Friday, July 25, 2008

நடைப்பாதை தேவை.

SRM- பல்கலைக்கழகம்.இதிலிருந்து ஆண்டுக்கு பல பொறியாளர்கள் நம் நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் கொடுக்கப்படுகிறார்கள்,அதே போல் பக்கத்தில் உள்ள வல்லியம்மை மகளிர் கல்லூரியும் கொடுக்கிறது.

ஒரு 3 மாதம் இருக்கும் இந்த பக்கம் போக வாய்ப்பு கிடைத்தது.சரி ரயிலிலும் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டதே என்று எண்ணி ரயிலில் போய் “போத்தேரியில்” இறங்கினேன்.நான் மறைமலை நகரில் வேலை பார்க்கும் காலத்தில் இந்த நிலையம் இல்லை.நிலையத்தின் உள்ளேயிருந்து நடைப்பாலம் மூலம் மேலே ஏறி செங்கல்பட்டு -- தாம்பரம் சாலைக்கு வந்தோம்.இரண்டு கல்லூரிகளுமே சாலைக்கு அநத பக்கத்தில் இருப்பதால் விரைவுச்சாலையை கடந்தே ஆக வேண்டிய கட்டாயம்.ரயில் நிலையத்தில் இருந்து இறங்குபவர்கள் பாதுகாப்பாக கல்லூரிகள் செல்ல வழியே கண்ணுக்கு தென்படவில்லை.
பாத சாரிகள் கடக்க போடப்படும் வரிக்குதிரை கோடுகள் போடக்கூட சரியான இடம் கிடையாது.
வரிக்குதிரை கோடுகளை விரைவுச்சாலையில் போடப்படுவதை சென்னையில் சில இடங்களில் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது.யாரோ கோடுமட்டும் போட்டால் போதும் என்று சொல்லியிருப்பார்களோ? என்ற எண்ணமும் வந்தது.கூடியமட்டும் பாதசாரிகளுக்கான கோடுகள் போடும் போது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சில ஏற்பாடுகளும்,சரியான இடத்தில்/தூரத்தில் அறிவிப்புப்பலகையும்,இரவில் தெளிவாக தெரிய சாலையின் இரு பக்கங்களிலும் அறிவிப்பு விளக்குகளும் வைக்கப்படவேண்டும்.இதுமாதிரி எந்த விதமான முறையான வேலைகள் செய்யப்படாமல் சாலையின் மேல் வரிக்குதிரை கோடுகளை பார்க்கும் போது அதை நம்பி கடக்கும் பாதசாரிகள் மீது பரிதாபம் தான் ஏற்படும்.




சரி,விஷயத்துக்கு வருவோம்.தரமான கல்லூரி என்று ஆனந்தவிகடனிலும் மற்ற பத்திரிக்கையிலும் விளம்பரம் வந்துகொண்டு மக்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கும் கல்லூரி,தன்னுடைய மாணவர்களை இப்படி சாலையை கடக்க அனுமதிக்கலாமா?அதுவும் நாளைய தலைவர்களை இந்த சூழ்நிலையில் படிக்கவைத்து வெளியில் அனுப்பும் போது “பாதுகாப்பு” என்ற ஒன்றை அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க வைத்துவிடுகிறோம்.

இது எங்கள் வேலையில்லை,நாங்கள் மாணவர்களை அழைத்துவர கல்லூரி பேருந்து இருக்கு அதன் மூலம் பாதுகாப்பாக வரலாமே என்று கேட்கலாம்,அப்படி என்றால் வசதி குறைந்த மாணவர்கள் என்ன செய்வது?வருடத்துக்கு 25000 ரூபாய் பேருந்துக்கு மட்டுமே கொடுக்க எவ்வளவு பேருக்கு வசதி இருக்கு?

இவ்வளவு பெரிய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் கல்லூரிக்கு அரசாங்கத்தை தெரியாதா? இல்லை தேவைப்பட்டவர்கள் மூலம் சரியான துறையுடன் கலந்து பேசி இங்கு ஒரு மேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ அமைத்தால் அது அவர்களுக்கு இருக்கும் அக்கறையை காண்பிக்கும் அல்லவா?

சரி அவர்கள் தான் தனியார் துறை,மக்களின் நன்மதிப்பை பெற அத்தொகுதி நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது செய்யலாமே!!

இங்கு சாலையை கடந்து எவ்வளவு பேர் உயிர்விட்டார்களோ?அது இனிமேல் நடைபெறாமல் இருக்க இதை படிக்கும் யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்/தெரியப்படுத்துங்கள்.

Wednesday, July 23, 2008

வீடே சூளையானால்??

சுண்ணாம்பு சூளை

செங்கல் சூளை

இன்னும் என்னென்ன சூளை இருக்கோ தெரியாது, ஆனால் சென்னையில் நான் பார்த்தவரையில் பல இடங்களில் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும் மற்றும் ஒரு வீட்டுக்கும் மறுவீட்டுக்கும் போதிய இடவெளியில்லாமல் கட்டப்படும் வீடுகளில் உள்ளே இருக்கும் இருக்கும் வெப்பம் கிரீன் ஹவுஸ் வெப்பம் போல் உயர்ந்துகொண்டு போய்கொண்டு இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் மின்விசிறி இல்லாவிட்டால் போதும், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கழகத்தில் உள்ளே இருந்து பயிற்சி செய்ததற்கு சமமாக வேர்வை வெளியாகிவிடும்.இரவு நேரத்தில் மின்சாரம் போய்விட்டால் அவ்வளவு தான், மொட்டை மாடியை நோக்கி படையெடுப்பதை தவிர வேறுவழியில்லை. உங்கள் வீடு கூரை தான் மேற்மாடியென்றால் அவ்வளவு தான். False Ceiling போட்டாலும் எந்தவிதமான வித்தியாசம் இல்லாமல் வீட்டையே சூளையாக்கிவிடும் இப்போதிருக்கும் சூடு.

இதை தடுக்க/தப்பிக்க என்ன வழி?

1.வேறு வீடு பார்க்கவேண்டியது தான்.

2. பணம் இருந்தால் / நல்ல அஸ்திவாரம் இருந்தால் மேல்மாடியில் கூரை போடலாம்.

3.மேற்கூரை மட்டும் பிரச்சனை அல்ல என்பதால் கிழக்கு / மேற்கு நோக்கி உள்ள சுவர்களுக்கு Cladding போன்ற தடுப்புச் சுவர் எழுப்பலாம். ஏற்கனவே கட்டிய வீடு என்றால் மேலும் பிரச்சனை தான்.

4.இந்த கடைசி வழி எனக்கு சுலபமாக தெரிகிறது அதே சமயம் கொஞ்சம் காசும் கம்மியாக தெரிகிறது.இது ஒரு வகையான பெயின்ட்.Thermal Insulation Paint.

இந்த பெயின்ட் சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் அப்படியே பிரதிபலித்துவிடுகிறது.இது வெப்பத்திற்கு மட்டுமில்லாமல் தண்ணீரையும் தடுக்கவல்லது.அதனால் மழைக்காலத்தில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவு இருக்காது.இதை கான்கிரீட்/டைல்ஸ் மீதும் அடிக்கலாம் என்று இதை உற்பத்தி செய்பவர்கள் சொல்கிறார்கள்.

இதை உபயோகப்படுத்திய ஒருவரின் வீட்டை பார்க்க நேரிட்டது. முதல் படம் சாதாரண நிலையில் உள்ள மேற்கூரை





கீழே உள்ள இரு படங்களும் அந்த பெயின்ட் அடித்தபிறகு







இதை அடிப்பதற்கு சதுர அடிக்கு ரூபாய் 20 ~ 25 கேட்கிறார்கள்.(பெயின்ட் விலையுடன் சேர்த்து).அதிக பரப்பளவு இருக்கும்பட்சத்தில் பேரம் பேசலாம்.

உங்க வீட்டின் உள் சூடு அதிகமாக இருக்கா? முயன்று பாருங்கள்.

Tuesday, July 15, 2008

இது என்ன Design னோ!

சென்னை தில்லைகங்கா நகரை சுற்றி இருக்கும் தார் சாலைகளை கான்கிரீட் சாலையாக மாற்றி வருகிறார்கள்.அது நல்லதோ கெட்டதோ அடுத்த ஆட்சி வரும் வரை தெரியாது,என்ன! ஒரே ஒரு அனுகூலம், நினைத்த நேரத்துக்கு வீட்டுக்காரங்க சாலையை தோண்டமுடியாது.அதே சமயத்தில் மின்வாரியமோ அல்லது கழிவுநீர் நிர்வாகமோ போடவேண்டிய குழாயை போட மறந்தாலோ அல்லது மேம்பாட்டிற்காக மேலும் போடவேண்டி வந்தாலோ,அவ்வளவு தான்.

சரி,இப்போது அதை யோசித்து பிரயோஜனம் இல்லை.கான்கிரீட் சாலை தான் போட்டார்களே பக்கத்தில் உள்ள வீட்டுக்கு ஆட்கள் எப்படி போய் வருவார்கள் என்ற எண்ணம் கூடவா இருக்காது? இல்லை, இருந்திருந்தால் சாலை போட்டு ஒரு வருடம் கழித்து தான் நடைபாதை அமைப்பார்களா? அல்லது அது இவர்கள் வேலையில்லையா?



சாலையில், நடக்கும் பறக்கும் வண்டிகள்,மனிதர்கள் இரவு நேரத்தில் மின்வெட்டு சமயத்தில் அதில் காலை வைத்தால் அரசாங்கத்தின் அனுமதியுடன் பரலோகம் போகலாம்.என்ன! எப்போதாவது இழப்பீடு கிடைக்கலாம்,இருந்தாலும் அது வருவதற்குள் இழப்பீடு கேட்டவர் மேலே போயிருக்கக்கூடும். இது முடிவில்லா சங்கிலித்தொடராக நடக்கும்.



அதெல்லாம் விடுங்க,அது பொது மக்களின் வீடுகள்,அவர்களுக்கு தேவையானதை அவர்கள் தான் செய்துகொள்ளவேண்டும்,எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கமுடியாது அல்லது கூடாது.சாலையை திடிரென்று 3 அடி ஏற்றினால் நாமும் நம் வீட்டை அதற்கு தகுந்த மாதிரி ஏற்றிக்கொள்ளவேண்டும். :-(

கீழே உள்ள படத்தை பாருங்கள்...

குறைந்த சம்பளத்தில் உள்ளவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு பொதுவினியோக முறையில் அத்தியாவசியமான சாமான்கள் வழங்கும் இடத்துக்கு போகும் பாதையை பாருங்கள்.சவுக்கால் ஆன மரப்பாலம்,அதைப்பார்த்து தான் முதல்வர் சிரிக்கிறாரா??



இந்த பாலத்துக்கு மேல் கொஞ்சம் குண்டான மனிதர் போனால் அவ்வளவு தான் கீழே உள்ள கால்வாய் அவருக்கு சமாதி கட்டிவிடும்.பக்கத்தில் இருக்கும் கான்கிரீட் சிலாபை பார்க்காதீர்கள் அதற்கு சவுக்கு பாலமே மேல்.

இதைப்பற்றி கட்டுமானத்துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் விளக்கம் கேட்டேன்.அவர் சொன்னது "இனிமேல் தான் அதன் மேல் ஸ்டீல் கிரில் போடுவார்கள் என்றார்" அது உண்மையாக இருக்கும் என்று நம்புவோமாக,அதற்குள் இதனால் யாரும் உயிரிழக்காமல் இருக்கவேண்டும்.

Wednesday, June 18, 2008

பிக்பாக்கெட்டா? தொலைந்ததா?

அடையாள அட்டை தொலந்து இரண்டு வாரம் ஆகியும் எந்த விபரமும் கிடைக்காததால், போலீஸ் ரிப்போர்ட்டுடன் குடிநுழைவுத்துறைக்கு போனேன்.வரிசை பிடித்து நின்றேன்,இப்படி நிற்க ஆரம்பிக்கும் போதே ஒரு ஒழுங்கு முறை ஆரம்பமாகிவிடுகிறது,யாரும் யாரையும் மோதுவதில்லை அடுத்தவரை கள்ளத்தனமாக முந்திக்கொண்டு போவதில்லை.நம்மவர்கள் இருந்தால் நம் தோளுக்கு மேல் ஒரு வாட்டியாவது எட்டிப்பார்காமல் இருக்கமாட்டார்கள்,அப்படி என்ன அவதியோ! இது சாப்பாட்டுக்கடை வரிசையில் நடக்கும்.கோமளவிலாசுக்கு போனால் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

என் முறை வந்தது,போலீஸ் கடிதத்தை கொடுத்ததும்அந்த அதிகாரி ஒரு கேள்வி கேட்டார்,யாராவது விபரமானவங்க பதில் சொல்லுங்கள்...

திடிரென்று சாப்பிட போன இடத்தில் என் அடையாள அட்டை காணாமல் போய்விட்டது,இதை எப்படி வகைப்படுத்துவது?

காணாமல் போனதாகவா? அல்லது பிக்பாக்கெட் யில் இழந்ததாகவா?

பிக்பாக்கெட் என்றால் எனக்கு அரை குறையாக தெரியும் என்று எதிர்பார்க்கிறார்களா?

இதைத்தான் அந்த அதிகாரி என்னிடமும் கேட்டார். நான் சொன்னேன் எனக்கு காணாமல் போனது தான் தெரியும் அதை எப்படி பிக்பாக்கெட் என்று வகைப்படுத்தமுடியும் என்று?அவர்களுக்கு சொல்லி கொடுத்துள்ளதில் இது இரண்டைத்தவிர வேறு இல்லாத்தால் அந்த அதிகாரியால் எதுவும் சொல்லமுடியவில்லை.நீங்கள் தான் ஒன்றை தேர்ந்தெடுத்து சொல்லனும் என்றார். எனக்கு இருந்த அவசரத்தில்"காணாமல்" தான் போனது என்றேன்.

அப்படியென்றால் 100 வெள்ளி கட்டிவிட்டு இரண்டு வாரம் கழித்து அடையாள அட்டையை எடுத்துச்செல்லுங்கள் என்றார்.பணத்தை கட்டி வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது.

காணாமல் போனது என்றால்- என்னுடைய தவறு - அதற்கு 100 வெள்ளி தெண்டம்

பிக்பாக்கெட் என்றால் - என் தவறு இல்லை -- அதற்கு 50 வெள்ளி தெண்டம்.

என்ன செய்வது எல்லாவற்றையும் பட்டு தான் தெரிந்துகொள்ளமுடிகிறது.

அடையாள அட்டை தொலந்தால் என்னென்ன பிரச்சனை வரும் பார்ப்போமா?

1.கள்ளக்குடியேறி உபயோகிக்க பயன்படுத்தலாம். (நல்ல வேளை இது என் அட்டையில் நடக்கவில்லை)

2.உங்கள் அட்டையை வைத்து கள்ள வட்டிக்கும்பலிடம் கடன் வாங்கலாம்.

3. இருக்கும் எல்லா தொலைபேசி நிறுவனத்திலும் கணக்கு ஆரம்பித்து புது தொலைப்பேசி/ அந்த மாதத்தில் பேசப்படும் அழைப்புகளுடன் கம்பிநீட்டலாம். தலைப்பேசி நிறுவனங்களுக்கும் குடிநுழைவுத்துறையும் இந்த தகவல்களை பகிர்ந்துகொள்வதில்லை.இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான்.தகவல்கள் கை மாறி மாறி நம் தகவல்கள் எங்கெல்லாம் போய் நிற்கும் என்று தெரியாது பாருங்கள்.

4.எனக்கு தெரியாம இன்னும் பல வழிகள் இருக்கலாம்....

இதில் எங்கெங்கு மாட்டிக்கொண்டேன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, June 1, 2008

Lau Pa Sat



மேலே உள்ள படம் தான் லாவ் ப சாட் என்கிற இடம்.இதனுள் பல உணவு அங்காடிகள் உள்ளது.இதன் முந்தைய வரலாறு சிங்கப்பூருடன் தொடர்புடையதால் வெளி அமைப்பை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள்.இந்த பகுதி மத்திய வட்டார இடத்தில் உள்ளதால் பல நாட்டுக்காரர்களும் உபயோகப்படுத்தும் விதமாக விதம் விதமான சாப்பாடுகள் கிடைக்கும்.விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

வரலாற்றுப் பின்னனியில் இருக்கும் இக்கட்டிடம் என்னுடைய வாழ்விலும் வரலாறு படித்தது அதை பிறகு சொல்கிறேன்.

நாங்கள் கட்ட இருந்த கட்டிடம் Exchange Centre என்று இப்போது அழைக்கப்படுகிற கட்டிடம் ஆகும்.எங்கள் வேலை 3வது மாடியில் இருந்து ஆரம்பிக்கும் என்பதால் கட்டிடம் தரையில் இருந்து எழும்பிய பிறகே போனோம்.Capital Tower யில் செய்த பணி போலவே இதுவும் அதனால் வேலை வித்தியாசம் அவ்வளவாக இல்லை.என்ன! இப்போது குத்தகைகாரர் மாதிரி வேலை பார்க்கனும் என்பதால் ஆட்களை வேலை வாங்குவதும் சில ரக இயந்திரங்களை ஓட்டவும் கற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.ஒவ்வொரு நாள் தேவைக்கும் வேண்டிய சகலமானவற்றையும் பார்த்துக்கொள்வதும் நம் கையில் விழுந்தது.எல்லா நாட்களும் வேலை இருக்காது என்பதால் சில நாட்கள் சாப்பிட மட்டுமே வேலைக்கு வருவது போல் தோன்றியது.
சில நாட்களுக்கு காலை அலுவலகம் வந்த 20 நிமிடத்திலேயே கண்ணை கட்ட ஆரம்பித்துவிடும்.குளிர்சாதனம் பிரச்சனையும் இதில் உதவியது.அப்போதே முடிவு செய்தேன் இந்த நிறுவனத்தை விட்டு விட வேண்டும் என்று.அதோடு அப்போது அந்நிறுவனத்திலும் உள் பிரச்சனைகள் கட்டுக்கு அடங்காமல் போய்கொண்டிருந்தது என்று காற்று வாக்கில் வரத்தொடங்கியது.

சிங்கையில் வேலை நிலவரம் மேம்படும் வரை காத்திருப்போம் என்று காத்திருந்தேன்,அப்படி எதுவும் நடப்பதற்கான அறிகுறி கட்டுமானத்துறையில் தெரியவில்லை.



இரண்டு பிலாக்குகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் எங்கள் வேலை,அதோடில்லாமல் மேலே சரிவாக இருக்கும் பகுதியும் ஸ்டீலால் ஆனதும் எங்கள் வேலை.இதில் வலது பக்கம் இருக்கும் கூரையில் வேலை ஆரம்பிக்கும் வரை தான் நான் இங்கு இருந்தேன்.

மேலும் சில படங்கள் கீழே...





இப்படி அப்படி என்று 8 மாதங்கள் ஓடி ஒரு நேர்காணலுக்கும் அழைப்பு வரவில்லை.வரும் விளம்பரங்களில் பலவற்றில் உள்ளூர்காரர் வேண்டும் என்றோ அல்லது இரு மொழி (சீனம் & ஆங்கிலம்) பேசும் ஆட்கள் மட்டுமே தேவை என்று வந்துகொண்டிருந்தது.சனிக்கிழமை வரும் செய்திதாளில் வரும் விளம்பரங்கள் குறைந்து சில பக்கங்களே வந்தது.அதை வைத்தே சிங்கையில் வேலை நிலவரம் எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். :-)

