Thursday, May 31, 2007

நேவி ஓபன் ஹவுஸ்-2

ஒரு வழியாக சுமார் 2 மணி நேரம் கழித்து 3.50க்கு பஸ் கிடைத்தது.அங்கிருந்து 15 நிமிட நேரத்தில் சாங்கி நேவல் பேஸ் அடைந்தோம்.

நடைப்பயணம் ஆரம்பமானது.விஸ்தாரமான இடம்,11 விதமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.ஒவ்வொன்றிலும் ஏற வரிசை பிடித்து நிற்கவேண்டும்.குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதால் காத்திருக்கும் நேரம் அதிகமானது.மாலை வெய்யில் அதிகமாக இருந்ததால் தலை பின்பக்கம் மற்றும் புருவத்துக்கு பக்கத்திலும் வலி ஆரம்பமானது.தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது இந்த குறைபாடு வருகிறது.ஒரு நாள் முழுவதும் இருந்துவிட்டு மறுநாள் கானாமல் போய்விடுகிறது.

முதலில் இங்கு நுழைந்து இந்த கப்பலை பார்க்கலாம் என்று வரிசை பிடித்து நின்றேன்



அளவில் சிறிய படகு என்றாலும் உள் வசதிகள் அதிகமாக இருந்தது.உள் நுழையும் முன்பு அந்த கப்பல் அதிகாரி பாதுகாப்பு விதிகளை விவரிக்கிறார்.


இது தூரத்தில் இருப்பவற்றை கிட்டத்தில் பார்க்க உள்ள சாதனம்.பனி மூட்ட காலங்களில் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.ஒருவேளை ரேடார் மூலம் கண்காணிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

கப்பலை ஓட்ட தேவையான சாதனங்கள்..கீழே


இது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கப்பல்.


மேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.

Tuesday, May 29, 2007

கடற்படை ஓபன் ஹவுஸ்

இந்த சனி ஞாயிறு வந்தாலே ஒரு மாதிரி ஆகிவிடுகிறது,அதுவும் சனியன்று விடுமுறை என்றால்.இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்றால் நிறைய காலம் வீணாக போகிறது.எங்கு போவது என்ன செய்வது என்ற எண்ணம் துளைத்து எடுக்கிறது.
(என்ன மா சிவக்குமார் போல் உள்ளதா?)
அப்படி அமைந்த இந்த வார இறுதி நாட்களை கொஞ்சம் வேறு மாதிரி கழிக்க எண்ணி இப்படி போயிற்று.
முதலில் சனிக்கிழமை.இதைப்பற்றி கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாம்,புகைப்படங்களுடன்.வயதானவர்களுக்காக சிங்கையில் கட்டப்படும் ஒரு வீட்டுக்கு போனதும்,அங்கு நான் கண்டவையும் பிறகு சொல்கிறேன்.

ஞாயிறு காலை சுமார் 7 மணிக்கு எழுந்து கேக்கும் மால்டோவாவும் குடித்துவிட்டு நீச்சலுக்கு போனேன் திரும்பும் போது மணி 10 ஆகியிருந்தது.குளித்து சமைத்து சாப்பிடும் போது மணி 12 ஆகிவிட்டது.நடுவில் துணியை துவைத்து கம்பியில் காயப்போட்டாகிவிட்டது.

இனி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு எப்போதும் போல் 2 மணிக்கு நூலகம் போவதா?இல்லை வேறு எங்காவது போகலாமா? என்று யோசித்துக்கொண்டே வலை மேய்ந்துகொண்டிருந்தேன்.நூலகத்தில் போட/எடுக்க வேண்டிய புத்தகங்கள் இல்லாத்தால்,ஒரு வழியாக வெளியில் போக முடிவெடுத்தேன்.நேற்றும் முந்தாநாளும் நடக்கும் நேவி ஓபன் ஹவுஸ் தான் ஞாபகம் வந்தது

அதனோட நம் "கடல் கணேசன்" ஞாபகத்துடன் கடல் மற்றும் கப்பலை காண கிளம்பினேன். நடப்பது Expo என்னும் இடத்தில்.நான் இருக்கும் இடத்தில் இருந்து மின்வன்டியில் சுமார் 1.30 மணி நேரம் பிடிக்கும்.

Expo வை சேர்ந்த போது சுமார் மதியம் 1.50 ஆகியிருந்தது.ஹால் 1 மின்வண்டி நிலையத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருந்தது,மக்கள் கூட்டத்தில் நீந்தி போகவே 15 நிமிடங்கள் ஆனது.

வாசலில் நுழையும் போதே அங்கிருந்த ஒரு சீருடை அதிகாரி நீங்கள் பேருந்து பிடிக்க சுமார் 2.30 மணி ஆகுமென்று.

அதாவது ஹால் நம்பர்1 இல் தேவையான பாதுகாப்பு சோதனைகள் முடிந்து பேருந்து மூலம் சாங்கி நேவல் பேஸ் என்ற இடத்துக்கு போகவேண்டும்.அந்த பேருந்தை பிடிக்கத்தான் 2.30 மணி நேரம் ஆகும் என்று சொன்னர்.

போவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் சில வினாடிகள் யோசித்துவிட்டு வருவது வரட்டும் என்று நுழைந்துவிட்டேன்.



வளைந்து வளைந்து மக்கள் கூட்டம் வரிசையில் போய்.......... கொண்டே இருந்தது.வழியில் இந்த மாதிரி ஏவுகனை மற்றும் படகுகளை வைத்திருந்தார்கள்.
நீங்களும் பார்த்து ரசிங்க.





