Wednesday, October 17, 2007

கோலாலம்பூர்

பழைய நிறுவனத்தில் இருந்து விலகுவது பச்சை துரோகமா? சிகப்பு துரோகமா? என்று கேட்டிருந்தேன்.
அதற்கு காரணம் இருந்தது.
என்னுடைய கட்டுமான அறிவு வளர,வளர்த்த நிறுவனம் இது.தனிப்பட்ட பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் வெறும் பணத்தை மட்டும் குறி வைத்து சிங்கப்பூரில் வேலை தேடுவதா என்ற குழப்பம்.

பெற்றோர்கள் காலத்தில் ஒரு கம்பெனியில் சேர்ந்தால் அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாயி வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழிப்பது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.அதே உணர்வுடன் தான் இங்கும் வேலை பார்த்துவந்தேன்.அப்படிப்பட்ட சமயத்தில் இந்த கம்பெனியை விட்டு போவது எனக்கு பச்சை துரோகமாக தெரிந்தது.

இதற்கிடையில் அங்கு வேலை முடிந்து சென்னைக்கு திரும்பி அனுப்பப்ட இருந்தவர்கள் சிலர் மலேசியாவில் வேலை தேடி இங்கே செட்டில் ஆகிவிட்டார்கள்.சிலர் செய்தது, என்னுடைய எண்ணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தது.

ஒரு நாள் ஞாயிறு அன்று சரவாக் (மலேசியாவில் ஒரு மாநிலம்) இல் வரும் ஆங்கில தினசரியை புரட்டிக்கொண்டிருக்கும் போது என்னுடைய தகுதிக்கு ஏற்ப ஒரு விளம்பரம் இருந்தது.சும்மா முயலாம், கிடைத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து விண்ணப்பித்தேன்.

இதற்கிடையில் என்னையும் இந்தியாவுக்கு திரும்ப அழைப்பு வந்ததால் மனைவியையும்,பையனையும் மலேசியாவுக்கு வரவழைத்து,சுற்றி பார்த்துவிட்டு பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிங்கப்பூர் போய் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை செல்வதாக உத்தேசித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை அலுவலகத்தை கேட்டுக்கொண்டேன்.அதில் பல குழப்பங்களுக்கு இடையே நான் கூச்சிங் (சரவாக்கின் தலைநகரம் ) இருந்து கிளம்பும் வரை அவர்கள் கிளம்பும் விபரம் சரிவர தெரிவிக்கப்படாமல் ஒரு குத்து மதிப்பாக கோலாலம்பூரில் வந்து இறங்கினேன்.என்னுடைய விமானத்துக்கும் அவர்கள் விமானத்துக்கும் சிறிய இடைவெளி நேரம் இருந்ததால் அவர்கள் வெளியே வரும் இடத்தில் வந்து காத்திருந்தேன்.அது மட்டும் தான் வெளியேறும் வழியா இல்லையா என்பது பற்றி சரியான விவர பலகைகள் இல்லை.அதுவும் குழப்பம்.இவர்கள் வந்துவிட்டார்களா? இல்லையா? என்று எதுவும் தெரியாமல் முழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன்.நான் வந்தது உள்ளூர் விமானத்தில் அவர்கள் வருவது வெளிநாட்டு விமானத்தில் என்பதால் சரியான விபரங்கள் கிடைக்கவில்லை.

மனைவிக்கும் இது தான் முதல் வெளிநாட்டுப் பயணம் அதுவும் கையில் குழந்தையுடன்.எப்படியோ சரியாக நான் இருக்கும் வழியில் வந்ததால் பிரச்சனை இல்லாமல் சந்தித்துக்கொண்டோம்.

என்னுடைய நண்பர் வீட்டில் தங்கினேன்.மூன்று நாட்கள் கோலாலம்பூர் சுற்றினோம்.இதற்கிடையில் நான் விண்ணப்பித்திருந்த (சிங்கை) நிறுவனத்தில் இருந்து என்னை நேர்காணலுக்கு வரச்சொல்லியிருந்தார்கள்.நேர்காணல் ந்டக்கும் இடம் கோலாலம்பூரில்.அதுவும் நான் கோலாலம்பூரில் இருந்து கிளம்பும் நேரத்தில்.பயணதேதிகளை மாற்றும் எண்ணம் இல்லாததால்..எப்படியும் சிங்கப்பூர் போகப்போகிறோம் அங்கேயே கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டுவிட்டேன்.

வேலை தேடுவதில் அவ்வளவு முனைப்பு காட்டவில்லை,அப்போது.

இருந்த மூன்று நாட்கள் கோலாலம்பூரை சுற்றினோம்.சரியான சாப்பாடு கிடைக்காததால் அவ்வளவாக அனுபவிக்க முடியவில்லை.

அடுத்து சிங்கப்பூர் போக கோலாலம்பூர் விமான நிலையத்தில் என்னுடைய கடவுச்சீட்டை கொடுத்த போது அங்கிருந்த அதிகாரி என்னைப் பார்த்து

"When did you come to Kulalampur? " என்று கேட்டது என்னை தூக்கிவாரிப்போட்டது.