போன ஞாயிறு மகனின் GATE தேர்வுக்காக Cresent Engineering College இல் கொண்டுவிட்டு விட்டு காத்திருந்த 3 மணி நேரத்தை எப்படி போக்குவது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அதுவரை பக்கத்தில் இருக்கும் மாமா வீட்டுக்கு போய்விட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம்,திடிரென்று மதுராந்தம் போய் திரும்பிவிடலாமா என்ற யோஜனை வந்தது.பக்கத்தில் உள்ள ஆட்டோ காரரிடம் கேட்ட போது 40 கி.மீ தான் என்றார்,கணக்கு போட்டு பார்த்த போது மகிழுந்துவில் அதற்குள் வந்துவிடலாம் என்று தோன்றி கிளம்பிவிட்டோம்.
வழக்கம் போல் மதுராந்தகம் உள்ளே செல்ல கொஞ்ச தூரம் இருக்கும் இடத்தில் அறிவிப்பு பலகை இருந்தது.உள்ளே நுழைந்தோம் கோவில் இருக்கும் இடத்துக்கு எந்த அறிவிப்பு பலகையும் கண்ணில் படாத்தால் வழியில் நிற்பவர்களை கேட்டு கோவில் வாசலில் வண்டியை நிறுத்தினோம்.கூட்டம் அதிகம் இல்லாத்தால் நல்ல தரிசனம் கிடைத்தது.இயற்கை உபாதைக்கு என்று பார்த்தால் ஒரு கழிவறை கூட சுற்றுவட்டாரத்தில் இல்லை,நல்ல வேளை ஒருவர் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள கழிப்பறை உபயோகப்படுத்த அனுமதித்தார்.மூச்சை அடக்கிக்கொண்டு போய்விட்டு வந்தோம்.



இன்னும் நேரம் இருப்பதை பார்த்து பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா? என்று ஒருவரிடம் கேட்ட போது படாளம் கூட்டு சாலையில் ஒரு 4 கி.மீட்டர் பயணித்தால் திருவையாவூர் என்ற இடத்தில் 108 திருப்பதிகளில் ஒன்றான இந்த கோவில் வரும் என்றார்கள்.சிறு குன்று போல் இருக்கும் இடத்தில் இக்கோவில் உள்ளது.நடந்து போக ஒரு வழியிருந்தாலும் காரிலில் போக வழியுள்ளது.மேலிருந்து பார்த்த போது இன்னொரு கோவில் மடத்துக்கு சொந்தமானது போலும் உள்ளே செல்லும் வழி மூடப்பட்ட நிலையில் இருந்தது.

Sunday, January 30, 2011

சின்ன வயசு ஆசை!

பள்ளியில் படிக்கும் காலங்களில் கோடைவிடுமுறை என்றால் கும்பகோணம் அருகில் இருக்கும் ஆடிப்பிலியூர் போவது என்பது கொஞ்ச வருடங்களுக்கு தொடர்ந்தது.இங்கு இருக்கும் பெரியப்பாவுக்கு நிறைய நிலம் மற்றும் தோட்டங்கள் இருந்தது அதனால் காலையில் எழுந்து சிறிய வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அப்படியே நிலபுலம் பக்கம் போனால் சாயங்காலம் தான் திரும்பி வருவேன்.வயலுக்கு போகும் போது செருப்பு போடக்கூடாது என்பதால் வெறும் காலுடன் பல கிலோமீட்டர் நடந்தே போய் வருவேன். எவ்வளவு தான் முள் குத்தினாலும் பிடிங்கிப்போட்டுவிட்டு ஜாலியாக கரும்பு வயலுக்குள் போய் வருவேன்.எவ்வளவு கரும்பு அப்படியே கடிச்சி சாப்பிட்டேன் என்ற கண்க்கே இல்லை.
வேலை/வெளிநாடு என்றாகிவிட்ட பிறகு பொங்கல் தவிர இந்த கரும்பை கடிச்சி சாப்பிட வாய்பே வாய்க்கவில்லை.சிங்கையில் இருக்கும் போது கரும்பு கிடைத்தாலும் ஓர் ஆளுக்காக வாங்கி சாப்பிட அலுப்பிலேயே சாப்பிடாமல் இருந்தேன்.
வெளிநாட்டு வேலையெல்லாம் முடிந்து உள்ளூரிலேயே வேலை வாய்த்த பிறகு முதல் பொங்கல் சமீபத்தில் வந்தது கரும்பு ஆசையை கிளப்பிவிட்டது.மனைவிக்கு என்ன்னுடய விருப்பம் தெரியும் என்பதால் 2 கரும்பாக வாங்கிவைத்துவிட்டார்.எனக்கு கரும்பை கத்தியால் சிறிது சிறிதாக நறுக்கி சாப்பிடுவது பிடிக்காது, பின்ன எப்படி?




கரும்பு துண்டு பெரிதாக இருக்கனும்.