Tuesday, May 8, 2007

காஞ்சிபுரம்

ஊருக்கு போன உடனேயே வீட்டில் ஒரு பூணூல் அழைப்பு பத்திரிக்கையை காண்பித்தார்கள்,கூடவே என்னுடைய பால்ய சிநேகிதன் என்ற விபரத்தையும் சொன்னார்கள்.
இவனை நான் பார்த்து சுமார் 20 வருடங்கள் ஆகியிருக்கும்.சென்னையில் இருந்து வேலை செய்யும் காலத்தில் தி.நகர் ராமநாதன் தெருவில் பார்த்தோம்.அதுவும் அவன் சொல்லி தான் ஞாபகம் வந்தது.
பத்திரிக்கையையில் தொலைப்பேசி எண் இருந்ததால் உடனே கூப்பிட்டு சிறிய அறிமுகத்துடன் சொன்ன உடன் புரிந்து கொண்டான்.வீடு சிட்டிலப்பாக்கத்திலும் ஃப்ங்ஷன் காஞ்சிபுரத்திலும் வைத்திருந்தான்.அதுவும் இம்மாதம் 6ம் தேதி.அன்றிரவு சிங்கை திரும்பவேண்டியிருந்ததால் வரமுடியாது என்றேன்.அப்படியென்றால் ஊருக்கு கிளம்பும் முன்பு ஒரு நாள் வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று அடம் பிடித்தான்.பார்த்தேன் 5ம் தேதி கொஞ்சம் நேரம் கிடைக்கும் போல் இருந்த்தால் மனைவியும் நானும் காஞ்சிபுரமே போய் பார்த்துவிட்டு பெருமாளையும் சேவித்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

காஞ்சிபுரம் என்ற உடனேயே நமது பதிவாளர் "என்றென்றும் அன்புடன்" பாலாவின் பதிவு தான் ஞாபகம் வந்தது.அருமையான படங்களுடன் விபரமாக போட்டிருந்தார் இங்கு.

பழவந்தாங்கல் வந்து மின் வண்டியில் தாம்பரம் வந்தோம்.பிராட்கேஸ் மின்வண்டி விஸ்தாரமாக இருக்கு,கைப்பிடிகள் இன்னும் உடையவில்லை.விரை வீக்கமா! என்று அங்கெங்கே கண்ணில் படுகிறது.இதை முதலில் கண்காணித்து நிறுத்தவேண்டும்,இதனால் வண்டியின் அழகே கெடுகிறது.வண்டியின் உள் பக்கம் நிறைய இடம் இருந்தாலும்,கதவுகளின் பக்கம் நிற்பவர்களும் இருக்கிறார்கள்.கதவுகள் தானாகவே மூட இன்னும் எத்தனை காலம் ஆகுமோ??இப்போது வருகிற சில பஸ்களில் இதை முறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்,ஆனால் கதவை திறந்துவைத்துக்கொண்டு ஓட்டுகிறார்கள்.சொகுசு பேருந்து என்று சில ரூபாய் அதிகமாக வசூலிக்கிறார்கள்.நகராட்சி பேருந்து கொஞ்சம் பளிச் என்று இருக்கிறது.
ரயிலின் கதவுகளை பிடித்து நிறுத்த ஒரு கொக்கி போட்டிருக்கிறார்கள் பாருங்கள்...ஏதோ மகா மகா கத்துக்குட்டி டிசைன் மாதிரி உள்ளது.

தாம்பரம் ரயில் வண்டி நிலையம் நிறைய மாறுதல்களுடன் நன்றாக உள்ளது.6 கவுண்டர்களில் சீட்டு கொடுக்கிறார்கள் அதை டபிள் கொக்கி போட்டு மனிதனை குழப்பி இருக்கிறார்கள்.இருவருக்கு சீட்டு வாங்கினால் ஒரே சீட்டில் போட்டு காகித செலவை குறைக்கிறார்கள் போலும்,ஆனால் முதலில் கொடுத்த மஞ்சள் கலர் டிக்கெட் அளவில் இரு மடங்கு உள்ளது.No Savings.அடிக்கடி எந்த வண்டி வருகிறது என்று சொல்கிறார்கள்,சில சமயம் இரண்டு அறிவுப்பகள் வந்து குழப்புகின்றன.

வெளியில் வந்து காஞ்சிபுரம் வண்டி எங்கு நிற்கும் என்று தெரியாததால்,சாலைப்பக்கம் புது பேருந்து நிலையம் பக்கம் கொஞ்சதூரம் போய் விஜாரித்தால் தடம் எண் 79 போகும் என்று நாங்கள் வந்த வழியையே காண்பித்தார்கள்.

அந்த இடத்துக்கு போன போது 79 இல்லை 115 இருந்தது.அது காஞ்சிபுரம் வழியாக வேலூர் போவது.ஏறிய 25 நிமிடங்களுக்கு பிறகு கிளம்பியது.

பத்திரிக்கையில் சின்ன காஞ்சிபுரம் என்று போட்டிருந்தது ஆனால் நாங்கள் பேருந்து நிலையம் வரை போய்,சன்னதி தெரு எங்கே என்று கேட்டபோது தான் கடைக்காரர் விளக்கினார்.

திரும்ப வரதராஜர் கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் போய் இறங்கினோம்.



கோவிலின் முகப்பு கீழே..



மற்றொரு புகைப்படம்


தங்க/வெள்ளி பல்லி தரிசனம் இங்கே.

உட்பிராகாரம்,இங்குள்ள மரம் இப்போது தான் தளிர்விட்டுள்ளது போலும்.இலைகள் பச்சைப் பசேல் என்றிருந்தது,கண்ணுக்கு குளிர்சியாக.

இந்த கோவிலில் உள்ள அவ்வளவு கற்களிலும் தெலுங்கும் தமிழும் போட்டி போட்டுக்கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.அர்த்தம் அவ்வளவாக புரியவில்லை.

சில இடங்களில் காவிக்கலரை அடித்து கொடுமை படுத்தியிருந்தார்கள்.


மற்றவை அடுத்த பதிவில்.

No comments: