Sunday, January 27, 2008

சிங்கைக்கு டிக்கெட்

ராஜ்பூராவில் இருந்து சென்னை வந்த முதல் வாரம் மலேசியாவில் இருந்து வந்த சாமான்கள் முகவர் மூலமாக கொடுக்க வேண்டியதை கொடுத்து வெளியே எடுத்தேன்.அடுத்த வாரம் அதை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது சிங்கையில் இருந்து அந்த உறவினர் மூலம் தகவல் வந்தது.

அந்த நிறுவனத்தில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்க திரு சோங்க் (Mr Chong Fook Soon)என்பவர் வருவதாகவும் அவரை இந்த முகவரியில் பார்க்கலாம் என்றார்கள்.

அந்த நாளும் வந்தது.அந்த கால வழக்கப்படி தேவையான சர்டிபிகேட்களை எடுத்துக்கொண்டு,அதோடு ஒரு போட்டோ ஆல்பம் எடுத்துக்கொண்டேன்.அதில் இது நாள் வரை நான் செய்த வேலைகளின் படங்களின் தொகுப்பு இருந்தது.

வெளிநாட்டுக் கம்பெனியின் நேர்காணல் என்பதால் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டேன்.அதை பார்த்த என் மனைவி இது ஒங்களுக்கு சரியாக இல்லை என்றார்.பிறகு அரை மனதுடன் பரவாயில்லை போட்டுக்கிட்டீங்க கயட்டவேண்டாம் அப்படியே போய் வாருங்கள் என்றார்.

அவர்கள் கொடுத்த முகவரி ஏதோ ஜெமினி பாலத்துக்கு பக்கத்தில் இருந்ததாக ஞாபகம்.அந்த சாலை கொஞ்சம் உள்ளடங்கியிருந்தது.முகப்பிலேயே பல ஆட்கள் கொத்து கொத்தாக நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.அவர்களிடம் பேச்சு கொடுத்த போது சிலர் ஏற்கனவே சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்கள் என்றும் மீண்டும் போகப்போவதாக சொன்னார்கள்.

திரு சோங்க் பெயரை சொல்லி விஜாரித்துக்கொண்டு மாடியை நோக்கி போனேன்.அங்கு தான் வேலை ஆட்களை நேர்கானல் நடந்துகொண்டிருந்தது.இரு சீனர்கள் ஒருவர் தமிழர்.அவர்களை பொதுவாக் நோக்கி “திரு சோங்க” என்றேன்.

அதில் ஒருவர் சுமாரான உயரம்,கண்ணாடி அணிந்திருந்தார்,கையை நீட்டினார். அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன்.

சரி இங்கு இடம் இல்லை,வா வாசல் பக்கம் போகலாம் என்றார்.வாசல் என்றால் அங்கு ஏதும் அறையில்லை.தெரு தான் இருந்தது.

என் வெளி நாட்டுக்கான நேர்காணல் தெருவில் தான் நடந்தது.

வழக்கமான கேள்விகள் பிறகு என் போட்டோ தொகுப்பை பார்த்து கொஞ்சம் மனம் திருப்தி அடைந்தார் என்று நினைக்கிறேன்.

சம்பளம் எவ்வளவு வேண்டும் என்றார்? சொன்னவுடன் சில நொடிகள் யோசித்துவிட்டு,நீ கேட்டதை கொடுக்கிறேன் ஆனால் போக்குவரத்து அலவன்ஸ் என்று சொல்லி கொஞ்சம் பிச்சி கொடுப்பேன் என்றார்.

எப்படியோ நான் கேட்டது கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் சரி என்று சொன்னேன்.

சிங்கப்பூர் வர எவ்வளவு நாள் ஆகும் என்றார்.

உங்கள் கடிதம் கிடைக்கும் நாளில் இருந்து ஒரு மாதம் என்றேன்.

இன்று வெள்ளி,நாளை நான் சிங்கை போய் உனக்கு குரியர் அனுப்புகிறேன்,திங்கள் காலை எட்டு மணிக்கு உங்கள் வீட்டில் என்னுடைய ஆர்டர் இருக்கும் என்றார்.இதற்கிடையில் என்னுடைய கடவுச்சீட்டை வாங்கி விசாவுக்காக தேவையானவற்றை செய்யச்சொல்லி அங்குள்ள ஏஜென்டிடம் கொடுத்தார்.முன்னப்பின்ன தெரியாத ஆளிடம் எப்படி பாஸ்போர்ட் கொடுத்தேன் என்று பார்க்கிறீர்களா?

இனி நான் எங்கே வெளிநாடு போகப்போகிறேன் என்ற நினைப்பில் கடவுச்சீட்டின் மதிப்பு தெரியாமல் கொடுத்துவிட்டேன்.வீட்டிலும் கேட்டார்கள்,என்னடா இப்படி கடவுச்சீட்டை தெரியாத ஆளிடம் கொடுத்துவிட்டு வந்திருக்காயே திரும்ப வருமா? என்றெல்லாம் போட்டு குடைந்தார்கள்.நல்ல வேளை அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

பதிவு நீளமாகிவிட்டது.. ஆர்டர் வந்ததா?தடலாடியாக பேசிய ஆள் சொன்ன வார்த்தையை காப்பாற்றினாரா? இல்லையா?

அடுத்த பதிவில் பார்ப்போம்.

2 comments:

துளசி கோபால் said...

கடவுச்சீட்டு எல்லாம் பத்திரமா இருந்து,நீங்களும் வேலையில் சேர்ந்துட்டீங்க.

சரிதானே குமார்?
:-))))

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
மிக்க சரி ,ஒரு திருப்பத்துடன்.