Saturday, February 19, 2011

Exercise- உடல் நலம்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.

தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.

விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.

சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.






துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.






வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.

Friday, February 18, 2011

மதுராந்தகம்.

எப்பவோ இளமை கால நிகழ்வுகளை மனைவிடம் சொன்னதை தவறாமல் ஞாபகம் வைத்து அவ்வபோது இங்கு போகனும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.நேரமும் சரியான போக்குவரத்தும் இல்லாத்தால் தள்ளிப்போய்கொண்டிருந்தது.ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நான் முதன் முதலில் பெண் பார்க்க போன இடம் தான் இந்த மதுராந்தகம்.பெண்ணை கண்ணில் காட்டாமல் திண்ணையில் வைத்தே பேசி அனுப்பிவிட்டார் பெண்ணின் அப்பா,தப்பித்தேன் அப்போதைக்கு.நான் போன சமயம் மதியம் என்பதால் கோவிலை பூட்டிவிட்டார்கள், மாலை வரை காத்திருக்க முடியாததால் ராமரை சேவிக்க முடியாமல் போனது.
போன ஞாயிறு மகனின் GATE தேர்வுக்காக Cresent Engineering College இல் கொண்டுவிட்டு விட்டு காத்திருந்த 3 மணி நேரத்தை எப்படி போக்குவது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அதுவரை பக்கத்தில் இருக்கும் மாமா வீட்டுக்கு போய்விட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம்,திடிரென்று மதுராந்தம் போய் திரும்பிவிடலாமா என்ற யோஜனை வந்தது.பக்கத்தில் உள்ள ஆட்டோ காரரிடம் கேட்ட போது 40 கி.மீ தான் என்றார்,கணக்கு போட்டு பார்த்த போது மகிழுந்துவில் அதற்குள் வந்துவிடலாம் என்று தோன்றி கிளம்பிவிட்டோம்.
வழக்கம் போல் மதுராந்தகம் உள்ளே செல்ல கொஞ்ச தூரம் இருக்கும் இடத்தில் அறிவிப்பு பலகை இருந்தது.உள்ளே நுழைந்தோம் கோவில் இருக்கும் இடத்துக்கு எந்த அறிவிப்பு பலகையும் கண்ணில் படாத்தால் வழியில் நிற்பவர்களை கேட்டு கோவில் வாசலில் வண்டியை நிறுத்தினோம்.கூட்டம் அதிகம் இல்லாத்தால் நல்ல தரிசனம் கிடைத்தது.இயற்கை உபாதைக்கு என்று பார்த்தால் ஒரு கழிவறை கூட சுற்றுவட்டாரத்தில் இல்லை,நல்ல வேளை ஒருவர் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள கழிப்பறை உபயோகப்படுத்த அனுமதித்தார்.மூச்சை அடக்கிக்கொண்டு போய்விட்டு வந்தோம்.



இன்னும் நேரம் இருப்பதை பார்த்து பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா? என்று ஒருவரிடம் கேட்ட போது படாளம் கூட்டு சாலையில் ஒரு 4 கி.மீட்டர் பயணித்தால் திருவையாவூர் என்ற இடத்தில் 108 திருப்பதிகளில் ஒன்றான இந்த கோவில் வரும் என்றார்கள்.சிறு குன்று போல் இருக்கும் இடத்தில் இக்கோவில் உள்ளது.நடந்து போக ஒரு வழியிருந்தாலும் காரிலில் போக வழியுள்ளது.மேலிருந்து பார்த்த போது இன்னொரு கோவில் மடத்துக்கு சொந்தமானது போலும் உள்ளே செல்லும் வழி மூடப்பட்ட நிலையில் இருந்தது.

Sunday, January 30, 2011

சின்ன வயசு ஆசை!

