Tuesday, April 10, 2007

அன்கலேஷ்வர்- பாகம் 2

போன பதிவு இங்கே
ரயிலில் வந்த சலிப்பு அன்றைய இரவு அடித்துப்போட்ட மாதிரி தூங்கினேன்.
மறுநாள் காலை எழுந்து ஜன்னல் கதவை திறந்த போது குப்பென்ற நெடி மூக்கையும் தாண்டி தொண்டைவரை போனது.
என்ன? ஏது! என்று தெரியாததாலும் சற்று குளிர்ந்த நிலையில் இருந்ததாலும் வாசம் அவ்வளவாக போகவில்லை.
காலையில் சைட்டுக்கு போகும் வண்டிக்காக காத்திருக்கும் போது என்னை தவிர யாரும் கர்சீப்பை மூக்கில் வைத்துக்கொள்ளவில்லை.அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது போலும்.

ஏதோ ஒரு கெமிகல் தொழிற்சாலை அதன் புகையை உயரம் குறைந்த நிலையிலே விடுவித்தது தான் இந்த மாதிரியான வாசத்துக்கு காரணம் என்று தெரிந்துகொண்டேன்.இது ஏதோ ஒன்று அல்லது 2 கி.மீட்டர் சுற்றளவுக்குள் நடப்பது இல்லை.எங்கள் வேலை இந்த இடத்தில் இருந்து சுமார் 15 கி.மீட்டர் தள்ளி உள்ளது.அங்கும் இந்த நெடியை உணர்ந்தேன்.பாவம் இந்த மக்கள்.தொடர்ந்து சில வருடங்கள் இருந்தால் நிச்சயம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கும்.

அவ்வளவு ஏன்,புகை வண்டி இந்த ஊரை நெருங்கும் போதே இந்த வாசம் வர ஆரம்பித்துவிடும். இப்போது நிலைமை மேம்பட்டிருக்கும் என்று நம்பலாம்.


சைட்டில் முதல் நாள்.முதன்மை அதிகாரி வர சிறிது நேரமானதால் அப்படியே ஒரு வலம் வந்தேன்.பல முகங்கள் புதியன.சிமினியின் மேற்பார்வை பொறியாளருடன் சிறிது நேரம் விவாதித்துவிட்டு,மேல் பணிகளுக்காக காத்திருந்தேன்.

அதற்கிடையில் முதன்மை அதிகாரி வந்ததும் ஒரு சின்ன அறிமுகம்,பிறகு வேலையை பற்றிய விவாதங்கள் ஆரம்பமாயின.எடுத்ததுமே போட்டார் ஒரு குண்டு.

நீ என்ன செய்வேயே ஏது செய்வோயே தெரியாது,இந்த வேலையை முடிக்காமல் நீ இங்கிருந்து போகமுடியாது.முடிக்க எவ்வளவு நாள் ஆகும் சொல்லு? என்றார்.

நானோ,இப்போது தான் வந்துள்ளேன் பல விஷயங்களை பார்த்தபிறகு தான் முடிவு செய்யவேண்டும்,அதோடிலில்லாமல் நான் வந்தது உங்களுக்கு உதவ தானே நான் இங்கு இருந்து முடித்துக்கொடுக்க அல்ல, என்றேன்.

அவரோ பிடிவாதமாக, அதெல்லாம் தெரியாது உனக்கு தெரியுமல்ல வா? நீ தான் முடிக்கனும்.இவர்கள் யாருக்கும் தெரியாது என்று அந்த பொறியாளர் பக்கம் திரும்பி சொன்னார்.

அவர் குணம் பற்றி முன்னமே சிலர் எச்சரித்திருந்தால் மேற்கொண்டு விவாதம் செய்யாமல்,வெளியேறினேன்.

நான் போயிருந்த போது சிமினியின் கீழ் பாகம் மட்டும் முடிந்திருந்தது.சுற்றுச்சுவர் போட தேவையான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதற்கு குறைந்தது 3 வார காலம் ஆகும் என்பதால்,அதற்குள் சிமினிக்கு வேண்டிய சார வேலைகள் எல்லாம் முடித்துவிடலாம் என்று எண்ணி அதற்கான வேலைகளில் இறங்கினேன்.

நான் செய்ய வேண்டிய வேலைகளை முடித்த பின்னும் கான்கிரீட் வேலையில் சிறிது சுணக்கம் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் பற்றாக்குறை என்று பல விதங்களில் பிரச்சனை உருவாகியது.

எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாத்தால்,ஒரு சில நாட்கள் பார்த்துவிட்டு,வேலை ஒன்றும் செய்வதிற்கில்லை என்பதால் மீண்டும் சென்னைக்கு வந்தேன்.அவர்கள் வேலை முடிந்தவுடன் திரும்ப வந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.

3 வாரங்கள் கழித்த பிறகு கூப்பிட்டார்கள்.

போய் தேவையான வேலைகளை முடிக்க 3 வாரம் ஆனது.என்னை விடுவிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாக இல்லை.நானும் எவ்வளவோ சொல்லியும் பிரயோஜனம் இல்லை.இப்படியே இருந்தால் மலேசியா போகும் வாய்ப்பும் கை நழுவிவிடும் நிலைக்கு போய்விடும் என்று தெரிந்தது.

வேறு வழியில்லாம்,முதன்மை அதிகாரியிடம் போய் என் வேலை முடிந்துவிட்டது,எப்போது என்னை விடுவிக்கப்போகிறீர்கள் என்றேன்.

உடனே பக்கத்தில் இருக்கும் திரு.ஐயரிடம், இன்னும் எவ்வளவு காலத்துக்குள் வேலை முடியும் என்றார்.அவர் சொல்லிய கால அட்டவைணக்குள் முடிக்க வேண்டும் என்றால் வாரத்துக்கு 5 முறை சுவர் கான்கிரீட் போடவேண்டும் என்று கணக்கு சொன்னது.

முதன்மை அதிகாரி என்னிடம் திரும்பி,வாரத்துக்கு 5 போட முடியுமா? என்றார்.

முடியும் என்றேன்.

அப்படி என்றால் போட்டு காண்பித்துவிட்டு போ என்றார்.

சவால் தொடங்கியது.ஒரே ஒரு கன்டிஷனுடன். வேலை 24 மணி நேரம் நடக்கவேண்டும் என்பது தான்.

கன்டீஷன் போட்ட 2வது வாரமே செய்துகாண்பித்து, 5வது சுவர் கான்கிரீட் போடும் அன்று அங்கிருந்து கிளம்பினேன்.

கிளம்பினாலும்... அந்த நெடி வாசம் இன்னும் அந்த அப்பாவி மக்களை சுற்றிச் சுற்றி வருகிறது.

மீதி அடுத்த பதிவில்.

4 comments:

துளசி கோபால் said...

சவாலை சமாளித்ததற்கு வாழ்த்து(க்)கள்.

ஊர் முழுக்க நெடின்னா பாவம் அந்த மக்கள். ஆனா ஒண்ணு தொடர்ந்து
அங்கே இருக்கறவங்களுக்கு அது பழகிருது போல.

இங்கே ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் எப்பவாவது போனால் 'அய்யோ' மூக்கு
போயிரும். ஆனா மக்கள் இங்கேயும் வீடு வாங்கி வசிக்கிறாங்களே!

சௌ.பெருமாள் said...

வருகைக்கு நன்றி.
பிளாக்கர் மாநாட்டில், நெல்லிக்குப்பம் வாசனைப்பற்றி கூட பேசினோம்.
ஏன் என்றால் தலைமை ஏற்றவர் அந்த ஊர்காரராம்.
என்னது உங்க ஊரிலும் அப்படியா?
சீக்கிரம் யாரையாவது போய் கேட்கச்சொல்லுங்க.

இலவசக்கொத்தனார் said...

யாரு இது புதுசாப் பெருமாள் அப்படின்னு வாலைப் பிடிச்சுக்கிட்டு வந்தா நம்மாளு. பேனாவைப் பெருமாள் ஆக்கிட்டாங்களே நம்ம ஆளுங்க!!!

சௌ.பெருமாள் said...

நன்றி இலவசக்கொத்தனார்.
சமயம் கிடைக்கும் போது இப்படி வந்து போங்கள்.
கொஞ்ச நாட்களாவது நிம்மதியாக இருக்கலாம் என்று தான்.