இப்படி போய்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் பக்கத்தில் உள்ள லா ப சாட்டில் சாப்பிட போனேன்.உணவு ஆர்டர் செய்யும் போது பையில் கையைவிட்டா....! என்னுடைய அடையாள அட்டையுடன் வங்கி அட்டை இருக்கும் சின்ன பை காணாமல் போயிருந்தது. ஷாக் அடித்தது போல் இருந்தது.எங்கு தொலைத்தேன் என்று தெரியவில்லை.அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தேனா? அல்லது இங்கு பிக்பாக்கெட்டிடம் இழந்தேனா? என்று தெரியாத குழப்பத்தில்,முதலில் செய்தது வங்கி அட்டையை முடங்கச்செய்ய தொலைபேசியது தான்.

பல இடங்களிலும் கிடைக்காததால் அன்று சாயங்காலம் காவல்துறை போஸ்ட்க்கு சென்று ரிப்போர்ட் செய்தேன்.அவர்களோ இன்னும் ஒரு வாரம் வரை காத்திருக்கச்சொன்னார்.யாராவது எடுத்திருந்தால் ரிப்போர்ட் செய்ய அவசியம் இல்லாமல் போகக்கூடும் என்பதால்.ஒரு வாரம் வரை எந்த விதமான விபரமும் கிடைக்காததால் திரும்ப அவர்களிடம் போய் ஒரு ரிப்போர்ட் வாங்கி வந்தேன்,அதை வைத்து தான் வேறு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அதற்கு வேறு தெண்டம் அழனும்.

இன்னும் வரும்...

Sunday, May 25, 2008

மீண்டும் Recession

இந்த கேப்பிடல் டவரில் வேலை ஆரம்பித்த ஒரு வருட காலத்துக்குள் என் வரையரையில் இருந்த வேலை முடிந்து சின்னச்சின்ன வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.அங்கிருந்த பல கொரியர்களின் வேலையும் முடியும் சமயத்தில் இருந்தது அதே சமயத்தில் வேறு புதிய வேலையும் இவர்களுக்கு கிடைக்கவில்லை...கத்தியை கையில் எடுக்க ஆரம்பித்தார்கள்.

சமீபத்தில் சேந்தவர்கள்,வெளிநாட்டவர்கள்,நிரந்தரவாசிகள் கடைசியாக உள்ளூர்காரர்கள் என்று வகை வகையாக “கொத்து பரோட்டா” போட்டார்கள். அதில் என் பெயரும் வந்து வயிற்றில் புளியை கரைத்தது.இந்த கால கட்டத்தில் சிங்கையில் கட்டுமானம் அடி மட்டத்தை தொட்டு அதற்கும் கீழே போகமுடியுமா? என்று பார்த்துக்கொண்டு இருந்தது.

இந்த நிலையில் அரசாங்கம் தன்னிடம் உள்ள MRT என்று சொல்லப்படுகிற ரயில் சேவையை விரிவுபடுத்த எண்ணி அதற்கான கட்டுமான குத்தைகளை விடுவிக்க ஆரம்பித்தது.இது ஓரளவுக்கு சூட்டை தணிக்க உதவினாலும் பலர் வேலையில்லாமல் திண்டாடினோம்.

இந்த கம்பெனி ஆரஞ்சு கடிதாசி கொடுத்து ஒரு மாத நோட்டிசு நேரத்தில் பல வேலைகளுக்கு எழுதி போட்டேன்,அதனால் எந்த பயனும் இல்லாமல் இருந்தது இன்னும் கலக்கத்தை உண்டுபண்ணியது.இந்த ஒரு மாதம் முடியும் நேரம் வந்தது அந்த நேரத்தில் இந்த கொரியன் கம்பெனியில் இருந்த குத்தகைகாரருக்கு ஆட்கள் தேவைப்பட்டது.

என்னடா! இது நாம் வேலை வாங்கிய நிறுவனத்திலேயே போய் வேலை செய்வதா என்ற தயக்கம்.அந்த நேரத்தில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் பட்சத்தில் இப்படி வேலை கொடுக்கிறேன் என்று சொல்லும் நிறுவனத்தில் இருந்துகொண்டு மேற்கொண்டு முயலலாம் என்ற எண்ணத்துடன் அந்த ஸ்டீல் கம்பெனியில் சேர்ந்தேன்.சம்பளமும் குறைவு தான் ஆனால் வேறு வழியில்லை.

இந்த புது கம்பெனி நேர்காணலே புதுவிதமாக இருந்தது.என்னைப்பற்றி அனைத்து தகவலும் அங்கு இருந்த மனவாடுக்கு சொல்லப்பட்டிருந்தது.அவர் தான் தரக்கட்டுப்பாட்டுக்கு தல அவருடைய அணியின் கீழ் தான் நான் வந்தேன்.நேர்காணலுக்கு போய் உட்கார்ந்த உடனே அங்கிருந்த மக்கள் வளத்துறை சம்பிரதாய கேள்விகளை கேட்டு பதில் வாங்கிக்கொண்டு நிபுணத்துவ கேள்விகளுக்காக அந்த பெண்மனி நம் மனவாடை பார்க்க...
எனக்கு இவரைப்பற்றி தெரியும் அதனால் கேள்வி எதுவும் இல்லை என்று சொல்லி முடித்துவிட்டார்.மனித வள அதிகாரி முழித்தது இன்னும் கண்ணில் நிற்கிறது.

இவர்கள் வேலை Lau Pau Sat என்ற பிரபல உணவங்காடிக்கு பக்கத்தில் இருந்தது.இதில் உள்ள சில இரும்பு வேலைகள் இவர்களிடம் வந்தது.

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, May 11, 2008

மரண பயம்...

போன பதிவில் இந்த கட்டிடம் எப்படி எழுப்பப்படுகிறது என்பதை சொல்லியிருந்தேன்,அதை மிகவும் எளிதாக காட்ட ஒரு படம் கிடைத்தது அது உங்கள் பார்வைக்கு.

சுலபமாக சொல்லவேண்டுமென்றால் இந்த நகர்படத்தை பாருங்கள்.பல வேலைகள் இதை ஒத்தே இருந்தது.

இதே முறையை 52 மாடிகளுக்கும் பின்பற்றினோம்.

இது இரும்பு வேலை என்பதால் எல்லா சமயத்திலும் நூறு சதவீத பாதுகாப்பை எதிர்பார்க்கமுடியாது,சிலவற்றை தள்ளிப்போடலாம்.ஆனால் மனித மனம் தான் குரங்காயிற்றே!!
யாராவது ஒரு காரியம் செய்தால் அது நமக்கு கைவரும் வரை நமைச்சல் தான்.
அதே மாதிரி தான் இரும்பு பீம்களின் மேல் வேலைசெய்வது. ஒரு முனையில் மேற்பார்வை முடிந்தவுடன் அடுத்த முனைக்கு போவதற்கு அந்த பீமின் மேலேயே பாதுகாப்புக்கு கயறு கட்டியிருக்கும் அதனுள் உங்கள் பாதுகாப்பு வாரினை இணைத்துக்கொள்ளவேண்டும்.இது முறை.இல்லாவிட்டால் தூணில் மேலிருந்து கீழிறங்கி பிறகு அடுத்த தூணின் மேல் ஏறவேண்டும்.கால் கயன்றுவிடும்.இதை தவிர்க கழைக்கூத்தாடி மாதிரி பீமின் மேல் நடந்து அடுத்த தூணுக்கு போவோம்.

சில சமயங்களில் அந்த வேலையை செய்ய கால அவகாசம் பிடிக்கும்,வேறு வேலை செய்ய குறுக்கு வழிக்காக கயறு இல்லாத பீம்கள் மேல் நடக்கவேண்டி வரும்.இது தவறு தான் ஆனால் இந்த வேலை செய்பவர்கள் பலரும் இப்படித்தான் நடப்பார்கள்.

என்னுடைய ஆரம்ப கால கட்டுமானபணிகளின் போது அவ்வப்போது இந்த மாதிரி பாதுகாப்பற்ற முறையில் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்துள்ளேன்.அதுவே பழக்கமாகி இங்கும் தொடர்ந்தது.இது பாதுகாப்பற்றது என்பதால் அவசியமில்லாத நேரங்களில் செய்யமாட்டேன்.விதி யாரை விட்டது!!

அப்போது எங்கள் கட்டிடம் 27 மாடியை அடைந்திருந்தது.வழக்கம் போல் வேலை மற்றும் inspection என்று போய்கொண்டிருந்தது.என்னுடன் மேற்பார்வை செய்ய வந்திருந்த இன் ஜினியருடன் inspection க்காக போய்கொண்டிருந்தேன்.

அப்போது தான் முடுக்கிய பீமின் மறு பக்கத்தில் ஒன்றை செக் செய்யவேண்டும் என்று அழைப்பு வந்தவுடன் என்னுடன் வந்த இன் ஜினியர் கயறு கட்டாத பீமின் மேல் நடந்து அக்கரை சென்று சேர்ந்தார்.பாதுகாப்பு கயறு கட்டாமல் inspection எதற்கு கூப்பிடுகிறீர்கள் என்று குத்தகைக்காரரை திட்டிவிட்டு நானும் அந்த பீமின் மீது நடக்க ஆரம்பித்தேன்.

அந்த பீமின் ஒரு பக்கம் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள சாலை மறுபக்கம் இன்னும் முடிவடையாமல் இருக்கும் எங்கள் கட்டிடத்தின் ஒரு பகுதி - ஒரு 10 மீட்டர் ஆழத்தில் இருக்கும் சாரம்.

எப்போதும் போல் தான் நடந்தேன்,பாதி தூரம் கடந்திருப்பேன் என்னவாயிற்று என்று தெரியவில்லை...அடுத்த அடி எடுக்கமுடியவில்லை.என்னுடைய உடம்பு அப்படியே உறைந்துவிட்டது.இந்த மாதிரி நடக்கும் போது நடுவில் நிற்கக்கூடாது எனபது பால பாடம்.
பாதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்த அந்த பொறியாளர் புரிந்துகொண்டார.அங்கிருந்த படி என்னை பார்த்து அப்படியே அந்த பீமின் மீது உட்காரச்சொன்னார்.

என்னால் காலையே நகர்த்த முடியாத பட்சத்தில் எப்படி உட்கார்வது,உட்கார முயற்சிக்கும் நேரத்தில் கொஞ்சம் சாய்ந்தாலும் அவ்வளவு தான் 60 அல்லது 10 மீட்டர் கீழே போக வேண்டும்.என்னை முதலில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்சொன்னார் அந்த பொறியாளர்.சில நிமிடங்கள் ஒன்றும் செய்யவில்லை அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காலை நகர்த்த முயற்சித்தேன்.



காலை ஓரளவு நகர்த்த முடிந்தாலும் மேல் நடக்க தைரியம் வரவில்லை.இப்போது மெதுவாக ஒரு காலை மட்டும் கீழிறக்கி பீமின் கீழ் பகுதி வரை கொண்டு போய் உட்கார முயற்சித்தேன்.பல முறை முயற்சித்து ஓரளவு தன்னம்பிக்கை வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து அப்படியே ஒரு காலை மடக்கிக்கொண்டு வந்து உட்காரும் நிலை வந்தவுடன் அப்படியே பீமை கட்டிப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன்.அதன் பிறகு அதன் மீதே கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து மறுமுனையை வந்தடைந்தேன்.

இந்த நிகழ்வில் இருந்து காலில் இருந்த ஒரு freeness போய்விட்டது.அதற்குப்பிறகு இப்படி முயற்சிப்பதையே விட்டுவிட்டேன்.

இதை படிப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு இதைச் சொல்லுங்கள்,எக்காலத்திலும் இந்த மாதிரி முயற்சிக்கக்கூடாது என்று.