வான்குடை சாகசகாரர்களின் சாகசம் கீழே.



தண்ணீர் விளையாட்டு,இதுக்கும் வரிசை தான்.



மீதி படங்கள், அடுத்த பதிவில்.

Friday, May 25, 2007

Sheet Piling

போன பதிவில் Coffer Dam பற்றி சொல்லியிருந்தேன்.இப்போது அதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஷீட் பைல் என்று சொல்லப்படுகிற இரும்பு ஷீட்கள்.இவை பல வகைகளில் வருகிறது.நாங்கள் உபயோகப்படுத்தியது கீழ்கண்ட வகையை.
மேலிருந்து பார்த்தால் இப்படி இருக்கும்.

ஒன்று மற்றொன்றுடன் இணைவதை மேலே பாருங்கள்.


இதற்கு தேவையான இயந்திரங்களும் சாமான்களும் கீழே கொடுத்துள்ளேன்.
1.தெப்பம் (Barge)
2.பாரம் தூக்கி (Crane)
3.Vibro Hammer

4.ஸ்டீல் பீம்.


சரி இப்போது நம்முடைய வேலை ஆற்றின் நடுவே உள்ளது .. அதை எப்படி செய்வார்கள் என்று பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் இருக்கிற மாதிரி தெப்பமும் அதன் மேல் இருக்கும் பாரம் தூக்கியையும் டக் போட் என்று சொல்லப்படுகிற போட்டுடன் இணைத்துவிடுவார்கள்.அதன் மூலம் தெப்பத்தை தண்ணீரில் நிலை நிறுத்துவார்கள்.

தேவையான இடத்தை சர்வே இன்ஸ்டுருமென்ட் மூலம் சரி செய்துகொண்டு,தெப்பத்தின் முன்னும் பின்னும் இரு ஸ்டீல் பீம்களை அடித்து நதியின் கீழ் இறக்குவார்கள்.பிறகு அதை நன்கு பலப்படுத்திய பிறகு அந்த ஸ்டீல் பீமுடன் அந்த தெப்பத்தை கட்டிவிடுவார்கள்.

கடல் மட்டத்திற்கு தகுந்தவாறு ஆற்றின் நீர் மட்டமும் ஏறி இறங்குவதால்,தெப்பமும் ஏறி இறங்குவதற்கு தகுந்த மாதிரி கயிறு போட்டு கட்டிவிடுவார்கள்.

அதன் பிறகு பாரம் தூக்கி மற்றும் Vibro Hammer மூலம் ஒவ்வொறு ஷீட் பைலாக அடிப்பார்கள்.நதியின் அடியில் இருக்கும் மண் கீழே போய் சரியாக உட்கார்ந்துவிடும்.இப்படி ஒவ்வொன்றாக அடித்து முடிந்தவுடன் கீழ் கண்ட மாதிரி இருக்கும்.நாம் வேலை செய்யப்போவது இதனுள் தான்.
இப்படி அடித்தாலும் இதன் உள் தண்ணீர் போய்கொண்டு தான் இருக்கும்,அதனால் தண்ணீர் கீழ் இறங்கும் போது மட்டுமே வேலை செய்ய முடியும்.கடல் நீர் ஏற்ற இறக்கங்கள் தெரிந்து கொள்ள கால அட்டவைணைகள் கிடைக்கும்.அதைப் பார்த்து இரவு 12 மணியோ விடிகாலை 2 மணியோ வந்து வேலை செய்துவிட்டு போக வேண்டும்.
சில சமயம் ஆற்றில் தலைப்பக்கம் மழை பெய்தால் நீர் வரத்து அதிகமாகி தண்ணீர் மட்டம் இறங்காமலே போய்விடக்கூடும்.

சரி இப்போது ஒரு Coffer Dam தயாராகிவிட்டது,அடுத்ததை செய்ய என்ன செய்ய வேண்டும்?ஒவ்வொரு தடவையும் தெப்பத்தை மாற்ற அந்த Tug Boat ஐ கூப்பிட்டால் 500 ரிங்கட்(மலேசிய பணம்) கொடுக்கவேண்டும்.அந்த பணத்தை சேமிக்க எங்கள் குத்தைகாரர் என்ன செய்வார் தெரியுமா?கொஞ்சம் இயற்கையோடு ஒன்றிப்போய் காரியத்தை முடித்துவிடுவார்.அது எப்படி பார்ப்போமா?
அடுத்த பதிவில்.

Monday, May 21, 2007

மண் மேடு

போன பதிவு இங்கே.
நான் முதலில் சொல்லியிருந்தபடி பால வேலையில் Embankment என்ற மண் மேட்டை தான் முதலில் கட்டுவார்கள்.

அது முடிந்த நிலையில் அதன் மேல் நானும் திரு லி யூ கியும்.

எதிர்பக்கத்தில் தெரிவது கரைக்கு அப்புறம் உள்ள மண் மேடு.

லி யூ கீ என்பவர் எங்கள் பிராஜக்ட்டின் மேற்பார்வையாளர்(Clerk-Of-Works),இவர் ஓகே சொன்ன பிறகு தான் கான்கிரீட் மற்ற வேலைகளை செய்ய முடியும்.முதலில் நல்ல நண்பர்களாக இருந்து பிரியும் போது கொஞ்சம் மன வருத்தத்துடன் பிரிய வேண்டியிருந்தது.மன வருத்தம் எனக்கல்ல..அவருக்கு. கோபம் என் மீதல்ல எங்கள் கம்பெனி மீது.அதை பிறகு சொல்கிறேன்.

