Monday, April 7, 2008

சன்யோங் - கொரிய நிறுவனம்.

தொலை அழைப்பான் செய்த எண்ணுக்கு தொலைபேசியவுடன் ஒரு வித்தியாசமான ஆங்கில உச்சரிப்புடன் கூடிய குரல் என் பெயரை மிகவும் கஷ்டப்பட்டு கடித்து துப்ப ஆரம்பித்தார்.இந்த மாதிரி பல முறை உள்ளூர்காரர்களிடம் அனுபவித்துவிட்டதால் சட்டென்று புரிந்துகொண்டு என் பெயரை நானே சொல்லி அறிமுகபடுத்திக்கொண்டேன்.

மறுமுனை, நான் அவரிடம் 2 வாரங்களுக்கு முன்பு சென்ற நேர்கானலை ஞாபகப்படுத்தி நாளை காலை வேலையில் சேருமாறு சொல்லி தஞ்சோம் பகார் நிலையம் அருகில் உள்ள கட்டுமான சைட்டின் பெயரை சொன்னார்.சம்பளம் குறைவு என்றாலும் இந்த மாதிரி நேரத்தில் வேலை கிடைப்பதே அதிசியம் என்பதால் ஒத்துக்கொண்டு போனேன்.

இந்த நிறுவனத்தின் பெயர் சான்யோங் (ssangyong) - கொரிய கம்பெனி.இவர்களுடன் நடந்த நேர்காணலை சின்னதாக பார்க்கலாமா?

வேலை செய்யும் இடத்திலேயே உள்ள கன்டெயினர் தான் அலுவலகம்.பல சைட்களில் இதான் நிலமை.கட்டிடம் ஓரளவு வளர்ந்தவுடன் அதனுள் போய்விடுவார்கள்.நான் போன சமயத்தில் என்னை நேர்காணல் செய்ய இருப்பவர் திரு கிம் (நிறைய பேர் பெயர் கிம் என்று இருந்ததால் அவர்கள் இன்சியல் போட்டுக்கொள்வார்கள்) சுமாரான உயரம் மிகவும் கஷ்டப்பட்டு பேசும் ஆங்கிலம் என்று இருந்தார்.சம்பிரதாய கேள்விகள் முடிந்தவுடன் வேலை நடக்கும் இடத்தை காட்டி அந்த தூண் இருக்கே அதன் விட்டம் என்ன? என்றார்.அது நான் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி இருந்த்து.நான் தோராயமாக 1 மீட்டருக்கு மேல் இருக்கும் என்றேன்.

ஒத்துக்கொண்டார்.

அடுத்து அவர் மேஜை மீது நிலவியல் கருவி ஒன்று இருந்தது,அதை காண்பித்து இதை எப்படி இயக்குவது என்று தெரியுமா? என்றார்.

தெரியும் என்றேன்.

சொல் என்றார்.

சொன்னவுடன் நம்பிக்கை வந்தவுடன் மேலும் சில கேள்விகள் கேட்டு பிறகு சொல்கிறேன் என்று போகச்சொல்லிவிட்டார்.இவருடைய எல்லா கேள்விகளையும் நான் இரு முறை சொல்லச்சொல்லி கேட்டு பதில் கொடுத்தேன்.அப்போது தான் கொஞ்சமாவது புரிந்த்து.பல பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட இப்படித்தான் பேசுகிறார்கள்.

இது தான் அந்த கட்டிடம்.



இதன் பெயர் “Capital Tower"

இது 52 மாடி உயரம் கொண்ட கட்டிடம்.சுற்றிலும் இரும்புத்தூண்களிலும் மற்றும் பீம்களிலும் நிற்கிறது.என்னுடைய வேலை Structural Steel மேற்பார்வை மற்றும் அதனுடன் தொடர்புள்ள வேலைகள்.

நான் போன போது தரைக்கு கீழ் உள்ள கான்கிரீட் வேலைகள முடிந்து மேல் வேலைகள் ஆரம்பித்து இருந்தது.

இதுவரை இந்த மாதிரி ஸ்டீல் வேலைகள் பார்த்ததில்லை என்பதால் சிஸ்டம் புரிய சில நாட்கள் ஆனது அதற்கு பேருதவியாக இருந்தவர் திரு சியா பியா மெங் என்பவர்.மேற்பார்வை செய்ய என்ன செய்யவேண்டும் என்று எனக்கு வகுப்பு எடுத்தார்.இந்த வேலைகளை அவர் தான் பார்த்து அனுமதிக்கவேண்டும் என்பதால் அவர் எந்த மாதிரி தரத்தை எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக சொல்லிக்கொடுத்தார்.

கட்டுமானத்துறையை பொருத்த வரை வேலை செய்ய பலவிதமான நெறிமுறைகள் இருந்தாலும் மேற்பார்வையாளர்கள் அதுவும் Client Representative க்கு எது தேவையோ அதை செய்தால் பெரும்பாலும் வேலையை சுலபமாக செய்யலாம்.நாம் அதிகமாக பேசினால் தேவையில்லாத விதிமுறைகளை பேசி சின்ன பிரச்சனையை பெரிதாக்கிவிடுவார்கள்.கூடியவரையில் நல்ல தொடர்பு வைத்துக்கொண்டால் போதும்.அதற்காக PWD அளவுக்கெல்லாம் போக வேண்டிய அவசியம் இங்கில்லை.

இன்னும் வரும்...

2 comments:

திவாண்ணா said...

//Structural Steel மேற்பார்வை மற்றும் அதனுடன் தொடர்புள்ள வேலைகள்.//
என்றால் ஆர்கிடெக்ட் கொடுத்த படி ஸ்டீல் கட்டுமானம் உள்ளதா என மேற்பார்ப்பதா? இல்லை நீங்களே நிர்ணயம் செய்யனுமா?

சௌ.பெருமாள் said...

ஆர்க்கிடெக்ட் கொடுக்கும் வரைபடத்தை Design Consultant மூலம் வரும் கட்டுமானத்துக்கு என்று வரும் வரைபடத்தில் இருக்கும் படி செய்யவேண்டியது தான் எங்கள் பணி.
இப்படி நேரிடையாக சொன்னாலும் வேலை இடம் என்று வரும் போது அப்படியே செய்யமுடியாது,இந்த மாதிரி சமயத்தில் தான் அவர்கள் அனுபவம் கை கொடுக்கும்.சரியாக சொல்லவேண்டும் என்றால் இதை Design Consultant க்கு சொல்லி அனுமதிவாங்கி செய்ய காலம் பிடிக்கும் என்பதால் முன் அனுபவத்தில் இதை இதை அனுமதிக்கலாம் என்று தெரியும்.
பெரிய மாறுதல்களை எங்களால் செய்யமுடியாது,கூடவும் கூடாது.