Thursday, April 26, 2007

வீடு கட்டனுமா?

சென்னையில் வீடு கட்டனுமா?
(விஷயம்)தெரிந்த குத்தகையாளர் கண்ணில் படவில்லையா?
மேலே படிங்க..
இவரிடம் பேசுங்க பிடித்தால் வேலையை கொடுங்கள்.இதில் என் பங்கு எதுவும் இல்லாததால் உங்கள் முடிவே இறுதியானது.

நம்மக்களுக்காக ஒரு நல்ல குத்தகையாளரை அடையாளம் காட்டுவதே என் வேலை.

வீடு வீடு

பல மக்களின் கனவுக்கோட்டை (Ultimate) இது.அதுவும் நடுத்தர வர்கத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றும் கூட.
பல பேர் நில பிரச்சனை ஏதும் வேண்டாம் அடுக்கு மாடி குடியிறுப்பு போதும் என்று அதை விரும்புவர்கள் பலர்.அதிலும் தில்லு முல்லுகள் நாளொரு மேனியாக பத்திரிக்கையில் வந்துகொண்டிருப்பதை பார்த்து வீடு வாங்கவே பயப்படுபவர்கள் பலவிதம்.
பயந்துகொண்டிருந்தால் கரையிலேயே நிற்கவேண்டியது தான்.
இன்னும் சிலர் நிலத்தை வைத்துக்கொண்டு சரியான குத்தகைக்காரரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள் அல்லது முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார்கள்.எவ்வளவு செலவாகுமோ என்று? இவர்களால் கட்டிடம் நல்ல முறையில் கட்டித்தரமுடியுமா? என்று பல வித சந்தேகங்களுடன் இருப்பவர்களும் நம்மிடையே உண்டு
அவர்களுக்கு உதவும் விதமாக,எனக்கு தெரிந்தவர்,நண்பர் வீடு கட்டும் தொழிலை சென்னையில் நடத்தி வருகிறார்.அவருடைய கம்பெனி அட்டையை இங்கு வெளியிட்டுள்ளேன்.
தேவையானவர்கள் அவரிடம் தொடர்பு கொள்ளலாம்.

Photobucket - Video and Image Hosting

இவரின் ஈ மெயில் முகவரி: radhaconstruction@gmail.com


இவரை ஏன் நான் விளம்பரப்படுத்துகிறேன் என்ற நியாயமான கேள்வி பலருக்கு வரும்.

இவர் என்னுடன் 2 வருட காலங்கள் ஒரே இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் என்பதாலும் அவரின் வேலை திறமையை பார்த்ததாலும் இதைச் செய்கிறேன்.
வேலையின் தரத்திற்காக குறுக்கு வழியில் போகாத குணம் மற்றும் சொன்ன சொல்லில் நிற்பது.வேலையில் நல்ல தரமான வேலையை செய்வது இப்படி என்று பல.இவை அனைத்தையும் L&T-ECC யில் வேலை பார்த்தபோது நான் அவரிடம் பார்த்த குணங்கள்.ஆதாவது அடுத்தவருக்க்காக வேலை செய்யும் போதே தன்னுடைய கம்பெனி போல் செயல்பட்டவர்.

அதுவும் (கடந்த 8 வருடங்களாக) இப்போது இவர் தனி கம்பெனி ஆரம்பித்து பல வேலைகள் செய்து வருகிறார்.இது தான் அவர் கம்பெனி பற்றி இனையத்தில் வருகிற விஷயம்.எந்தவித விளம்பரம் இல்லாமல் தன்னிடம் வருபவர்களுக்காக மட்டும் வேலை செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

இவர் செய்த சில வேலைகளின் படங்கள்.

பழைய நடிகை ரம்பா வின் வீடு கீழே.



இதன் சரிந்த கூரையின் வேலைகள் இவர் செய்தது.



மாடிப்படிகள் மற்றும் கட்டிடத்தின் பின் பகுதி மற்றும் இந்த ஏணிப்படிகள்..


இவர் முழுவீட்டுப் பணிகள் என்றில்லாமல், பகுதி வேலைகளையும் செய்கிறார்.

என்னென்ன எதிர்பார்க்கலாம் இவரிடம்.

கட்டிட வேலைக்கான Design ( நல்ல தரமான கம்பெனி இன்ஜீனியர் மூலம்)

வரைகலை படங்கள்(Architectural Drawings)

வீடு கட்டும் செலவு விவரம்(Estimate) மற்றும் பல.

வீடு கட்டுபவர்களின் தேவை வித்தியாசமானவை என்பதால்,முழுவதுமாக சொல்லவில்லை.விபரம் வேண்டுபவர்கள் அவரோடு தொடர்பு கொள்ளலாம்.

Friday, April 20, 2007

ஆற்றின் மேல்

போன பதிவில் ஆற்றின் மேல் எப்படி வேலை செய்வதை இங்கு சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அதற்கு முன்னால் இதன் Design ஐ கொஞ்சம் பார்த்திடுவோம்.

இந்த ஆறு, படகுகள் மற்றும் பார்ஜ் என்று சொல்லப்படுகிற தெப்பத்தையும் போக்குவரத்துக்கு இதில் உபயோகப்படுத்துவார்கள்.இந்த தெப்பத்தில் மணல்,ஜல்லி & மரங்கள் அடுக்கி நதி மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வார்கள்.அதனால் நதியின் உள்ள கான்கிரீட் தூண்களை இந்த மாதிரி தெப்பம் வந்து மோதினாலும் தாங்கக்கூடிய அளவில் டிசைன் செய்திருப்பார்கள்.


இந்த இடத்தில் மண் சுமார் 5 மீட்டருக்கு களிமண் போலவும் அதற்கடுத்து கொஞ்சம் கெட்டியாகவும் இருந்தது.பழைய காலத்தில் இந்த நதி மூலம் மர வியாபாரம் நடந்ததால் கரையில் பல வருடத்து மரங்கள் புதையுண்டு கீழே இருந்தது.இன்றும் எப்போதாவது மழை அதிகமாகி வெள்ளம் வரும் சமயங்களில் பெரிய மரங்கள் அடித்துக்கொண்டு வருவதை காணலாம்.

இந்த ஊர் நிலவரப்படி நல்ல மண்ணில் ஊடுருவி பாலத்தின் பாரத்தை நல்ல தேர்ந்த பாறையில் விட வேண்டும் என்பதால் பைலிங் என்று சொல்லப்படுகிற முறைப்படி டிசைன் செய்தார்கள்.

பைல் (Pile) என்ன என்பதை இங்கு முன்பே சொல்லியுள்ளேன்.

ஆதாவது பைல் அடித்து அதன் மேல் அஸ்திவாரம் கட்டி,தூண் எழுப்பி அதன் மேல் சாலை அமைக்க உத்தேசித்திருந்தார்கள்.

இங்கு நாங்கள் 2 வகை பைல் உபயோகித்தோம்,
1.Closed Pile
இதன் கீழ் முனை மூடி இருக்கும்.இதன் மீது வரும் எடையை அப்படியே கீழே அனுப்பிவிடும்.அடித்து முடிந்த பிறகு உள்ளே கான்கிரீட் போட்டால் முடிந்தது வேலை.
2.Open ended Pile.
இதன் கீழ் முனை திறந்திருக்கும்,அதனால் அதிக ஆழம் போகக்கூடியது.இதை அடித்துமுடிந்தவுடன்,Rock anchor என்ற முறைப்படி அதனுள் அதிக ஸ்ட்ரென்த் உள்ள கம்பியை நல்ல பாறையில் நுழைத்து கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.

நதியின் நடுவில் உள்ள தூணின் பருந்துப்பார்வை.



இதில் சிகப்பு கலரில் உள்ளது சாய்வாக இரக்கப்படும் பைல்.படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.



மேலே உள்ள படத்தில் காண்பது தான் ஸ்டீல் பைல்.சாய்வான முறையில் அடிக்கப்பட்டுள்ளது.

மீதி அடுத்த பதிவில். (சென்னையில் இருந்து)

Wednesday, April 18, 2007

பாலியல்

இன்று காலை 7 மணிச்செய்தி கேட்டபோது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.இப்போதுள்ள பசங்களுக்கு ஒன்றும் இது பெரிய விஷயமில்லை தான்.நான் கொஞ்சம் அந்த கால ஆள் பாருங்க.வளர்ந்த சூழ்நிலை வேறு, அதனால் அதிர்ச்சியாக இருந்தது.

மேட்டருக்கு வருவோம்.காலை 7 மணிச்செய்தியை முழுவதுமாக கேட்கமுடியவில்லை.8 மணிச்செய்தியில் சுமார் 1 நிமிடத்துக்கு மேல்,அதுவும் முதன் முதலில் இந்த செய்தியை தான் கொடுத்தார்கள்.

ஆதாவது Durex கம்பெனி இணையத்தில் நடத்திய ஆய்வின்படி எந்த நாட்டு மக்கள் அதிகமாக உடலுறவு கொள்கிறார்கள்,எவ்வளவு நிமிடங்கள்,நம் நாடு எந்த நிலையில் இருந்தது இப்போது எங்கு முன்னேறியுள்ளது மற்றும் வருடத்துக்கு எவ்வளவு முறை உடலுறவு கொள்ளுகிறார்கள்,எதனால் நம்மால் செய்யமுடியவில்லை,எவ்வளவு சதவீத மக்கள் முழுமையாக திருப்தி அடைந்தார்கள்? என்பதை விலாவாரியாக சொல்லி முடித்தார்கள்.சொன்னதெல்லாம் ஒரளவு ஞாபகம் இருந்தாலும் இங்கு வேண்டாம்.

இது இன்றைய தலையாய பிரச்சனை போல்.எனக்கு கொடுமையாக இருந்தது.இப்படி சொல்வதால் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.எல்லோரும் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவார்களா? அல்லது இனிமேல் கூட நேரம் எடுத்துக்கொள்வார்களா?

இயற்கையான நிகழ்வுகளை இப்படி பட்டியல் போடுவதில் என்ன லாபம் என்று தெரியவில்லை.

அப்படியே Today செய்தித்தாளை பார்த்தால்...

உங்கள் பார்வைக்கு கீழே..



படம்:நன்றி TODAY

உலகம் எங்கோ போய்கொண்டிருக்கிறது.

யாகூ மெயிலில் தமிழ்

இத்தனை நாட்களாக பெயரிலியாக வந்திருந்த பூச்சி காட்டும் யாகூ மெயில்களை அப்படியே கடாசி வந்தேன்.யார் யார் கூப்பிட்டார்களோ தெரியவில்லை.ஆனால் இன்று காலை ஈமெயிலை திறந்த போது தேன்கூடு மற்றும் தெரிந்தவர் பெயரில் ஒரு மெயில் வந்தது அதுவும் பூச்சி காட்டவே(கீழே பார்க்க) நமது கூகிள் ண்டவரிடம் சரணடைந்தேன்.


பதில் கிடைத்தது,அதுவும் எளிதான வழியில்.

வின்95,98 & மில்லேனியம் உள்ள கணினியில் மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைக்கிறேன்.

வழி இது தான்

நீங்கள் திறக்க விரும்பும் மெயிலை டபுள் கிளிக் செய்து திறக்க வேண்டாம்,மாற்றாக மவுசின் வலது பக்க பட்டனை சொடுக்கி அதில் வரும் பெட்டியில் "புது பக்கத்தில் தெரிய வை" என்பதை தேர்ந்தெடுத்தால் அதில் தமிழ் தெரியும்.

அதன் தொடர்பான படங்கள் கீழே.






நீங்கள் யாகூ விரும்பியா?அதை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, April 17, 2007

பத்துக்கோவா பாலம்

போன பதிவில் அதன் இருப்பிடம் பார்த்தோம்.
இப்போது அதன் வேலையை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
இந்த வேலை எல்&டி க்கு Inter Trade Contract மூலம் கிடைத்தது.ஆதாவது இந்திய மற்றும் மலேசிய அரசாங்களுக்கு இடையே வர்தக பரிமாற்று முறையில் கிடைத்தது.சுமார் சில 180 மில்லியன் கட்டுமானம் என்று நினைக்கிறேன்.சரியாக நினைவில்லை.அன்றைய நிலவரப்படி மாற்றினால் 18 கோடி ரூபாய் வரும்.

மேலே உள்ளது அங்கு கட்டப்பட்டது இல்லை.தகவலுக்கு மட்டுமே.

இந்த பாலம் சரவாக் மாநில தலைநகரமான குச்சிங்கையும் பக்கத்தில் உள்ள பத்துக்கோவா மற்றும் மிரி என்கிற ஊரையும் இணைக்க மிக அவசியமான ஒன்றாக இருந்தது.இது கட்டப்படும் வரை படகுச்சேவை மூலம் மக்கள் அக்கரையை கடந்தனர்.

ஆற்றின் அருகில் வசிக்கும் பலரிடையே படகு இருந்தது,அதுவில்லாமல் ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் வெகு தூரம்.காட்டுக்குள் நடப்பது மாதிரி இருக்கும்.குடிக்க தண்ணீர்?
நம்மூர் மாதிரி கிணறு வெட்டி அங்கிருந்து பயண்படுத்துகிறார்கள்.இது நகரத்தில் இருந்து வெகுதூரம் உள்ள வீடுகளுக்கே பொருந்தும்.நகர்புறங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் மூலம் தான் குடிதண்ணீர் வருகிறது.

இந்த பாலம் சுமார் 250 மீட்டர் நீளம் கொண்டது.ஆற்றில் நடுவே 3 தூண்களும்,ஒரு பக்க நிலத்தில் 2ம் மற்றொரு பக்கத்தில் ஒன்றும் இருந்தது.


நான் போகும் முன்பே பாலத்துக்கும் நிலத்துக்கும் இணையும் இடமான "Embankment" என்ற பகுதியில் மண்ணைக்கொட்டி சமப்படுத்தி இருந்தார்கள்.பாலம் கட்டுமானத்தில் இதைத்தான் முதலில் செய்யவேண்டும்.ஏனென்றால் நாளை பால வேலைகள் கட்டி இணைக்கும் போது இது இறங்காமல் இருக்க முதலிலேயே செய்துவிட்டால் இயற்கையாக எவ்வளவு தூரம் இறங்குமோ(Settlement),அவ்வளவு இறங்கிவிடும்.

இதை ஒழுங்காக செய்திருக்கோமா என்று சோதனை செய்ய சில வழி முறைகள் உள்ளது.Core Test என்கிற முறைப்படி,ஒரு உருளை பைப்பை மண்ணில் இறக்கி அதன் மூலம் மண்ணை எடுத்து அதன் நிறை மற்றும் Moisture Content மூலம் முடிவுசெய்வார்கள்.

அடுத்த முக்கியமான வேலை ஆற்றில் செய்யப்போகிற வேலை தான்.

இந்த ஆற்றில் உள்ள 3 தூண்களும் பைலிங் என்ற முறைப்படி ஆற்றின் கீழ் உள்ள கெட்டியான மண் வரை இரும்பு தூண்களை இறக்கி,தேவையான Anchors வைத்து கான்கிரீட் போடுவோம்.

ஆற்றில் எப்படி வேலை செய்வது என்று பார்ப்போமா?

வாங்க அடுத்த பதிவுக்கு.

Thursday, April 12, 2007

மலேசியாவில்

அன்கலேஷ்வரில் இருந்து திரும்பி வந்த போதும் கூட மலேசியா பயணம் என்று தெரியாத நிலையில் தினமும் தலைமை அலுவலகம் போய் வந்துகொன்டிருந்தேன்.

கடைசியாக ஒரு 15 நாள் நேரம் கொடுத்து தயாராக இருக்கச்சொன்னார்கள்.கையில் பயணச்சீட்டு வந்தவுடன் தான் நம்பிக்கை வந்தது.

நாங்கள் வேலை செய்யப்போகும் இடம் கிழக்கு மலேசியாவில் உள்ள சரவாக் மாநிலத்தின் தலைநகரில்.தலைநகர் பெயர் "கூச்சிங்" ஆதாவது பூனை என்று அர்த்தமாம்.இந்த கூச்சிங்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் பத்துக்கோவா.அங்கு தான் எங்கள் வேலை.இங்கு சுங்கை சரவாக் என்ற சின்ன நதி மீது ஒரு பாலம் கட்டவேண்டியது தான் எங்கள் பணி.சுங்கை என்றால் நதி/ஆறு என்று பொருள்,மலாயில்.

வீட்டுக்கு வந்து பெற்றோரிடமும்,மனைவியிடம் சொன்னதும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.இது ஒரு பெரிய கம்பெனியின் அங்கீகாரம்.யாருடைய ரெக்கமன்டேசன் இல்லாமல் வெறும் வேலையை மட்டும் காட்டியதற்கு கிடைத்த பரிசு.அனுபவித்தேன்.:-))

என்னுடன் மேலும் இருவர் வந்தனர்,ஒருவர் திரு.தாப்பா (Planning Engineer), மற்றொருவர் திரு.தம்பி வர்கீஸ்.

சென்னையில் இருந்து கிளம்பி கோலாலம்பூர் வந்து அங்கிருந்து வேறு ஒரு வானூர்த்தி எடுத்து கூச்சிங் வந்து சேர்ந்தோம்.பத்துக்கோவா நாங்கள் வேலை செய்த இடம்.

குச்சிங்(பத்துக்கோவா) எங்க இருக்கு? கீழே பாருங்க.



இன்னும் பல இடங்கள் மனிதனின் கைப்படாத இடமாக இருக்கிறது.மாலை 7 மணிக்கெல்லாம் கூட்டம் குறைய ஆரம்பித்துவிடும்.



மேலே உள்ள படத்தில் பின் போட்டு காண்பித்துள்ள இடம் தான் நாங்கள் வேலை செய்த பாலம் உள்ளது.கூகிள் எர்த்தில் அந்த இடம் இன்னும் சரியாக ரெண்டர் பண்ணாததால் சரியாக தெரியவில்லை.



மேலே இருக்கும் இதுவும் கூகிள் எர்த்தில் இருந்து எடுத்த படம் தான்.இந்த இடம் நாங்கள் வேலை செய்த பாலத்துக்கு பக்கத்தில் மணல் அள்ளிக்கொண்டிருக்கும் இடம்.பார்ஜும் அதன் மேலே இருக்கிற பாரம் தூக்கியும் தெரிவதை பார்க்கவும்.

இதை எதற்கு இங்கு காண்பிக்கிறேன் என்றால் இவர்கள் மூலம் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.அதை பிறகு சொல்கிறேன்.






மேலே உள்ள படம் கூச்சிங்கில் உள்ள சிவிக் டவர் என்னும் இடம்.அப்போது உயரமான இடம்.இப்போது எப்படி என்று தெரியவில்லை.

அடுத்த பதிவில் சைட்டின் உள்ளே போகலாம்.

Tuesday, April 10, 2007

அன்கலேஷ்வர்- பாகம் 2

போன பதிவு இங்கே
ரயிலில் வந்த சலிப்பு அன்றைய இரவு அடித்துப்போட்ட மாதிரி தூங்கினேன்.
மறுநாள் காலை எழுந்து ஜன்னல் கதவை திறந்த போது குப்பென்ற நெடி மூக்கையும் தாண்டி தொண்டைவரை போனது.
என்ன? ஏது! என்று தெரியாததாலும் சற்று குளிர்ந்த நிலையில் இருந்ததாலும் வாசம் அவ்வளவாக போகவில்லை.
காலையில் சைட்டுக்கு போகும் வண்டிக்காக காத்திருக்கும் போது என்னை தவிர யாரும் கர்சீப்பை மூக்கில் வைத்துக்கொள்ளவில்லை.அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது போலும்.

ஏதோ ஒரு கெமிகல் தொழிற்சாலை அதன் புகையை உயரம் குறைந்த நிலையிலே விடுவித்தது தான் இந்த மாதிரியான வாசத்துக்கு காரணம் என்று தெரிந்துகொண்டேன்.இது ஏதோ ஒன்று அல்லது 2 கி.மீட்டர் சுற்றளவுக்குள் நடப்பது இல்லை.எங்கள் வேலை இந்த இடத்தில் இருந்து சுமார் 15 கி.மீட்டர் தள்ளி உள்ளது.அங்கும் இந்த நெடியை உணர்ந்தேன்.பாவம் இந்த மக்கள்.தொடர்ந்து சில வருடங்கள் இருந்தால் நிச்சயம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கும்.

அவ்வளவு ஏன்,புகை வண்டி இந்த ஊரை நெருங்கும் போதே இந்த வாசம் வர ஆரம்பித்துவிடும். இப்போது நிலைமை மேம்பட்டிருக்கும் என்று நம்பலாம்.


சைட்டில் முதல் நாள்.முதன்மை அதிகாரி வர சிறிது நேரமானதால் அப்படியே ஒரு வலம் வந்தேன்.பல முகங்கள் புதியன.சிமினியின் மேற்பார்வை பொறியாளருடன் சிறிது நேரம் விவாதித்துவிட்டு,மேல் பணிகளுக்காக காத்திருந்தேன்.

அதற்கிடையில் முதன்மை அதிகாரி வந்ததும் ஒரு சின்ன அறிமுகம்,பிறகு வேலையை பற்றிய விவாதங்கள் ஆரம்பமாயின.எடுத்ததுமே போட்டார் ஒரு குண்டு.

நீ என்ன செய்வேயே ஏது செய்வோயே தெரியாது,இந்த வேலையை முடிக்காமல் நீ இங்கிருந்து போகமுடியாது.முடிக்க எவ்வளவு நாள் ஆகும் சொல்லு? என்றார்.