இந்த மண் மேடு கட்டுவதிலும் சில தொழிற்நுட்ப வேலைகள் உள்ளது.எப்படி பண்ணவேண்டும்,எத்தனை காலம் கழித்து எவ்வளவு உயரம் இறங்கியுள்ளது என்பன போல்.கட்டுமான பைபிளில் உள்ள மாதிரி செய்ய வேண்டும் என்றால் 300mm உயரத்துக்கு மேல் மண் கொட்டுக்கூடாது,அதை 10T ரோடு ரோலர் கொண்டு உருட்டவேண்டும்.மண் மேட்டின் மொத்த உயரத்துக்கும் சேர்த்து அவ்வப்போது அதன் டென்சிட்டி மற்றும் தண்ணீரின் அளவை சோதிக்க வேண்டும்.இந்த அவ்வப்போது எப்போது என்பதை இந்த பிராஜக்டின் ரெசிடென்ட் இஞ்சினியர் தான் முடிவு செய்வார்.எங்களுக்கு வந்தவர் நியூசிலாந்துகாரர் திரு ஜிம் பெக்கர்.ஒடிசலான தேகம்,சற்று வயது முதிர்ந்தவர்.

இந்த சரவாக் மாநிலத்தில் கோடைகாலத்திலேயே 2 நாட்கள் வெய்யில் அடித்தால், நிச்சயம் 3வது நாள் மழை இருக்கும்.இப்படிப்பட்ட இடத்தில் இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வேலை செய்வது கஷ்டம் என்றாலும் ஒரு மாதிரி சமாளித்து இந்த வேலையை முடித்தோம்.

மண் மேட்டுக்கு பிறகு உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய வேலை ஆற்றுக்கு நடுவே உள்ள தூண்கள்.இதைப்பற்றி போன பதிவில் சொல்லியிருந்தேன்.

ஆற்றின் நடுவே எப்படி வேலை செய்வது?

கடலிலும் ஆற்றிலும் வேலை செய்வது ஓரளவு சமமாக இருந்தாலும் கடல் வேலை கொஞ்சம் அதிக கஷ்டம்.

எந்த வேலையானாலும் தண்ணீரின் நடுவே செய்யும் போது சில வழிமுறைகளை கையாள்வார்கள்.
1.வேலை செய்யும் இடத்தில் ஒரு மணல் தீவை உருவாக்குவது
2.காஃபர் டேம் (Coffer Dam) நாங்கள் செய்தது 2வது முறை.

கீழே உள்ள படம் ஒரு பால வேலையில் நடைபெறுகிறது.(இணையத்தில் சுட்டது)




காஃபர் டேமை ஷீட் பைல் கொண்டு அமைத்த காட்சி (எங்கள் வேலையும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்)



ஷீட் பைல் முடித்த பிறகு மண் தோண்டும் காட்சி.(எங்கள் வேலையில் எடுத்தது அல்ல)


இது வெள்ளம் வந்து காஃபர் டேம்மை உருக்குலைத்த காட்சி(எங்கள் வேலையில் எடுத்தது அல்ல)



இது காஃபர் டேமின் உள்ளே எப்படி இருக்கும் என காட்டும் படம்.(எங்கள் வேலையில் எடுத்தது அல்ல)



இனி காஃபர் டேம் கட்டும்போது எடுத்த சில படங்களை பார்க்கலாம்.

பார்ஜ் (Barge) எனப்படும் மிதவை பாரம் தூக்கியுடன் உள்ளது அதை தண்ணீரில் நிலை நிறுத்த டக் போட்.இந்த டக் போட்(Tug Boat) அதிக வலுவுடன் கூடிய போட்(Boat).இதை அந்த தெப்பத்துடன் கட்டி எங்கு வேண்டுமோ அங்கு இழுத்துச்செல்வார்கள்.அந்த படம் கீழே.



மேலும் படங்களும் காஃபர் டேம் கட்டும் விபரம் அடுத்த பதிவில் தொடரும்.

Shut Down

என் கணினியை நான் மூட முடியாது சொல்லும் கணினியை கீழே பாருங்க..



காலம் ரொம்ப கெட்டுப்போச்சு.

Friday, May 18, 2007

Air India- Express

எப்போதும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு போக எல்லா விமான நிறுவனங்களிலும் கட்டணம் அதிகமாகவே இருக்கும்.

சீஸன்களில் ஒரு விலையும் மற்ற சமயங்களில் வேறு மாதிரி இருக்கும்.எது எப்படி இருந்தாலும் 500 வெள்ளிக்கு கீழே இருக்காது.சுமார் 12 வருடங்களில் மிகக்குறைவாக போன கட்டணம் 565,அதிகமாக 1080 வெள்ளி.இந்த முறை 500 வெள்ளிக்கு கீழே கிடைத்த பயணத்தைப் ப்ற்றி பார்ப்போமா?

கிட்டத்தட்ட அதே தூரம்,ஆனால் சிங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த்துக்கு போக சுமார் 400 வெள்ளி தான்.

இப்படிப்பட்ட நிலைமையில் Air India சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, மலிவு விலையில் இங்கிருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது.மலிவு விலை என்பதால் சாப்பாடு இருக்காது,தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம்,ஆனால் அப்படியில்லை.



இணையத்தில் இதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று தேடிய போது பலரின் குமுறல்கள் சவுதி பக்கத்தில் இருந்து வந்தது.இருந்தும் நான் சென்னை போவதை முடிவு செய்ததும்,சரி இந்த முறை எப்படி உள்ளது என்று பார்க்கலாம் என்று இவர்கள் இணைய பக்கத்துக்கு போனேன்.

அதற்கு முன்னால் சில Airlines யில் அவர்கள் கட்டணத்தை விஜாரித்த போது இவர்கள் கட்டணம் தான் மிகவும் குறைவாக இருந்தது.

Indian Airlines- $635
Singapore Airlines-$965.

AirIndia Express வலைப்பக்கம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது,கடன் பற்று அட்டை மூலம் காசு செலுத்தி நன்னுடைய பயணச்சீட்டை அப்போதே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
முடிவு செய்த பிறகு,தேதிகளை மாற்றினால் அதற்கு தனியாக பணம் கட்டவேண்டும்.



பயண தேதி வந்தது,சிங்கை விமானநிலையத்தில் பெட்டிகளை எடைப்போட்டு பயணசீட்டு வாங்கும் இடத்துக்கு போய் பெட்டியை வைத்தவுடன் "முதலில் கைப்பையை வையுங்கள்" என்றார்கள். குழப்பத்துடன் வைத்தவுடன் அது 7 கிலோக்கு மேல் போகாமல் இருப்பதை கண்காணித்தவுடன் அதற்கு ஒரு Tag போட்டு அதில் எடையையும் எழுதி தொங்கவிட்டு விடுகிறார்கள்.இதை மறுபடியும்,குடியேற்றத்துக்குள் நுழையும் போதும் எடைபோட்டு சரி பார்க்கிறார்கள்.இந்த மாதிரி சோதனை இந்த விமானச்சேவைக்கு மட்டுமா? எல்லாவற்றுக்குமா என்று தெரியவில்லை.

குடியேற்றப் பகுதி முடிந்த பிறகு சரக்கு ஐட்டம் மற்றும் சிகரெட்டுக்கு எடை பார்பதில்லை.யோசியுங்கள் ஏன் என்று.:-))

அன்று விமானம் கொஞ்சம் தாமதமாக கிளம்பி சுமார் 20 நிமிடங்களுக்கு வாடகை ஊர்தியில் போவது போல் விமான நிலையத்துள் சுற்றி (டெர்மினல் 2,3 என்று) விட்டு கிளப்பினார்கள்.மலிவு விலை விமானச்சேவை என்பதால் எல்லாமே தூரத்தில் இருக்கும் போல,இது சென்னையில் இறங்கும் போதும் அப்பட்டமாக தெரிந்தது.

பயணத்தின் போது எல்லோருக்கும் சைவ சாப்பாட்டு தான். தட்டை,முருக்கு கூட இருந்தது.என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் சென்னையில் ஒரு வீடு Registration விஷயமாக போவதாக சொன்னார்.நீங்களும் வீடு விஷயமாக போகிறீர்களா? என்றார்.புன்சிரிப்புடன் இல்லை என்றேன். அவர் IT யில் வேலை பார்பதாக சொன்னார்,நம்பும்படி இல்லை.வலைப்பூ & தமிழ்மணம் பற்றி தெரியுமா? என்று கேட்டேன், தெரியாது என்றார். அதன் பிறகு பொது வான விஷயங்களை மட்டும் பகிர்ந்துகொண்டோம்.
இடது பக்கம் உள்ளவர் மெத்த படித்தவர் போலும் ஒரு "ஹாய்" என்று முடித்துக்கொண்டுவிட்டார்.

கிளம்பும் போது ஆன தமாதம் இறங்கும் போது எதிரொளித்தது.விமானத்தை விட்டு இறங்கியதும் தரையில் நடந்து காத்திருக்கும் ஒரு பேருந்தில் ஏறினோம் சுமார் 100 மீட்டர் ஓடி ஒரு கட்டிடத்தின் முகப்பில் இறக்கிவிட்டார்கள்.கிழே இருந்து சுழல் மாடிப்படிகள்(படிகள் கிடையாது) மூலம் 4 மாடி ஏறி மற்ற விமானத்தில் இருந்து வெளியேறும் பாதைக்கு திரும்பி வந்து எஸ்கலேட்டர் மூலம் குடிநுழைவு பகுதிக்கு வந்தோம்.பாவம் வயதானவர்கள் எப்படித்தான் 4 மாடி ஏறி வருவார்களோ!!

இந்த தடவை கொண்டு போன ஒரே பெட்டி கொஞ்சம் சீக்கிரம் வந்ததால்,எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.இம்முறையும் நான் வருவது இங்கு யாருக்கும் தெரியாததால் நேரே முன்பதிவு Taxi இருக்கும் இடத்துக்கு போய் போக வேண்டிய இடத்தை சொன்னவுடன் ரூபாய் 300 என்றார்கள்.

என்ன போன தடவை வந்த போது 260 ரூபாய் தானே எதற்கு 40 ரூபாய் அதிகம் என்றேன்.விலை எல்லாம் கூடிவிட்டது என்று பதில் வந்தது.
பணத்தை கட்டியவுடன் ரசீதுடன் ஒரு ஆள் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வண்டி இருக்கும் இடத்துக்கு வந்தான்.

பார்த்தால் ஒரு வண்டி கூட இல்லை.(எதற்கு தான் வலிய வலிய கூப்பிடுகிறார்களோ?)
ஒரு மீன் பாடி வண்டியை காண்பித்து வேண்டுமென்றால் இதில் போங்கள் என்றார்.வந்த கோபத்துக்கு கொஞ்சம் திட்டிவிட்டு பணத்தை திருப்பிக்கொடு என்று சொல்லி பெற்றுக்கொண்டேன்.

