Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Sunday, August 24, 2008

கான்கிரீட் பக்கெட்

போனமாதத்தில் யாரோ ஒருவர் துபாயில் வேலை செய்யும் தொழிலாளர்பிரச்சனை எழுதி ஒரு படம் போட்டிருந்தார்,அதில் கான்கிரீட் போடும் பக்கெட்டில் ஆள் இருப்பதாக இருந்தது.அந்த விதிமுறை எனக்கு தெரிந்தவரை சிங்கையில் அனுமதியில்லை.

போனவாரம் கோமளவிலாஸ் சாப்பாட்டுக்கடையில் உட்கார்ந்து மசாலா தேநீர் குடித்துக்கொண்டு இருக்கும் போது கண்ணில்பட்டது,உங்கள் பார்வைக்காக.

படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.


இன்னும் பக்கத்தில்..



பாரந்தூக்கி அந்த பக்கெட்டை அதற்கு மேல் கொண்டுவரமுடியாததால்,எதுவரை முடியுமோ அங்கு கொட்டி பிறகு ஆட்கள் மூலம் பக்கத்தில் உள்ள தூணுக்கு கான்கிரீட் போடுகிறார்கள்.கான்கிரீட் பக்கெட்டை திறக்க கைப்பிடியில் ஒரு கயறு கட்டியிருப்பதையும் பார்க்கலாம்,இதன் மூலம் ஆட்கள் அந்த பக்கெட்டின் மீது நிற்கவேண்டிய அவசியம் கிடையாது.

Tuesday, July 15, 2008

இது என்ன Design னோ!

சென்னை தில்லைகங்கா நகரை சுற்றி இருக்கும் தார் சாலைகளை கான்கிரீட் சாலையாக மாற்றி வருகிறார்கள்.அது நல்லதோ கெட்டதோ அடுத்த ஆட்சி வரும் வரை தெரியாது,என்ன! ஒரே ஒரு அனுகூலம், நினைத்த நேரத்துக்கு வீட்டுக்காரங்க சாலையை தோண்டமுடியாது.அதே சமயத்தில் மின்வாரியமோ அல்லது கழிவுநீர் நிர்வாகமோ போடவேண்டிய குழாயை போட மறந்தாலோ அல்லது மேம்பாட்டிற்காக மேலும் போடவேண்டி வந்தாலோ,அவ்வளவு தான்.

சரி,இப்போது அதை யோசித்து பிரயோஜனம் இல்லை.கான்கிரீட் சாலை தான் போட்டார்களே பக்கத்தில் உள்ள வீட்டுக்கு ஆட்கள் எப்படி போய் வருவார்கள் என்ற எண்ணம் கூடவா இருக்காது? இல்லை, இருந்திருந்தால் சாலை போட்டு ஒரு வருடம் கழித்து தான் நடைபாதை அமைப்பார்களா? அல்லது அது இவர்கள் வேலையில்லையா?



சாலையில், நடக்கும் பறக்கும் வண்டிகள்,மனிதர்கள் இரவு நேரத்தில் மின்வெட்டு சமயத்தில் அதில் காலை வைத்தால் அரசாங்கத்தின் அனுமதியுடன் பரலோகம் போகலாம்.என்ன! எப்போதாவது இழப்பீடு கிடைக்கலாம்,இருந்தாலும் அது வருவதற்குள் இழப்பீடு கேட்டவர் மேலே போயிருக்கக்கூடும். இது முடிவில்லா சங்கிலித்தொடராக நடக்கும்.



அதெல்லாம் விடுங்க,அது பொது மக்களின் வீடுகள்,அவர்களுக்கு தேவையானதை அவர்கள் தான் செய்துகொள்ளவேண்டும்,எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கமுடியாது அல்லது கூடாது.சாலையை திடிரென்று 3 அடி ஏற்றினால் நாமும் நம் வீட்டை அதற்கு தகுந்த மாதிரி ஏற்றிக்கொள்ளவேண்டும். :-(

கீழே உள்ள படத்தை பாருங்கள்...

குறைந்த சம்பளத்தில் உள்ளவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு பொதுவினியோக முறையில் அத்தியாவசியமான சாமான்கள் வழங்கும் இடத்துக்கு போகும் பாதையை பாருங்கள்.சவுக்கால் ஆன மரப்பாலம்,அதைப்பார்த்து தான் முதல்வர் சிரிக்கிறாரா??



இந்த பாலத்துக்கு மேல் கொஞ்சம் குண்டான மனிதர் போனால் அவ்வளவு தான் கீழே உள்ள கால்வாய் அவருக்கு சமாதி கட்டிவிடும்.பக்கத்தில் இருக்கும் கான்கிரீட் சிலாபை பார்க்காதீர்கள் அதற்கு சவுக்கு பாலமே மேல்.

இதைப்பற்றி கட்டுமானத்துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் விளக்கம் கேட்டேன்.அவர் சொன்னது "இனிமேல் தான் அதன் மேல் ஸ்டீல் கிரில் போடுவார்கள் என்றார்" அது உண்மையாக இருக்கும் என்று நம்புவோமாக,அதற்குள் இதனால் யாரும் உயிரிழக்காமல் இருக்கவேண்டும்.

Sunday, May 11, 2008

மரண பயம்...

போன பதிவில் இந்த கட்டிடம் எப்படி எழுப்பப்படுகிறது என்பதை சொல்லியிருந்தேன்,அதை மிகவும் எளிதாக காட்ட ஒரு படம் கிடைத்தது அது உங்கள் பார்வைக்கு.

சுலபமாக சொல்லவேண்டுமென்றால் இந்த நகர்படத்தை பாருங்கள்.பல வேலைகள் இதை ஒத்தே இருந்தது.

இதே முறையை 52 மாடிகளுக்கும் பின்பற்றினோம்.

இது இரும்பு வேலை என்பதால் எல்லா சமயத்திலும் நூறு சதவீத பாதுகாப்பை எதிர்பார்க்கமுடியாது,சிலவற்றை தள்ளிப்போடலாம்.ஆனால் மனித மனம் தான் குரங்காயிற்றே!!
யாராவது ஒரு காரியம் செய்தால் அது நமக்கு கைவரும் வரை நமைச்சல் தான்.
அதே மாதிரி தான் இரும்பு பீம்களின் மேல் வேலைசெய்வது. ஒரு முனையில் மேற்பார்வை முடிந்தவுடன் அடுத்த முனைக்கு போவதற்கு அந்த பீமின் மேலேயே பாதுகாப்புக்கு கயறு கட்டியிருக்கும் அதனுள் உங்கள் பாதுகாப்பு வாரினை இணைத்துக்கொள்ளவேண்டும்.இது முறை.இல்லாவிட்டால் தூணில் மேலிருந்து கீழிறங்கி பிறகு அடுத்த தூணின் மேல் ஏறவேண்டும்.கால் கயன்றுவிடும்.இதை தவிர்க கழைக்கூத்தாடி மாதிரி பீமின் மேல் நடந்து அடுத்த தூணுக்கு போவோம்.

சில சமயங்களில் அந்த வேலையை செய்ய கால அவகாசம் பிடிக்கும்,வேறு வேலை செய்ய குறுக்கு வழிக்காக கயறு இல்லாத பீம்கள் மேல் நடக்கவேண்டி வரும்.இது தவறு தான் ஆனால் இந்த வேலை செய்பவர்கள் பலரும் இப்படித்தான் நடப்பார்கள்.

என்னுடைய ஆரம்ப கால கட்டுமானபணிகளின் போது அவ்வப்போது இந்த மாதிரி பாதுகாப்பற்ற முறையில் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்துள்ளேன்.அதுவே பழக்கமாகி இங்கும் தொடர்ந்தது.இது பாதுகாப்பற்றது என்பதால் அவசியமில்லாத நேரங்களில் செய்யமாட்டேன்.விதி யாரை விட்டது!!

அப்போது எங்கள் கட்டிடம் 27 மாடியை அடைந்திருந்தது.வழக்கம் போல் வேலை மற்றும் inspection என்று போய்கொண்டிருந்தது.என்னுடன் மேற்பார்வை செய்ய வந்திருந்த இன் ஜினியருடன் inspection க்காக போய்கொண்டிருந்தேன்.

அப்போது தான் முடுக்கிய பீமின் மறு பக்கத்தில் ஒன்றை செக் செய்யவேண்டும் என்று அழைப்பு வந்தவுடன் என்னுடன் வந்த இன் ஜினியர் கயறு கட்டாத பீமின் மேல் நடந்து அக்கரை சென்று சேர்ந்தார்.பாதுகாப்பு கயறு கட்டாமல் inspection எதற்கு கூப்பிடுகிறீர்கள் என்று குத்தகைக்காரரை திட்டிவிட்டு நானும் அந்த பீமின் மீது நடக்க ஆரம்பித்தேன்.

அந்த பீமின் ஒரு பக்கம் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள சாலை மறுபக்கம் இன்னும் முடிவடையாமல் இருக்கும் எங்கள் கட்டிடத்தின் ஒரு பகுதி - ஒரு 10 மீட்டர் ஆழத்தில் இருக்கும் சாரம்.

எப்போதும் போல் தான் நடந்தேன்,பாதி தூரம் கடந்திருப்பேன் என்னவாயிற்று என்று தெரியவில்லை...அடுத்த அடி எடுக்கமுடியவில்லை.என்னுடைய உடம்பு அப்படியே உறைந்துவிட்டது.இந்த மாதிரி நடக்கும் போது நடுவில் நிற்கக்கூடாது எனபது பால பாடம்.
பாதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்த அந்த பொறியாளர் புரிந்துகொண்டார.அங்கிருந்த படி என்னை பார்த்து அப்படியே அந்த பீமின் மீது உட்காரச்சொன்னார்.

என்னால் காலையே நகர்த்த முடியாத பட்சத்தில் எப்படி உட்கார்வது,உட்கார முயற்சிக்கும் நேரத்தில் கொஞ்சம் சாய்ந்தாலும் அவ்வளவு தான் 60 அல்லது 10 மீட்டர் கீழே போக வேண்டும்.என்னை முதலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார் அந்த பொறியாளர்.சில நிமிடங்கள் ஒன்றும் செய்யவில்லை அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காலை நகர்த்த முயற்சித்தேன்.



காலை ஓரளவு நகர்த்த முடிந்தாலும் மேல் நடக்க தைரியம் வரவில்லை.இப்போது மெதுவாக ஒரு காலை மட்டும் கீழிறக்கி பீமின் கீழ் பகுதி வரை கொண்டு போய் உட்கார முயற்சித்தேன்.பல முறை முயற்சித்து ஓரளவு தன்னம்பிக்கை வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து அப்படியே ஒரு காலை மடக்கிக்கொண்டு வந்து உட்காரும் நிலை வந்தவுடன் அப்படியே பீமை கட்டிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன்.அதன் பிறகு அதன் மீதே கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து மறுமுனையை வந்தடைந்தேன்.

இந்த நிகழ்வில் இருந்து காலில் இருந்த ஒரு freeness போய்விட்டது.அதற்குப்பிறகு இப்படி முயற்சிப்பதையே விட்டுவிட்டேன்.

இதை படிப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு இதைச் சொல்லுங்கள்,எக்காலத்திலும் இந்த மாதிரி முயற்சிக்கக்கூடாது என்று.

Friday, April 25, 2008

சென்னை சுவாரஸ்யங்கள்...

நேற்று பகலில் கோடம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்களுக்கு மின்வண்டியில் சென்ற பிறகு அங்கு இரு புறமும் இருக்கும் பயணிகள் கடக்கும் பாதை இருந்தாலும்,பின் பக்கம் இருக்கும் நடைமேடையை உபயோகித்தேன்.அந்த சமயத்தில் பரங்கிமலையை நோக்கி இருக்கும் ரயில் பாதையை படம் எடுத்தேன்.

வீட்டுக்கு வந்து கணினி/ தொலைக்காட்சியில் பார்க்கும் போது இக்காட்சியை எதேச்சையாக எடுத்திருப்பது தெரியவந்தது.

எவ்வளவு பேர் செத்தாலும்,என்ன பாதுகாப்பு வழிகள் இருந்தாலும்.... நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பது போல் இருக்கல்லவா??



முயற்சித்து...




அப்பாடி! ஏறியாச்சு.

இவர்களை எப்படி திருத்துவது? எங்கிருந்து ஆரம்பிப்பது?

Tuesday, February 26, 2008

விபத்து

கட்டுமானத்துறை - விபத்து இரண்டையும் எப்போதுமே பிரிக்கமுடியாதது, ஆனால் குறைக்க முயலலாம்.

ஒரு விபத்து எப்படி நடக்கிறது என்பதை கீழே உள்ள சலனப்படத்தின் மூலம் பார்க்கலாம்.

இதில் பல விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றாலும் கட்டுமானத்துறையில் ஏர் பிடித்திருப்பவரை கொண்டு வந்து விட்டால் இந்த மாதிரி விபத்துக்கள் சுலபமாக நடக்கும்.



நன்றி: யூ டியூபில் போட்ட மனிதருக்கு.