Friday, September 14, 2007

கான்கிரீட் சாலை

பால வேலைகளின் பெரும் பகுதி முடிந்து இப்போது அந்த ஸ்டீல் பீமை உள்ளடக்கிய கான்கிரீட் சாலை போட வேண்டும். அதற்கான முட்டு வேலைகள் போன பதிவில் சொல்லிய மாதிரி ஒரு தொங்கு மேடையில் இருந்து உட்பக்கமாக கொடுத்தோம்.

கீழே உள்ள படத்தில் உள்ள மாதிரி கம்பி கட்டி கான்கிரீட் போட்டோம்.





அதை சரியான வடிவத்துக்கு கொண்டு வர தனியாக ஒரு சின்ன அதிர்வான் (Viberator) உள்ள மாதிரி ஒரு ஃபிரேம்(படத்தில் நாள் உள்ள இடத்தில் உள்ளது) செய்து அதை கான்கிரீட் போட்டவுடன் அப்படியே நகர்த்தினால் சாலை கான்கிரீட் நடுவில் தூக்கியும்,ஓரங்களில் இறக்கமாக செய்துவிடும்.மழை பெய்தால் தண்ணீர் சாலை இருபக்கத்துக்கும் போய்விடும்.


இந்த கான்கிரீட் பாலத்தின் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்து அப்படியே வர மாட்டார்கள்.நீளத்தை சுமார் 25~30 மீட்டர் நீளத்துக்கு பிரித்து ஒன்றுவிட்டு ஒன்றாக போடுவார்கள்.இப்படி போடுவதால் கான்கிரீட் வெளியிடும் வெப்பம் மற்றும் ஸ்டீல் பீம்களின் விரிவாக்கம் ஒரேடியாக இல்லாமல் விட்டு விட்டு நிகழும்.
இதனால் கான்கிரீட்டில் ஏற்படும் சிறு பிளவுகள் தவிர்க்கப்படுகின்றன.

கான்கிரீட் முடிந்த பிறகு,தேவையான இறுக்கம் அடைந்த பிறகு அதன் மீது பிட்டுமென் என்று சொல்லப்படுகிற தார் சாலையை அமைப்போம்.இது கான்கிரீட் மேல் சுமார் 50 மில்லிமீட்டர் இருக்கும்.
இதற்காக உள்ள மிஷின் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சும்மா பார்த்துக்கொண்டு இருந்தால் போதும். நாம் எதுவும் செய்ய வேண்டும்.அவ்வப்போது வருகிற தார் கலவை 110 degree Centigrade க்கு குறையாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.





தார் கலவை போட்ட 15 நிமிடத்துக்குள் அதன் மேல் 5 Tonne rollar ம் அதன் பிறகு 1/2 மணி நேரத்துக்கு 10 Tonne ரோலரும் ஓட்ட வேண்டும். மொத்தத்தில் 45 நிமிடங்களுக்குள் சாலை தயார்.

அதன் பிறகு நகாசு வேலைகள் தான். Road divider lines - இதற்கென்று தனி இயந்திரமும் பெயிண்டும் உள்ளது.

கிழே உள்ளவர்கள் என்னுடன் வேலை பார்த்த சில தொழிலாளர்கள்.கையில் தொப்பி வைத்திருப்பவர் தான் கிளைன்ட் இஞ்சினியர்.எனக்கு பக்கத்தில் உள்ளவர் தான் " திரு.ரவி" கடைசியில் "திரு.கண்ணன்".



அப்படி இப்படி என்று எல்லா வேலையும் முடிந்து நான் மலேசியாவை விட்டு கிளம்பும் முன் என்னுடைய சித்தப்பாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.நமது தூரத்து உறவினர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்,ஏதாவது உதவி தேவை என்றால் கேட்டுக்கொள் என்றார்.

அப்போது எனக்கு சிங்கப்பூரைப்பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் திரும்ப போகும் போது மட்டும் அங்கு போய்விட்டு சென்னைக்கு போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.மனைவி குழந்தையும் கூப்பிட்டுக்கொண்டு வந்து திரும்ப போகும் போது எல்லாரும் ஒன்றாக போய்விடலாம் என்று பிளேன்.

இந்த மாதிரி சமயத்தில் தூரத்து உறவினர்களின் தொடர்ப்பு கிடைக்கும் போல் இருந்ததால் அவர்களை கூப்பிட்டு ஒரு ஹலோ சொல்லிவிடலாம்,பிறகு தேவைப்பட்டால் உதவி கேட்டுக்கொள்ளலாம் என்றிருந்தேன்.

ஒரு ஞாயிறு அன்று மதியம் அவர்களை கூப்பிட்டு என்னை அறிமுக படுத்திக்கொண்டவுடன் அவர்களும் உங்கள் சித்தப்பாவிடம் இருந்து கடிதம் வந்தது என்று சொல்லி சிறிது நேரம் குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.என்னுடைய பணி விபரங்களை கேட்ட பிறகு, இங்கு சிங்கையில் கட்டுமானத்துறையில் நிறைய வேலை வாய்ப்பு உள்ளது (1995 சமயத்தில்) நீங்கள் ஏன் முயலக்கூடாது என்றார்கள்.

எனக்கு காலில் வெண்ணிர் ஊற்றியது போல் இருந்தது. 13 வருடம் எங்கள் கம்பெனி போல் L&T -ECC யில் வேலை செய்துவிட்டு திடிரென்று எப்படி மாறுவது?

பச்சை துரோகமாக தெரிந்தது.அது பச்சையா/சிகப்பா என்பது அடுத்த பதிவில்.

2 comments:

துளசி கோபால் said...

பச்சையும் இல்லை சிகப்பும் இல்லை. எங்கே நல்ல வேலை கிடைக்குமோ
அங்கே மாத்திக்கலாம். ஒரே இடத்துலே இருந்தா.......... பல வருசங்களுக்குப்பிறகு,
வளர்ச்சி அப்படியே நின்னுரும்.

இங்கே சாலைகளை சீரமைக்கும் பணி இரவில்தான் நடக்குது. பொழுதுவிடிஞ்சு பார்த்தால்
வேலை நடந்த சுவடே இல்லாமல் பளிச்சுன்னு பளபளன்னு புது ரோடு. எல்லாம்
நீங்க சொன்னதுபோலத்தான்.

காங்க்ரீட் வெளியிடும் வெப்பம், விரிசல் எல்லாம் அனுபவத்துலேயும் பார்த்ததால்,
இப்ப எல்லாம் உங்க பதிவுகள் நல்லாவே புரியுது:-)

சௌ.பெருமாள் said...

வாங்க துளசி
இந்த பக்கம் யார் வரப்போகிறார்கள்,ஒரு சில நாட்களாக திறக்கவே இல்லை.
அந்த வயதில் பழைய காலத்து ஆசாமி மாதிரி ஒரு கம்பெனி என்றால் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கவேண்டும் என்று சொல்லி பழக்கப்படுத்திவிட்டதால் தாவ மனது வரவில்லை.
யார் நமது தலை எழுத்தை மாற்றமுடியும்?
இங்கும் சாலைப்பணிகள் பெரும்பாலும் இரவில் தான்,அது தான் குத்தகைக்காரர்களுக்கு வசதி.