கொஞ்ச நேரம் வெளியில் வண்டி கிடைக்குமா என்று பார்த்து கிடைக்காததால் மனைவிக்கு தொலைபேசி வண்டி அனுப்பமுடியுமா? என்று பார்க்கச்சொன்னேன்.பல கால் டேக்ஸிகளும் அப்படி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அப்படியே ஒரு உபாயத்தை சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.ஆதாவது "வருகை" இடத்தில் இருந்து அப்படியே பொடி நடையாக நடந்து "கிளம்பும்" பகுதிக்கு போனால் இறக்கிவிட்டு செல்லும் வாடகை வண்டியை பிடித்துக்கொள்ளலாம் என்று.

அப்படியே நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு ஆட்டோ என்னை பார்த்த படியே கொஞ்ச தூரத்தில் போய் நின்றது.கிட்டத்தில் போய் போக வேண்டிய இடத்தை சொன்னவுடன் ரூபாய் 200 ஆகும் என்றார். சரி என்றவுடன் பெரிய டாக்ஸி ஓட்டுவது மாதிரி ஆட்டோவை ஓட்டி சுமார் 30 நிமிடங்களுக்கும் வீட்டில் இறக்கிவிட்டார்.

Thursday, May 17, 2007

மெரினா கடற்கரை

2 வாரங்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்த போது வெகு நாட்களாக தள்ளிப்போட்டு வந்த இந்த இடத்துக்கு போய்விடுவது என்று முடிவெடுத்துக்கொண்டு கால் டேக்ஸி முன் பதிவு செய்துகொண்டோம்.
என் வீட்டிலும்,மச்சான் வீட்டிலும் குழுந்தைகளுக்கும் சொல்லியிருந்தோம்,அவர்களும் தயராக இருக்க,முதலிலேயே முடிவெடுத்த படி பெஸென்ட் நகர் அஸ்டலக்ஷ்மி கோவிலுக்கு போய் அதன் பின் பீச்சில் விளையாடலாம் என்று தான் நினைத்து போனோம்.
வயதில் பெரியவர்களும் வருவதால் மேல் சொன்ன இடத்துக்கு போகலாம் என்றிருந்தோம்,திடிரென்று அவர்கள் பின் வாங்கிவிட்டதால்,வண்டியில் ஏறியவுடனேயே சிருசுகள் மெரினா தான் போகவேண்டும் என்று அடம் பிடித்ததால், வண்டியை அங்கு விட்டோம்.

மாலை சுமார் 4.45க்கு அடைந்தோம்.

காந்தி சிலைக்கு முன்பு.


சாந்தோம் பீச்சில் உள்ள கலங்கரை விளக்கம்.

லோ டைட் என்பதால் கடல் உள்வாங்கியிருந்தது.


மேலும் சில பீச் படங்கள்



ஷூட் பண்ண முயற்சிக்கும் சிறுவர்கள்.



உள்ளே நுழையும் இடத்திலேயே மாங்காய் துண்டு கண்ணைப்பறிக்க ஆளுக்கு ஒன்று வாங்கிச் சாப்பிட்டோம்.

நாங்கள் கால் வைக்கும் நேரம் கடல் அலை குறைந்து காணப்பட்டது.லோ டைட் யில் இருந்து ஹை டைட் ஆரம்பிக்கும் நேரம் போலும்.முதலில் கால் நனைக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்தது.ஒரு சமயத்தில் உருண்டோடி வந்த சிறு அலை காலை மட்டும் அல்லாமல் உள்ளாடையையும் நனைக்க... அப்புறம் என்ன? முழுவதுமாக நனைந்து,குளித்துவிட்டு வந்தோம்.கடலில் குளித்து 2 மாமாங்கம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

குளித்து முடித்தவுடன் எடுத்த புகைப்படம் கீழே..வேண்டாம் பூணூல் தெரியும்.:-))

அன்று பௌர்னமி என்பதால்,சந்திரன் எழும் நேரத்துகாக கொஞ்சம் நேரம் காத்திருந்தோம்.அப்போது கொஞ்சம் மேக மூட்டமாக இருந்ததால் சந்திரன் வெளியே வர கொஞ்சம் நேரம் ஆனது.சுமார் 6.40க்கு கண்ணுக்கு தெரிந்ததும், கொண்டுபோயிருந்த தொலைநோக்கி மூலம் பார்த்தோம்.அருமையாக தெரிந்தது.
மக்கள் கூட்டம், பள்ளி விடுமுறை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

பீச்சுக்கு வந்த பிறகு யாராவது வீட்டில் போய் சமைத்து சாப்பிடுவார்களா? என்ன?

எந்த ஹோட்டலுக்கு போவது என்ற கலந்துரையாடலுக்கு பிறகு வரும் வழி என்பதால் சிங்கை புகழ் "கோமள விலாஸ்" போகலாம் என்று முடிவானது.ஜெமினி மேம்பாலத்தை தாண்டிய உடனே இடது பக்கம் திரும்பி கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டது.சிங்கை Styleலில் பக்கத்திலேயே "Ganges" ம் இருந்தது.ஆனால் கூட்டம் தான் சற்று குறைவாக இருந்தது.ஊள்ளூர் மக்களை அவ்வளவாக பார்க்கமுடியவில்லை.
அவரவருக்கு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு பில்லோடு கொசுறையும் சேர்த்து ருபாய் 500 கொடுத்தோம்.எங்களை கவனித்தவர் உள்ளூர்காரரா அல்லது சிங்கைகாரரா? என்று தெரியவில்லை, அவ்வளவு பொருமையா கவனித்தார்.
ஒரு மாலைப்பொழுது நல்லவிதமாக கரைந்தது.

Wednesday, May 16, 2007

A.ராஜா யாரு?


இவரா?


இவரா?
நேற்று இங்கு (வசந்தம் சென்ரல்)ஒளி பரப்படும் தமிழ் செய்தியில் நமது அமைச்சர் ராஜா தகவல் தொடர்பு அமைச்சு பதவியை ஏற்கிறார் என்று சொல்லி பாக்கிஸ்தானில் அன்மையில் பரபரப்பாக பேசப்படும் உச்சநீதி மன்ற நீதிபதி புகைப்படத்தை காட்டினார்கள்.ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்.

ஒரு தமிழர் ராஜா வை நாம் இப்படி பார்த்ததே இல்லையே என்று கூகிளில் தேடியதில் வந்தவை தான் மேலே உள்ள புகைப்படங்கள்.

அப்பாடி மந்திரி ராஜா தென்னிந்தியர் மாதிரி தான் இருக்கிறார்.
பிழைத்தோம்.
அவனவன் பாஸ்போர்ட் வைத்துதான் ஆளை கடத்துகிறான் என்றால் சில நொடிகளுக்குள் அந்த வேலையை தொலைக்காட்சி செய்துவிட்டது.

Monday, May 14, 2007

சென்னையில் கட்டுமானம்

இந்த படம் நங்கநல்லூர் ரயில் நிலையத்துக்கு பக்கத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு கட்டுமானத்துறையின் இடம்.
பல முன்னேற்றங்கள் இதில் தெரிகிறது.

தொழிலாளிகளுக்கு தேவையான இருப்பிடங்கள்,தண்ணீர் தொட்டி என்று பல வசதிகள் தென்படுகின்றன.

கான்கிரீட்டுக்கு வண்டி வருகிறது.


இவ்வளவு வசதிகள் செய்துகொடுத்துள்ள நிறுவனம் பெயரை தேட வேண்டியுள்ளது.கொஞ்சம் பெரிதாக,மின் வண்டி பக்கம் வைத்தால் இலவசமாக விளம்பரம் கிடைத்திருக்கும்.

தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்க.

Friday, May 11, 2007

காஞ்சிபுரம்- பாகம் 2

காஞ்சிபுரம் மேலேயிருந்து எப்படி இருக்கு என்று பார்க்கலாமா?
ஒரே ஒரு தடவை மட்டுமே போயிருந்தாலும் கொஞ்சம் முயற்சித்து கண்டுபிடித்துவிட்டேன்.
இது பேருந்து நிலையம்.


இது வரதராஜப்பெருமாள் கோவில்.

வேறு இடங்களுக்கு போகவில்லை என்பதால் தெரியவில்லை.

வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம் முடிந்ததும் மண்டபத்துக்கு வந்து பால்ய சினேகிதனுடன் பேசி,சாப்பிட்டு விட்டு சுமார் 11 மணிவாக்கில் கிளம்பினோம்.சென்னைக்கு போக பேருந்து எங்கு வரும் என்று கேட்டபோது,பக்கத்தில் சத்திரம் என்ற நிறுத்தம் உள்ளது என்றும் தடம் எண் 79 வரும் என்று சொன்னார்கள்.

சரி என்று கேட்டுவிட்டு கொஞ்சம் தூரம் வந்து ஒரு பொட்டிக்கடையில் குடி நீர் பாட்டில் ஒன்று வாங்கிக்கொண்டு திரும்பவும் சென்னை பஸ் வரும் இடம் கேட்டோம்."அதோ அந்த மரத்தடி பக்கத்தில் நில்லுங்கள்" என்று சொன்னார்.

அங்கு வந்த போது கீழே உள்ள பலகையை பார்த்தேன்.ஒரு சத்தமும் கேட்கவில்லை.சாப்பாட்டு நேரம் நெருங்கிவிட்டது என்பதால் என்னவோ!



பஸ் வரும் நிலையில் ஒரே ஒருவர் அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்து வந்து பூட்டி விட்டு வெளியே போனார்.
கொஞ்ச நேரத்தில் வந்த பஸ் நிற்காமலே போக,அடுத்த பஸ் சில வினாடிகளில் வந்தது.உட்கார இடமில்லை.
நடத்துனர்,அவர் நாக்கை தொட்டு டிக்கெட்டை கையில் வைத்துக்கொள்வதா பையில் போடுவதா என்று யோசித்துவிட்டு பையிலேயே போட்டுக்கொண்டேன்.சில வினாடிகள் அவரைப்பற்றியே நினைவு.ஏன் இந்த பழக்கம் இவர்களிடம் இருந்து போகமாட்டேன் என்கிறது?இதை மாற்றமுடியாதா? என்று.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு 12B பஸ்ஸில் ஒரு நடத்துனர் மோதிரம் மாதிரி ஒன்றை போட்டுக்கொண்டு அதன் மேல் பக்கத்தில் ஒரு ஸ்பான்ஜில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு அதைத் தொட்டு தொட்டு சீட்டு கொடுப்பார்.

நமக்கோ இங்குள்ள நிலைமை ஓரளவு தெரியும்.வெளிநாட்டவர்களுக்கு? ஒரளவு வெருப்பே மிஞ்சும்.அரசாங்கம் இந்த மாதிரி சில சின்னச்சின்ன பாடங்கள் இவர்களுக்கு எடுக்கவேண்டும்.நாட்டு நலனுக்கு முக்கியம்.

