Saturday, December 27, 2008

ஒபயாஷி (தமிழில் படுத்தியிருக்கேன்)

இந்த எலிம் தேவாலைய வேலை இன்னும் சரியாக ஆரம்பிக்காத நிலையில் பொழுதை போக்குவது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது.வேலையிடத்தில் உள்ள தலையும் கண்டுக்கவில்லை (ஒரு வேளை அவருக்கே சரியான வேலை இல்லையோ என்னவோ!)

இப்படியே 1 மாதம் போன நிலையில் முன்பு நேர்காணல் செய்ய ஜப்பானிய நிறுவனம் "ஒபயாஷி" நிறுவனம் தொலைப்பேசி,வேலைக்கான ஆர்டரை வாங்கிச்செல்லுமாறு கூறியது.அவர்களிடம் இப்போது நான் சேர்ந்திருக்கும் வேலையை சொன்ன போது, வருகிறாயா அல்லது வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளவா என்று கொஞ்சம் கடுமையாக கேட்டார்கள்.இப்போதிருக்கும் நிறுவனத்தை விட பெரியது,சம்பளமும் அதிகம்,தொடர்ந்து வேலை இருக்கும் என்ற தொலை நோக்கில் எண்ணிப்பார்த்து, சரி வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றேன்.

தற்போது இருக்கும் இந்த நிறுவனத்திடம் எப்படி சொல்வது? அதுவும் என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் பெருந்தலையிடம்? ஆரம்பமானது சிக்கல்.முதல் இரண்டு நாள் மனைவியிடம் மட்டும் ஆலோசனை செய்தேன்.நல்ல வாய்ப்பை நழுவவிட மனசில்லாமல்,ராஜினாமா கடிதத்தை சைட்டின் தலையிடம் கொடுத்தேன்.அதை பார்த்துவிட்டு கூப்பிட்டு பேசினார்,ஒளிவு மறைவு இன்றி மொத்த தகவலையும் சொன்னேன்.கேட்டு விட்டு இன்னும் 1 வாரம் நன்றாக யோசித்துவிட்டு உன் முடிவை சொல் என்றார்.சொல்லி இரண்டாம் நாள் அவரிடம் போய் ,நான் முடிவு செய்துவிட்டேன் அங்கு போய் சேரப்போவதாகவும் இன்னும் 1 வாரம் இங்கிருப்பேன் என்றேன்.வேறு வழியின்றி சரி என்றார்.நான் கடிதம் கொடுத்த விஷயத்தை பெருந்தலையிடம் கொடுக்காமல் எப்படியாவது என்னை சரிகட்ட முடியுமா என்று பார்த்திருக்கார்.

அன்று, மாதம் ஒரு முறை நடக்கும் குத்தகைக்காரர்,கிளைன்ட் & கன்செல்டன்ட் மீட்டிங் நடந்துகொண்டிருந்த்து அதற்கு பெருந்தலையும் வந்திருந்தார்.எப்படியாவது அவரை சந்திப்பதை தவிர்க்கவேண்டும் என்று அங்கும்மிங்குமாக போய்கொண்டிருந்தேன்.விதி யாரை விட்டது. அவர் கிளம்பியிருப்பார் என்று நினைத்து நான் வெளியே வர அவர் என் எதிரே வர..

"என்ன? வேலை போரடிக்குதா?" என்றார்

"ஆமாம்" என்றேன்.

சரி வா மேலே மீட்டிங் நடக்குது உன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைகிறேன் என்று நான் வாய் திறப்பதற்கு முன்பு என்னை அங்கு இழுத்துப்போய் அவர்களிடம் சொல்லிவிட்டார்.எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை,வெறுமனே சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.பாவம் என்னை ரெக்கமன்ட் செய்தவரிடம் கூட சொல்லாமல் வந்துவிட்டேன்.என்னுடைய பைனல் பேமண்டை கூட அலுவலகத்து செல்லவிடாமல் சைட்டிலேயே கொடுத்துவிட்டார்கள்.

ஒபயாசி கம்பெனியில் வந்து சேர்ந்தேன்.இந்த சமயத்தில் கட்டுமானத்துறை வேலைகள் அவ்வளவாக இல்லை என்றாலும் சில கம்பெனிகளுக்கு மட்டும் வேலை இருந்துகொண்டிருந்தது அதில் ஒன்று தான் ஒபயாசி (Obayashi Construction Pte Ltd).மேல் நிலைகளில் ஜப்பனியர்கள் தான்.கீழ் நிலைகளில் பல நாட்டு மேற்பார்வை மற்றும் பொறியாளர்களும் வேலைபார்த்தார்கள்.

நான் சேர்ந்த்து சைனிஷ் ஸ்கொயர் என்னும் கடைத்தொகுதி கூடிய அலுவலக கட்டிடம்.இங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டினார்கள்.சில பழைய கட்டிடங்களை மேம்படுத்தி அப்படியே வைத்துவிட்டார்கள்.எங்கள் வேலை 2 பேஸ்மென்டுடன் 14 மாடி கட்டிடம்.



நன்றி:ராபர்ட் தாமஸ்

ஜப்பனியர்களை பற்றி சொல்லவேண்டாம் வேலை என்ற விஷயத்தில்,விடிய விடிய 2 மணி வரை வேலை செய்தாலும் காலை 7 மணிக்கு வந்து அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பார்கள்.முகத்தில் ஒரு அயர்ச்சி இருக்காது.நேரம் தவறாமை இவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்.அதே மாதிரி தலையை மதிக்கும் செயலை மிகவும் எதிர்பார்ப்பார்கள்.புதிய தலைமுறை மக்கள் சிறிது மாறுவது போல் தோன்றுகிறது.

இங்கு தான் நான் முதன் முதலில் ஒரு பொறியாளர் பட்டம் பெற்ற மனிதர் அதற்கு தகுந்த நிலையில் இல்லாததை கண்டு நம் கல்வி நிலை மிகவும் தரம் தாழ்ந்து வருகிறதோ என்ற எண்ணம் வந்தது.அதை ஒரு மேற்பார்வையாளர் கண்டு கொண்டு என்னை கூப்பிட்டு இவனுக்கு சொல்லிக்கொடு என்று அவனை இழிவுபடுத்தினார்.எனக்கு இருதலைகொல்லி மாதிரி ஆனது.என்ன தான் நண்பர் என்றாலும் அதை வேறொருவர் வந்து சொல்லிக்கொடு என்பது மிகவும் அவமானச் சொல் அல்லவா!!

நான் முதலில் அவனிடம் சொன்னது "தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லி கற்றுக்கொள்- தெரிந்த மாதிரி சொல்லி மாட்டிக்கொள்ளாதே".நாங்கள் எல்லோருமே ஏதோ விதத்தில் அவமானப்படுத்தப்பட்டே கற்றுக்கொடுக்கப்பட்டோம் என்று சொல்லி அந்த வேலைக்கு தேவையான விபரங்களை சொல்லிக்கொடுத்தேன்.இப்போது அவன் நல்ல சம்பளத்தில் வேலையில் உள்ளான்.இந்த சூழ்நிலைக்கு பிறகு நம்நாட்டில் இருந்து வரும் பல பொறியாளர்களை உற்றுப்பார்த்து கவலை படவேண்டியிருக்கு.நமது கல்விச்சாலை சரியாக சொல்லிக்கொடுக்க பயன்படுத்தப்படுவதில்லையோ என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.ஆசிரியர்களுக்கு அடிப்படை தகுதியில்லாமல் சொல்லிக்கொடுக்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது.இது ஒரு விதத்தில் நம் தேசத்தின் மீது உள்ள வெளிநாட்டவரின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவருகிறது. மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம்.

இவன் இப்படி இருந்த பட்சத்தில் ஒரு உள்ளூர்காரனுக்கு வேலை கற்றுக்கொடுத்து அவன் வேலையையும் சேர்த்து பார்த்துக்கொண்டிருந்த என்னையே பிறரிடம் போட்டுப்பார்த்து என் வேலைக்கு உலை வைத்த ஆட்களையும் இங்கு யோசித்துப்பார்க்க வேண்டிவந்தது.முதுகில் குத்தும் வேலை என் துறையிலும் உண்டு.

இந்த கம்பெனியில் இந்த வேலையில் சுமார் 3 வருடங்கள் இருந்தேன்.இது முடிவடையும் நேரம் திரும்பவும் வேலை பிரச்சனை ஆரம்பமானது.கட்டுமானத்துறையில் இருந்த சுணக்கம் இன்னும் மீண்டபாடில்லை என்பது என்னை மீண்டும் வேலையில்லாதவனாக்கியது.

ஒபயாசியில் இருந்த காலம்வரை நல்ல சம்பளம் கிடைத்தது.மேற்பார்வையாளர்களுக்கும் ஓவர் டைம் கிடைக்கும் என்ற நிலையை இந்த நிறுவனத்தில் மட்டுமே பார்க்கமுடிந்தது.

பயணம் தொடர்கிறது.

Wednesday, December 24, 2008

எலிம் தேவாலயம்

கொஞ்ச நாளாக துபாய் பதிவாக போட்டுக்கொண்டிருந்த்தால் இந்த சொந்தக்கதை தேங்கிவிட்டது.

இதன் முந்தைய பதிவு இங்கே.


புது நிறுவனத்தில் சேரும் நாளும் வந்தது.அவர்கள் வேலை நடக்கும் இடம் சிரங்கூன் சாலையில் இருக்கும் எலிம் தேவாலயத்துக்கு நேரே வரச்சொல்லிவிட்டார்கள்.வேலை இன்னும் அவ்வளவாக ஆரம்பிக்காத நிலை.வேலையிடம் மண் மிகவும் இளகிய தன்மையுடன் இருந்ததால் அதை
கெட்டிப்படுத்த ஜெட் கிரவுட்டிங் என்னும் முறையில் சிமிண்டை மண்ணுக்குள் செலுத்தி அதை மேம்படுத்தினார்கள்.

இதன் மேல் விபரங்கள் படங்களுடன் அழகாக இங்கு கொடுத்திருக்கார்கள்,ஆர்வம் உள்ளவர்கள் போய் பார்க்கலாம்.

அதன் தொடர்பில் சில படங்கள் கீழே..





இந்த வேலையிடத்தில் இதை சுமார் 12 மீட்டர் ஆழத்திலிருந்து செய்ததாக எண்ணம்.அதில் எனக்கு அவ்வளவாக வேலையில்லை பொழுது போக வரப்போகும் கட்டிடத்தின் வரைபடங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்படியே சுமார் 1 மாதம் ஓடியது

துபாய் மெட்ரோ

துபாய் கடந்த சில வருடங்களாக பொதுபோக்குவரத்துக்கு மதிப்புக்கு மரியாதை கொடுத்து பல திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்துவருகிறது.அதில் ஒன்று தான் மெட்ரோ.இதன் குத்தகை மதிப்பு 5.5 பில்லியனாம்.

இங்குள்ள பல முக்கிய சாலை வழியே மெட்ரோ போவதால் அங்கங்கு தடுப்புகள் வைத்து சாலை போக்குவரத்தை சரி செய்கிறார்கள்.

ஒரு நாள் இங்குள்ள விரைவுச்சாலையில் போய்கொண்டிருக்கும் போது சாலையின் நடுவில் தலைக்கு மேல் ஒரு கான்கிரீட் பிளாக் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்தபோது அசந்தே போய்விட்டேன்.அப்போதிலிருந்தே இதை எப்படி செய்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.அதன் மூலம் தெரிந்த வந்த தொழிற்நுட்பம் இது தான்.

சரி,நம்முடைய கட்டுமானத்துறையில் இதை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போமா?

இப்படி தூண் எழுப்புவது வரை எல்லா இடங்களில் செய்வது போல் பைலிங் அதன் மீது அஸ்திவாரம் மற்றும் தூண் என்பது தான்.



அதற்குப்பிறகு தான் நிஜ வேலையே.கீழே உள்ள Pre-cast ஸ்லேப் தான் வண்டி ஓடக்கூடிய வாய்கால் மாதிரியான அமைப்பு.இதை ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் கானிகிரீட் போட்டு இதை தூக்கி நிறுத்தக்கூடிய இடத்துக்கு கொண்டுவருகிறார்கள்.



மேலே உள்ள படத்தை பெரிதுபடுத்தி பார்த்தால் இதில் உள்ள தொழிற்நுட்பம் தெரிந்துபோகும்.இதில் தெரியும் பல வகை துளைகளுக்குள் தான் இதை ஒரு யுனிட்டாக நிலைநிறுத்தக்கூடிய ரகசியம் அடங்கியிருக்கிறது.

இரண்டு தூண்களுக்கிடையே இந்த மாதிரி பிரேம் வைத்து அதற்கு மேல் நகரக்கூடிய அமைப்புடன் இன்னொரு பிரேம் இருக்கும்.அதிலிருந்து தொங்கக்கூடிய வைகையில் இந்த Pre-cast சிலாபுகளை ஒவ்வொன்றாக தூக்கி ஒன்றோடு ஒன்று இருக்கி பிறகு தூணின் மீது வைக்கிறார்கள்.எல்லா சிலாபுகளையும் இணைக்க Post-tensioning முறைப் படி செய்கிறார்கள்.

சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

ஆரம்ப நிலை



இன்னும் பக்கத்தில் பார்க்க..



தூணுக்கு பக்கத்தில் உள்ள அமைப்பு



மற்றொரு கோணத்தில்



கீழே உள்ள படத்தில் மேலே உள்ள தாங்கிப்பிடிக்கும் பிரேமும் சிலாபுகள் வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.



மூன்று ஸ்பேன்கள் நிறுவப்பட்ட நிலையில்..



அடுத்த நிலைக்கு தயாராகி சாலையின் மேல் நீட்டிக்கொந்திருக்கும் ஸ்டீல் பீம்கள்.