Friday, December 21, 2007

ராஜ்புரா

போன பதிவில் என் பாஸ் சொன்னதை கேட்டு கோபம் வந்ததை சொன்னேன்.அதற்கு காரணம் அவர் போகச்சொன்ன இடம் பஞ்சாப்பில் உள்ள ராஜ்புரா என்ற இடம்.

கடந்த 2.5 வருடங்கள் குடும்பத்தை பிரிந்து மலேசியாவில் இருந்தேன் மறுபடியும் குடும்பம் இல்லாமல் அங்கு போவதை கேள்விப்பட்டவுடன் கோபம் வந்தது.நானும் வேறு எங்காவது கொடுங்களேன் என்றதற்கு உன் மலேசியா அனுபவம் ராஜ்பூராவில் தேவைப்படும் என்றார்.அது எவ்வளவு பொய் என்பது பிற்பாடுதான் தெரிந்தது.இந்த கம்பெனியில் இப்படித்தான் பொய் சொல்லி பல சமயங்களில் ஏதோ ஒரு ஆளை அனுப்பிவைத்துவிடுவார்கள்.சரி இன்னும் எவ்வளவு நாள் ஒப்பேத்தாலாம் என்று நினைத்து அவரிடம் என்னுடைய மலேசியாவில் இருந்து வரவேண்டிய ஷிப்மெண்ட் இன்னும் வரவில்லை அது வந்தவுடன் போகிறேன் என்றேன்.சரி என்று ஒரு வாரம் கால தாமதம் ஆனது.அப்படியும் ஷிப்மெண்ட் வரவில்லை.அதற்குள் பாஸ் நீ முதலில் ராஜ்பூரா போய்விடு ஷிப்மெண்ட் வந்தவுடன் நீ திரும்பி வந்து எடுத்துக்கொள் என்றார்.

இதற்கிடையில் ஒரு விஷயம் சொல்லவிட்டுப்போய்விட்டது. சிங்கப்பூரில் இருந்து கிளம்பும் போது என்னுடைய உறவினர் அந்த நேர்காணல் கம்பெனி முதலாளியை கூப்பிட்டு நீ வந்து போன விபரம் சொல்கிறேன்,அதற்குப் பிறகு பார்ப்போம் என்றார்.அதுவும் சரி என்று தோனியது அதற்குப் பிறகு அதை மறந்துபோய்விட்டேன்.

இந்த விஷயம் வேறு ஞாபகம் வந்ததால்,சரி ஷிப்மெண்ட் தேதியும் சிங்கப்பூர் விபரமும் தெரியவந்தால் அப்படியே இங்கிருந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன்.

டெல்லி வந்து சித்தப்பா பையனிடம் விபரம் கேட்டு ராஜ்பூரா பஸ்ஸில் ஏறினேன்.சுமார் 3.5 மணி நேரப்பயணம் என்று நினைக்கிறேன்.தலைப்பாகை கட்டியவர்களுடன் சுமார் 4 மணி நேர பயணத்தில் ராஜ்பூரா வந்து இறங்கினேன்.ஒரு ரிக் ஷா வைத்துக்கொண்டு விஜாரித்து அவர்கள் கெஸ்ட் ஹவுஸ் சென்றேன்.

மறு நாள் காலை மெஸ்ஸில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு சைட்க்கு போனால் இப்போது தான் வேலை ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது.தற்காலிக கட்டங்கள் கட்டும் வேலை மட்டும் நடந்துகொண்டிருந்தது.



இப்படியே ஒரு வாரம் போனது.வேலை இடத்தில் பகல் நேரத்திலேயே கொசு ஆளை தூக்கிப்போய்விடும் நிலையில் இருந்தது.வேலை இடத்துக்கு பக்கத்தில் ஒரு தாபா,டீ/பஜ்ஜி சாப்பிட மற்றபடி சாலையில் இரு பக்கங்களிலும் யூகலிப்டஸ் மரங்கள்.

மேலும் தொடரும்.

Tuesday, December 18, 2007

மீண்டும் இந்தியாவுக்கு

ஒரு வார கால அவகாசத்தில் சிங்கை வந்திருந்தால் வந்த உடனே குளித்து அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு அந்த பெரியவரிடம் தேவையா விபரங்கள் வாங்கிக்கொண்டு வெளியில் கிளம்பினோம்.

சோற்றால் அடித்த ஆட்கள் நாம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக என் பையன் வீட்டு சாப்பாடு சாப்பிட்ட பிறகு தான் அவன் முகத்தில் தெளிவு வந்தது.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம் என்று சுழன்று பார்த்துக்கொண்டு இருந்தோம் அதோடில்லாமல் இனிமேல் இங்கு எங்கு வரப்போகிறோம் என்ற நினைப்புடன் சாமான்களும் வாங்கிக் குமித்தோம்.

இதற்கிடையில் கோலாலம்பூரில் விட்டுப்போன நேர்காணல் நிறுவனத்துக்கு போய் நான் நேர்காணலை தவற விட்ட சேதியை சொல்லி இங்கு செய்ய முடியுமா? என்றேன்.வாசலில் உட்கார்ந்திருந்த பெண் "நாங்கள் வெளியூர்காரர்களை" வேலைக்கு எடுப்பதில்லை என்று சொன்னார்.ஒன்றும் கெட்டுவிடவில்லை எப்படியும் வேலை இருக்கிறது என்ற நினைப்புடன் நன்றி சொல்லி வெளியில் வந்தேன்.

அப்போது நாங்கள் பார்த்த இடங்கள்.
பறவை பூங்கா (கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்)- ஒரு பெரிய வலைக்கூண்டுக்குள் பல பறவைகளை சுதந்திரமாக பறக்கவிட்டபடியால் நமக்கு அருகே பல பறவைகள் பறப்பது ஏதோ காட்டின் உள்ளே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.பறவைகளை வைத்து பல நிகழ்ச்சிகளும் இருக்கும்.ஒரு நாள் நிம்மதியாக செலவு செய்யலாம்.

செந்தோஷா- இது ஒரு குட்டித்தீவு.நான் போன போது பலவகை மீன்களை பெரிய கண்ணாடி தொட்டியில் விட்டு குகை மாதிரி வழியில் நகரும் மேடையை அமைத்து தண்ணீரில் நனையாமல் எல்லா மீன்களையும் பார்க்கலாம்.இது எனக்கு மிகவும் பிடித்த இடம்.ஆனால் என்ன நுழைவுக்கட்டணம் தான் கொஞ்சம் பயமுடுத்தும்.புதிதாக வருபவர்களுக்கு அவ்வளவாக தெரியாது இங்குள்ளவர்களுக்கு "இவ்வளவா?" என்று அயர்சியாக இருக்கும்.இங்கும் முழு நாளை செலவு செய்ய பல நிகழ்ச்சிகள்/பல இடங்கள் உள்ளது. இப்போது இன்னும் ஏதேதோ வந்துவிட்டது.தினம் மேம்பாட்டு பணிகள் நடந்துவருகிறது.

உயிரியல் பூங்கா: எல்லா ஊர்களில் உள்ள மாதிரி பல விதமான மிருகங்களை பார்க்கலாம்.கொஞ்சம் சுதந்திரமாக விட்டுவைத்திருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் இது.
ஒரு வேளை "நாகை சிவாக்கு" உதவும்.மலைப்பாம்பை கையில் வைத்துக்கொள்ளலாம்,ஊரங் குட்டனுடன் சாப்பிடலாம் என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன.இங்கும் ஒரு நாள் செலவழிக்க முடியும்.



சயின்ஸ் சென்டர்:(அறிவியல் பூங்கா): குழந்தைகள் அறிவை வளர்க்கும் பல புதுமையான வழிகளில் அறிவியல் விளக்கும் இடம்.

ஐஸ் சிட்டி: சுமார் 2~5 சென்னிகிரேட் வெப்பம் உள்ள ஒரு அறையில் பனியை வைத்து சறுக்கி விளையாடலாம்.

சிரங்கூன் சாலை: பல சாமான்கள் வாங்க/கோவிலுக்கு போக என்று ஒரு நாள் ஒதுக்கினாலும் போதாது.பிரபல முஸ்தாபா கடைத்தொகுதி இங்கு தான் இருக்கு.1995 யில் பார்த்ததற்கும் இப்போதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் தெரிகிறது.




பல இடங்கள் இருந்தாலும் செலவழிக்கும் திறனை வைத்து தேவையான நாட்கள் இருக்கலாம்.

ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து ஊர் திரும்பினோம்.விடுமுறை இன்னும் 1 வாரம் இருந்ததால் சில விருந்தினர் வீட்டுக்கு போய் அவர்களை பார்த்துவிட்டு வந்தோம்.

கம்பெனியில் திரும்ப சேரும் நாளும் வந்தது. போனேன்.. முகமன் முடிந்து வேலை பற்றிய விஜாரிப்புகள் தொடங்கின.தற்போது சென்னையில் வேலை எதுவும் இல்லை அதனால் நீ அங்கு போ என்றார்.

செம கோபம். மீதி அடுத்த பதிவில்.

Saturday, December 8, 2007

தீபாவளி விழா

சிங்கையில் தீபாவளி முடிந்த பிறகும் அதை ஒவ்வொரு தொகுதியிலும் விதம் விதமாக கொண்டாடுவார்கள்.சில இடங்களில் இந்தியாவில் இருந்து சில கலைஞர்களை கொண்டு வந்து நிகழ்ச்சி படைப்பார்கள்.

அப்படி நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பை கீழே காணலாம்.





ஒரு மலாய்காரர் எப்படி விசில் அடிப்பது என்று சொல்லித்தருகிறார் பாருங்கள்.வவ்வாலுக்கு உதவும். :-)

நன்றி; வசந்தம் சென்ரல்

Friday, December 7, 2007

இளமையில் திருமணம்

சில நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் இந்த ரிப்போர்ட் இடம் பெற்றது.
பார்க்க முடியாதவர்கள்/தவறவிட்டவர்களுக்காக...

இப்படி நடப்பது நமது "தமிழகத்தில்".

இப்படி நடைபெற என்ன காரணம் என்று தெரியுமா? அவர்களே சொல்கிறார்கள்.ஆம்பளைங்க சரியான வேலைக்கு போய் பணம் கொண்டுவருவதில்லை.பஞ்சம்/வறுமை/கல்வியின்மை இப்படி பல இல்லாமை.

அவர்கள் சொல்வதை இங்கு எழுதுவதைக்காட்டிலும் நீங்களே படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

படிக்கனும் என்று ஆசைப்படும் குழந்தைகளுக்கு திருமணமாம்!!!



நன்றி: சன் தொலைக்காட்சி.

Thursday, December 6, 2007

பொட்டி தூக்க வேண்டாம்.

ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டுக்கு பயணப்படும் போது இந்த மூட்டை முடிச்சு நம்மளை ஒரு வழி பண்ணிவிடும்.அதை ஏற்றி,இறக்கி அவர்கள் டேக் போடும் வரை பிரச்சனை தான்.

இங்கு சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் அவர்கள் தங்கள் மூட்டையை முதலிலெயே இணையம் மூலம் புக் செய்துவிடலாம்.இதனால் விமான நிலையம் போனவுடன் குடியேற்ற வேலை மட்டுமே பாக்கி இருக்கும்.இப்போது அதை இன்னும் மேம் படுத்த எண்ணி நம் முடிச்சுகளை விடுதியிலேயே வாங்கிக்கொண்டு உங்களுக்கு விமானம் ஏறும் வேலை மாத்திரம் பாக்கி வைக்கப்போகிறார்களாம்.

கீழே உள்ள சலனப்படம் பாருங்க.




நன்றி: வசந்தம் சென்ரல்.

Friday, November 30, 2007

சிங்கப்பூர் விஜயம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் அந்த குடிநுழைவு அதிகாரி என்னிடம் "நீ எப்போது இங்கு வந்தாய்?"என்று கேட்டவுடன் அதிர்ந்தேன்.

நான் வந்த தேதியை சொன்னதும், எந்த விமானத்தில் வந்தாய்? என்றார்.

நல்ல வேலையாக பழைய போர்டிங் பாஸ் வைத்திருந்ததால் என்னவோ சொல்லிவிட்டு மலேசியாவை விட்டு வெலியேற அனுமத்தித்தார்.இந்த பிரச்சனை என் கடவுச்சீட்டில் மட்டும் தான்,மனைவி & குழந்தை யின் பயணச்சீட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லை.



ஒரு வழியாக விமானம் சிஙக்ப்பூரை காலை 11 மணிக்கு அடைந்தது. அதற்கு முன்னால்..

இந்த முறை விமானத்தில் ஜன்னல் இருக்கை கிடைத்ததால் சிஙக்ப்பூரில் இறங்குவதற்கு முன்பு விமானம் சுற்றிக்கொண்டு இருந்தது.குட்டி குட்டியாக மணற்திட்டுகள் (தீவுகள்).மழைத்தண்ணிரீல் அடித்துச்செல்லப்படும் காகிதம் போல கப்பல்கள் அங்கங்கு போய்கொண்டு இருந்தது,சில நங்கூரம் இட்டு நின்றுகொண்டிருந்தது.இதற்கிடையில் ஒரு இடத்தில் கடல் ஓரத்தில் ஏதோகட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் ஒரு சின்ன நினைப்பு "நமக்கு இங்கு வேலை கிடைத்தால்.."நன்றாக இருக்குமே என்று.ஒரு சில வினாடிகள் தான் அதற்குப்பிறகு மறந்துவிட்டேன்.

சிங்கை இறங்கி குடிநுழைவு வேலைகள் முடிந்து சாமான்கள் சேகரிக்கும் இடத்துக்கு வந்தோம்.குடிநுழைவு பகுதி உள்ளூர்காரர் மற்றும் நிரந்தரவாச தகுதி உள்ளவர்களுக்கு 2 வரிசையும் மற்றவை வெளிநாட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.சிங்கையில் நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வெளியேறும் வழி வரை தேவையான விபரங்கள் தலைக்கு மேல் இருக்கும்.கீழே குழி எதுவும் திறந்து இருக்கும் என்ற பயம் இல்லாமல் தைரியமாக மேலேயே பார்த்துக்கொண்டு வரலாம்.இங்குள்ள சாமான்கள் வைக்கும் டிராலி கைபிடியை கீழ் நோக்கி அழுத்தினால் தான் நகரும் படி செய்திருப்பார்கள். முதல் முதலில் வரும் பயணிகளுக்கு இது முதலில் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும்,பிறகு பழகிவிடும் அல்லது அங்குள்ளவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.

உங்களிடம் தேவைக்கு அதிகமாக சிகரெட்,மதுபானம்,சிக்லெட் மற்றும் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இல்லாத பட்சத்தில் "பச்சை" வழி வெளியே வந்துவிடலாம்.அழைக்க வந்தவர்கள் இல்லாவிட்டால் வாடகை வாகனம் எடுத்து முகவரி சொன்னால் போதும்,கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.



இதெல்லாம் மலேசியாவில் ஓரளவு பழகியிருந்ததால் வாடகை வாகனம் எடுக்கும் முன்பு நான் போகப்போகும் வீட்டுக்கு ஒரு போன் போட்டுடு வழி கேட்போம் என்று தொலைப்பேசினேன்.

எடுத்தவர் குரல் சற்று வயதானவர் போல் இருந்தது,முகமன் கூறிவிட்டு வழி கேட்டேன்.அந்த நாட்டுக்கே உரிய ஸ்லேங்கில் சிலவற்றை சொன்னார்.குறித்துக்கொண்டு டாக்ஸிக்கு வரிசை பிடித்து நின்று ஏறி அட்ரஸ் சொன்னேன்.சேறு இடம் வந்ததும் டாக்ஸி ஓட்டுனருக்கும் அவ்விடம் தெரியவில்லை,சற்று உள்ளடங்கி இருந்தது.அதிக நேர தேடல் இல்லாமல் வந்து இறங்கினோம்.அவ்வீட்டில் உள்ள பெரியவர் வீட்டுக்கு வெளியில் வந்து வரவேற்றார்.மற்றவர்கள் வேலைக்கு போயிருந்ததால் தனியாக இருந்தார்.

