Friday, July 25, 2008

நடைப்பாதை தேவை.

SRM- பல்கலைக்கழகம்.இதிலிருந்து ஆண்டுக்கு பல பொறியாளர்கள் நம் நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் கொடுக்கப்படுகிறார்கள்,அதே போல் பக்கத்தில் உள்ள வல்லியம்மை மகளிர் கல்லூரியும் கொடுக்கிறது.

ஒரு 3 மாதம் இருக்கும் இந்த பக்கம் போக வாய்ப்பு கிடைத்தது.சரி ரயிலிலும் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டதே என்று எண்ணி ரயிலில் போய் “போத்தேரியில்” இறங்கினேன்.நான் மறைமலை நகரில் வேலை பார்க்கும் காலத்தில் இந்த நிலையம் இல்லை.நிலையத்தின் உள்ளேயிருந்து நடைப்பாலம் மூலம் மேலே ஏறி செங்கல்பட்டு -- தாம்பரம் சாலைக்கு வந்தோம்.இரண்டு கல்லூரிகளுமே சாலைக்கு அநத பக்கத்தில் இருப்பதால் விரைவுச்சாலையை கடந்தே ஆக வேண்டிய கட்டாயம்.ரயில் நிலையத்தில் இருந்து இறங்குபவர்கள் பாதுகாப்பாக கல்லூரிகள் செல்ல வழியே கண்ணுக்கு தென்படவில்லை.
பாத சாரிகள் கடக்க போடப்படும் வரிக்குதிரை கோடுகள் போடக்கூட சரியான இடம் கிடையாது.
வரிக்குதிரை கோடுகளை விரைவுச்சாலையில் போடப்படுவதை சென்னையில் சில இடங்களில் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது.யாரோ கோடுமட்டும் போட்டால் போதும் என்று சொல்லியிருப்பார்களோ? என்ற எண்ணமும் வந்தது.கூடியமட்டும் பாதசாரிகளுக்கான கோடுகள் போடும் போது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சில ஏற்பாடுகளும்,சரியான இடத்தில்/தூரத்தில் அறிவிப்புப்பலகையும்,இரவில் தெளிவாக தெரிய சாலையின் இரு பக்கங்களிலும் அறிவிப்பு விளக்குகளும் வைக்கப்படவேண்டும்.இதுமாதிரி எந்த விதமான முறையான வேலைகள் செய்யப்படாமல் சாலையின் மேல் வரிக்குதிரை கோடுகளை பார்க்கும் போது அதை நம்பி கடக்கும் பாதசாரிகள் மீது பரிதாபம் தான் ஏற்படும்.




சரி,விஷயத்துக்கு வருவோம்.தரமான கல்லூரி என்று ஆனந்தவிகடனிலும் மற்ற பத்திரிக்கையிலும் விளம்பரம் வந்துகொண்டு மக்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கும் கல்லூரி,தன்னுடைய மாணவர்களை இப்படி சாலையை கடக்க அனுமதிக்கலாமா?அதுவும் நாளைய தலைவர்களை இந்த சூழ்நிலையில் படிக்கவைத்து வெளியில் அனுப்பும் போது “பாதுகாப்பு” என்ற ஒன்றை அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

இது எங்கள் வேலையில்லை,நாங்கள் மாணவர்களை அழைத்துவர கல்லூரி பேருந்து இருக்கு அதன் மூலம் பாதுகாப்பாக வரலாமே என்று கேட்கலாம்,அப்படி என்றால் வசதி குறைந்த மாணவர்கள் என்ன செய்வது?வருடத்துக்கு 25000 ரூபாய் பேருந்துக்கு மட்டுமே கொடுக்க எவ்வளவு பேருக்கு வசதி இருக்கு?

இவ்வளவு பெரிய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் கல்லூரிக்கு அரசாங்கத்தை தெரியாதா? இல்லை தேவைப்பட்டவர்கள் மூலம் சரியான துறையுடன் கலந்து பேசி இங்கு ஒரு மேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ அமைத்தால் அது அவர்களுக்கு இருக்கும் அக்கறையை காண்பிக்கும் அல்லவா?

சரி அவர்கள் தான் தனியார் துறை,மக்களின் நன்மதிப்பை பெற அத்தொகுதி நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது செய்யலாமே!!

இங்கு சாலையை கடந்து எவ்வளவு பேர் உயிர்விட்டார்களோ?அது இனிமேல் நடைபெறாமல் இருக்க இதை படிக்கும் யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்/தெரியப்படுத்துங்கள்.

No comments: