Tuesday, July 15, 2008

இது என்ன Design னோ!

சென்னை தில்லைகங்கா நகரை சுற்றி இருக்கும் தார் சாலைகளை கான்கிரீட் சாலையாக மாற்றி வருகிறார்கள்.அது நல்லதோ கெட்டதோ அடுத்த ஆட்சி வரும் வரை தெரியாது,என்ன! ஒரே ஒரு அனுகூலம், நினைத்த நேரத்துக்கு வீட்டுக்காரங்க சாலையை தோண்டமுடியாது.அதே சமயத்தில் மின்வாரியமோ அல்லது கழிவுநீர் நிர்வாகமோ போடவேண்டிய குழாயை போட மறந்தாலோ அல்லது மேம்பாட்டிற்காக மேலும் போடவேண்டி வந்தாலோ,அவ்வளவு தான்.

சரி,இப்போது அதை யோசித்து பிரயோஜனம் இல்லை.கான்கிரீட் சாலை தான் போட்டார்களே பக்கத்தில் உள்ள வீட்டுக்கு ஆட்கள் எப்படி போய் வருவார்கள் என்ற எண்ணம் கூடவா இருக்காது? இல்லை, இருந்திருந்தால் சாலை போட்டு ஒரு வருடம் கழித்து தான் நடைபாதை அமைப்பார்களா? அல்லது அது இவர்கள் வேலையில்லையா?



சாலையில், நடக்கும் பறக்கும் வண்டிகள்,மனிதர்கள் இரவு நேரத்தில் மின்வெட்டு சமயத்தில் அதில் காலை வைத்தால் அரசாங்கத்தின் அனுமதியுடன் பரலோகம் போகலாம்.என்ன! எப்போதாவது இழப்பீடு கிடைக்கலாம்,இருந்தாலும் அது வருவதற்குள் இழப்பீடு கேட்டவர் மேலே போயிருக்கக்கூடும். இது முடிவில்லா சங்கிலித்தொடராக நடக்கும்.



அதெல்லாம் விடுங்க,அது பொது மக்களின் வீடுகள்,அவர்களுக்கு தேவையானதை அவர்கள் தான் செய்துகொள்ளவேண்டும்,எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கமுடியாது அல்லது கூடாது.சாலையை திடிரென்று 3 அடி ஏற்றினால் நாமும் நம் வீட்டை அதற்கு தகுந்த மாதிரி ஏற்றிக்கொள்ளவேண்டும். :-(

கீழே உள்ள படத்தை பாருங்கள்...

குறைந்த சம்பளத்தில் உள்ளவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு பொதுவினியோக முறையில் அத்தியாவசியமான சாமான்கள் வழங்கும் இடத்துக்கு போகும் பாதையை பாருங்கள்.சவுக்கால் ஆன மரப்பாலம்,அதைப்பார்த்து தான் முதல்வர் சிரிக்கிறாரா??



இந்த பாலத்துக்கு மேல் கொஞ்சம் குண்டான மனிதர் போனால் அவ்வளவு தான் கீழே உள்ள கால்வாய் அவருக்கு சமாதி கட்டிவிடும்.பக்கத்தில் இருக்கும் கான்கிரீட் சிலாபை பார்க்காதீர்கள் அதற்கு சவுக்கு பாலமே மேல்.

இதைப்பற்றி கட்டுமானத்துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் விளக்கம் கேட்டேன்.அவர் சொன்னது "இனிமேல் தான் அதன் மேல் ஸ்டீல் கிரில் போடுவார்கள் என்றார்" அது உண்மையாக இருக்கும் என்று நம்புவோமாக,அதற்குள் இதனால் யாரும் உயிரிழக்காமல் இருக்கவேண்டும்.

2 comments:

துளசி கோபால் said...

சென்னையில் இருக்கும் சூட்டுக்கு இதுலே அகழி மாதிரி தண்ணீர் நிறைச்சு வச்சுக்கிட்டால் குளுகுளுன்னு இருக்குமுன்ற ஐடியாவோ என்னவோ?

உயிரோட மதிப்புன்னு ஒன்னு அங்கே இன்னும் இருக்கா?

(-:

சௌ.பெருமாள் said...

அட! இது புது ஐடியாவா இருக்கே!!