மற்றவை வரும் பதிவுகளில்.

Monday, November 19, 2007

பத்துக் கோவா- சில படங்கள்

நாங்கள் கட்டிய பாலத்தின் சில படங்கள் பதிவு எழுதிக்கொண்டு இருக்கும் போதே பதிவேற்ற முடியவில்லை.படங்கள் ஊரில் மாட்டிக்கொண்டுவிட்டதால் அப்போது ஏற்ற முடியவில்லை. சிங்கைக்கு கிளம்பும் அவசரத்தில்,அப்படங்களை நேற்று தான் போட்டோ பக்கெட்டில் ஏற்றினேன். அவை உங்கள் பார்வைக்காக.

கீழே உள்ளது... பைல் உள்ளே கான்கிரீட் போடுவது,பைல் கட் பண்ணுவது மற்றும் பைல் உள்ளே உள்ள தண்ணீரை வெளியே எடுப்பது என்ற பல வேலைகளை காட்டும் படம்.



இதுவும் பைல் பற்றியே..



இது Steel Beams வைத்த பிறகு எடுத்த படம்



பாலம் ஓரளவு முடிவுக்கு வந்தபோது எடுத்தது.Low tide இல் பைலும் அதன் மேல் நிற்கும் Foundation உம் தெரிவதை காணலாம்.



பாலம் திறப்புவிழா காணும் நேரத்தில் அத்தொகுதி அமைச்சர் நடந்து வருகிறார்.வலது கோடியில் நான்.

Wednesday, October 17, 2007

கோலாலம்பூர்

பழைய நிறுவனத்தில் இருந்து விலகுவது பச்சை துரோகமா? சிகப்பு துரோகமா? என்று கேட்டிருந்தேன்.
அதற்கு காரணம் இருந்தது.
என்னுடைய கட்டுமான அறிவு வளர,வளர்த்த நிறுவனம் இது.தனிப்பட்ட பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் வெறும் பணத்தை மட்டும் குறி வைத்து சிங்கப்பூரில் வேலை தேடுவதா என்ற குழப்பம்.

பெற்றோர்கள் காலத்தில் ஒரு கம்பெனியில் சேர்ந்தால் அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாயி வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழிப்பது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.அதே உணர்வுடன் தான் இங்கும் வேலை பார்த்துவந்தேன்.அப்படிப்பட்ட சமயத்தில் இந்த கம்பெனியை விட்டு போவது எனக்கு பச்சை துரோகமாக தெரிந்தது.

இதற்கிடையில் அங்கு வேலை முடிந்து சென்னைக்கு திரும்பி அனுப்பப்ட இருந்தவர்கள் சிலர் மலேசியாவில் வேலை தேடி இங்கே செட்டில் ஆகிவிட்டார்கள்.சிலர் செய்தது, என்னுடைய எண்ணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தது.

ஒரு நாள் ஞாயிறு அன்று சரவாக் (மலேசியாவில் ஒரு மாநிலம்) இல் வரும் ஆங்கில தினசரியை புரட்டிக்கொண்டிருக்கும் போது என்னுடைய தகுதிக்கு ஏற்ப ஒரு விளம்பரம் இருந்தது.சும்மா முயலாம், கிடைத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து விண்ணப்பித்தேன்.

இதற்கிடையில் என்னையும் இந்தியாவுக்கு திரும்ப அழைப்பு வந்ததால் மனைவியையும்,பையனையும் மலேசியாவுக்கு வரவழைத்து,சுற்றி பார்த்துவிட்டு பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிங்கப்பூர் போய் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை செல்வதாக உத்தேசித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை அலுவலகத்தை கேட்டுக்கொண்டேன்.அதில் பல குழப்பங்களுக்கு இடையே நான் கூச்சிங் (சரவாக்கின் தலைநகரம் ) இருந்து கிளம்பும் வரை அவர்கள் கிளம்பும் விபரம் சரிவர தெரிவிக்கப்படாமல் ஒரு குத்து மதிப்பாக கோலாலம்பூரில் வந்து இறங்கினேன்.என்னுடைய விமானத்துக்கும் அவர்கள் விமானத்துக்கும் சிறிய இடைவெளி நேரம் இருந்ததால் அவர்கள் வெளியே வரும் இடத்தில் வந்து காத்திருந்தேன்.அது மட்டும் தான் வெளியேறும் வழியா இல்லையா என்பது பற்றி சரியான விவர பலகைகள் இல்லை.அதுவும் குழப்பம்.இவர்கள் வந்துவிட்டார்களா? இல்லையா? என்று எதுவும் தெரியாமல் முழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன்.நான் வந்தது உள்ளூர் விமானத்தில் அவர்கள் வருவது வெளிநாட்டு விமானத்தில் என்பதால் சரியான விபரங்கள் கிடைக்கவில்லை.

மனைவிக்கும் இது தான் முதல் வெளிநாட்டுப் பயணம் அதுவும் கையில் குழந்தையுடன்.எப்படியோ சரியாக நான் இருக்கும் வழியில் வந்ததால் பிரச்சனை இல்லாமல் சந்தித்துக்கொண்டோம்.

என்னுடைய நண்பர் வீட்டில் தங்கினேன்.மூன்று நாட்கள் கோலாலம்பூர் சுற்றினோம்.இதற்கிடையில் நான் விண்ணப்பித்திருந்த (சிங்கை) நிறுவனத்தில் இருந்து என்னை நேர்காணலுக்கு வரச்சொல்லியிருந்தார்கள்.நேர்காணல் ந்டக்கும் இடம் கோலாலம்பூரில்.அதுவும் நான் கோலாலம்பூரில் இருந்து கிளம்பும் நேரத்தில்.பயணதேதிகளை மாற்றும் எண்ணம் இல்லாததால்..எப்படியும் சிங்கப்பூர் போகப்போகிறோம் அங்கேயே கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டுவிட்டேன்.

வேலை தேடுவதில் அவ்வளவு முனைப்பு காட்டவில்லை,அப்போது.

இருந்த மூன்று நாட்கள் கோலாலம்பூரை சுற்றினோம்.சரியான சாப்பாடு கிடைக்காததால் அவ்வளவாக அனுபவிக்க முடியவில்லை.

அடுத்து சிங்கப்பூர் போக கோலாலம்பூர் விமான நிலையத்தில் என்னுடைய கடவுச்சீட்டை கொடுத்த போது அங்கிருந்த அதிகாரி என்னைப் பார்த்து

"When did you come to Kulalampur? " என்று கேட்டது என்னை தூக்கிவாரிப்போட்டது.

Friday, September 14, 2007

கான்கிரீட் சாலை

பால வேலைகளின் பெரும் பகுதி முடிந்து இப்போது அந்த ஸ்டீல் பீமை உள்ளடக்கிய கான்கிரீட் சாலை போட வேண்டும். அதற்கான முட்டு வேலைகள் போன பதிவில் சொல்லிய மாதிரி ஒரு தொங்கு மேடையில் இருந்து உட்பக்கமாக கொடுத்தோம்.

கீழே உள்ள படத்தில் உள்ள மாதிரி கம்பி கட்டி கான்கிரீட் போட்டோம்.





அதை சரியான வடிவத்துக்கு கொண்டு வர தனியாக ஒரு சின்ன அதிர்வான் (Viberator) உள்ள மாதிரி ஒரு ஃபிரேம்(படத்தில் நாள் உள்ள இடத்தில் உள்ளது) செய்து அதை கான்கிரீட் போட்டவுடன் அப்படியே நகர்த்தினால் சாலை கான்கிரீட் நடுவில் தூக்கியும்,ஓரங்களில் இறக்கமாக செய்துவிடும்.மழை பெய்தால் தண்ணீர் சாலை இருபக்கத்துக்கும் போய்விடும்.


இந்த கான்கிரீட் பாலத்தின் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்து அப்படியே வர மாட்டார்கள்.நீளத்தை சுமார் 25~30 மீட்டர் நீளத்துக்கு பிரித்து ஒன்றுவிட்டு ஒன்றாக போடுவார்கள்.இப்படி போடுவதால் கான்கிரீட் வெளியிடும் வெப்பம் மற்றும் ஸ்டீல் பீம்களின் விரிவாக்கம் ஒரேடியாக இல்லாமல் விட்டு விட்டு நிகழும்.
இதனால் கான்கிரீட்டில் ஏற்படும் சிறு பிளவுகள் தவிர்க்கப்படுகின்றன.

கான்கிரீட் முடிந்த பிறகு,தேவையான இறுக்கம் அடைந்த பிறகு அதன் மீது பிட்டுமென் என்று சொல்லப்படுகிற தார் சாலையை அமைப்போம்.இது கான்கிரீட் மேல் சுமார் 50 மில்லிமீட்டர் இருக்கும்.
இதற்காக உள்ள மிஷின் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சும்மா பார்த்துக்கொண்டு இருந்தால் போதும். நாம் எதுவும் செய்ய வேண்டும்.அவ்வப்போது வருகிற தார் கலவை 110 degree Centigrade க்கு குறையாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.





தார் கலவை போட்ட 15 நிமிடத்துக்குள் அதன் மேல் 5 Tonne rollar ம் அதன் பிறகு 1/2 மணி நேரத்துக்கு 10 Tonne ரோலரும் ஓட்ட வேண்டும். மொத்தத்தில் 45 நிமிடங்களுக்குள் சாலை தயார்.

அதன் பிறகு நகாசு வேலைகள் தான். Road divider lines - இதற்கென்று தனி இயந்திரமும் பெயிண்டும் உள்ளது.

கிழே உள்ளவர்கள் என்னுடன் வேலை பார்த்த சில தொழிலாளர்கள்.கையில் தொப்பி வைத்திருப்பவர் தான் கிளைன்ட் இஞ்சினியர்.எனக்கு பக்கத்தில் உள்ளவர் தான் " திரு.ரவி" கடைசியில் "திரு.கண்ணன்".



அப்படி இப்படி என்று எல்லா வேலையும் முடிந்து நான் மலேசியாவை விட்டு கிளம்பும் முன் என்னுடைய சித்தப்பாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.நமது தூரத்து உறவினர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்,ஏதாவது உதவி தேவை என்றால் கேட்டுக்கொள் என்றார்.

அப்போது எனக்கு சிங்கப்பூரைப்பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் திரும்ப போகும் போது மட்டும் அங்கு போய்விட்டு சென்னைக்கு போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.மனைவி குழந்தையும் கூப்பிட்டுக்கொண்டு வந்து திரும்ப போகும் போது எல்லாரும் ஒன்றாக போய்விடலாம் என்று பிளேன்.

இந்த மாதிரி சமயத்தில் தூரத்து உறவினர்களின் தொடர்ப்பு கிடைக்கும் போல் இருந்ததால் அவர்களை கூப்பிட்டு ஒரு ஹலோ சொல்லிவிடலாம்,பிறகு தேவைப்பட்டால் உதவி கேட்டுக்கொள்ளலாம் என்றிருந்தேன்.

ஒரு ஞாயிறு அன்று மதியம் அவர்களை கூப்பிட்டு என்னை அறிமுக படுத்திக்கொண்டவுடன் அவர்களும் உங்கள் சித்தப்பாவிடம் இருந்து கடிதம் வந்தது என்று சொல்லி சிறிது நேரம் குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.என்னுடைய பணி விபரங்களை கேட்ட பிறகு, இங்கு சிங்கையில் கட்டுமானத்துறையில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது (1995 சமயத்தில்) நீங்கள் ஏன் முயலக்கூடாது என்றார்கள்.

எனக்கு காலில் வெண்ணிர் ஊற்றியது போல் இருந்தது. 13 வருடம் எங்கள் கம்பெனி போல் L&T -ECC யில் வேலை செய்துவிட்டு திடிரென்று எப்படி மாறுவது?

பச்சை துரோகமாக தெரிந்தது.அது பச்சையா/சிகப்பா என்பது அடுத்த பதிவில்.

Monday, September 3, 2007

பாலம்

போன பதிவில் நிலத்துக்கும் நீருக்கும் இடைப்பட்ட பகுதியில் எப்படி ஸ்டீல் பீம்களை நிறுவுவார்கள் என்று பார்த்தோம்.
அடுத்து நீரின் மேல்.
இது தெப்பம் மற்றும் அதன் மேல் உள்ள பாரம் தூக்கியின் மூலம் இரு தூண்களுக்கு இடையே வைப்போம்.தேவையான போல்டிங் மற்றும் வெல்டிங் செய்து அடுத்த பீமுடன் இணைப்போம்.இந்த பீம்கள் நேரடியாக கான்கிரீட் மேல் உட்காராது.



படம் : சுட்டது. வருட வித்தியாசம் காணலாம்.

தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி இந்த இரும்பு பீம்கள் நகரவேண்டும் என்பதால் Bearing Plate மீது வைத்துவிடுவார்கள்.
அடுத்து Deck என்று சொல்லப்படுகிற கான்கிரீட் வேலையை ஆரம்பிப்போம்.தரைமீது என்றால் சாரம் போட்டு அதன் மீது பிளைவுட் அடித்து,கம்பிகட்டி கான்கிரீட் போட்லாம்.இதுவோ அந்தரத்தில் இருக்கு,எப்படி செய்தோம் என்று பார்க்கலாமா?

ஆதாவது கீழே கொடுக்க இந்த மாதிரி ஒரு தொங்கு பாலம் அடித்து அதன் கீழ் ஊழியர்கள் போய் தேவையான முட்டு கொடுப்பார்கள்.கான்கிரீட் பாரத்தை தாக்குபிடிக்க இந்த மர முட்டுகள் அந்த பீமின் அடியிலேயே சப்போர்ட் கொடுக்கப்படும்.இதனால் தரையில் இருந்து எந்தவிதமான சாரமும் தேவைப்படாமல் போனது.



இதே தொங்குபாலத்தை உபயோகித்து அதை பிரித்து எடுக்கவும் மற்றும் பின்ன்னால் வரப்போகிற பெயிண்டிங் வேலைக்கும் உபயோகித்தோம்.

கடைசி பீமில் இருந்து வெளியே வரும் கான்கிரீட்டுக்கு தனியாக ஒரு சின்ன பீம் வைத்து பிறகு அதை கழற்றி எடுத்துவிடுவோம் அதையும மேலுள்ள படங்களில் பார்க்கலாம்.

அடுத்து என்ன? ரோடு கான்கிரீட் தான்.

பிறகு பார்ப்போம்.்

Wednesday, August 1, 2007

நிலத்தின் மேல்

போன பதிவில் தரைக்கு மேல் அடிக்கும் பைல் பற்றிய படத்துடன் முடித்திருந்தேன்.

அப்படி அடித்து முடித்தவுடன்,அஸ்திவாரம் போட இருக்கும் நிலைக்கு கீழே மண்ணை தோண்டவேண்டும்,பைல்களை தேவைக்கு ஏற்ப வெட்ட வேண்டும்.இப்படி வெட்டிய பிறகு கம்பி கட்டுவதற்கு முன்பு (Lean Concrete) 2" உயரத்துக்கு கொஞ்சம் தரம் குறைந்த கான்கிரீட் போடுவோம்.இதன் மேல் கட்டிடத்தின் பாரம் வராது.இதன் பயனே கம்பிகளின் மீது மண் படாமல் இருப்பதற்கும்,Formwork எனப்படும் ஷட்டரை நிறுத்தி வைப்பதற்கும் & ஆட்கள் வேலைசெய்வதற்கும் மட்டுமே பயன்படும்.

இப்படி செய்தவுடன் அஸ்திவாரம் மற்றும் அதன் மேல் எழும் தூண்கள் வேலை எப்போதும் போல் நடக்கும்.இதில் அவ்வளவு தொழிற்நுட்பம் கிடையாது.அதே சமயத்தில் ஒரு தூணுக்கும் மற்ற தூணுக்கும் இடைப்பட்ட நீளத்தை சரி செய்துகொள்ள வேண்டும்.இப்படி செய்யாவிட்டால் ஒரு தூணுக்கும் மற்ற தூணுக்கும் இடையில் வரும் பீமினால் பிரச்சனை வரக்கூடும்.



மேலே உள்ள படத்தில் பாருங்கள்.. பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

முதலில் தெரிவது குச்சி குச்சி யாக சில தூண்கள்.இது பைலை சுற்றி போடப்பட்ட கான்கிரீட்.இப்படி போடு வதால் இரும்பை துரு பிடிப்பதில் இருந்து காப்பாற்ற முடியும்.கான்கிரீட் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள் பைலையும் அஸ்திவாரத்தையும் இணைக்கும் பகுதி.இதனால் தூணில் இருந்து வரும் பாரம் இந்த பைல் மூலம் பூமிக்கு அனுப்பப்படும்.

படத்தின் கொஞ்சம் மேல் பாருங்கள், ஒரு தூணுக்கான அஸ்திவாரம் போடப்பட்டு ஷட்டரை பிரித்துக்கொண்டுள்ளார்கள். மிக முக்கியமாக அந்த கான்கிரீட் மேல் போடப்பட்டுள்ள ஈர சாக்கை பாருங்கள்.இப்படி செய்வது தான் முறை.வெகு வேகமாக இழக்கும் வெப்பத்தை கட்டுப்படுத்தினால் கான்கிரீட் நல்ல இறுக்கம் அடையும்.இதை பல கம்பெனிகள் கண்டுகொள்வதில்லை.

நிலத்தில் என்ன செய்கிறோமா அதையே ஆற்றுக்கு நடுவே செய்வோம்.என்ன நிலத்தில் மண்ணை தோண்டுகிறோம் அங்கு மணலை போட்டு நிரப்புவோம்.தேவையான அளவுக்கு நிரப்பி அதன்மேல் வேலை செய்வோம்.

எல்லா தூண்களும் போடப்பட்டவுடன் அதன் மேல் இரும்பு பீம்கள் வைக்கவேண்டும்.இது நிலத்தில் இருக்கையில் ஒரு பாரம் தூக்கியுடன் அப்படியே தூக்கி வைத்துவிடவேண்டும்.ஆறும், நிலமும சேரும் இடத்தில் இந்த பாரம் தூக்கி கை கொடுக்காது.அதற்குப்பதிலாக இந்த மாதிரி ஒரு Derrik ஒன்றை வைத்து அதன் உதவியுடன் நிலத்தில் இருந்து அந்த இரும்பு பீமை இழுத்து/தூக்கி சரியான இடத்தில் வைப்பார்கள்.
அந்த படம் கீழே..



மீதி அடுத்த பதிவில்.

Saturday, July 7, 2007

பைல் தர நிர்ணயம்

இதற்கு முந்தைய பதிவில் பைல் மேல் நடத்தப்படும் பாரம் தாங்கும் சோதனையைப் பற்றி சொல்லியிருந்தேன்.
இது தான் பைல் லோட் டெஸ்ட் செய்த ஜேக்




இந்த வேலையில் நிலத்தில் ஒன்றும்,ஆற்றில் ஒன்றும் சோதனை செய்வது என்று முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டோம்.நிலத்தில் போட்ட பைல் காலை வாரிவிட்டது,ஆமாம் தேவையான பாரத்தை அதனால் தாங்க முடியவில்லை.இதே கதை ஆற்றின் மேல் அடித்த பைலுக்கும். தலைவலி இங்கிருந்து ஆரம்பித்தது.பிரச்சனையை தலை முதல் கால் வரை ஆரய்ந்தார்கள்.பைல் மேல் இறக்கப்படும் Force போதுமானதா? என்ற கேள்வி எழுந்த போது அதை உருதிப்படுத்த PDA (Pile Driving Analyser) என்ற உபகரணம் கொண்டு அளந்தோம்.


தேவையான சக்தி அதன் மீது இறங்கவில்லை என்பது ஊர்ஜிதமானவுடன்,இப்போது உபயோகித்த ஹேமருக்கு பதில் இன்னும் வேகம் கொண்ட ஹேமர் இந்தியாவில் இருந்தது தெரிந்தது.அதை இங்கு கொன்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு கொன்டிருக்கும் போது அதிலும் சிகப்பு நாடா பிரச்சனைகள் தலைதூக்கி வேலையின் பெறும்பாலான நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தது.கால விரயம் தவிர்க்கமுடியாமல் பிராஜக்ட்டின் காலத்தன்மையை பாதித்துக்கொண்டிருந்தது.

அப்படி இப்படி என்று சில மாதங்கள் கழித்து இந்தியாவில் இருந்து வந்த ஹேமரை உபயோகித்து பைலை அடித்து திரும்ப சோதித்து வெற்றி அடைந்தோம்.அதன் பிறகு வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

முன்பே சொல்லிய மாதிரி தண்ணீர் ஏற்ற இறக்கங்கள் வேலையை பாதிக்கும் என்பதால் பல சமயங்களில் வியற்காலை 2 மணிக்கெல்லாம் வர வேண்டியிருக்கும்.சில சமயம் Coffer Dam உள்ளே சில நீர் இறைப்பான் வைத்து நீரை வெளியேற்றி வேலை செய்துகொண்டிருந்தோம்.

ஆமாம் இப்படி அடிக்கும் பைல்கள் நேராகத்தான் செல்கின்றனவா என்று எப்படி சோதிப்போம் என்று தெரியுமா? தூக்குக்குண்டு (Plumb bob) மூலம் தான்.என்ன செய்வோம் மூன்று கால் மாதிரி, 1.50 மீட்டர் உயரத்துக்கு உள்ள கம்பை கட்டி அதன் மத்தியில் இந்த தூக்குக்குண்டை கட்டி அந்த நூலையும் பைலிம் விளிமபையும் கண் கொண்டு பார்த்து பைலை இறக்குவோம்.
முதல் பைல் 12 மீட்டர் உயரம் இருக்கும் பிறகு வேறொரு பைலை அதனுடன் வெல்டிங் செய்து மீண்டும் அடித்து இறக்குவோம்.

நிலத்தில் அடிக்கும் போது எடுத்த சில படங்கள் கீழே.



வெள்ளை சட்டை போட்டு உட்கார்ந்திருப்பவர் பக்கத்தில் பாருங்கள் தூக்குக்குண்டு (முக்காலி) தெரியும்.



மீதி அடுத்த பதிவில்.

Wednesday, July 4, 2007

டைகர் விமானச்சேவை

தொழிலில் போட்டி சும்மா ஜிவ்வுன்னு ஏறிக்கொண்டு இருக்கும் சம்யத்தில் இந்த மாதிரி ஒரு விளம்பரத்தை கொடுத்து மத்த விமானச்சேவைகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கார்கள் "டைகர் விமானசேவை" நிறுவனம்.
சரி,சிங்கையில் இருந்து சென்னைக்கு சேவை வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள்.அவர்கள் வலைப்பக்கம் போய் நவம்பர் மாதத்துக்கு எவ்வளவு செலவாகிறது என்று போட்டு பார்த்தேன்..



அட! வெறும் 346 சிங்கப்பூர் வெள்ளி தாங்க.இது வரை இவ்வளவு குறைவாக நான் செலுத்தியதே இல்லை.இனி 3 மாதத்துக்கு ஒரு தடவை கூட ஊருக்கு போகலாம்.ஜாலி!!

Thursday, June 21, 2007

Pile - தாங்கும் சக்தி (2)

போன பதிவில் பைல் அடிக்கும் முறை அதன் கணக்குள் பற்றி தெரிந்துகொண்டோம்.

இனி அதை சோதனை செய்யும் முறையை பற்றி பார்க்கலாம்.

தரையில் பைல் அடித்தால் கீழே உள்ள மாதிரி கான்கிரீட் கற்களை கொண்டு பாரம் ஏற்றி அதனை பைல் மேல் ஏற்றுவோம்.அதன் பிறகு ஒவ்வொருமணி நேரமும் எவ்வளவு மில்லிமீட்டர் இறங்குகிறது என்று பார்த்து சுமார் 1 வாரத்தில் இருந்து 2 வாரம் வரை கண்காணித்து பைல் தாங்குமா,தாங்காதா என்று முடிவு செய்வார்கள்.இந்த முறைக்கு கென்ட் லெட்ஜ் முறை என்று பெயர்.





அதாவது மேலிருந்து கொடுக்கும் அழுத்ததை தாங்கும் சக்தி அந்த பைலுக்கும் மண்ணுக்கும் இருக்கிறதா என்று சோதிக்கும் முறைதான் இது.அதுக்கு கீழே மண் இளகி இருந்தால்?சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை.எது வேண்டுமானலும் நடக்கலாம். பூகம்பம் வரும் போது மொத்த பூமியே நகரவில்லையா?அதன் முன் இதெல்லாம் எம்மாத்திரம். Pile Design எல்லாமே இதற்கு முன் செய்த ஆராய்சியின் முடிவிலேயே இருக்கும்.இன்று வரை இந்த முறையில் பிரச்சனையில்லை அதனால் அப்படியே செல்கிறோம்.



இது வரை பார்த்தது நிலத்தின் மேல்,இப்போது நீரின் மேல்.கீழே உள்ள படம் பாருங்கள்.கட்டுமானத்துறையில் இவ்வாறு படம் போட்டு சொல்வது படிப்பவர்களுக்கு எளிதாக புரியும் என்பதால் அதிகமாக படங்கள் ஏற்றவேண்டியுள்ளது.

இந்த முறையில் பைலை சுற்றி 4 ராக் ஆன்கர் (Rock Anchor)போடுவோம்.ஆதாவது நதிக்கு அடியில் சுமார் 25 மீட்டருக்கு துளை போட்டு அதனுள் கம்பி வைத்து Repalcement முறையில் நன்கு/சீக்கிரம் இறுக்ககூடிய கான்கிரீட்டை போடுவோம்.அந்த கம்பியை பைல் மேல் வைத்துள்ள பீமில் இணைத்து நன்கு இறுக்கிவிடுவோம்.



எல்லாம் முடிந்த பிறகு அந்த ஜேக்கை உபயோகித்து பைல் மேல் கொஞ்சம் கொஞ்சமாக பாரம் ஏற்றுவோம்.இது சுமார் 2 வாரங்களுக்கு போகும்.ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எவ்வளவு மில்லிமீட்டர் இறங்குகிறது என்று கணக்கு எடுக்க வேண்டும்.முதலில் அதிகமாகவும் பிறகு ஓரளவு நிலைப்படும்.ஒரு கால வரையறைக்குள் இவ்வளவு தான் இறங்க வேண்டும் என்ற கணக்க, அதற்குள் வந்தால் பைல் டெஸ்ட் பாஸாகிவிட்டது என்று பொருள் இல்லை என்றால்? என்ன செய்ய வேண்டும் என்று...

அடுத்த பதிவில்.

Tuesday, June 19, 2007

கிராண்ட் கேன்யன்

இதைப்பற்றி திருமதி வள்ளிசிம்ஹன் ஒரு பதிவு போட்டிருந்தார்கள்.அப்போதே இதை எப்படி செய்திருப்பார்கள் என்ற யோஜனை இருந்தது.
இன்று மினஞ்சலில் வந்த பவர் பாயிண்ட் படங்களை இங்கு ஏற்றியுள்ளேன்,அதற்கு உதவி இங்கிருந்து பெற்றேன்.

Monday, June 18, 2007

Hollow Blocks

வீடு, அலுவலகம் என்று பல இடங்களிலும் இந்த கல் பயண்பாட்டுக்கு வந்துவிட்டது.இதன் அருமை பெருமைகள் அதிகம்.

நான்கு செங்கல் வைக்கும் இடத்தில் 1 கல் வைத்தால் போதும்,உறுதியானது,சீக்கிரம் வேலை முடியும்.சிமின்ட் பயண்பாடு குறைவு.சுற்றுச் சிமின்ட் பூச்சுக்கு ஏதுவான புற அமைப்பு இருக்கும்.இப்படி பல.

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.உட்புறம் உள்ள காலியிடத்தில் சிமின்ட் நிரப்புகிறார்கள்.இது பல இடங்களில் தேவைப்படாது.பொறியாளர்களின் ஆலோசனைபடி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஒன்றுமே இல்லாவிட்டால்..

கட்டுமானத்துறையும் கம்பியும் இணைபிரியாத நண்பர்கள்.இந்த மாதிரி கம்பிகளை வளைக்க தனி இயந்திரங்கள் உண்டு ஆனால் சில சமயம் சின்ன வீட்டுக்கு லின்டல் போட அல்லது வேறு காரணங்களுக்காக கம்பி வளைக்க வேண்டி வரும்.

அந்த மாதிரி சமயங்களில் இயந்திரத்தை தேடி ஓட முடியாது.கீழே உள்ள மாதிரி தான் செய்யவேண்டும்.என்ன 10 கம்பிகள் செய்வதற்குள் ஆள் Flat ஆகி விடுவார்கள்.

தடிமன் குறைந்த கம்பிகள் மட்டுமே இப்படி செய்ய முடியும்.

Saturday, June 16, 2007

Pile - தாங்கும் சக்தி (1)

சரி, இப்போது Coffer Dam வேலை முடிந்து விட்டது,அதற்கடுத்து பைல் அடிக்க வேண்டும்.எப்படி அடிக்க வேண்டும்,எவ்வளவு அடிக்கவேண்டும்? எப்போது நிறுத்த வேண்டும்?
பார்ப்போமா?

இதையெல்லாம் முடிவு செய்வது அந்த பால வேலையில் ஈடுபட்டிருக்கும் பொறியாளரின் பணி.ஒரு பைலின் மீது எவ்வளவு பாரம் வருகிறது என்று பார்த்து,அதற்கான வழிமுறைகளை கண்டு முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஆற்றின் படுகையில் மண் வளம் எப்படி உள்ளது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

முதல் வேலை எந்த மாதிரி ஹேமர் உபயோகிக்கப்போகிறோம் என்று பார்த்து அதன் Energy எவ்வளவு என்று பார்த்து,முடிவு செய்யவேண்டும்.ஆதாவது ஒரு தடவை ஹேமர் பைலை அடிக்கும் போது எவ்வளவு மில்லி மீட்டர் இறங்க வேண்டும் என்று பார்க்கவேண்டும்.இதிலும் பல ஆச்சரியங்கள் உள்ளன.வெற்றுப்பார்வைக்கு பைல் மேலிருந்து வரும் பாரத்தை அப்படியே கீழே கொண்டு செல்வதாகத்தான் தெரியும்.நிஜத்தில் அப்படியில்லை.வரும் பாரத்தில் பைலின் கீழ் முனைக்கும் போகும் பாரம் குறைவாக இருக்கும்.மீதி எங்கே போகிறது என்று கேட்கிறீர்களா?பைலை சுற்றி உள்ள இருக்கமான மண் மூலம் பெரும் பகுதி பாரம் சென்றுவிடுகிறது.இதையெல்லாம் எங்களை போல் வேலை இடத்தில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்?அதற்கான மிகப்பெரிய விலையை நாங்கள் கொடுக்கவேண்டியிருந்தது.அதையும் பிறகு சொல்கிறேன்.

ஹேமர் கிடைத்துவிட்டது,அதை நிறுவ தேவையான டவரும் கிடைத்துவிட்டது.பொறியாளர்கள் தேவையான விபரங்கள் கொடுத்துவிட்டார்கள்.கீழே உள்ள படத்தில் "Rig" என்று சொல்லப்படுகிற டவரை பார்க்கலாம்,அதன் மேல் மஞ்சள் கலரில் உள்ள ஹேமரையும் பாருங்கள்.இது ஹைட்ராலிக் முறையில் பாரத்தை தூக்கி சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து விடும்.அதன் மூலம் கிடைக்கும் விசையில் பைல் கீழே போகும்.



தெப்பத்தின் மீது உள்ள பைலகளின் படத்தை கீழே பார்க்கலாம்.



உள்ளூரில் கிடைக்கும் ஹேமரையும்,நாங்கள் தயாரித்த டவரையும் வைத்து முதல் பைல் அடித்தேம்,அதற்கு மறக்காமல் பூஜையும் போட்டோம்.அந்த படம் தான் கீழே உள்ளது.



படத்தின் வலது கோடியில் உள்ளவர் தான் எங்கள் Project Manager.பூஜை செய்பவர் எங்கள் டிரைவர்.

பைல் அடித்த பிறகு அதை "Load Test" செய்வதற்கான வேலையில் இறங்கினோம்.இதே வேலை தரையில் இருந்தால்,Test செய்யவேண்டிய பைலின் மீது கான்கிரீட் கற்களை அடிக்கி சோதிப்போம்.இது ஆற்றின் மேல் என்பதால் செய்முறைகள் மிகவும் வித்தியாசப்பட்டன.

எப்படி?

அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

Tuesday, June 12, 2007

தண்ணீரின் நடுவில்

போன பதிவில் Coffer Dam பற்றிய மேல் விபரங்கள் கொடுத்திருந்தேன்.அதன் தொடர்பில் இன்னும் சில விபரங்களை பார்ப்போம்.

இப்படி செவ்வகமாக ஷீட் பைல்களை அடித்த பிறகு அதை பலப்படுத்த இரண்டு மட்டங்களில் தேவையான இரும்பு பீம்களைக்கொண்டு முட்டு கொடுப்போம்.வெளிப்புறத்திலும் இரண்டு நிலைகளில் இந்த முட்டு இருக்கும்.கிட்டத்தட்ட 5~6 மாதங்களுக்கு இந்த Coffer Dam இருக்கும். அதனால் தகுந்த முறையில் Design செய்து அதன்படி வேலை செய்தோம்.Site யில் வேலை செய்பவர்கள் இந்த மாதிரி Design பற்றியும் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது அவசியமும் கூட.அதை தெரிந்துகொள்ளாமல், நான் செய்த ஒரு முட்டாள் தனமான காரியத்தை பிறகு சொல்கிறேன்.



கீழ் நிலையில் இருக்கும் முட்டு Low tide அளவிலிருந்து சுமார் 300mm இருக்குமாறு வைத்து Design செய்திருந்தார்கள்.தண்ணீர் இறங்கி இருக்கும் சமயங்களில் கீழ் முட்டிலும்,மற்ற சமயங்களில் மேலேயும் வேலை பார்ப்போம்.தண்ணீர் ஏறும் போது தண்ணீர் இதன் உள்ளுக்குள்ளும் வந்துவிடும்.இது ஒரு விதத்தில் நல்லது,ஆதாவது வெளிப்புற தண்ணீர் அழுத்தம் இதை பாதிக்காது மற்றொரு விதத்தில் பாதிப்பு.தண்ணீர் இறங்கி இருக்கும் வேளைகளில் மட்டும் தான் வேலை பண்ண முடியும்.

கீழே உள்ள படத்தில் பாருங்கள்.



அந்த மனிதர் உட்கார்ந்து இருக்கும் இடத்தன் உட்பகுதியில் மேலே உள்ள இரும்பு பீம் தான் முட்டு.

அதே மாதிரி கீழ் மட்டத்தில் ஒன்று இருக்கும்.நாங்கள் அடிக்கப்போகும் பைல்கள் சாய்வு நிலையில் இருப்பதால்,நிலை நிறுத்த அந்த மட்டத்தில் இருக்கும் இந்த பீம்களை உபயோகித்துக்கொண்டோம்.

இந்த பைலிங்கிலும் சில தொழிற்நுட்பங்கள் இருக்கு.இங்கு நாங்கள் அடித்த பைல்கள் இரும்பு குழாய்கள் 600mm dia பைப்.சில கீழ் முனை மூடியிருக்கும் சில திறந்திருக்கும்.மூடி உள்ள பைல்களில் அவ்வளவு பிரச்சனை கிடையாது.அடித்தவுடன் தேவையான உயரத்தில் வெட்டி கான்கிரீட் போட்டுவிட வேண்டும் அவ்வளவு தான். திறந்த முனையில் வேலை அதிகம்.

பைலிங் குழாய்களை அடித்து இறக்க தகுந்த உபகரணம் தேவை.முதலில் உள்ளூரில் கிடைக்கும் இயந்திரத்தின் உதவியோடு ஒரு பைலை அடித்தோம்.ஒப்பந்தப்படி அடிக்கும் முதல் பைலை Load Test என்னும் முறைப்படி சோதனை செய்யவேண்டும்.

முதன் முதலில் மலேசியாவிலேயே இருக்கும் அதிக எடைகொண்ட Jack Hammer கொண்டு முயற்சித்து முதல் பைலை இறக்கினோம்.முதல் முறை முயற்சிக்கிறோம் சாய்வு இல்லாத பைலாக தேர்ந்தெடுத்து இறக்கினோம்.



மேலே உள்ளது நிலத்தில் அடிக்கும் ஹேமர்.கீழே உள்ளது நாங்கள் வேலை செய்த இடத்தில்.




Load Test எப்படி செய்தோம் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, June 6, 2007

தெப்பம்

போன பதிவில் Coffer Dam க்கு தேவையான சாமான்களையும் அதை செய்யும் விதத்தையும் சொல்லியிருந்தேன்.
இந்த தெப்பத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செலவில்லாமல் எப்படி செய்தார்கள் என்று பார்ப்போதும்,அதுவும் இயற்கையோடு ஒத்திசைந்து.

கடலுக்கு பக்கத்தில் இருக்கும் நதிகளில் தண்ணீர் மட்டம் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்.நாங்கள் வேலை செய்த சுங்கை சரவாக்கும் அந்த மாதிரியான நதிதான்.வேலை அதிகமாக இல்லாத நேரங்களில் நதியை கவனித்துக்கொண்டிருந்த நாட்களில் ஒரு சமயத்தில் மட்டும் தண்ணீர் அசைவின்றி ஏரியில் இருப்பது போன்று இருக்கும். ஆதாவது நீர் ஓட்டம் மாறும் நேரத்தில்.


எங்கள் குத்தைகைகாரர் இந்த சமயத்தை தான் உபயோகப்படுத்திக்கொண்டார்.
எப்படி?
தண்ணீர் ஓட்டம் மாற இருக்கும் 30 நிமிடங்களுக்கு முன்பே எங்களிடம் உள்ள சின்ன படகு மூலம் ஒரு தடிமனான கயிறை எங்கு போகவேண்டுமோ அங்கு ஒரு இடத்தில் கட்டிவிடுவார்கள்.தெப்பத்தின் மேல் உள்ள பாரம் தூக்கி மூலம் அந்த கயறை லேசாக இழுத்தால் போதும் தெப்பம் தன்னால் அந்த பக்கம் நகர ஆரம்பிக்கும்.டக் போட் தேவையில்லாமல்.சரியான திசையில் போகவில்லை என்றால் எங்கள் படகு மூலம் கொஞ்சம் தள்ளிக்கொடுப்போம்.

என்ன? சின்ன படகு மூலம் பெரிய தெப்பத்தை தள்ளுவதா?காதில் பூ வைக்காதே என்கிறீர்களா?

நானும் முதலில் அப்படி நினைத்தேன்.பிறகு தான் தெரிந்தது,தண்ணீரில் இருக்கும் எவ்வளவு பெரிய பொருளையும் சின்ன உந்துதல் மூலம் நகர்த்த முடியும் என்பது. இது தான் தண்ணீரில் வேலை பார்பவர்களுக்கு தெரியவேண்டிய அரிச்சுவடி.

எங்கள் நதி அவ்வளவு பெரிதாக இல்லாததால் இதனை சுலபமாக சமாளிக்க முடிந்தது.பெரிதாக இருந்ததால் டக் போட் மிக அவசியம்.பாதுகாப்பு காரணங்களுக்கு.

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு நாள் இந்த தெப்பத்தையும் ஆற்றின் நீர் ஓட்டம் அடித்துகொண்டு போன கதையை பிறகு சொல்கிறேன்.

Tuesday, June 5, 2007

3 கோடி தொழிலாளர்கள்.

கீழே உள்ள படத்தை பாருங்கள் இது நாணயம் பத்திரிக்கையில் போன அக்டோபர் வந்த செய்தி.

நன்றி:நாணயம்-விகடனார்.

இதன் தலைவர் நடராஜன் என்று படம் போட்டிருக்கிறார்களே அவர் தான் என்னை முடிந்த அளவு பலத்துடன் எல்.டி யில் தூக்கிவிட்டது.