பள்ளியில் படிக்கும் காலங்களில் கோடைவிடுமுறை என்றால் கும்பகோணம் அருகில் இருக்கும் ஆடிப்பிலியூர் போவது என்பது கொஞ்ச வருடங்களுக்கு தொடர்ந்தது.இங்கு இருக்கும் பெரியப்பாவுக்கு நிறைய நிலம் மற்றும் தோட்டங்கள் இருந்தது அதனால் காலையில் எழுந்து சிறிய வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அப்படியே நிலபுலம் பக்கம் போனால் சாயங்காலம் தான் திரும்பி வருவேன்.வயலுக்கு போகும் போது செருப்பு போடக்கூடாது என்பதால் வெறும் காலுடன் பல கிலோமீட்டர் நடந்தே போய் வருவேன். எவ்வளவு தான் முள் குத்தினாலும் பிடிங்கிப்போட்டுவிட்டு ஜாலியாக கரும்பு வயலுக்குள் போய் வருவேன்.எவ்வளவு கரும்பு அப்படியே கடிச்சி சாப்பிட்டேன் என்ற கண்க்கே இல்லை.
வேலை/வெளிநாடு என்றாகிவிட்ட பிறகு பொங்கல் தவிர இந்த கரும்பை கடிச்சி சாப்பிட வாய்பே வாய்க்கவில்லை.சிங்கையில் இருக்கும் போது கரும்பு கிடைத்தாலும் ஓர் ஆளுக்காக வாங்கி சாப்பிட அலுப்பிலேயே சாப்பிடாமல் இருந்தேன்.
வெளிநாட்டு வேலையெல்லாம் முடிந்து உள்ளூரிலேயே வேலை வாய்த்த பிறகு முதல் பொங்கல் சமீபத்தில் வந்தது கரும்பு ஆசையை கிளப்பிவிட்டது.மனைவிக்கு என்ன்னுடய விருப்பம் தெரியும் என்பதால் 2 கரும்பாக வாங்கிவைத்துவிட்டார்.எனக்கு கரும்பை கத்தியால் சிறிது சிறிதாக நறுக்கி சாப்பிடுவது பிடிக்காது, பின்ன எப்படி?




கரும்பு துண்டு பெரிதாக இருக்கனும்.

Wednesday, December 23, 2009

பூமிக்கு கீழ்.

அடுத்த நிறுவனம் "பெயர் சொல்ல முடியாது".
எவ்வளவுக்கு எவ்வளவு பூமிக்கு மேல் வேலை பார்த்தேனோ அப்படியே பூமிக்கு கீழேயும் போக வேண்டிய வேலை வந்தது.அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் இடம் சில கி.மீட்டர் என்பதால் கம்பெனி நான்கு சக்கர வண்டி எடுத்துக்கொண்டுதான் போகனும்.அப்போது எனக்கு 4 சக்கர வாகனம் ஓட்டத்தெரியாது.சிறியவனாக இருக்கும் போதிலிருந்தே பல வேளைகளில் ஒட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து அவர்கள் அசைவுகள் மூலம் ஓரளவு தெரிந்துவைத்து மனதில் இருத்திக்கொள்வேன்.வேலை செய்ய வந்த பிறகும் கூட ECC யில் ஜீப்பில் முன் புறம் உட்காருவது என்பது தான் என் இஷ்டம்.இப்படிப்பட்ட நிலையில் ஒரு முறையாவது வட்டச்சக்கர கைப்பிடி என் கையில் வந்ததில்லை.கண் பார்த்து மனதில் நிறுத்தியதெல்லாம் வேலைக்காகுமா?அதெல்லாம் வெறும் பார்வை தானே!
வேலை இடத்துக்கு போவதென்றால் ஆரம்பத்தில் சக பொறியாளருடன் வண்டியில் தொற்றிக்கொள்வேன்.கொஞ்ச நாள் இப்படியே போனாலும் ஒரு நாள் என்னை அழைத்துப்போக யாரும் இல்லாத நிலையில் பொறியாளர் ஒருவர் வண்டி சாவியை என்னிடம் கொடுத்து "நீயே போய்ட்டு வா" என்று சொல்லி வண்டி ஓட்டத்தெரியும் இல்ல? என்றார்.ஏதோ அசட்டு தைரியத்தில் தெரியும் என்று சொல்லி வாங்கிவந்துவிட்டேன்.வண்டி Parking இடத்தில் இருந்தது.எதிரெதிரே வண்டிகளும் இருந்தன.முதலில் வண்டியை பின்புறம் எடுக்கனும்,ரிவர்ர்ஸ் கியர் போட்டு கிளட்சை மெதுவாக விட்டு ஆக்ஸிலெட்டரை அழுத்துகிறேன் வண்டி பின்பக்கம் போகவில்லை.மறுபடியும் கை பிரேக்கெல்லாம் சரியாக விடுபட்டிருக்கா என்று பார்த்து மறுபடியும் ஆக்ஸிலேட்டரை அழுத்தும் போது கொஞ்சம் பின்னால் போய் அப்படியே நின்றுவிட்டது.எங்களுக்கு கொடுத்த வண்டியெல்லாம் அரத பழசு என்று சொல்லமுடியாவிட்டாலும் அடிக்கடி மக்கர் செய்யக்கூடிய வண்டிதான். நான் இப்படி தினறுவதை பார்த்த ஒரு மியன்மார் ஓட்டுனர் என்னை கீழிறங்கச்சொன்னார்.அவர் கீழிறங்கச்சொன்னது எனக்கு என்னவோ போல் இருந்தது இருந்தாலும் இந்த தவறு மறுபடியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.அந்த மியன்மார் ஓட்டுனர் சரக் என்று பின்னால் எடுத்து வண்டியை முன்பக்கமாக நிறுத்தினார்,அதன் பிறகு எப்படியோ ஓட்டிப்போய் திரும்ப வந்தேன்.

