Tuesday, February 26, 2008

விபத்து

கட்டுமானத்துறை - விபத்து இரண்டையும் எப்போதுமே பிரிக்கமுடியாதது, ஆனால் குறைக்க முயலலாம்.

ஒரு விபத்து எப்படி நடக்கிறது என்பதை கீழே உள்ள சலனப்படத்தின் மூலம் பார்க்கலாம்.

இதில் பல விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றாலும் கட்டுமானத்துறையில் ஏர் பிடித்திருப்பவரை கொண்டு வந்து விட்டால் இந்த மாதிரி விபத்துக்கள் சுலபமாக நடக்கும்.



நன்றி: யூ டியூபில் போட்ட மனிதருக்கு.

Thursday, February 14, 2008

சிங்கப்பூர் வாழ்கை

போன பதிவில் 1995 வந்ததோடு முடித்திருந்தேன்.

இரண்டாவது முறையாக வருவதால் இடம் & பயணம் என்ற பிரச்சனை எதுவும் இல்லாமல் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அலுவலக முகவரியை Street Directory மூலம் தெரிந்துகொண்டு கிளம்பினேன்.அலுவலக வரவேற்பாளரிடம் என்னுடைய வேலை அனுமதி கடிதத்தை கொடுத்தேன்.அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு,உங்கள் பிராஜக்ட் மேனேஜர் இன்று MC (அப்படி என்றால் என்னவென்று கேட்கவில்லை) அதனால் இன்று சேர்ந்துவிடுங்கள்,நாளை வேலை இடத்துக்கு அழைத்து போவார்கள் என்றார்.

இந்த இடத்தில் சிங்கப்பூரில் வித்தியாசமான பேச்சு வழக்கை பார்ப்போம்.பல சமயங்களில் சுருக்கமாக பேச வேண்டும் என்ற நினைப்பில் மேலே சொன்ன மாதிரி Mediacal Cerificate என்பதை MC என்று சொல்வார்கள். தட்டச்சு செய்யும் தாளில் பிழை இருந்தால் Corrector என்று சொல்லப்படும் வெள்ளை இங்கை "Blanco" என்று கம்பெனி பேர் சொல்லி அடையாளப்படுத்துவார்கள்.கட்டுமான பொருட்களையும் இப்படித்தான்,உதாரணத்துக்கு சில

மண்வாரி இயந்திரத்துக்கு- அந்தந்த கம்பெனி பேர்
சின்ன கம்பி வெட்டும் இயந்திரம்- Markita என்பார்கள்.
பாரம் தூக்கி- கிரேன் என்று சொல்லாமல் அந்த கிரேன் தயாரித்த கம்பெனி பேர் தான்.

முதல் நாள் அலுவலகத்தில் அவ்வளவு வேலை இல்லை என்றாலும் மதிய சாப்பாட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்த போது அங்கிருந்தவர்களிடம் இங்கு சைவம் கிடைக்குமா? என்றேன்.

பக்கத்தில் தான் தேக்கா(சிரங்கூன் சாலை) உள்ளது அங்கு கிடைக்கும் என்றார்கள்.

எங்கள் அலுவலகம் இருந்த இடத்தில் இருந்து சிரங்கூன் சாலை எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை,சிலரிடம் கேட்டு அப்படியே துழாவிக்கொண்டு வந்த போது Bras Brash சாலைக்கு அருகில் வந்த போது ஒரு தமிழர் கடை தென்பட்டது.முகப்பு கண்ணாடி பெட்டிக்குள்ளேயே வகை வகையாக அசைவ உணவுகள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது.சுற்று வட்டாரத்தில் கடை எதுவும் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை,என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் உள்ளே சென்று எனக்கு சாதமும் தயிர் மாத்திரம் கொடுங்கள் போதும் என்று சொல்லி ஊறுகாயுடன் அன்று மதிய சாப்பாடு முடிந்தது.சுங்கை ரோடுக்கு அருகில் இன்றும் உள்ளது அந்த சாப்பாட்டுக்கடை.அவ்வப்போது அந்த பக்கம் போகும் போது நினைப்பு வரும்.

முதல் நாள் வேலை முடிந்து மறுநாள் வேலைக்கு சென்ற போது நான் செல்லவேண்டிய பிராஜக்டின் மேனேஜர் வந்திருந்தார்.அவருடன் கிளம்பி வேலை இடத்துக்கு போனேன்.இந்த இடம் பாசிர் பஞ்சாங் என்ற இடத்தில் இருந்தது.இது ஒரு காலத்தில் டைகர் பீர் தொழிற்சாலை இருந்த இடம்.இங்கு நம் சக வலைப்பதிவர் “கால்கரி சிவாவேலை பார்த்திருக்கார்.

அந்த தொழிற்சாலையை இடித்துவிட்டு அந்த இடத்தில் 8 மாடி தொழிற்சாலை/அலுவலகமாக மாற்ற இருந்தார்கள்.