நானோ,இப்போது தான் வந்துள்ளேன் பல விஷயங்களை பார்த்தபிறகு தான் முடிவு செய்யவேண்டும்,அதோடிலில்லாமல் நான் வந்தது உங்களுக்கு உதவ தானே நான் இங்கு இருந்து முடித்துக்கொடுக்க அல்ல, என்றேன்.

அவரோ பிடிவாதமாக, அதெல்லாம் தெரியாது உனக்கு தெரியுமல்ல வா? நீ தான் முடிக்கனும்.இவர்கள் யாருக்கும் தெரியாது என்று அந்த பொறியாளர் பக்கம் திரும்பி சொன்னார்.

அவர் குணம் பற்றி முன்னமே சிலர் எச்சரித்திருந்தால் மேற்கொண்டு விவாதம் செய்யாமல்,வெளியேறினேன்.

நான் போயிருந்த போது சிமினியின் கீழ் பாகம் மட்டும் முடிந்திருந்தது.சுற்றுச்சுவர் போட தேவையான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதற்கு குறைந்தது 3 வார காலம் ஆகும் என்பதால்,அதற்குள் சிமினிக்கு வேண்டிய சார வேலைகள் எல்லாம் முடித்துவிடலாம் என்று எண்ணி அதற்கான வேலைகளில் இறங்கினேன்.

நான் செய்ய வேண்டிய வேலைகளை முடித்த பின்னும் கான்கிரீட் வேலையில் சிறிது சுணக்கம் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் பற்றாக்குறை என்று பல விதங்களில் பிரச்சனை உருவாகியது.

எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாத்தால்,ஒரு சில நாட்கள் பார்த்துவிட்டு,வேலை ஒன்றும் செய்வதிற்கில்லை என்பதால் மீண்டும் சென்னைக்கு வந்தேன்.அவர்கள் வேலை முடிந்தவுடன் திரும்ப வந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.

3 வாரங்கள் கழித்த பிறகு கூப்பிட்டார்கள்.

போய் தேவையான வேலைகளை முடிக்க 3 வாரம் ஆனது.என்னை விடுவிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாக இல்லை.நானும் எவ்வளவோ சொல்லியும் பிரயோஜனம் இல்லை.இப்படியே இருந்தால் மலேசியா போகும் வாய்ப்பும் கை நழுவிவிடும் நிலைக்கு போய்விடும் என்று தெரிந்தது.

வேறு வழியில்லாம்,முதன்மை அதிகாரியிடம் போய் என் வேலை முடிந்துவிட்டது,எப்போது என்னை விடுவிக்கப்போகிறீர்கள் என்றேன்.

உடனே பக்கத்தில் இருக்கும் திரு.ஐயரிடம், இன்னும் எவ்வளவு காலத்துக்குள் வேலை முடியும் என்றார்.அவர் சொல்லிய கால அட்டவைணக்குள் முடிக்க வேண்டும் என்றால் வாரத்துக்கு 5 முறை சுவர் கான்கிரீட் போடவேண்டும் என்று கணக்கு சொன்னது.

முதன்மை அதிகாரி என்னிடம் திரும்பி,வாரத்துக்கு 5 போட முடியுமா? என்றார்.

முடியும் என்றேன்.

அப்படி என்றால் போட்டு காண்பித்துவிட்டு போ என்றார்.

சவால் தொடங்கியது.ஒரே ஒரு கன்டிஷனுடன். வேலை 24 மணி நேரம் நடக்கவேண்டும் என்பது தான்.

கன்டீஷன் போட்ட 2வது வாரமே செய்துகாண்பித்து, 5வது சுவர் கான்கிரீட் போடும் அன்று அங்கிருந்து கிளம்பினேன்.

கிளம்பினாலும்... அந்த நெடி வாசம் இன்னும் அந்த அப்பாவி மக்களை சுற்றிச் சுற்றி வருகிறது.

மீதி அடுத்த பதிவில்.

Saturday, April 7, 2007

புதிய முகம்

இத்தனை நாள் வேறொரு முகத்துடன் இங்கு உலவி வந்தேன்.
அதன் தொடர்ச்சிகளை இங்கு காணலாம்.
இங்கு நான் சொன்னவை/சொல்லப்போவது எல்லாம் என் சொந்த அனுபவம் மற்றும் என் பார்வையில்.
குறை, நிறை இருப்பின் தவறாது வந்து கருத்துச்சொல்லி நேர்படுத்தவும்.
வருகைக்கு நன்றி
வடுவூர் குமார் என்னும் வெங்கடேசன்.