என்ன தான் 2 வருட வேலை என்றாலும் அந்த இடத்திலேயே என்னை 5 வருடம் உட்கார்த்தி வைத்து வேடிக்கை பார்த்தது இந்த நிறுவனம்.தினம் காலை 8 மணிக்கு வரவேண்டியது மதியம் சாப்பிட வேண்டியது மாலை 5 மணிக்கு போக வேண்டியது என்ற பழக்கம் வேலை முடிந்து 2 வருடங்களாக போய்கொண்டிருந்தது.அடுத்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலை கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் அது வரும் வரை சும்மாகவே வைத்திருந்தார்கள். எனக்கு தான் கொடுமையாக இருந்தது. மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.இந்த கொடுமை என்னை அடுத்த வேலை இடத்துக்கு மாற்றும் வரை தொடர்ந்தது.இவர்கள் லாபம் எவ்வளவு இருந்தால் இந்த மாதிரி சம்பளம் கொடுக்கமுடியும் என்று வேறு விதமான மனக்கணக்கு போட ஆரம்பித்தேன்.

இங்கு செய்த பல வேலைகள் எனக்கு புதியவை ஆனால் வெளியில் சொல்ல முடியாதவை என்பதால் அப்படியே அப்பீட்டாகிக்கிறேன்.

இந்த மாதிரி அனாமத்த நேரங்களில் கிடைத்த செய்திதாளில் உள்ள வேலை நிலவரங்களை உண்ணிப்பாக பார்க்க ஆரம்பிதத்தின் விளைவு துபாய் பக்கம் போய் நின்றது.நடுவில் வந்த சில வேலைகள் சம்பள் இழுபறியால் கை நழுவிப்போனது.

இந்நிறுவனம் எதிர்பார்த்த வேலை இப்போதைக்கு இல்லை என்றதால் என்னை வேறு ஒரு வேலைக்கு அனுப்பினார்கள்.அங்கு இருந்த "தலை" 1960களில் உள்ள அறிவோடு வேலை செய்ததால் மற்றும் செய்யச்சொன்னதால் சீக்கிரமே விடுதலைபெற வேண்டிய கட்டாயம் வந்தது.

Friday, July 24, 2009

என்னிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

போன பதிவில் என்னுடைய பழைய நிறுவனம் என்னை பிடித்துவைக்க செய்த தந்திரங்களைப் பற்றி சொல்லியிருந்தேன்.
அதில் ஏன் அவர்கள் என்னை பிடித்துவைக்கவேண்டும்?
சிங்கையில் ஆளா இல்லை அதுவும் இவர்கள் கொடுக்கும் சம்பளத்தை தவிர்த்து பார்த்தால் இவர்கள் வேலையில் பெரிய பிரச்சனை/பிடுங்கல் என்று எதுவும் தெரியவில்லை.

என்னுடைய வேலை, வரை படத்தில் உள்ள வேலையை சரியாக செய்கிறார்களா? என்று கண்காணித்து கிளைண்ட் இஞ்சினியரை கூப்பிட்டு அதை அப்ரூவ் செய்ய வைக்கவேண்டும் அதன் மூலம் சில பேப்பர் வேலை இருக்கும்.இவ்வளவு தான்.

Photobucket

இருக்கும் 8 மணி நேரமும் வேலை இருக்கும் என்று சொல்லமுடியாது.குத்தகைகாரரிடம் இருக்கும் ஃபோர்மேன் தான் தொழிலாளர் ஆட்களை கட்டி மேய்பார்கள் என்பதால் வேலை செய்யும் ஆள் --> ஃபோர்மேன் மூலம் வேலை நிலவரம் தெரிந்து பெரியவரை கூப்பிட்டு காண்பிக்க வேண்டும்.இது ஒரு நாளில் மிஞ்சி மிஞ்சி போன 2 மணி நேரம் தான் இருக்கும் (சில நாட்கள் 6 மணி நேர வேலையும் இருக்கும்).மீதி 6 மணி நேரத்தை எப்படி கழிப்பது?எனக்கென்னவோ அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு சைட்டே என் கையில் தான் இருக்கு என்று அலம்பல் பண்ணி ஓட்டத்தெரியாது,என் மண்டைக்கு வேலை இருக்கும் படி ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.வேலையில் இருந்துகொண்டு வேலையில்லாமல் இருப்பது தான் எனக்கு மன உலைச்சல்,அது கடந்த 5 வருடமாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த வேலையிடத்தில் இப்படி இருக்கும் என் உபரி நேரங்களை சும்மாக இல்லாமல் வேலை இடத்துக்கு போய் அங்கு என்ன செய்கிறார்கள் ஏதாவது உபகரணங்கள் தேவைப்படுகிறதா அல்லது வேலையிலேயே பிரச்சனை இருக்கா அதோடு பாதுகாப்பு பிரச்சனை ஏதும் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பேன்.இப்படி செய்யும் போதே ஒரு வேலையை தொழிலாளர் கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்பேன்.இதில் பல விஷயங்கள் தென்பட ஆரம்பித்தன.இப்படி ஒரு படி கீழிறங்கி பார்க்கும் போது வேலை செய்பவர்களுடன் நல்லுறவு வளர்ந்தாலும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களும் தெரிய ஆரம்பித்தது.அங்கு வேலை செய்பவர்களில் நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பில் வேலை செய்பவர்களும் இருந்தனர்.

ஒரு நாள் என்னுடைய வேலை முடிந்தும் வீட்டுக்கு போகாமல் சிறிது கால தாமதமாக புறப்பட்ட போது சைட்டே நிசப்தமாக இருந்தது.ஸ்டீல் வேலை என்பதால் எப்போதும் சப்தமாக இருக்கும் இடம் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கு என்று வேலை நடக்கும் இடத்துக்கு போய் பார்த்தால் அவரவர் வேலையை விட்டு விட்டு வெறுமனே உட்கார்ந்திருந்தார்கள்.நான் வருவதை பார்த்த ஓரிருவர் வேலை செய்ய தொடங்கினர்.மற்ற சிலரிடம் பேசிய போது அவர்கள் மிகவும் டயர்டாக இருப்பதாகவும் சொன்னார்கள்.சரி டயர்ட் எவ்வளவு நேரம் இருக்கும்? ஒரு அரை மணி நேரம்? மணி இப்போது அதையும் தாண்டி 1 மணி நேரமாகிறது என்று சுட்டிக்காட்டேன்.என்னுடைய பேச்சு அவர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை,வேறு வழியில்லாமல் வேலையை தொடர சென்றார்கள்.

மறு நாள் காலை ஒரு 10 நிமிடம் முன்னதாக வந்து குத்தகைக்காரர் மற்றும் எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலைக்கு போகும் முன்பு கொஞ்சம் காத்திருக்க வைத்துவிட்டு அனைவரிடமும் பேசினேன்.

நீங்கள் எல்லோரும் ஓரளவு படித்தவர்கள் அதனால் ஆங்கிலத்தில் உரையாடுகிறேன் அது புரியாதவர்களுக்கு தமிழில் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு,நேற்று நான் கண்காணித்ததையும் அதனால் அவர்கள் முதலாளிக்கு மற்றும் நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்புகளையும் விவரித்தேன்.சில நிமிடங்கள் வரை யாரும் பேசவில்லை.உங்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பது என் வேலை அல்ல அப்படி செய்தால் என் வேலையை நான் பார்க்க முடியாது. நம் மீது நம்பிக்கை வைத்து நம் முதலாளிகள் அவர்கள் வேலையை செய்கிறார்கள் அதனால் நமக்கும் தொடர்ந்து வேலை கிடைத்துக்கொண்டிருக்கிறது.நாம் அவர்களை ஏமாற்றி Overtime செய்ததாக சொல்லி பணம் ஈட்டினால் கொஞ்ச நாளில் கம்பெனி நொடித்து நம் வேலையும் நம்மை விட்டு போய்விடும் அதனால் ஓரளவுக்கு அவர்களை ஏமாற்றாமல் வேலை செய்வோம் என்று Advise செய்தேன்.இது அவ்வளவும் சொன்ன பிறகு ஒரு தொழிலாளி “நாங்கள் வேலை செய்வதற்கேற்ற சம்பளம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் வருடாந்திர சமபள உயர்வு கூட அவ்வளவாக இல்லை” என்றார்.
சம்பளம் போதவில்லை என்று இப்போது சொல்லி பிரயோஜனம் இல்லை.ஊரில் வேலைக்கு எடுக்கும் போது சொன்ன சம்பளம் கொடுக்கிறார்களா இல்லையா என்று பாருங்கள்.சம்பளம் போதவில்லை என்ற நிலையில் ஏன் இங்கு வேலை பார்க்கிறீர்கள்? வேறு இடம் தேடலாமே என்றேன் அதற்கு அந்நபரிடம் இருந்து பதில் இல்லை.சம்பள உயர்வு பற்றி மேலிடத்தில் பேசிப்பார்க்கிறேன் ஆனால் உத்திரவாதம் கொடுக்கமுடியாது என்று என் நிலையை காப்பாற்றிக்கொண்டேன்.