நான் போன போது அதன் கீழ் தள வேலைகள் நடந்துகொண்டிருந்தன.சில வரை படங்களை கொடுத்து பிராஜக்டை பற்றி தெரிந்துகொள்ளச் சொன்னார்கள்.

முதல் நாளே ஒரு வித்தியாசமான அனுபவம்.

அலுவலகம் அதற்கு பக்கத்திலேயே ஒரு சின்ன கேண்டின் என்று இருந்தது.காலை உணவு மற்றும் மதிய சாப்பாடு பலருக்கும் இங்கு தான். வெகு சிலரே வெளியில் போய் சாப்பிட்டார்கள்.இங்கு கொடுக்கப்படும் மதிய சாப்பாடுகள் அனைத்தும் அசைவ உணவோடு சேர்த்தே வழங்கப்பட்டு வந்தது.

முதல் பிரச்சனை சாப்பாட்டில் அல்ல... தேனீரில்.இங்கு தேனீர் இரண்டு விதமாக வழங்கப்படும்.

ஒன்று பால் கலந்து மற்றொன்று பால் கலக்காமல்.

ஏற்கனவே தயாராக இருக்கும் டீ டிகாஷனில் Codensed Milk ஐ இரண்டு ஸ்பூன் போட்டு,சீனி போட்டு டக டக என்று கடைந்து கொடுப்பார்கள்.அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டால் கிளாசில் கொடுப்பார்கள்.பார்ச்சல் என்றால் நெகிழி பையில் போட்டு கொடுப்பார்கள்.செம சூடாக இருந்தாலும் பை ஒன்றும் ஆகாது.காபி பால் இல்லாமல் குடிக்கும் சிலர் அந்த பையில் சில ஐஸ் கியூபுகளை போட்டு குடிப்பார்கள்.அந்த பையில் ஒரு உரிப்பான் ஒன்றும் இருக்கும்.





முதல் நாள் மதியம் டீ குடிக்கும் வேளை வந்ததும் அங்கிருந்த ஒருவர் என்னிடமும் இந்த பையை கொடுத்தார்.உரிப்பான் மூலம் உரிஞ்ச..ஆ ஆ ஆ

செம சூடு,அப்படியே வைத்துக்கொண்டு சூடு குறையும் வரை அலைந்துகொண்டிருந்தேன்.டபரா டம்ளர் இருந்தாலாவது ஆற்றிவிட்டு சாப்பிடலாம்,கப் ஆக இருந்தாலாவது ஊதி ஊதி குடிக்கலாம்,இது ரெண்டுங்கட்டானாக இருந்தது.

அப்ப நான் பார்த்த ஒரு காட்சி இன்னும் என்னுடைய மண்டை சரியாக வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

ஒரு தாய்லாந்து வேலை ஆள்,தன்னுடைய காபியை அந்த உரிஞ்சான் மூலம் காற்றை ஊதி அதை குளிர்வித்துக்கொண்டு இருந்தார்.அப்போது தான் உறைத்தது இப்படி பாக்கெட்டில் உள்ளதை ஊதி குளிர்விக்கலாம் என்று.

இப்படியாக சிங்கப்பூர் வாழ்கை தொடங்கியது.மீதி அடுத்த பதிவில்.

Sunday, February 3, 2008

9 ஆண்டுகளில் 500 சிறுநீரகம்

தேசத்தின் தலைக்குனிவு அதுவும் நாட்டின் தலைநகரத்திலேயே.

கடந்த 9 ஆண்டுகளில் 500 சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளனவாம்,அதை இங்கு செய்தியில் சொன்ன போது கொஞ்சம் அதிர்ந்தே போனேன்.அதனால் என்னவோ செய்தி படிப்பவருக்கும் தடங்குகிறது போலும்!!

நீங்களும் பார்த்து அதிர...




நன்றி:வசந்தம் சென்ரல்.

Friday, February 1, 2008

பிஸ்கெட் நடராஜன்?

என்னுடைய கடவுச்சீட்டை கொடுத்து அனுப்பிய சுமார் 15 நாட்கள் கழித்து திரு சோங்க் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி,இன்றைக்கு இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் இவரிடம் போய் உன்னுடைய கடவுச்சீட்டை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டு நான் கிளம்பும் தேதிக்கு விமான பயணச்சீட்டையும் அதனுடன் இணைத்திருப்பதாக சொன்னார்.

