Sunday, September 7, 2008

மறுபடியும் வேலை போச்சு (கி.பி.2000)

இதன் தொடர்பில் உள்ள முந்தைய பதிவு.
அடையாள அட்டை போய் வேறு புதிய அட்டை கிடைத்த கொஞ்ச மாதங்கள் வரை பழைய அட்டையாள் எந்த பிரச்சனையும் வரவில்லை.
ஒரு நாள் அஞ்சல் பெட்டியை திறந்து கடிதங்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு வரும் போது,தொலைப்பேசி நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.(அந்த சமயத்தில் (தொலை அழைப்பான்)பேஜர் மட்டுமே வைத்திருந்தேன்.முதலில் பார்க்கும் போது ஏதோ விளம்பரத்துக்காக அனுப்பியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்திருந்தேன்.வரி வரியாக பார்க்கும் போது சுமார் 183 வெள்ளிக்கு என் பெயரில் பில் இருந்தது.இதென்னாடா கூத்து? என்று முதலில் அதிர்ந்தேன்.தொலைப்பேசி நிறுவனத்தை அழைத்து இப்படி ஒரு நிலுவை வந்திருக்கு இந்த தொலைப்பேசி நான் வாங்கவில்லையே என்றேன்.அவர்கள் என்னுடைய அடையாள அட்டை இதற்கு முன்னால் தொலைந்து போனதா? என்று கேட்டார்கள்.அதன் பிறகு தான் எனக்கே உறைத்தது.அட பாவி மக்களா? என்று நினைத்து அவர்களிடமே நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று கேட்டவுடன்,உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.அது ஒரு வழியாக சுமூகமாக முடிந்தது.

அடுத்து வேறொரு நிறுவனத்திலும் கைவரிசையை காட்டியிருந்தார்கள் அது எனக்கு 6 வருடங்கள் கழித்து தான் தெரியவந்தது அதுவும் இது போல் செய்து சரி செய்தேன்.

அதற்குப்பிறகு இன்று வரை வேறொரு பிரச்சனையும் வரவில்லை.

இதற்கிடையில் நான் பார்த்த கம்பெனியில் வேலைகள் இருந்தாலும் ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் வேலை செய்யவேண்டியிருந்தது.வெளி நிலவரம் வேலைக்கு மனு செய்வதற்கு ஏற்ற நிலையில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சில நிறுவனங்களுக்கு தொடர்ந்து மனு போட்டுக்கொண்டிருந்தேன்.அதில் ஒரு நிறுவனம் அழைத்தது,அளவில் சிறியது ஆனால் அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனர், ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டியது.

அந்த நிறுவனத்தின் தலைவர் கூப்பிட்டு நாம் ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து பேசலாம் என்று சொல்லி நேரத்தையும் குறித்துக்கொண்டார்.அவர் சொன்ன இடம் அவர் நிறுவனத்தின் ஒரு பகுதி.அந்த நாளில் சுமார் மாலை 6.30 மணிக்கு போனேன்.அவர் மட்டும் தான் இருந்தார்.பொதுவான விபரங்களை பேசிவிட்டு காத்திருக்கும் போது இன்னும் இருவர்கள் உள்ளே வந்தார்கள்.அந்த அறையில் ஏற்கனவே இருந்த சிகரேட் நொடி இன்னும் போகாமல் அடம் பிடித்தது.அதுவும் குளிர்சாதனம் வேறு இருந்ததால் உள்ளே இருந்த காற்றில் அப்படியே தங்கிவிட்டது.இது போதாது என்று மீண்டும் சிகரெட் பற்ற வைத்தார்கள், எனக்கு உள்ளுக்குள் புகைய ஆரம்பித்தது.
பொதுவான விஜாரிப்புகள் முடிந்தவுடன்
கேட்ட முதல் கேள்வி
இப்ப நமக்கு ஒரு சைட் கிடைத்திருக்கு,முதலில் என்ன செய்வாய்? என்றார்.

சிங்கப்பூரை பொருத்தவரை எங்கள் வேலையிடத்துக்கு முதல் முக்கிய தேவை நுழையும்/வெளியேறும் வழி தான்.இதில் சறுக்கினால் அந்த வேலை முடியும் வரை தலைவலி தான்.அது பல வேலைகளில் பார்த்ததால் என்னுடைய அனுமானத்தையே பதிலாகவும் சொன்னேன்.

ஒரு சில வினாடிகள் கழித்து சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்காத குறையாக மற்ற இரு அதிகாரிகளைப் பார்த்து நான் அப்போதே சென்னேன் பார்த்தீர்களா? என்று பரவசப்பட்டார்.அவர் மனதில் இருந்த எண்ணம் அப்படியே என்னிடம் வெளிப்பட்டதால் அவருக்கு பயங்கர சந்தோஷம்.அப்போதே என்னுடைய வேலை முடிவாகிவிட்டது,இருந்தாலும் அப்படி இப்படி என்று நேர்காணல் ஒரு மணி நேரம் ஓடியது.வேலை மேலாண்மைப் பற்றிய விபரங்கள் அது இது என்று கேட்டு சம்பள விஷய்த்தில் வந்து நின்றது.நான் கேட்ட சம்பளமும் அவர்கள் கொடுப்பதாக சொன்னதும் சரியாகவரவில்லை.அதிகமான சம்பளம் கொடுப்பதில் உள்ள பிரச்சனையை அவர்கள் சொன்னார்கள்.அதிக வருடங்கள் தொடரும் பட்சத்தில் வேறுமாதிரி உயர்த்திக்கொடுப்பதாக சொன்னார்கள்.எனது மனம் கணக்கு போட்டது.இப்போது இருக்கும் நிறுவனம் இருக்கும் நிலமை சரியில்லை அதோடு சம்பளமும் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் மாதிரியில்லை.
இந்த சூழ்நிலையில் நிறுவனம் மாறும் போது சம்பள உயர்வு இல்லாதது உறுத்திக்கொண்டு இருந்தது,அதோடு இந்த நிறுவனத்துக்கு இன்னும் 5 ஆண்டுகளுக்கு வேலை இருக்கும் என்ற உறுதி மொழிவேறு என்னை ஆட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தது.

வருவது வரட்டும் என்று அவர்கள் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு இன்னும் ஒரு மாதத்தில் சேர்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இதற்கிடையில் மற்றொரு ஜப்பானிஸ் நிறுவனத்துக்கு சென்ற நேர்காணல் முடிவு பற்றி ஒன்றும் தெரியாமல் இழுத்துக்கொண்டிருந்தது.

வேலை விலகல் கடிதம் கொடுத்து நோட்டிஸ் கால வரையான 1 மாதம் முடிவுக்காக காத்திருந்தேன்.

No comments: