ஒபயாஷியில் வேலையில்லை என்று சொல்லிய போது ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்து "நீ இனிமே வேலைக்கு வரவேண்டாம்" என்று சொல்லி அனுப்பினார்கள்.
அட! இது பரவாயில்லையே வீட்டிலே உட்கார்ந்து வேலை தேட ஒரு வாய்ப்பாக இருக்கிறதே என்று நினைத்து வெளியேறினேன்.
மீண்டும் வேலை தேடல் ஆரம்பித்து சில நேர்காணலுடன் அப்படியே நின்று போயிருந்தது.வேலை கிடைக்குமா? கிடைக்காதா என்ற நிலை.செய்தித்தாளின் வரி விளம்பரங்களை கூட விடாமல் தேடினேன்,ஹூம் ஒன்றும் அகப்படவில்லை.ஒரு 15 நாட்கள் இப்படியே ஓடியது.
ஒரு நாள் ஏதோ ஞாபகம் வந்தவுடன் முன்பொரு முறை பழகிய நண்பருக்கு பேசி ஏதாவது "லோபாங்" (அதாவது இடம்/ஓட்டை என்று மலாயில்) இருக்கா என்று கேட்கலாம் என்று தொலைப்பேசினேன்.சாதாரணமாக பேசிய பிறகு இப்போது வேலையில்லாமல் இருப்பதை சொன்னேன்,அவரும் சிறிது நேரம் பக்கத்தில் யாரிடமோ பேசிய பிறகு நாளை இந்த விலாசத்தில் இவரை பார்த்து பேசி முடிவுக்கு வா என்று சொல்லி வைத்தார்.வெளிச்சம் தெரியத்தொடங்கியதாக நினைத்தேன்.அவர் பேசும் போதே இது சிறிய நிறுவனம் அதிக சம்பளம் எதுவும் கொடுக்கமாட்டார்கள் அதனால் நீ இதில் இருந்துகொண்டே வேறு வேலை கிடைக்கும் வரை வேலை செய்யலாம் என்று யோஜனையும் சொன்னார்.
மறு நாள் அந்த நிறுவனத்தை அடைந்தேன் அது துவாஸ் என்று சொல்லக்கூடிய பகுதியில் (ஊரின் மேற்குக்கோடி) இருந்தது.இவர்களும் இரும்பு வேலை செய்பவர்கள் தான் இவர்கள் வேலை செய்யும் ஒரு சைட்டில் அவசரமாக ஒரு QA/QC பொறியாளர் வேண்டும் என்பதால் அவ்வேலைக்கு என்னை எடுத்திருந்தார்கள்.சில வருடங்களுக்கு முன்பு பண்ண வேலை என்பதால் கொஞ்சம் மறந்து போயிருந்தது,நேர்காணலில் மிக மோசமாக பண்ணியிருந்தாலும் என்னை ரெக்கமென்ட் பண்ண பொறியாளர் தான் அந்த சைட்டில் இருப்பார் என்பதால் என்னை அங்கு போட்டால் பிரச்சனை வராது என்று நினைத்து என்னை தேர்வு செய்தார்கள்.சம்பளம் அவ்வளவு வராவிட்டாலும் ஓரளவுக்கு ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
இந்த மாதிரி அடிக்கடி வேலை போவதும் கிடைப்பதும் ஒரு வித வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேலையில் பையனின் ஆரம்ப நிலை கல்வி முடிவுக்கு வரும் வேளையும் நெருங்கிக்கொண்டிருந்தது.நானும் அப்போதிலிருந்தே மேற்கொண்டு என்ன செய்வது என்று ஆலோசித்து வந்தோம்.சரியான நிரந்தர வேலை இல்லாமல் இங்கு காலை ஊன்றுவது மிகப்பெரிய விஷயம் அது என்னை மட்டுமில்லாமல் எல்லோரையும் இங்கு அமிழ்த்திவிடும் என்பதால் கவனமாக கையாளவேண்டியிருந்தது.
இவ்விடத்திலும் எனக்கு ஒரு சிரீலங்க நண்பன் கிடைத்தான்,அவனுக்கு வேலை வேறிடத்தில் என்றாலும் அவ்வப்போது இங்கு வந்து உதவிகள் செய்துகொண்டிருந்தான்.அவன் பெயர் குணா.இப்போது லண்டனில் ரயில்வே துறையில் இருப்பதாக கடைசி தகவல்.ஒரு பதில் மின்னஞ்சல் கூட போட முடியாத அளவுக்கு உள்ள நண்பர்கள் வட்டத்தில் இவனும் இருக்கிறான்.
இங்கு நாங்கள் செய்த வேலையை விலா வாரியாக சொல்லாமல் ஒரு சிறிய நகர்படம் மூலம் காண்பித்துள்ளேன்,பார்த்து மகிழுங்கள்.
இதை நேற்று யூடியூபில் ஏற்றியவுடன் அதன் பின்புல இசை வேறு ஒருவருடன் என்பதால் அதை மாற்றுமாறு சொல்லி அதுவே தேர்ந்தெடுத்த இசை,அதனால் படத்துடன் இசைந்து வருமா? என்று தெரியவில்லை.
இந்த இடம் "கோ மெங் சாங்" என்ற பிணம் எரியூட்டும் மற்றும் சாம்பலை சேமிக்கும் இடம்.தினம் ஒரு பிணம் பார்க்கலாம்.புத்த மதத்தை தழுவியவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதம் இவர்களிடம் வேலை செய்யும் போதே பற்பல விளம்பரங்களுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன் அதில் ஒரு நிறுவனம் கேட்டிருந்த அத்தனை தகுதி இருந்தும் என்னை ஏன் அழைக்கமாட்டேன் என்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப அவர்களுக்கு fax அனுப்பிக்கொண்டிருந்தேன்.இடையில் கொஞ்ச நாள் அவர்களை மறந்துவிட்டிருந்தேன்.ஒரு நாள் மதியம் 2.30 மணிக்கு ஒரு அழைப்பு,அழைத்தவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு வரச்சொன்னார்.
இவர்கள் செய்வது கொஞ்சம் விவகாரமான வேலை என்பதால் மேல் விபரங்கள் எதையும் இங்கு கொடுக்கமுடியாது.நேர்காணலில் தேர்வாகி நான் சேரப்போகும் தேதியையும் சொல்லிவிட்டேன்.
இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் நிறுவனத்துக்கு வந்து என்னுடைய Resignation கடிதத்தை கொடுத்த போது அங்கிருந்த முதன்மை அதிகாரி அசந்துவிட்டார்,என்னுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி மற்றும் 5 வருடத்துக்கு வேலை உத்திரவாதமும் கொடுப்பதாகச்சொன்னார்.நான் என்னிலையை சொல்லி அந்த பெரிய நிறுவனத்தில் வேலை செய்யப்போவதால் உண்டாகும் நலனையும் சொல்லி என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.இங்கும் என்னுடைய Probation நடப்பில் இருக்கும் போதே வெளியேறுவதால் ஒரே ஒரு நாள் Notice Period போதும் என்றாலும் வேறு ஆள் தேடுவதற்கு 15 நாட்களுக்கு மேல் அவர்களுடன் இருந்துவிட்டு புறப்பட்டேன்.
இவர்கள் ஏன் என்னை மட்டும் இப்படி பிடித்துவைக்க முயற்சிக்கிறார்கள்? அதற்கான பதில் அடுத்த பதிவில்.
Wednesday, April 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இவ்வலொ நாளா கேப் விடறது? கதையே மறந்து போச்சு.
மர்மமா வேற முடிச்சு இருக்கீங்க!
உங்களுக்கு கதை தான் மறந்தது திவா எனக்கு இதில் நுழையும் பெயரே மறந்துவிட்டது.
இந்த பிராஜக்ட் பண்ண வேலையை வட்டில்(700MB) இருந்ததை சுருக்கி போட அலுப்பு அதான் இவ்வளவு நாளாகிவிட்டது.
Post a Comment