Wednesday, March 12, 2008

நிரந்தரவாசி

சேர்ந்த 2 மாதங்களுக்குள் வேலை அனுமதிசீட்டு கிடைத்தது அதன் பிறகு அடுத்த நிலையான நிரந்தரவாச தகுதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு வேலை செய்யும் நிருவனத்தின் உதவி கட்டாயம் தேவைப்படும்,அவசியமில்லாவிட்டாலும்.என்னுடைய ஒப்பந்த விதிகளின்படி ஓராண்டு கழித்து தான் விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஒரு வருடம் காத்திருந்தேன்.

இதற்கிடையில் பழைய கம்பெனியில் இருந்து, வருகிறாயா? இல்லை உன்னை வேலை நீக்கம் செய்யவா? என்று கடிதம் வந்தவுடன் தகப்பானரிடம் சொல்லி என்னுடைய Resignation கடிதத்தை அனுப்பினேன்.அப்படி இப்படி என்று 13 வருட இந்திய கட்டுமானத்துறை வாழக்கை முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் இருந்தவரை ஒரு லட்சம் ரூபாய் என்பது அடையமுடிய (13 வருடங்களுக்கு முன்பு) சங்கதியாக இருந்தும் இங்கு வந்து 4 மாதம் முடிந்தவுடன், ஏன் பலரும் வெளிநாடு நோக்கி ஓடுகிறார்கள் என்று புரிந்தது.புரிந்துகொண்டும் இருக்கிறது.

இந்த நிருவனத்தில் ஒரு வருடம் முடிந்தவுடன் நிரந்தரவாச தகுதிக்கு விண்ணப்பித்தேன்,அதற்கு முன்னால் என்னென்ன விபரங்கள் அளித்தால் விரைவாக பெறமுடியும் என்று பல அனுபவஸ்தர்கள் உபாயம் கொடுத்தார்கள்.

தெரிந்தவர்கள் பட்டியலில் உள்ளூர்வாசிகள் இருந்தால் நலம் என்பதால் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவரது பெயரை போடலாம் என்று நினைத்து அவரை அழைத்தேன்.விபரத்தை சொன்னவுடன்,சந்தோஷமாக ஒப்புக்கொண்டு அவருடைய விபரங்கள் கொடுத்து உதவினார்.அவர் போலிஸில் வேலை செய்து நல்ல பெயர் எடுத்திருந்ததால் என்னுடைய விண்ணப்பம் ஓரளவு எடுபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த கால கட்டத்தில் பலருக்கும் விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதத்திலிருந்து 1 வருடம் கழித்து தான் நிரந்தரவாசத் தகுதி கிடைத்தது.அந்த எண்ணத்தில் விண்ணப்பித்த பிறகு அதை மறந்துவிட்டேன்.அதோடில்லாமல் என்னுடைய முகவரியை எனது சொந்தக்காரர் வீட்டின் முகவரியில் கொடுத்திருந்தேன்.எப்போதும் மாதம் ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு தொலைபேசுவேன்,ஒன்றும் சிறப்பு விஷயம் இல்லாததால் 3 மாதங்களாக அவர்களுக்கு தொலைபேசவில்லை.ஒரு நாள் ஞாபகம் வந்து அவர்களுக்கு தொலைபேசிய போது தான் என்னுடைய நிரந்தரவாச தகுதியை அங்கீகரித்திருப்பதாகவும் வந்து பெற்றுக்கொள்ள வேண்டிய தேதியையும் கொடுத்திருந்ததாக சொன்னார்கள்.மிகவும் சந்தோஷமாக இருந்தது.நிரந்தரவாச தகுதி இருப்பதில் பல அனுகூலங்கள் உண்டு, இன்றும்.அவற்றில் சில..
1.வீடு வாங்க முடியும்
2.CPF உண்டு
3.குழந்தைகள் படிப்புக்கு செலவு குறைந்த பள்ளி கட்டணம்.
4.மருத்துவ செலவில் கழிவு உண்டு.
5.மிக முக்கியமாக உங்களை வேலைக்கு எடுக்க தயங்கமாட்டார்கள்.வேலை தான் கிடைக்கனும்.

