Wednesday, July 23, 2008

வீடே சூளையானால்??

சுண்ணாம்பு சூளை

செங்கல் சூளை

இன்னும் என்னென்ன சூளை இருக்கோ தெரியாது, ஆனால் சென்னையில் நான் பார்த்தவரையில் பல இடங்களில் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும் மற்றும் ஒரு வீட்டுக்கும் மறுவீட்டுக்கும் போதிய இடவெளியில்லாமல் கட்டப்படும் வீடுகளில் உள்ளே இருக்கும் இருக்கும் வெப்பம் கிரீன் ஹவுஸ் வெப்பம் போல் உயர்ந்துகொண்டு போய்கொண்டு இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் மின்விசிறி இல்லாவிட்டால் போதும், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கழகத்தில் உள்ளே இருந்து பயிற்சி செய்ததற்கு சமமாக வேர்வை வெளியாகிவிடும்.இரவு நேரத்தில் மின்சாரம் போய்விட்டால் அவ்வளவு தான், மொட்டை மாடியை நோக்கி படையெடுப்பதை தவிர வேறுவழியில்லை. உங்கள் வீடு கூரை தான் மேற்மாடியென்றால் அவ்வளவு தான். False Ceiling போட்டாலும் எந்தவிதமான வித்தியாசம் இல்லாமல் வீட்டையே சூளையாக்கிவிடும் இப்போதிருக்கும் சூடு.

இதை தடுக்க/தப்பிக்க என்ன வழி?

1.வேறு வீடு பார்க்கவேண்டியது தான்.

2. பணம் இருந்தால் / நல்ல அஸ்திவாரம் இருந்தால் மேல்மாடியில் கூரை போடலாம்.

3.மேற்கூரை மட்டும் பிரச்சனை அல்ல என்பதால் கிழக்கு / மேற்கு நோக்கி உள்ள சுவர்களுக்கு Cladding போன்ற தடுப்புச் சுவர் எழுப்பலாம். ஏற்கனவே கட்டிய வீடு என்றால் மேலும் பிரச்சனை தான்.

4.இந்த கடைசி வழி எனக்கு சுலபமாக தெரிகிறது அதே சமயம் கொஞ்சம் காசும் கம்மியாக தெரிகிறது.இது ஒரு வகையான பெயின்ட்.Thermal Insulation Paint.

இந்த பெயின்ட் சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் அப்படியே பிரதிபலித்துவிடுகிறது.இது வெப்பத்திற்கு மட்டுமில்லாமல் தண்ணீரையும் தடுக்கவல்லது.அதனால் மழைக்காலத்தில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவு இருக்காது.இதை கான்கிரீட்/டைல்ஸ் மீதும் அடிக்கலாம் என்று இதை உற்பத்தி செய்பவர்கள் சொல்கிறார்கள்.

இதை உபயோகப்படுத்திய ஒருவரின் வீட்டை பார்க்க நேரிட்டது. முதல் படம் சாதாரண நிலையில் உள்ள மேற்கூரை





கீழே உள்ள இரு படங்களும் அந்த பெயின்ட் அடித்தபிறகு







இதை அடிப்பதற்கு சதுர அடிக்கு ரூபாய் 20 ~ 25 கேட்கிறார்கள்.(பெயின்ட் விலையுடன் சேர்த்து).அதிக பரப்பளவு இருக்கும்பட்சத்தில் பேரம் பேசலாம்.

உங்க வீட்டின் உள் சூடு அதிகமாக இருக்கா? முயன்று பாருங்கள்.

4 comments:

துளசி கோபால் said...

மொட்டைமாடியில் தோட்டம், புல்வெளி போட்டுப் பார்க்கலாமே.

(எங்கியோ படிச்சதுதான்)

பெயிண்ட் ஐடியாவும் நல்லாதான் இருக்கு.

சோலார் பேனல்ஸ் வச்சு சுடுதண்ணி, மின்சாரவசதி எல்லாம் செஞ்சுக்கமுடியாதா?

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
மாடித்தோட்டம் கூட நல்லாத்தான் இருக்கும்,குடிக்கவே தண்ணியில்லாத நேரத்தில் புல்லுக்கு ஊத்த என்னங்க செய்வது??
சோலார் பேனல் சரியான ஐடியா கூட ஆனா அதற்கு ஆகும் செலவு மக்களை (நடுத்தர) ஓட வைக்கும்.

திவாண்ணா said...

என்னப்பா இது? 20- 25 கொடுத்ததா நினைவு இல்லையே. இல்லை இது புதுசா வந்து இருக்கா? நான் பயன்படுத்தியது 3 வருஷம் தாக்கு பிடிச்சது. பிறகு புதுசா கட்டும்போது vermiculite லேயர் ஒண்ணு போட்டுவிட்டேன்.

அப்புறம் ஒரு வென்டிலேடிங்க் fanஇருக்காமே. பல தொழிற்சாலைகள்ல கூரைல பாக்கிறேன். காளான் மாதிரி வடிவுல இருக்கும். அது பயன்படுத்தலாமா? பல பழைய வீடுகள்ள வெளிச்சம் வர கண்ணாடி மட்டும் பதிச்சு 1*1 1/2 அடி அளவுக்கு கூரைல துவாரம் வெச்சு இருக்காங்க. அதுக்குதான் கேக்கிறேன்.

சௌ.பெருமாள் said...

மன்னிக்கனும் திவா
இந்த பக்கம் ஒதுங்கி பல நாட்கள் ஆனதால் உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல வெகு நாட்களாகிவிட்டது.
இந்த பெயிண்ட் முதல் 4 மாதங்களுக்கு நன்றாக உள்ளது,சமீபத்தில் போன போது மதியம் 2 மணிக்கு அதே பெயிண்ட் மீது நடந்த போது முதலில் இருந்த மாதிரியில்லாமல் கொஞ்சம் சூடை உணர்ந்தேன்,அதனால் இது வேலைக்கு ஆகாது போல் இருக்கு.
தொழிற்சாலைகளில் அந்த மாதிரி வசதி தான் சரிப்பட்டு வரும்.
பழைய வீடுகளில் உள்ள கண்ணாடி வெளிச்சத்துக்கு மட்டுமே உதவும்,அப்போது அவ்வளவு உஷ்ணம் இல்லாததால் அதைப்பற்றி கவலைப்படவில்லை போலும்,அதோடு அந்த மாதிரி ஓட்டு விடுகளில் உஷ்ணம் வீட்டினுள் அடைப்பட்டு இருக்காது என்பது ஒரு சௌகரியம்.