Sunday, May 25, 2008

மீண்டும் Recession

இந்த கேப்பிடல் டவரில் வேலை ஆரம்பித்த ஒரு வருட காலத்துக்குள் என் வரையரையில் இருந்த வேலை முடிந்து சின்னச்சின்ன வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.அங்கிருந்த பல கொரியர்களின் வேலையும் முடியும் சமயத்தில் இருந்தது அதே சமயத்தில் வேறு புதிய வேலையும் இவர்களுக்கு கிடைக்கவில்லை...கத்தியை கையில் எடுக்க ஆரம்பித்தார்கள்.

சமீபத்தில் சேந்தவர்கள்,வெளிநாட்டவர்கள்,நிரந்தரவாசிகள் கடைசியாக உள்ளூர்காரர்கள் என்று வகை வகையாக “கொத்து பரோட்டா” போட்டார்கள். அதில் என் பெயரும் வந்து வயிற்றில் புளியை கரைத்தது.இந்த கால கட்டத்தில் சிங்கையில் கட்டுமானம் அடி மட்டத்தை தொட்டு அதற்கும் கீழே போகமுடியுமா? என்று பார்த்துக்கொண்டு இருந்தது.

இந்த நிலையில் அரசாங்கம் தன்னிடம் உள்ள MRT என்று சொல்லப்படுகிற ரயில் சேவையை விரிவுபடுத்த எண்ணி அதற்கான கட்டுமான குத்தைகளை விடுவிக்க ஆரம்பித்தது.இது ஓரளவுக்கு சூட்டை தணிக்க உதவினாலும் பலர் வேலையில்லாமல் திண்டாடினோம்.

இந்த கம்பெனி ஆரஞ்சு கடிதாசி கொடுத்து ஒரு மாத நோட்டிசு நேரத்தில் பல வேலைகளுக்கு எழுதி போட்டேன்,அதனால் எந்த பயனும் இல்லாமல் இருந்தது இன்னும் கலக்கத்தை உண்டுபண்ணியது.இந்த ஒரு மாதம் முடியும் நேரம் வந்தது அந்த நேரத்தில் இந்த கொரியன் கம்பெனியில் இருந்த குத்தகைகாரருக்கு ஆட்கள் தேவைப்பட்டது.

என்னடா! இது நாம் வேலை வாங்கிய நிறுவனத்திலேயே போய் வேலை செய்வதா என்ற தயக்கம்.அந்த நேரத்தில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் பட்சத்தில் இப்படி வேலை கொடுக்கிறேன் என்று சொல்லும் நிறுவனத்தில் இருந்துகொண்டு மேற்கொண்டு முயலலாம் என்ற எண்ணத்துடன் அந்த ஸ்டீல் கம்பெனியில் சேர்ந்தேன்.சம்பளமும் குறைவு தான் ஆனால் வேறு வழியில்லை.

இந்த புது கம்பெனி நேர்காணலே புதுவிதமாக இருந்தது.என்னைப்பற்றி அனைத்து தகவலும் அங்கு இருந்த மனவாடுக்கு சொல்லப்பட்டிருந்தது.அவர் தான் தரக்கட்டுப்பாட்டுக்கு தல அவருடைய அணியின் கீழ் தான் நான் வந்தேன்.நேர்காணலுக்கு போய் உட்கார்ந்த உடனே அங்கிருந்த மக்கள் வளத்துறை சம்பிரதாய கேள்விகளை கேட்டு பதில் வாங்கிக்கொண்டு நிபுணத்துவ கேள்விகளுக்காக அந்த பெண்மனி நம் மனவாடை பார்க்க...
எனக்கு இவரைப்பற்றி தெரியும் அதனால் கேள்வி எதுவும் இல்லை என்று சொல்லி முடித்துவிட்டார்.மனித வள அதிகாரி முழித்தது இன்னும் கண்ணில் நிற்கிறது.

இவர்கள் வேலை Lau Pau Sat என்ற பிரபல உணவங்காடிக்கு பக்கத்தில் இருந்தது.இதில் உள்ள சில இரும்பு வேலைகள் இவர்களிடம் வந்தது.

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, May 11, 2008

மரண பயம்...

போன பதிவில் இந்த கட்டிடம் எப்படி எழுப்பப்படுகிறது என்பதை சொல்லியிருந்தேன்,அதை மிகவும் எளிதாக காட்ட ஒரு படம் கிடைத்தது அது உங்கள் பார்வைக்கு.

சுலபமாக சொல்லவேண்டுமென்றால் இந்த நகர்படத்தை பாருங்கள்.பல வேலைகள் இதை ஒத்தே இருந்தது.

இதே முறையை 52 மாடிகளுக்கும் பின்பற்றினோம்.

இது இரும்பு வேலை என்பதால் எல்லா சமயத்திலும் நூறு சதவீத பாதுகாப்பை எதிர்பார்க்கமுடியாது,சிலவற்றை தள்ளிப்போடலாம்.ஆனால் மனித மனம் தான் குரங்காயிற்றே!!
யாராவது ஒரு காரியம் செய்தால் அது நமக்கு கைவரும் வரை நமைச்சல் தான்.
அதே மாதிரி தான் இரும்பு பீம்களின் மேல் வேலைசெய்வது. ஒரு முனையில் மேற்பார்வை முடிந்தவுடன் அடுத்த முனைக்கு போவதற்கு அந்த பீமின் மேலேயே பாதுகாப்புக்கு கயறு கட்டியிருக்கும் அதனுள் உங்கள் பாதுகாப்பு வாரினை இணைத்துக்கொள்ளவேண்டும்.இது முறை.இல்லாவிட்டால் தூணில் மேலிருந்து கீழிறங்கி பிறகு அடுத்த தூணின் மேல் ஏறவேண்டும்.கால் கயன்றுவிடும்.இதை தவிர்க கழைக்கூத்தாடி மாதிரி பீமின் மேல் நடந்து அடுத்த தூணுக்கு போவோம்.

சில சமயங்களில் அந்த வேலையை செய்ய கால அவகாசம் பிடிக்கும்,வேறு வேலை செய்ய குறுக்கு வழிக்காக கயறு இல்லாத பீம்கள் மேல் நடக்கவேண்டி வரும்.இது தவறு தான் ஆனால் இந்த வேலை செய்பவர்கள் பலரும் இப்படித்தான் நடப்பார்கள்.

என்னுடைய ஆரம்ப கால கட்டுமானபணிகளின் போது அவ்வப்போது இந்த மாதிரி பாதுகாப்பற்ற முறையில் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்துள்ளேன்.அதுவே பழக்கமாகி இங்கும் தொடர்ந்தது.இது பாதுகாப்பற்றது என்பதால் அவசியமில்லாத நேரங்களில் செய்யமாட்டேன்.விதி யாரை விட்டது!!

அப்போது எங்கள் கட்டிடம் 27 மாடியை அடைந்திருந்தது.வழக்கம் போல் வேலை மற்றும் inspection என்று போய்கொண்டிருந்தது.என்னுடன் மேற்பார்வை செய்ய வந்திருந்த இன் ஜினியருடன் inspection க்காக போய்கொண்டிருந்தேன்.

அப்போது தான் முடுக்கிய பீமின் மறு பக்கத்தில் ஒன்றை செக் செய்யவேண்டும் என்று அழைப்பு வந்தவுடன் என்னுடன் வந்த இன் ஜினியர் கயறு கட்டாத பீமின் மேல் நடந்து அக்கரை சென்று சேர்ந்தார்.பாதுகாப்பு கயறு கட்டாமல் inspection எதற்கு கூப்பிடுகிறீர்கள் என்று குத்தகைக்காரரை திட்டிவிட்டு நானும் அந்த பீமின் மீது நடக்க ஆரம்பித்தேன்.

அந்த பீமின் ஒரு பக்கம் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள சாலை மறுபக்கம் இன்னும் முடிவடையாமல் இருக்கும் எங்கள் கட்டிடத்தின் ஒரு பகுதி - ஒரு 10 மீட்டர் ஆழத்தில் இருக்கும் சாரம்.

எப்போதும் போல் தான் நடந்தேன்,பாதி தூரம் கடந்திருப்பேன் என்னவாயிற்று என்று தெரியவில்லை...அடுத்த அடி எடுக்கமுடியவில்லை.என்னுடைய உடம்பு அப்படியே உறைந்துவிட்டது.இந்த மாதிரி நடக்கும் போது நடுவில் நிற்கக்கூடாது எனபது பால பாடம்.
பாதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்த அந்த பொறியாளர் புரிந்துகொண்டார.அங்கிருந்த படி என்னை பார்த்து அப்படியே அந்த பீமின் மீது உட்காரச்சொன்னார்.

என்னால் காலையே நகர்த்த முடியாத பட்சத்தில் எப்படி உட்கார்வது,உட்கார முயற்சிக்கும் நேரத்தில் கொஞ்சம் சாய்ந்தாலும் அவ்வளவு தான் 60 அல்லது 10 மீட்டர் கீழே போக வேண்டும்.என்னை முதலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார் அந்த பொறியாளர்.சில நிமிடங்கள் ஒன்றும் செய்யவில்லை அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காலை நகர்த்த முயற்சித்தேன்.



காலை ஓரளவு நகர்த்த முடிந்தாலும் மேல் நடக்க தைரியம் வரவில்லை.இப்போது மெதுவாக ஒரு காலை மட்டும் கீழிறக்கி பீமின் கீழ் பகுதி வரை கொண்டு போய் உட்கார முயற்சித்தேன்.பல முறை முயற்சித்து ஓரளவு தன்னம்பிக்கை வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து அப்படியே ஒரு காலை மடக்கிக்கொண்டு வந்து உட்காரும் நிலை வந்தவுடன் அப்படியே பீமை கட்டிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன்.அதன் பிறகு அதன் மீதே கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து மறுமுனையை வந்தடைந்தேன்.

இந்த நிகழ்வில் இருந்து காலில் இருந்த ஒரு freeness போய்விட்டது.அதற்குப்பிறகு இப்படி முயற்சிப்பதையே விட்டுவிட்டேன்.

இதை படிப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு இதைச் சொல்லுங்கள்,எக்காலத்திலும் இந்த மாதிரி முயற்சிக்கக்கூடாது என்று.