அனுகூலம் மட்டும் தானா? என்றால்.. அது அவரவரின் தனிப்பட்ட பார்வையை பொருத்தது.

சரி, நிரந்தரவாச தகுதி கிடைத்தவுடன் மனைவி/மக்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது தான் பையன் இந்தியாவில் 2 வது வகுப்புக்கு போய் 3 மாதங்கள் ஆனது, இங்கு வந்தால் எந்த வகுப்பில் சேர்ப்பார்களோ என்ற குழப்பம் வேறு.

அது அடுத்த பதிவில்.

Tuesday, March 11, 2008

Auto-Cad 2008

அலுவலகத்தில் இந்த மென்பொருளை (புதியது என்ற சொல்ல அவசியம் இல்லை)
நிறுவினார்கள்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்..





இதன் பழைய வெர்ஷன்கள் ஆதாவது ஆட்டோ கேட் R13 போன்றவைகள் உபயோகித்தவர்களுக்கு இதன் முன்னேற்றம் வெளிப்படையாக தெரியும்.

ஒரு கோடு போட அதன் அளவு மற்றும் கோணம் என்று பலவற்றை திரையிலே அதுவும் மவுஸ் கர்சர் பக்கத்திலேயே தெரியும்படி அமைத்திருக்கார்கள்.அட்டகாசமாக இருக்கு.

கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

Sunday, March 9, 2008

தன்னம்பிக்கை

இந்த சலனப் படத்துக்கு விளக்கம் தேவையா என்ன?

இன்று காலை சன் தொலைக்காட்சியில் போட்டார்கள்.

வாழ்வின் எந்த அளவு எல்லைக்கு துரத்தப்பட்டிருந்தால் ஒரு பையன் இந்த அளவுக்கு பேச முடியும்???

பொது ஜனத்தின் கண்ணீர் மூலம் இக்குடும்பம் வாழ வழிகிடைத்தால் நல்லது.




காலத்தின் கொடுமை தான்.

நன்றி: சன் தொலைக்காட்சி.

Wednesday, March 5, 2008

கன்டெய்னர்

வந்த சில நாட்களிலேயே இங்குள்ள வேலை/வாழ்கை முறை பிடிபட ஆரம்பித்தது.

என்ன தான் உறவினர் வீட்டில் தங்கியிருந்தாலும் நான் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேட ஆரம்பித்தேன்.வாடகைக்கு அறை எடுக்கவேண்டும் ஆனால் எனக்கு வேலை அனுமதி சீட்டு கிடைக்காத பட்சத்தில் ஒரு வருட காலத்துக்கு எப்படி ஒரு அறை வாடகைக்கு எடுக்கமுடியும்?இந்த சைட்டில் என்னுடன் மேலும் ஒரு தமிழர் வேலை பார்த்துவந்தார் அவர் தினமும் வெளிநாட்டில் இருந்து தான் வேலைக்கு வருவார்.

என்னது வேலைக்கு வெளிநாட்டில்!! அதுவும் தினமுமா?

ஆமாம்.

இவர் மலேசியன்,மோட்டார் பைக் மூலம் தினமும் ஜோஹர் பாருவில் இருந்து சிங்கைக்கு வேலைக்கு வருவார்.இவரை மாதிரி பலரும் இங்கு வந்து வேலை செய்கிறார்கள்.காரணம் Conversion Factor தான்.
இப்போதும் 1 சிங்கப்பூர் வெள்ளிக்கு 2.45 ரிங்கட் கிடைக்கிறது.வீடு மலேசியாவில் வேலை சிங்கப்பூரில்.

நான் வந்த புதிதில் எனக்கு நிறைய உதவிகள் செய்தார்.என்னைப்போல் பல நாடுகளில் இருந்து இங்கு வேலை செய்ய வந்த மேற்பார்வையாளர்களுக்காகவும் இரவு வெகுநேரம் கழித்து முடிந்து வேலை இடத்திலேயே தூங்குவதற்காகவும் ஒரு கன்டெய்னரை சில படுக்கைகளுடன் ஒரு அறையாக மாற்றியிருந்தார்கள்.அதில் ஒரு சீன சீனர்,மலேசிய சீனர் & பிலிபைன்ஸ்காரர் இருந்தார்கள். என்னுடைய நிலமையை பார்த்த அந்த மலேசியர் அங்கு தங்கியிருப்பவர்கள் கூட பேசி என்னை அங்கேயே தங்க அவர்களின் அனுமதியை வாங்கினார்.

அடுத்த ஒரு சில நாட்களில் அந்த கன்டெயினர் அறைக்கு மாறினேன்.சாப்பாட்டுக்கு தினமும் வெளியில் பக்கத்தில் உள்ள Hawker செண்டர் போய் சாப்பிட்டு வந்தேன்.அதை பார்த்த ஒரு தொழிலாள நண்பர் அவரே சாப்பாடும் ஏதோ ஒரு குழம்பும் கொடுக்கிறேன் என்றார்.அதற்குண்டான பணத்தை கொடுத்துவிடுவேன் என்று சொல்லி சாப்பிட்டு வந்தேன்.
அவர் பெயர் முருகானந்தம்- ஊரில் டிப்ளோமா படித்துவிட்டு கூலி வேலைக்கு வந்துவிட்டார்.கேட்கவே கொடுமையாக இருந்தது ஆனால் வேலை அறிவு அவ்வளவாக இல்லாமல் இருந்ததால் அவரை சிறிது சுலபமான சர்வே வேலைக்கு மாற்றிவிட்டோம்.

இந்த சைட்டில் வேலை எல்லா கட்டுமான வேலை போல் இருந்தாலும் ஒரே ஒரு வேலையை பற்றி சொல்லவேண்டும்.இந்த வேலையை விளக்கவேண்டும் ஆனால் கொஞ்சம் டெக்னிகலாக இருக்கும்.எனக்கு சொல்லத்தெரிந்த வரை சொல்கிறேன்.

அந்த வேலை தான் "Post/Pre Tensioning".இந்த நுட்பம் பெரிய பெரிய கட்டுமானத்துறை பிராஜக்டில் உபயோகப்படுத்துவார்கள்.ஆதாவது ஒரு பீமின் முட்டுகள் (சப்போர்ட்) அதிக இடைவெளியில் இருக்கும் பட்சத்தில் அதன் Bending Moment ஐ தாங்க நிறைய கம்பிகள் போடவேண்டியிருக்கும் அதோடு பீமின் அளவும் அதிகமாகவும் இருக்கும்.இதை மட்டுப்படுத்த ஏற்பட்ட தொழிற்நுட்பம் தான் இந்த முறை.




இந்த நுட்பப்படி பீமுக்கு ஒரளவுக்கு கம்பி போட்டு விட்டு பீமின் கீழும்/மேலும் கீழே வருமாறு ஒரு ஸ்டீல் பைப் போட்டு அதன் உள்ளே மெல்லிய கம்பிகளை போட்டு பீமின் இருபக்கமும் அந்த கம்பி வெளியில் நீட்டிக்கொண்டு இருக்குமாறு செய்துவிடுவார்கள்.

அந்த பீமின் கான்கிரீட் முடிந்து ஓரளவு இறுகியவுடன் ஒரு பக்கத்தில் Cone போன்ற அமைப்புடன் கூடிய தடுப்பான் மூலம் அந்த கேபிளை பிடித்துவைத்து அடுத்த முனையில் Jack மூலம் கேபிளை இழுத்து இந்த முனையையும் பிடித்துவைத்துவிடுவார்கள்.அதன் பிறகு இந்த கேபிளை கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.அதன் படம் கீழே



இதன் குறுக்கு வெட்டு தோற்றம் இப்படி இருக்கும்.



இதே முறையை சிலாபுக்கும் இங்கு உபயோகிக்கிறார்கள்.இதில் பல அனுகூலங்கள் இருப்பதால் பல மாடிகட்டிடங்களில் இதன் தேவை அத்தியவசமாகி வருகிறது.

இன்னும் வரும்...

Tuesday, February 26, 2008

விபத்து

கட்டுமானத்துறை - விபத்து இரண்டையும் எப்போதுமே பிரிக்கமுடியாதது, ஆனால் குறைக்க முயலலாம்.

ஒரு விபத்து எப்படி நடக்கிறது என்பதை கீழே உள்ள சலனப்படத்தின் மூலம் பார்க்கலாம்.

இதில் பல விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றாலும் கட்டுமானத்துறையில் ஏர் பிடித்திருப்பவரை கொண்டு வந்து விட்டால் இந்த மாதிரி விபத்துக்கள் சுலபமாக நடக்கும்.



நன்றி: யூ டியூபில் போட்ட மனிதருக்கு.

Thursday, February 14, 2008

சிங்கப்பூர் வாழ்கை

போன பதிவில் 1995 வந்ததோடு முடித்திருந்தேன்.

இரண்டாவது முறையாக வருவதால் இடம் & பயணம் என்ற பிரச்சனை எதுவும் இல்லாமல் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அலுவலக முகவரியை Street Directory மூலம் தெரிந்துகொண்டு கிளம்பினேன்.அலுவலக வரவேற்பாளரிடம் என்னுடைய வேலை அனுமதி கடிதத்தை கொடுத்தேன்.அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு,உங்கள் பிராஜக்ட் மேனேஜர் இன்று MC (அப்படி என்றால் என்னவென்று கேட்கவில்லை) அதனால் இன்று சேர்ந்துவிடுங்கள்,நாளை வேலை இடத்துக்கு அழைத்து போவார்கள் என்றார்.

இந்த இடத்தில் சிங்கப்பூரில் வித்தியாசமான பேச்சு வழக்கை பார்ப்போம்.பல சமயங்களில் சுருக்கமாக பேச வேண்டும் என்ற நினைப்பில் மேலே சொன்ன மாதிரி Mediacal Cerificate என்பதை MC என்று சொல்வார்கள். தட்டச்சு செய்யும் தாளில் பிழை இருந்தால் Corrector என்று சொல்லப்படும் வெள்ளை இங்கை "Blanco" என்று கம்பெனி பேர் சொல்லி அடையாளப்படுத்துவார்கள்.கட்டுமான பொருட்களையும் இப்படித்தான்,உதாரணத்துக்கு சில

மண்வாரி இயந்திரத்துக்கு- அந்தந்த கம்பெனி பேர்
சின்ன கம்பி வெட்டும் இயந்திரம்- Markita என்பார்கள்.
பாரம் தூக்கி- கிரேன் என்று சொல்லாமல் அந்த கிரேன் தயாரித்த கம்பெனி பேர் தான்.

முதல் நாள் அலுவலகத்தில் அவ்வளவு வேலை இல்லை என்றாலும் மதிய சாப்பாட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்த போது அங்கிருந்தவர்களிடம் இங்கு சைவம் கிடைக்குமா? என்றேன்.

பக்கத்தில் தான் தேக்கா(சிரங்கூன் சாலை) உள்ளது அங்கு கிடைக்கும் என்றார்கள்.

எங்கள் அலுவலகம் இருந்த இடத்தில் இருந்து சிரங்கூன் சாலை எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை,சிலரிடம் கேட்டு அப்படியே துழாவிக்கொண்டு வந்த போது Bras Brash சாலைக்கு அருகில் வந்த போது ஒரு தமிழர் கடை தென்பட்டது.முகப்பு கண்ணாடி பெட்டிக்குள்ளேயே வகை வகையாக அசைவ உணவுகள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது.சுற்று வட்டாரத்தில் கடை எதுவும் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை,என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் உள்ளே சென்று எனக்கு சாதமும் தயிர் மாத்திரம் கொடுங்கள் போதும் என்று சொல்லி ஊறுகாயுடன் அன்று மதிய சாப்பாடு முடிந்தது.சுங்கை ரோடுக்கு அருகில் இன்றும் உள்ளது அந்த சாப்பாட்டுக்கடை.அவ்வப்போது அந்த பக்கம் போகும் போது நினைப்பு வரும்.

முதல் நாள் வேலை முடிந்து மறுநாள் வேலைக்கு சென்ற போது நான் செல்லவேண்டிய பிராஜக்டின் மேனேஜர் வந்திருந்தார்.அவருடன் கிளம்பி வேலை இடத்துக்கு போனேன்.இந்த இடம் பாசிர் பஞ்சாங் என்ற இடத்தில் இருந்தது.இது ஒரு காலத்தில் டைகர் பீர் தொழிற்சாலை இருந்த இடம்.இங்கு நம் சக வலைப்பதிவர் “கால்கரி சிவா” வேலை பார்த்திருக்கார்.

அந்த தொழிற்சாலையை இடித்துவிட்டு அந்த இடத்தில் 8 மாடி தொழிற்சாலை/அலுவலகமாக மாற்ற இருந்தார்கள்.

நான் போன போது அதன் கீழ் தள வேலைகள் நடந்துகொண்டிருந்தன.சில வரை படங்களை கொடுத்து பிராஜக்டை பற்றி தெரிந்துகொள்ளச் சொன்னார்கள்.

முதல் நாளே ஒரு வித்தியாசமான அனுபவம்.

அலுவலகம் அதற்கு பக்கத்திலேயே ஒரு சின்ன கேண்டின் என்று இருந்தது.காலை உணவு மற்றும் மதிய சாப்பாடு பலருக்கும் இங்கு தான். வெகு சிலரே வெளியில் போய் சாப்பிட்டார்கள்.இங்கு கொடுக்கப்படும் மதிய சாப்பாடுகள் அனைத்தும் அசைவ உணவோடு சேர்த்தே வழங்கப்பட்டு வந்தது.

முதல் பிரச்சனை சாப்பாட்டில் அல்ல... தேனீரில்.இங்கு தேனீர் இரண்டு விதமாக வழங்கப்படும்.

ஒன்று பால் கலந்து மற்றொன்று பால் கலக்காமல்.

ஏற்கனவே தயாராக இருக்கும் டீ டிகாஷனில் Codensed Milk ஐ இரண்டு ஸ்பூன் போட்டு,சீனி போட்டு ”டக டக” என்று கடைந்து கொடுப்பார்கள்.அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டால் கிளாசில் கொடுப்பார்கள்.பார்ச்சல் என்றால் நெகிழி பையில் போட்டு கொடுப்பார்கள்.செம சூடாக இருந்தாலும் பை ஒன்றும் ஆகாது.காபி பால் இல்லாமல் குடிக்கும் சிலர் அந்த பையில் சில ஐஸ் கியூபுகளை போட்டு குடிப்பார்கள்.அந்த பையில் ஒரு உரிப்பான் ஒன்றும் இருக்கும்.





முதல் நாள் மதியம் டீ குடிக்கும் வேளை வந்ததும் அங்கிருந்த ஒருவர் என்னிடமும் இந்த பையை கொடுத்தார்.உரிப்பான் மூலம் உரிஞ்ச..ஆ ஆ ஆ

செம சூடு,அப்படியே வைத்துக்கொண்டு சூடு குறையும் வரை அலைந்துகொண்டிருந்தேன்.டபரா டம்ளர் இருந்தாலாவது ஆற்றிவிட்டு சாப்பிடலாம்,கப் ஆக இருந்தாலாவது ஊதி ஊதி குடிக்கலாம்,இது ரெண்டுங்கட்டானாக இருந்தது.

அப்ப நான் பார்த்த ஒரு காட்சி இன்னும் என்னுடைய மண்டை சரியாக வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

ஒரு தாய்லாந்து வேலை ஆள்,தன்னுடைய காபியை அந்த உரிஞ்சான் மூலம் காற்றை ஊதி அதை குளிர்வித்துக்கொண்டு இருந்தார்.அப்போது தான் உறைத்தது இப்படி பாக்கெட்டில் உள்ளதை ஊதி குளிர்விக்கலாம் என்று.

இப்படியாக சிங்கப்பூர் வாழ்கை தொடங்கியது.மீதி அடுத்த பதிவில்.

Sunday, February 3, 2008

9 ஆண்டுகளில் 500 சிறுநீரகம்

தேசத்தின் தலைக்குனிவு அதுவும் நாட்டின் தலைநகரத்திலேயே.

கடந்த 9 ஆண்டுகளில் 500 சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளனவாம்,அதை இங்கு செய்தியில் சொன்ன போது கொஞ்சம் அதிர்ந்தே போனேன்.அதனால் என்னவோ செய்தி படிப்பவருக்கும் தடங்குகிறது போலும்!!

நீங்களும் பார்த்து அதிர...




நன்றி:வசந்தம் சென்ரல்.