காஞ்சிபுரம்-- தாம்பரம் டிக்கெட் விலை 16 ரூபாய்,சுமார் 50 கி.மீட்டர் தூரம்.

தாம்பரம் நெருங்கும் நேரத்தில் ஏதோ காரணமாக,ஓட்டுனர்,வாகன நெரிசல் என்று தெரிந்துகொண்டு "ஆட்டோ" மாதிரி ஏதோ ஒரு குறுக்குத்தெருவில் புகுந்து வெளிவந்தார்.

அங்கிருந்து பழவந்தாங்கல் வந்து,வெயில் அதிகமாக இருந்ததால் ஒரு ஆட்டோவை எடுத்து 1 கி.மீட்டர் உள் இருக்கும் இடத்தை சொன்னவுடன் ரூபாய் 20 என்றார்.

நான் இங்கிருந்த காலத்தில் போன சில இடங்களும் வாடகைகளும்.

விமானநிலையம் --- விருகம்பாக்கம் = ரூபாய் 200

விருகம்பாக்கம் -- வளசரவாக்கம் =ரூபாய் 40

விருகம்பாக்கம் -- நங்கநல்லூர் = ரூபாய் 150.

நங்கநல்லூர் -- நுங்கம்பாக்கம் = ரூபாய் 160.

வேறு வழியில்லாமல் கொடுக்க நேர்ந்தது.

Thursday, May 10, 2007

தூரம் தெரியனுமா?

உங்களுக்கு லாட்டிடூட்(Latitude) அன்ட் லாஞ்சிடியூட்(Longitude) தெரியும்,அதற்கிடையே உள்ள தூரத்தை எளிதாக கண்டுபிடிக்க இங்கு போகவும்.
சர்வே செய்பவர்களுக்கு கால்குலேட்டர் பக்கத்தில் இல்லாவிட்டால் இது உதவியாக இருக்கும்.


உதாரணத்துக்கு, தாம்பரத்தில் இருந்து நான் போகும் ஒரு இடத்துக்கு இடையே உள்ள தூரத்தை இங்கு கணக்கிட்டுள்ளேன்.





ஆமாம் இந்த லேட்டிடூட் எங்கு கிடைக்கும் என்று கேட்கிறீர்களா?கூகிள் எர்த்தில் எலிச்சுட்டியை தேவையான இடத்துக்கு கொண்டு போனால் திரையின் கீழ் பகுதியில் தெரியும்.

முயற்சித்து பார்க்கவும்.

Wednesday, May 9, 2007

ஒற்றைத் தலைவலி

ஒற்றை தலை வலிக்கு பல பேர் மருந்து சாப்பிடுகிறார்கள்,சிலர் அனுபவித்து கழிக்கிறார்கள்.
இங்கு பாருங்கள் திரு கோபி தன் பாட்டி சொன்ன வைத்தியத்தை "என்றென்றும் அன்புடன் பாலா" வின் பதிவில் போட்டிருந்தார்.
அவதிப்படுபவர்கள் முயற்சித்து பார்க்கலாமே!!
என்ன 3 மணிக்கு (காலை) எழுத்துக்கச்சொல்கிறார் பிறகு தூங்கச்சொல்கிறார்.இதற்கு பயந்தே தலைவலி போனாலும் போகலாம். :-))
நன்றி கோபி.

பாலா,

உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்.

//முக்கியமான சமயங்களில் என்னை சங்கடப்படுத்தும் ஒற்றைத் தலைவலி படுத்தியபோதும்//

சிறுவயதில் எனக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தது. எங்கள் பாட்டி சொன்ன வைத்தியம் செய்ததில் குணமானது.

அந்த மருத்துவம்:

அதிகாலை 3 மணிக்கு எழுந்து நல்லெண்ணெய்(எள் எண்ணெய்) உடன் கொஞ்சம் சுக்கு நசுக்கி இட்டு சூடு செய்யவும். சுக்கு நன்றாக பொரிந்தபின் கீழே இறக்கி ஆறவைத்து கை பொறுக்கும் சூட்டில் தொட்டு தலையில் தடவவும். பிறகு சூடான தண்ணீரில் குளித்து/ தலை உலர்த்திவிட்டு வந்து கால் மணி நேரத்திற்கு பிறகு (முன்னிரவில் வைத்த) ரசம் ஊற்றி சாதம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்கச் செல்லுங்கள். பின் வழக்கம் போல காலை எழுந்து உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள். இது போல 2-3 முறை செய்தால் ஒற்றைத் தலைவலை விலகும்.

இந்த மருத்துவம் கேட்பதற்கு நகைப்பாய் இருக்கும். சுக்கு/எள்ளெண்ணெய் தவிர மருத்துவ குணமுள்ள ஏதும் இதில் இல்லை தான். ஒரு வேளை அதிகாலை நேரம், பழைய ரசம் சாதத்தில் ஊறிய மருத்துவ குணமுல்ல சில மசாலா பொருட்கள் இதெல்லாம் காரணமா எனத் தெரியாது. எனக்கு குணமானது. உங்களுக்கும் குணமாகலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். முயன்று பார்க்கலாமே.

Tuesday, May 8, 2007

காஞ்சிபுரம்

ஊருக்கு போன உடனேயே வீட்டில் ஒரு பூணூல் அழைப்பு பத்திரிக்கையை காண்பித்தார்கள்,கூடவே என்னுடைய பால்ய சிநேகிதன் என்ற விபரத்தையும் சொன்னார்கள்.
இவனை நான் பார்த்து சுமார் 20 வருடங்கள் ஆகியிருக்கும்.சென்னையில் இருந்து வேலை செய்யும் காலத்தில் தி.நகர் ராமநாதன் தெருவில் பார்த்தோம்.அதுவும் அவன் சொல்லி தான் ஞாபகம் வந்தது.
பத்திரிக்கையையில் தொலைப்பேசி எண் இருந்ததால் உடனே கூப்பிட்டு சிறிய அறிமுகத்துடன் சொன்ன உடன் புரிந்து கொண்டான்.வீடு சிட்டிலப்பாக்கத்திலும் ஃப்ங்ஷன் காஞ்சிபுரத்திலும் வைத்திருந்தான்.அதுவும் இம்மாதம் 6ம் தேதி.அன்றிரவு சிங்கை திரும்பவேண்டியிருந்ததால் வரமுடியாது என்றேன்.அப்படியென்றால் ஊருக்கு கிளம்பும் முன்பு ஒரு நாள் வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று அடம் பிடித்தான்.பார்த்தேன் 5ம் தேதி கொஞ்சம் நேரம் கிடைக்கும் போல் இருந்த்தால் மனைவியும் நானும் காஞ்சிபுரமே போய் பார்த்துவிட்டு பெருமாளையும் சேவித்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

காஞ்சிபுரம் என்ற உடனேயே நமது பதிவாளர் "என்றென்றும் அன்புடன்" பாலாவின் பதிவு தான் ஞாபகம் வந்தது.அருமையான படங்களுடன் விபரமாக போட்டிருந்தார் இங்கு.

பழவந்தாங்கல் வந்து மின் வண்டியில் தாம்பரம் வந்தோம்.பிராட்கேஸ் மின்வண்டி விஸ்தாரமாக இருக்கு,கைப்பிடிகள் இன்னும் உடையவில்லை.விரை வீக்கமா! என்று அங்கெங்கே கண்ணில் படுகிறது.இதை முதலில் கண்காணித்து நிறுத்தவேண்டும்,இதனால் வண்டியின் அழகே கெடுகிறது.வண்டியின் உள் பக்கம் நிறைய இடம் இருந்தாலும்,கதவுகளின் பக்கம் நிற்பவர்களும் இருக்கிறார்கள்.கதவுகள் தானாகவே மூட இன்னும் எத்தனை காலம் ஆகுமோ??இப்போது வருகிற சில பஸ்களில் இதை முறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்,ஆனால் கதவை திறந்துவைத்துக்கொண்டு ஓட்டுகிறார்கள்.சொகுசு பேருந்து என்று சில ரூபாய் அதிகமாக வசூலிக்கிறார்கள்.நகராட்சி பேருந்து கொஞ்சம் பளிச் என்று இருக்கிறது.
ரயிலின் கதவுகளை பிடித்து நிறுத்த ஒரு கொக்கி போட்டிருக்கிறார்கள் பாருங்கள்...ஏதோ மகா மகா கத்துக்குட்டி டிசைன் மாதிரி உள்ளது.

தாம்பரம் ரயில் வண்டி நிலையம் நிறைய மாறுதல்களுடன் நன்றாக உள்ளது.6 கவுண்டர்களில் சீட்டு கொடுக்கிறார்கள் அதை டபிள் கொக்கி போட்டு மனிதனை குழப்பி இருக்கிறார்கள்.இருவருக்கு சீட்டு வாங்கினால் ஒரே சீட்டில் போட்டு காகித செலவை குறைக்கிறார்கள் போலும்,ஆனால் முதலில் கொடுத்த மஞ்சள் கலர் டிக்கெட் அளவில் இரு மடங்கு உள்ளது.No Savings.அடிக்கடி எந்த வண்டி வருகிறது என்று சொல்கிறார்கள்,சில சமயம் இரண்டு அறிவுப்பகள் வந்து குழப்புகின்றன.

வெளியில் வந்து காஞ்சிபுரம் வண்டி எங்கு நிற்கும் என்று தெரியாததால்,சாலைப்பக்கம் புது பேருந்து நிலையம் பக்கம் கொஞ்சதூரம் போய் விஜாரித்தால் தடம் எண் 79 போகும் என்று நாங்கள் வந்த வழியையே காண்பித்தார்கள்.

அந்த இடத்துக்கு போன போது 79 இல்லை 115 இருந்தது.அது காஞ்சிபுரம் வழியாக வேலூர் போவது.ஏறிய 25 நிமிடங்களுக்கு பிறகு கிளம்பியது.

பத்திரிக்கையில் சின்ன காஞ்சிபுரம் என்று போட்டிருந்தது ஆனால் நாங்கள் பேருந்து நிலையம் வரை போய்,சன்னதி தெரு எங்கே என்று கேட்டபோது தான் கடைக்காரர் விளக்கினார்.

திரும்ப வரதராஜர் கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் போய் இறங்கினோம்.



கோவிலின் முகப்பு கீழே..



மற்றொரு புகைப்படம்


தங்க/வெள்ளி பல்லி தரிசனம் இங்கே.

உட்பிராகாரம்,இங்குள்ள மரம் இப்போது தான் தளிர்விட்டுள்ளது போலும்.இலைகள் பச்சைப் பசேல் என்றிருந்தது,கண்ணுக்கு குளிர்சியாக.

இந்த கோவிலில் உள்ள அவ்வளவு கற்களிலும் தெலுங்கும் தமிழும் போட்டி போட்டுக்கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.அர்த்தம் அவ்வளவாக புரியவில்லை.

சில இடங்களில் காவிக்கலரை அடித்து கொடுமை படுத்தியிருந்தார்கள்.


மற்றவை அடுத்த பதிவில்.