அவர் சொன்ன தேதிக்கு அந்த ஹோட்டலுக்கு போனேன்.ஹோட்டல் பேர் என்னவோ பெரிய பெயராக இருந்தாலும் இருட்டான Corridor ஏதோ மனதில் சந்தேகத்தை எழுப்பியவண்ணம் இருந்தது.அறை எண் வந்ததும் தயங்கி தயங்கி காலிங் பெல்லை அழுத்தினேன்.கொஞ்ச நேரம் கழித்து ஒரு இள வயது பெண் கதவை திறந்தார்,உள்ளே கட்டிலின் மேல் ஒரு இரட்டை நாடி ஆள் இடுப்பில் துணி மட்டும் உடுத்திக்கொண்டு இருந்தார்.நான் உள்ளே போன சில நொடிகளில் குளியல் அறையில் இருந்து மற்றொரு இளவயது பெண் வெளியில் வந்தாள்.கொஞ்ச நேரம் பேசுவதற்குள் அவருக்கு வெகுவாக இறைத்தது.

நிலமை அவ்வளவு சுமூகமாக இல்லையே என்ற நினைப்புடன் என் பெயர் சொல்லி,சோங்க் உங்களிடம் என்னுடைய கடவுச்சீட்டை வாங்கிக்கச்சொன்னார் என்றேன்.

உட்காருங்க தம்பி என்றார்.பரவாயில்லை என்றேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஏதோ பையை எடுக்கச்சொல்லி அதனுள் தேடி திரும்ப பெயரை கேட்டு,கடவுச்சீட்டுடன்,விமான டிக்கெட் மற்றும் அமெரிக்க டாலர் 500ம் கொடுத்தார்.

நான்,எதற்கு இந்த 500 டாலர் என்றேன்.அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த சிங்கப்பூர் பார்ட்டி கொடுக்கச்சொன்னார் கொடுக்கிறேன் அவ்வளவு தான் என்று சொல்லி “இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுவிடுங்கள்' என்றார்.நாணயமாக நடந்துகொண்டார்.நம்பவே முடியவில்லை.ஒரு காலத்தில் சிங்கையில் “பிஸ்கெட் நடராஜ்” என்பவர் அதற்கேற்ப தொழில் செய்துவந்தது இங்கு வந்ததும் தெரிந்தது.பிற்காலத்தில் அவர் புகைப்படம் பத்திரிக்கையில் பார்த்தபோது நான் சந்தித்த நபர் அவரைப்போலவே இருந்ததாக தோனியது.இவரை பிடிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு இருக்கும் போது இந்தியாவில் மாரடைப்பில் இறந்ததாக ஞாபகம்.

கையில் டிக்கெட் வந்ததும் எல்லாம் சுமூகமாகவே முடிந்தது, நிம்மதியாகத்தானே இருக்கும்?

அதான் இல்லை.

வீட்டில் பெற்றோர்கள் முதலில் இருந்தே அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.இங்கே நல்ல வேலையில் இருக்கும் போது எதுக்கு வெளிநாடெல்லாம் போகனும் என்று இழுத்தார்கள்.

நல்ல கம்பெனி,சம்பளம் உள்ள வேலை என்றாலும் வருடம் முடிந்து கையில் நிற்கும் தொகையை பார்த்து, நாளை நம்மில் யாராவது மருத்துவமனையில் படுக்க நேர்ந்து கத்தி வைக்கும் படி ஆனால் வரப்போகும் 1 அல்லது 2 லட்சம் ஆனால் எங்கு போய் புரட்டுவது என்றேன்.மழைக்காலத்துக்கு சேமிக்க உடம்பில் வலு இருக்கும் போது அதுவும் வாய்ப்பு கதவை தட்டும் போது திறந்துபார்க்காமல் இருக்க முடியுமா?அவர்கள் மனப்பூர்வமான அனுமதியில்லாமல் தான் கிளம்பினேன்.

மனைவியை கேட்டேன்...உங்களுக்கு சரி என்று தோனினால் செய்யுங்கள் என்றார்.

இதெல்லாம் விட முக்கியமான பிரச்சனை.இப்போது இருக்கும் கம்பெனியை விட்டு விட்டு போவதா இல்லை சுமார் 25 நாட்கள் விடுப்பை வைத்து விளையாடுவதா? என்பது தான்.எனக்கு வந்தியிருப்பது என்னவோ விசிட் பாஸ் தான்,நான் அங்கு போன பிறகு தான் Employment Pass க்கு விண்ணப்பிக்க வேண்டும்.சில சமயம் இந்த அனுமதியை நிராகரிப்பதும் நடக்கும்,அப்படி நடந்தால்,திரும்ப இந்தியாவுக்கே வந்துவிட வேண்டும்.அப்படி நேரிட்டால் இந்த வேலையை எப்படி திரும்ப பெருவது? குழப்பம் தான்.

நான் கேட்டு வந்ததோ 2 வாரம் இப்போது 1 மாதம் ஆகிவிட்டது.

பல முறை யோசித்துவிட்டு,விடுமுறைய நீட்டித்துவிட்டு தகப்பனாரிடம் எதற்கும் என்னுடைய ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

மார்ச்-1995 சிங்கை வந்து சேர்ந்தேன்.

இன்னும் இருக்கு,பிறகு சொல்கிறேன்.