இத்தனைக்கும் இவர் எனக்கு முன் பின் தெரியாதவர்.

இன்றைய நிலையில் கட்டுமானத்துறை ஊழியர் தேவைகளை முன் உணர்ந்து இந்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நல்ல பணி.

காய்கறி சிரிப்பு

தமிழ் வலைப்பதிவர்களில் இவர் குறிப்பிட வேண்டிய ஒருவர்.இவருடைய பல பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் வந்துள்ளது,அதில் ஒன்று தான் கீழ்கண்டது.
இதில் பல படங்களைப்போட்டு வரி விமர்சனம் இல்லாமல் இருப்பது பார்பவரின் மன நிலமையே அதற்கு விமர்சனமாக கொள்ளவேண்டியதாக உள்ளது
பல பதிவுகளில் எனக்கு சட்டென்று பிடித்தது "இது" தான்.
இன்னும் முழுவதுமாக மேயவில்லை என்பதால் மற்றவற்றைப் பற்றி சொல்லவில்லை.
அனுபவிங்க.
நன்றி:சிறில் அலெக்ஸ்.

Saturday, June 2, 2007

கடற்படை ஓபன் ஹவுஸ்-3

இந்த மாதிரி பெரிய பெரிய கப்பல்களை கடைசியில் வைத்திருந்தார்கள்.திமிங்கலம் வாயை நேர்வாக்கில் திறப்பது போல் இருந்தது.

இதற்கான வரிசை நேரம் 40 நிமிடம் என்பதை பார்த்து விட்டென் ஜூட்.வெளியில் இருந்து எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக..

இது பக்கவாட்டில் எடுத்தது

இன்னும் நெருக்கத்தில்..

எங்க ஊரிலும் கலங்கரை விளக்கம் உண்டு,அது கீழே.

எனக்கு இப்பவும் சந்தேகமாக இருக்கு,இவரை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்களா? இல்லை சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கவா? என்று.

எல்லாம் முடிந்து வெளியேரும் நேரத்தில் மறுபடியும் நீண்ட நடை,பாதி வழியில் எல்லோருக்கும் இலவசமாக "நியூ வாட்டர்"(தண்ணீர் மறு பயண்பாட்டு முறையில்) சிங்கப்பூர் தயாரிப்பு கொடுத்தார்கள்.இங்கு பஸ் சேவை துரிதமாக இருந்ததால் வெகு நேரம் நிற்காமல் திரும்ப Expo வந்துசேர்ந்தேன்.வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் போது மணி 7.30.

Thursday, May 31, 2007

நேவி ஓபன் ஹவுஸ்-2

ஒரு வழியாக சுமார் 2 மணி நேரம் கழித்து 3.50க்கு பஸ் கிடைத்தது.அங்கிருந்து 15 நிமிட நேரத்தில் சாங்கி நேவல் பேஸ் அடைந்தோம்.

நடைப்பயணம் ஆரம்பமானது.விஸ்தாரமான இடம்,11 விதமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.ஒவ்வொன்றிலும் ஏற வரிசை பிடித்து நிற்கவேண்டும்.குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதால் காத்திருக்கும் நேரம் அதிகமானது.மாலை வெய்யில் அதிகமாக இருந்ததால் தலை பின்பக்கம் மற்றும் புருவத்துக்கு பக்கத்திலும் வலி ஆரம்பமானது.தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது இந்த குறைபாடு வருகிறது.ஒரு நாள் முழுவதும் இருந்துவிட்டு மறுநாள் கானாமல் போய்விடுகிறது.

முதலில் இங்கு நுழைந்து இந்த கப்பலை பார்க்கலாம் என்று வரிசை பிடித்து நின்றேன்



அளவில் சிறிய படகு என்றாலும் உள் வசதிகள் அதிகமாக இருந்தது.உள் நுழையும் முன்பு அந்த கப்பல் அதிகாரி பாதுகாப்பு விதிகளை விவரிக்கிறார்.


இது தூரத்தில் இருப்பவற்றை கிட்டத்தில் பார்க்க உள்ள சாதனம்.பனி மூட்ட காலங்களில் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.ஒருவேளை ரேடார் மூலம் கண்காணிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

கப்பலை ஓட்ட தேவையான சாதனங்கள்..கீழே


இது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கப்பல்.


மேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.

Tuesday, May 29, 2007

கடற்படை ஓபன் ஹவுஸ்

இந்த சனி ஞாயிறு வந்தாலே ஒரு மாதிரி ஆகிவிடுகிறது,அதுவும் சனியன்று விடுமுறை என்றால்.இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்றால் நிறைய காலம் வீணாக போகிறது.எங்கு போவது என்ன செய்வது என்ற எண்ணம் துளைத்து எடுக்கிறது.
(என்ன மா சிவக்குமார் போல் உள்ளதா?)
அப்படி அமைந்த இந்த வார இறுதி நாட்களை கொஞ்சம் வேறு மாதிரி கழிக்க எண்ணி இப்படி போயிற்று.
முதலில் சனிக்கிழமை.இதைப்பற்றி கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாம்,புகைப்படங்களுடன்.வயதானவர்களுக்காக சிங்கையில் கட்டப்படும் ஒரு வீட்டுக்கு போனதும்,அங்கு நான் கண்டவையும் பிறகு சொல்கிறேன்.

ஞாயிறு காலை சுமார் 7 மணிக்கு எழுந்து கேக்கும் மால்டோவாவும் குடித்துவிட்டு நீச்சலுக்கு போனேன் திரும்பும் போது மணி 10 ஆகியிருந்தது.குளித்து சமைத்து சாப்பிடும் போது மணி 12 ஆகிவிட்டது.நடுவில் துணியை துவைத்து கம்பியில் காயப்போட்டாகிவிட்டது.

இனி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு எப்போதும் போல் 2 மணிக்கு நூலகம் போவதா?இல்லை வேறு எங்காவது போகலாமா? என்று யோசித்துக்கொண்டே வலை மேய்ந்துகொண்டிருந்தேன்.நூலகத்தில் போட/எடுக்க வேண்டிய புத்தகங்கள் இல்லாத்தால்,ஒரு வழியாக வெளியில் போக முடிவெடுத்தேன்.நேற்றும் முந்தாநாளும் நடக்கும் நேவி ஓபன் ஹவுஸ் தான் ஞாபகம் வந்தது

அதனோட நம் "கடல் கணேசன்" ஞாபகத்துடன் கடல் மற்றும் கப்பலை காண கிளம்பினேன். நடப்பது Expo என்னும் இடத்தில்.நான் இருக்கும் இடத்தில் இருந்து மின்வன்டியில் சுமார் 1.30 மணி நேரம் பிடிக்கும்.

Expo வை சேர்ந்த போது சுமார் மதியம் 1.50 ஆகியிருந்தது.ஹால் 1 மின்வண்டி நிலையத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருந்தது,மக்கள் கூட்டத்தில் நீந்தி போகவே 15 நிமிடங்கள் ஆனது.

வாசலில் நுழையும் போதே அங்கிருந்த ஒரு சீருடை அதிகாரி நீங்கள் பேருந்து பிடிக்க சுமார் 2.30 மணி ஆகுமென்று.

அதாவது ஹால் நம்பர்1 இல் தேவையான பாதுகாப்பு சோதனைகள் முடிந்து பேருந்து மூலம் சாங்கி நேவல் பேஸ் என்ற இடத்துக்கு போகவேண்டும்.அந்த பேருந்தை பிடிக்கத்தான் 2.30 மணி நேரம் ஆகும் என்று சொன்னர்.

போவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் சில வினாடிகள் யோசித்துவிட்டு வருவது வரட்டும் என்று நுழைந்துவிட்டேன்.



வளைந்து வளைந்து மக்கள் கூட்டம் வரிசையில் போய்.......... கொண்டே இருந்தது.வழியில் இந்த மாதிரி ஏவுகனை மற்றும் படகுகளை வைத்திருந்தார்கள்.
நீங்களும் பார்த்து ரசிங்க.





வான்குடை சாகசகாரர்களின் சாகசம் கீழே.



தண்ணீர் விளையாட்டு,இதுக்கும் வரிசை தான்.



மீதி படங்கள், அடுத்த பதிவில்.