போன பதிவில் பள்ளிக்கூட அனுமதியில் உள்ள நிகழ்வுகளை சொல்லியிருந்தேன்.அது ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிறகு வேறொன்று புதிதாக முளைத்தது.
அது தான் வீடு வாங்குவது.
இப்போது இருந்த வீட்டின் முதலாளி அம்மாவின் சகோதரர் முகவர் என்றும் அவரை ஒரு முறை சந்தித்து பேசினால் உங்களுக்கு தேவையான வீட்டை வாங்கலாம் என்றும் இப்படி நீங்கள் வாடகைகொடுத்துக்கொண்டு கஷ்டப்பட வேண்டாம் என்று என் மனைவியிடம் போட்ட தூபம் என்ன்னிடம் வந்த போது முழுவதுமாக நிராகரித்தேன்.காரணம் அப்போது என்னுடைய CPF யில் பணம் இல்லாதும் கையில் அந்த அளவுக்கு பணம் இல்லாததும் தான் காரணம்.
அன்றைய நிலையில் வீடு வாங்க நீங்கள் உங்கள் மத்திய சேமநிதியில் இருந்து 10 விழுக்காடு வீட்டு பணத்தை கட்டலாம் என்றும் துண்டு விழுந்தால் கை பணத்தை போட்டும் கட்டலாம் என்று விதி இருந்தது,அதுவே எனக்கு விதியாக முடிந்தது.
சிங்கை வந்து சேர்ந்து 2 வருடங்கள் ஓடியிருந்தது,வேலையும் துரிதமாக ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் தாய்லாந்தில் பண நெருக்கடியால் பங்குவிலைகள் அதல பாதாளத்துக்கு விழுவதாகவும் அதன் மூலம் மத்த ஆசியான் நாடுகளுக்கும் அது பரவக்கூடும் என்று செய்தி வந்துகொண்டிருந்த்து.இதைத்தான் Recession என்றார்கள்.இதன் விளைவு தெரிந்தவர்கள் மழைகாலத்துக்கு சேமிக்கும் எரும்பு போல் மற்றும் ஆபத்து கால ஆமை போல் தங்களை சுருக்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.இதெல்லாம் தெரியாமல் நான் ஏனோ தானோ என்று நினைத்துக்கொண்டிருந்ததை பின்னாளில் உணர்ந்தேன்.அந்த சமயத்தில் Recession என்றாலே என்ன வென்று தெரியாது.இதுவரை அனுபவப்படாத ஒரு அனுபவம் சூடு போட காத்திருந்தது.
இதற்கிடையில் இப்போது இருந்த வீட்டிலும் சின்னச்சின்ன உரசல்கள் ஏற்பட தொடங்கியவுடன் வேறு வீடு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இந்த முறை மகன் படிக்கும் பள்ளிக்கு அருகில் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் என்பதால்,முகவரிடம் என்னுடைய தேவையை சொன்னேன்.அது சுமார் 3 ~ 4 மாதம் ஆனது.லெங்கோக் பாரு என்னும் இடத்தில் ஓரறை வீடு கிடைத்தது.
இதையெல்லாம் விபரமாக என்னுடைய பதிவில் ஏற்கனவே இங்கு சொல்லியுள்ளேன்.
வீடு வாங்கி எல்லாம் ஓரளவு செட்டிலாகிய நேரத்தில் வெளிநாடே போகாத பெற்றோர்களை வரச்சொன்னேன்.அவர்களும் அரை மனதுடன் வரும் நேரத்தில் பொருளாதார சுணக்கம் உச்சத்திற்கு போய்கொண்டிருந்தது.இப்பொது இருக்கும் நிறுவனமும் வேலை கிடைப்பதில் இருக்கும் பிரச்சனைகளை பார்த்து ஒவ்வொருவராக கழற்றிவிட ஆரம்பித்தது.கடைசியில் என்னோடு சேர்த்து சுமார் 6 பேர்களை 4 மாதம் வேலையில்லாமல் சம்பளம் கொடுத்துவைத்திருந்தது.அவர்களுக்கும் வேறு வழி தெரியாததால் கடைசியில் PINK SLIP கொடுத்துவிட்டார்கள்.இந்த நேரத்தில் என் பெற்றோர்களும் வந்தார்கள்.
அவர்கள் வந்த நேரம் எனக்கு வேலையில்லை என்றால் அவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்???இங்குள்ள நிலைமையை சொல்லி சமாளித்தேன்.
வேலைபோய் 1 மாதம் அடுத்த வேலைக்காக முயற்சித்து தோற்றுக்கொண்டு இருந்தேன்.இந்த அழகில் வீடு வேறு,அதற்கு பணம் கட்ட என்ன செய்வது என்ற தெரியாத நிலை.இப்படி நாலா பக்கமும் இருந்து அழுத்தம் அதிகமாகிக்கொண்டு இருந்த்து.
ஒரு சில நேர்காணல் வந்தாலும் உள்ளூர்காரர்களை மட்டுமே எதிர்பார்பதாக சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.அப்போது தெரிந்தது இங்கு வேலை வாய்ப்பு இருக்கும் போது தான் வெளிநாட்டவர்களுக்கு வேலை இருக்கும் மற்ற நேரத்தில் அவரவர்களின் திறமை மற்றும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் வளத்தை பொருத்தே அமையும்.இப்படிப் பட்ட நிலமையை ஒவ்வொரு வெளிநாட்டவரும் எதிர்பார்த்தே வீடு வாங்குவது & குடும்பத்தை அமைப்பது போன்றவற்றை செய்யவேண்டும்,இல்லாவிட்டால் அடி விழும் போது வலி அதிகமாக இருக்கும்.
வீட்டுக்கு வந்த பெற்றோர்களை சும்மாவாக வைத்துக்கொண்டு இருப்பது? அதனால் அவர்களை ஒரு நாள் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அழைத்துப்போயிருந்தேன்.அளவளாவிக்கொண்டு இருக்கும் போது என்னுடைய பேஜரில் ஒரு அழைப்பு.பக்கத்தில் உள்ள தொலைப்பேசியில் அந்த எண்ணை அழைத்து பேசிய போது....
அடுத்த பதிவில் சொல்கிறேன்.
Saturday, April 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
என்ன பெருமாளு இப்படி ஸஸ்பென்ஸ்ல வெக்கறீங்க! பரவாயில்லை. அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்!
Post a Comment