Thursday, January 3, 2008

ராஜ்புரா - சென்னை

ராஜ்புரா வாசம் 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தது.இந்த வேலை ஏற்கனவே இருக்கும் சாலையை மேம்படுத்தி இரண்டு லேன் வழியாக மாற்ற வேண்டும்.நடுவே வரும் சிறிய வாய்காலுக்கு பாலம் கட்டவேண்டும்.இந்த வாய்காலில் மழை காலத்தில் கூட தண்ணீர் ஓடுமா என்று சந்தேகம் தான்.இந்த வேலை பார்க்க என்னுடைய முன்னைய அனுபவம் தேவை என்று இங்கு அனுப்பியிருந்தார்கள்.சரி பாலமாவது அகலமாக இருக்குமா என்று பார்த்தால்... நான் முயற்சித்தால் நீளம் தாண்டுதல் மூலமாகவே தாண்டிவிடலாம். 



இந்த வேலையிடத்தில் இருந்தவர்கள் எனக்கு பழக்கமில்ல்லாதவர்கள்.ஹிந்தி அவ்வளவாக தெரியாவிட்டாலும் அவர்கள் பேசுவது ஓரளவு புரிந்தது,பதில் சொல்வதில் தான் பிரச்சனை.சாப்பாடு், சப்பாத்தியும் பரோட்டாவும் தான்.எப்படியோ ஓட்டினேன்.


இப்படி ஒரு நாள் சாலை ஓரத்தில் சர்வே வேலையில் மூழ்கியிருந்த போது பொது ஜனம் ஒருவர் வந்தார்.சகஜமாக பேச ஆரம்பித்து அவரும் பக்கத்து ஊரில் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அந்த வாழ்கை பிடிக்காமல் இப்படி சுற்றிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.பலவற்றை 45 நிமிடங்களுக்கு பேசிவிட்டு போகும் போது “You are a Good Fellow “ என்று சான்றிதழ் கொடுத்துவிட்டு சென்றார்.முன் பின் தெரியாதவர் அதுவும் எனக்கு பாஷைதெரியாத ஊரில் என்னிடன் ஏன் பேச வேண்டும்? எனக்கு எதற்கு சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்று புரியாத புதிராக இருக்கிறது.அதன் பிறகு அவரை பார்க்கமுடியவில்லை.

இதற்கிடையில் வீட்டில் இருந்து டெலிகிராம் வந்தது.மலேசியாவில் இருந்து வரவேண்டிய பொருட்கள் வந்துவிட்டதாகவும் அதை வெளியில் எடுக்க நான் அங்கு போகவேண்டும் என்று.அன்றிரவு வீட்டுக்கு தொலைப்பேசிய போது சிங்கை கம்பெனிகாரர் சென்னை வருவதாகவும் நேர்காணலை அங்கே வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தாகவும் என் உறவினர் தகவல் கொடுத்தாக என் தந்தை சொன்னார்.

நேர்காணல் நாளை குறிப்பில் வைத்து இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.அதற்கு முன்பு டெல்லியில் உள்ள சித்தப்பா பையனுக்கு தொலைப்பேசி சென்னை செல்ல புகைவண்டியில் பயணச்சீட்டு கிடைக்குமா என்று முயற்சிக்கச்சொன்னேன்.

டெல்லி சென்று சேர்ந்தபிறகு தான் பயணச்சீட்டு கிடைக்காத விபரம் தெரிந்தது.பரவாயில்லை தனி ஆள் தானே எப்படியேனும் தொற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.

டெல்லியில் சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ”சிங்கையில்” ஒரு வாய்ப்பு வருகிறது என்ன செய்யலாம் என்று அவரின் யோஜனை கேட்டேன்.அவரோ உன் தந்தைக்கு 60 வயதை நெருங்குகிறது,இந்த வயதில் மனது ஒரு நிலையில் இருக்காது அதனால் நீ போவது அவ்வளவு நல்லதாக படவில்லை என்று சொல்லிவிட்டு, “நீ என்ன முடிவு செய்திருக்காய்?” என்றார்.

நான் போவதாக முடிவெடுத்துள்ளேன் என்றேன்.

யோசித்து முடிவெடு என்று சொல்லி விட்டு விட்டார். என்னை கட்டாயப்படுத்தவில்லை.யாரிடமும் அவ்வளவாக பேசாதவர் என்னிடம் மட்டும் சில வார்த்தைகள் பேசுவார்.முதன் முதலில் டெல்லி போன போது “என்னடா மீசை எல்லாம் வைத்துக்கொண்டு?” நன்றாக இல்லையே என்று சொல்லிவிட்டு எனக்காக ஒரு தடவை இங்கு இருக்கும் போது மீசையை எடுத்துவிடு என்றார்.

என்ன சித்தப்பா? இது ஒரு வேலையா? என்று மறுநாளே எடுத்துவிட்டேன்.ஒரு வேளை, நம் சொல்லை மதிக்கிறானே என்று என்மேல் ஒரு Soft Corner வோ என்னவோ தெரியாது.

எதிர்பார்த்தது போல் டிரைனில் இடம் கிடைக்கவில்லை.இருப்பது ஒரே சூட்கேஸ்.ஒரு பெட்டியில் கீழே வைத்து பூட்டி விட்டு விஜயவாடா வரை கழிப்பறை அல்லது வாசல் பக்கம் என்று மாறி மாறி உட்கார்ந்து பொழுது போக்கினேன்.விஜயவாடா வந்தது சில படுக்கைகள் காலியாக இருந்தது,அதில் கொஞ்சம் களைப்பாறிவிட்டு சென்னை வந்தேன்.


மீதி அடுத்த பதிவில்.

2 comments:

துளசி கோபால் said...

ஆமாமாம். மீசை வச்சுக்கரது சில பெரியவங்களுக்குப் பிடிக்கறதில்லை.

எதோ முரட்டுத்தனம் உள்ளவங்கதான்
அதை வச்சுப்பாங்களாம்.


ஆனா.... இப்போ 'மீசையை எடுத்துறவா?'ன்னு கோபால் கேட்டுக்கிட்டே இருக்கார்.

ஏனாம்?

நரைக்க ஆரம்பிச்சுருச்சே:-))))))

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
அவரை இழுக்காட்டி உங்களுக்கு பொழுது போகாதே!! :-))