மறு நாளில் இருந்து வேலை அதன் வேகத்தில் நடக்க ஆரம்பித்தது.நேற்று நடந்த இந்த மீட்டிங்கை பற்றி நான் என் தலையிடம் சொல்லவில்லை என்றாலும் குத்தகைக்காரர் தொழிலாளர் மூலம் போய் சேரவேண்டிட இடத்துக்கு சேர்ந்துவிட்டது.இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிந்தது ஆதாவது என்னை கண்காணிக்க எனக்கு பின்னாளேயே ஆள் வைத்திருக்கிறார்கள்.மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்.நான் என்னுடைய பணியில் கவனமாக இருந்ததால் Consultant இடம் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்கொண்டிருந்ததில் எனக்கு மேல் இருந்த தலை மற்றும் அவருக்கு மேல் இருந்த தலைக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் நான் போகிறேன் என்றால் யார் தான் விடுவார்கள்.கூடிய மட்டும் நம் வேலையில் மட்டும் நம்மை சுருக்கிக்கொள்ளாமல் சுற்று வட்டாரத்திலும் கவனம் செலுத்தினால் முன்னேறலாம்.

Wednesday, April 1, 2009

3 மாதங்களுக்கா ஒரு கம்பெனி?

ஒபயாஷியில் வேலையில்லை என்று சொல்லிய போது ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்து "நீ இனிமே வேலைக்கு வரவேண்டாம்" என்று சொல்லி அனுப்பினார்கள்.

அட! இது பரவாயில்லையே வீட்டிலே உட்கார்ந்து வேலை தேட ஒரு வாய்ப்பாக இருக்கிறதே என்று நினைத்து வெளியேறினேன்.

மீண்டும் வேலை தேடல் ஆரம்பித்து சில நேர்காணலுடன் அப்படியே நின்று போயிருந்தது.வேலை கிடைக்குமா? கிடைக்காதா என்ற நிலை.செய்தித்தாளின் வரி விளம்பரங்களை கூட விடாமல் தேடினேன்,ஹூம் ஒன்றும் அகப்படவில்லை.ஒரு 15 நாட்கள் இப்படியே ஓடியது.

ஒரு நாள் ஏதோ ஞாபகம் வந்தவுடன் முன்பொரு முறை பழகிய நண்பருக்கு பேசி ஏதாவது "லோபாங்" (அதாவது இடம்/ஓட்டை என்று மலாயில்) இருக்கா என்று கேட்கலாம் என்று தொலைப்பேசினேன்.சாதாரணமாக பேசிய பிறகு இப்போது வேலையில்லாமல் இருப்பதை சொன்னேன்,அவரும் சிறிது நேரம் பக்கத்தில் யாரிடமோ பேசிய பிறகு நாளை இந்த விலாசத்தில் இவரை பார்த்து பேசி முடிவுக்கு வா என்று சொல்லி வைத்தார்.வெளிச்சம் தெரியத்தொடங்கியதாக நினைத்தேன்.அவர் பேசும் போதே இது சிறிய நிறுவனம் அதிக சம்பளம் எதுவும் கொடுக்கமாட்டார்கள் அதனால் நீ இதில் இருந்துகொண்டே வேறு வேலை கிடைக்கும் வரை வேலை செய்யலாம் என்று யோஜனையும் சொன்னார்.

மறு நாள் அந்த நிறுவனத்தை அடைந்தேன் அது துவாஸ் என்று சொல்லக்கூடிய பகுதியில் (ஊரின் மேற்குக்கோடி) இருந்தது.இவர்களும் இரும்பு வேலை செய்பவர்கள் தான் இவர்கள் வேலை செய்யும் ஒரு சைட்டில் அவசரமாக ஒரு QA/QC பொறியாளர் வேண்டும் என்பதால் அவ்வேலைக்கு என்னை எடுத்திருந்தார்கள்.சில வருடங்களுக்கு முன்பு பண்ண வேலை என்பதால் கொஞ்சம் மறந்து போயிருந்தது,நேர்காணலில் மிக மோசமாக பண்ணியிருந்தாலும் என்னை ரெக்கமென்ட் பண்ண பொறியாளர் தான் அந்த சைட்டில் இருப்பார் என்பதால் என்னை அங்கு போட்டால் பிரச்சனை வராது என்று நினைத்து என்னை தேர்வு செய்தார்கள்.சம்பளம் அவ்வளவு வராவிட்டாலும் ஓரளவுக்கு ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

இந்த மாதிரி அடிக்கடி வேலை போவதும் கிடைப்பதும் ஒரு வித வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேலையில் பையனின் ஆரம்ப நிலை கல்வி முடிவுக்கு வரும் வேளையும் நெருங்கிக்கொண்டிருந்தது.நானும் அப்போதிலிருந்தே மேற்கொண்டு என்ன செய்வது என்று ஆலோசித்து வந்தோம்.சரியான நிரந்தர வேலை இல்லாமல் இங்கு காலை ஊன்றுவது மிகப்பெரிய விஷயம் அது என்னை மட்டுமில்லாமல் எல்லோரையும் இங்கு அமிழ்த்திவிடும் என்பதால் கவனமாக கையாளவேண்டியிருந்தது.

இவ்விடத்திலும் எனக்கு ஒரு சிரீலங்க நண்பன் கிடைத்தான்,அவனுக்கு வேலை வேறிடத்தில் என்றாலும் அவ்வப்போது இங்கு வந்து உதவிகள் செய்துகொண்டிருந்தான்.அவன் பெயர் குணா.இப்போது லண்டனில் ரயில்வே துறையில் இருப்பதாக கடைசி தகவல்.ஒரு பதில் மின்னஞ்சல் கூட போட முடியாத அளவுக்கு உள்ள நண்பர்கள் வட்டத்தில் இவனும் இருக்கிறான்.

இங்கு நாங்கள் செய்த வேலையை விலா வாரியாக சொல்லாமல் ஒரு சிறிய நகர்படம் மூலம் காண்பித்துள்ளேன்,பார்த்து மகிழுங்கள்.



இதை நேற்று யூடியூபில் ஏற்றியவுடன் அதன் பின்புல இசை வேறு ஒருவருடன் என்பதால் அதை மாற்றுமாறு சொல்லி அதுவே தேர்ந்தெடுத்த இசை,அதனால் படத்துடன் இசைந்து வருமா? என்று தெரியவில்லை.


இந்த இடம் "கோ மெங் சாங்" என்ற பிணம் எரியூட்டும் மற்றும் சாம்பலை சேமிக்கும் இடம்.தினம் ஒரு பிணம் பார்க்கலாம்.புத்த மதத்தை தழுவியவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதம் இவர்களிடம் வேலை செய்யும் போதே பற்பல விளம்பரங்களுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன் அதில் ஒரு நிறுவனம் கேட்டிருந்த அத்தனை தகுதி இருந்தும் என்னை ஏன் அழைக்கமாட்டேன் என்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப அவர்களுக்கு fax அனுப்பிக்கொண்டிருந்தேன்.இடையில் கொஞ்ச நாள் அவர்களை மறந்துவிட்டிருந்தேன்.ஒரு நாள் மதியம் 2.30 மணிக்கு ஒரு அழைப்பு,அழைத்தவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு வரச்சொன்னார்.

இவர்கள் செய்வது கொஞ்சம் விவகாரமான வேலை என்பதால் மேல் விபரங்கள் எதையும் இங்கு கொடுக்கமுடியாது.நேர்காணலில் தேர்வாகி நான் சேரப்போகும் தேதியையும் சொல்லிவிட்டேன்.

இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் நிறுவனத்துக்கு வந்து என்னுடைய Resignation கடிதத்தை கொடுத்த போது அங்கிருந்த முதன்மை அதிகாரி அசந்துவிட்டார்,என்னுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி மற்றும் 5 வருடத்துக்கு வேலை உத்திரவாதமும் கொடுப்பதாகச்சொன்னார்.நான் என்னிலையை சொல்லி அந்த பெரிய நிறுவனத்தில் வேலை செய்யப்போவதால் உண்டாகும் நலனையும் சொல்லி என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.இங்கும் என்னுடைய Probation நடப்பில் இருக்கும் போதே வெளியேறுவதால் ஒரே ஒரு நாள் Notice Period போதும் என்றாலும் வேறு ஆள் தேடுவதற்கு 15 நாட்களுக்கு மேல் அவர்களுடன் இருந்துவிட்டு புறப்பட்டேன்.

இவர்கள் ஏன் என்னை மட்டும் இப்படி பிடித்துவைக்க முயற்சிக்கிறார்கள்? அதற்கான பதில் அடுத்த பதிவில்.

Saturday, December 27, 2008

ஒபயாஷி (தமிழில் படுத்தியிருக்கேன்)

இந்த எலிம் தேவாலைய வேலை இன்னும் சரியாக ஆரம்பிக்காத நிலையில் பொழுதை போக்குவது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது.வேலையிடத்தில் உள்ள தலையும் கண்டுக்கவில்லை (ஒரு வேளை அவருக்கே சரியான வேலை இல்லையோ என்னவோ!)

இப்படியே 1 மாதம் போன நிலையில் முன்பு நேர்காணல் செய்ய ஜப்பானிய நிறுவனம் "ஒபயாஷி" நிறுவனம் தொலைப்பேசி,வேலைக்கான ஆர்டரை வாங்கிச்செல்லுமாறு கூறியது.அவர்களிடம் இப்போது நான் சேர்ந்திருக்கும் வேலையை சொன்ன போது, வருகிறாயா அல்லது வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளவா என்று கொஞ்சம் கடுமையாக கேட்டார்கள்.இப்போதிருக்கும் நிறுவனத்தை விட பெரியது,சம்பளமும் அதிகம்,தொடர்ந்து வேலை இருக்கும் என்ற தொலை நோக்கில் எண்ணிப்பார்த்து, சரி வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றேன்.

தற்போது இருக்கும் இந்த நிறுவனத்திடம் எப்படி சொல்வது? அதுவும் என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் பெருந்தலையிடம்? ஆரம்பமானது சிக்கல்.முதல் இரண்டு நாள் மனைவியிடம் மட்டும் ஆலோசனை செய்தேன்.நல்ல வாய்ப்பை நழுவவிட மனசில்லாமல்,ராஜினாமா கடிதத்தை சைட்டின் தலையிடம் கொடுத்தேன்.அதை பார்த்துவிட்டு கூப்பிட்டு பேசினார்,ஒளிவு மறைவு இன்றி மொத்த தகவலையும் சொன்னேன்.கேட்டு விட்டு இன்னும் 1 வாரம் நன்றாக யோசித்துவிட்டு உன் முடிவை சொல் என்றார்.சொல்லி இரண்டாம் நாள் அவரிடம் போய் ,நான் முடிவு செய்துவிட்டேன் அங்கு போய் சேரப்போவதாகவும் இன்னும் 1 வாரம் இங்கிருப்பேன் என்றேன்.வேறு வழியின்றி சரி என்றார்.நான் கடிதம் கொடுத்த விஷயத்தை பெருந்தலையிடம் கொடுக்காமல் எப்படியாவது என்னை சரிகட்ட முடியுமா என்று பார்த்திருக்கார்.

அன்று, மாதம் ஒரு முறை நடக்கும் குத்தகைக்காரர்,கிளைன்ட் & கன்செல்டன்ட் மீட்டிங் நடந்துகொண்டிருந்த்து அதற்கு பெருந்தலையும் வந்திருந்தார்.எப்படியாவது அவரை சந்திப்பதை தவிர்க்கவேண்டும் என்று அங்கும்மிங்குமாக போய்கொண்டிருந்தேன்.விதி யாரை விட்டது. அவர் கிளம்பியிருப்பார் என்று நினைத்து நான் வெளியே வர அவர் என் எதிரே வர..

"என்ன? வேலை போரடிக்குதா?" என்றார்

"ஆமாம்" என்றேன்.

சரி வா மேலே மீட்டிங் நடக்குது உன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைகிறேன் என்று நான் வாய் திறப்பதற்கு முன்பு என்னை அங்கு இழுத்துப்போய் அவர்களிடம் சொல்லிவிட்டார்.எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை,வெறுமனே சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.பாவம் என்னை ரெக்கமன்ட் செய்தவரிடம் கூட சொல்லாமல் வந்துவிட்டேன்.என்னுடைய பைனல் பேமண்டை கூட அலுவலகத்து செல்லவிடாமல் சைட்டிலேயே கொடுத்துவிட்டார்கள்.

ஒபயாசி கம்பெனியில் வந்து சேர்ந்தேன்.இந்த சமயத்தில் கட்டுமானத்துறை வேலைகள் அவ்வளவாக இல்லை என்றாலும் சில கம்பெனிகளுக்கு மட்டும் வேலை இருந்துகொண்டிருந்தது அதில் ஒன்று தான் ஒபயாசி (Obayashi Construction Pte Ltd).மேல் நிலைகளில் ஜப்பனியர்கள் தான்.கீழ் நிலைகளில் பல நாட்டு மேற்பார்வை மற்றும் பொறியாளர்களும் வேலைபார்த்தார்கள்.

நான் சேர்ந்த்து சைனிஷ் ஸ்கொயர் என்னும் கடைத்தொகுதி கூடிய அலுவலக கட்டிடம்.இங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டினார்கள்.சில பழைய கட்டிடங்களை மேம்படுத்தி அப்படியே வைத்துவிட்டார்கள்.எங்கள் வேலை 2 பேஸ்மென்டுடன் 14 மாடி கட்டிடம்.



நன்றி:ராபர்ட் தாமஸ்

ஜப்பனியர்களை பற்றி சொல்லவேண்டாம் வேலை என்ற விஷயத்தில்,விடிய விடிய 2 மணி வரை வேலை செய்தாலும் காலை 7 மணிக்கு வந்து அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பார்கள்.முகத்தில் ஒரு அயர்ச்சி இருக்காது.நேரம் தவறாமை இவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்.அதே மாதிரி தலையை மதிக்கும் செயலை மிகவும் எதிர்பார்ப்பார்கள்.புதிய தலைமுறை மக்கள் சிறிது மாறுவது போல் தோன்றுகிறது.

இங்கு தான் நான் முதன் முதலில் ஒரு பொறியாளர் பட்டம் பெற்ற மனிதர் அதற்கு தகுந்த நிலையில் இல்லாததை கண்டு நம் கல்வி நிலை மிகவும் தரம் தாழ்ந்து வருகிறதோ என்ற எண்ணம் வந்தது.அதை ஒரு மேற்பார்வையாளர் கண்டு கொண்டு என்னை கூப்பிட்டு இவனுக்கு சொல்லிக்கொடு என்று அவனை இழிவுபடுத்தினார்.எனக்கு இருதலைகொல்லி மாதிரி ஆனது.என்ன தான் நண்பர் என்றாலும் அதை வேறொருவர் வந்து சொல்லிக்கொடு என்பது மிகவும் அவமானச் சொல் அல்லவா!!

நான் முதலில் அவனிடம் சொன்னது "தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லி கற்றுக்கொள்- தெரிந்த மாதிரி சொல்லி மாட்டிக்கொள்ளாதே".நாங்கள் எல்லோருமே ஏதோ விதத்தில் அவமானப்படுத்தப்பட்டே கற்றுக்கொடுக்கப்பட்டோம் என்று சொல்லி அந்த வேலைக்கு தேவையான விபரங்களை சொல்லிக்கொடுத்தேன்.இப்போது அவன் நல்ல சம்பளத்தில் வேலையில் உள்ளான்.இந்த சூழ்நிலைக்கு பிறகு நம்நாட்டில் இருந்து வரும் பல பொறியாளர்களை உற்றுப்பார்த்து கவலை படவேண்டியிருக்கு.நமது கல்விச்சாலை சரியாக சொல்லிக்கொடுக்க பயன்படுத்தப்படுவதில்லையோ என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.ஆசிரியர்களுக்கு அடிப்படை தகுதியில்லாமல் சொல்லிக்கொடுக்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது.இது ஒரு விதத்தில் நம் தேசத்தின் மீது உள்ள வெளிநாட்டவரின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவருகிறது. மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம்.

இவன் இப்படி இருந்த பட்சத்தில் ஒரு உள்ளூர்காரனுக்கு வேலை கற்றுக்கொடுத்து அவன் வேலையையும் சேர்த்து பார்த்துக்கொண்டிருந்த என்னையே பிறரிடம் போட்டுப்பார்த்து என் வேலைக்கு உலை வைத்த ஆட்களையும் இங்கு யோசித்துப்பார்க்க வேண்டிவந்தது.முதுகில் குத்தும் வேலை என் துறையிலும் உண்டு.

இந்த கம்பெனியில் இந்த வேலையில் சுமார் 3 வருடங்கள் இருந்தேன்.இது முடிவடையும் நேரம் திரும்பவும் வேலை பிரச்சனை ஆரம்பமானது.கட்டுமானத்துறையில் இருந்த சுணக்கம் இன்னும் மீண்டபாடில்லை என்பது என்னை மீண்டும் வேலையில்லாதவனாக்கியது.

ஒபயாசியில் இருந்த காலம்வரை நல்ல சம்பளம் கிடைத்தது.மேற்பார்வையாளர்களுக்கும் ஓவர் டைம் கிடைக்கும் என்ற நிலையை இந்த நிறுவனத்தில் மட்டுமே பார்க்கமுடிந்தது.

பயணம் தொடர்கிறது.