Thursday, January 3, 2008

ராஜ்புரா - சென்னை

ராஜ்புரா வாசம் 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தது.இந்த வேலை ஏற்கனவே இருக்கும் சாலையை மேம்படுத்தி இரண்டு லேன் வழியாக மாற்ற வேண்டும்.நடுவே வரும் சிறிய வாய்காலுக்கு பாலம் கட்டவேண்டும்.இந்த வாய்காலில் மழை காலத்தில் கூட தண்ணீர் ஓடுமா என்று சந்தேகம் தான்.இந்த வேலை பார்க்க என்னுடைய முன்னைய அனுபவம் தேவை என்று இங்கு அனுப்பியிருந்தார்கள்.சரி பாலமாவது அகலமாக இருக்குமா என்று பார்த்தால்... நான் முயற்சித்தால் நீளம் தாண்டுதல் மூலமாகவே தாண்டிவிடலாம். 



இந்த வேலையிடத்தில் இருந்தவர்கள் எனக்கு பழக்கமில்ல்லாதவர்கள்.ஹிந்தி அவ்வளவாக தெரியாவிட்டாலும் அவர்கள் பேசுவது ஓரளவு புரிந்தது,பதில் சொல்வதில் தான் பிரச்சனை.சாப்பாடு், சப்பாத்தியும் பரோட்டாவும் தான்.எப்படியோ ஓட்டினேன்.


இப்படி ஒரு நாள் சாலை ஓரத்தில் சர்வே வேலையில் மூழ்கியிருந்த போது பொது ஜனம் ஒருவர் வந்தார்.சகஜமாக பேச ஆரம்பித்து அவரும் பக்கத்து ஊரில் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அந்த வாழ்கை பிடிக்காமல் இப்படி சுற்றிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.பலவற்றை 45 நிமிடங்களுக்கு பேசிவிட்டு போகும் போது “You are a Good Fellow “ என்று சான்றிதழ் கொடுத்துவிட்டு சென்றார்.முன் பின் தெரியாதவர் அதுவும் எனக்கு பாஷைதெரியாத ஊரில் என்னிடன் ஏன் பேச வேண்டும்? எனக்கு எதற்கு சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்று புரியாத புதிராக இருக்கிறது.அதன் பிறகு அவரை பார்க்கமுடியவில்லை.

இதற்கிடையில் வீட்டில் இருந்து டெலிகிராம் வந்தது.மலேசியாவில் இருந்து வரவேண்டிய பொருட்கள் வந்துவிட்டதாகவும் அதை வெளியில் எடுக்க நான் அங்கு போகவேண்டும் என்று.அன்றிரவு வீட்டுக்கு தொலைப்பேசிய போது சிங்கை கம்பெனிகாரர் சென்னை வருவதாகவும் நேர்காணலை அங்கே வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தாகவும் என் உறவினர் தகவல் கொடுத்தாக என் தந்தை சொன்னார்.

நேர்காணல் நாளை குறிப்பில் வைத்து இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.அதற்கு முன்பு டெல்லியில் உள்ள சித்தப்பா பையனுக்கு தொலைப்பேசி சென்னை செல்ல புகைவண்டியில் பயணச்சீட்டு கிடைக்குமா என்று முயற்சிக்கச்சொன்னேன்.

டெல்லி சென்று சேர்ந்தபிறகு தான் பயணச்சீட்டு கிடைக்காத விபரம் தெரிந்தது.பரவாயில்லை தனி ஆள் தானே எப்படியேனும் தொற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.

டெல்லியில் சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ”சிங்கையில்” ஒரு வாய்ப்பு வருகிறது என்ன செய்யலாம் என்று அவரின் யோஜனை கேட்டேன்.அவரோ உன் தந்தைக்கு 60 வயதை நெருங்குகிறது,இந்த வயதில் மனது ஒரு நிலையில் இருக்காது அதனால் நீ போவது அவ்வளவு நல்லதாக படவில்லை என்று சொல்லிவிட்டு, “நீ என்ன முடிவு செய்திருக்காய்?” என்றார்.

நான் போவதாக முடிவெடுத்துள்ளேன் என்றேன்.

யோசித்து முடிவெடு என்று சொல்லி விட்டு விட்டார். என்னை கட்டாயப்படுத்தவில்லை.யாரிடமும் அவ்வளவாக பேசாதவர் என்னிடம் மட்டும் சில வார்த்தைகள் பேசுவார்.முதன் முதலில் டெல்லி போன போது “என்னடா மீசை எல்லாம் வைத்துக்கொண்டு?” நன்றாக இல்லையே என்று சொல்லிவிட்டு எனக்காக ஒரு தடவை இங்கு இருக்கும் போது மீசையை எடுத்துவிடு என்றார்.

என்ன சித்தப்பா? இது ஒரு வேலையா? என்று மறுநாளே எடுத்துவிட்டேன்.ஒரு வேளை, நம் சொல்லை மதிக்கிறானே என்று என்மேல் ஒரு Soft Corner வோ என்னவோ தெரியாது.

எதிர்பார்த்தது போல் டிரைனில் இடம் கிடைக்கவில்லை.இருப்பது ஒரே சூட்கேஸ்.ஒரு பெட்டியில் கீழே வைத்து பூட்டி விட்டு விஜயவாடா வரை கழிப்பறை அல்லது வாசல் பக்கம் என்று மாறி மாறி உட்கார்ந்து பொழுது போக்கினேன்.விஜயவாடா வந்தது சில படுக்கைகள் காலியாக இருந்தது,அதில் கொஞ்சம் களைப்பாறிவிட்டு சென்னை வந்தேன்.


மீதி அடுத்த பதிவில்.

Tuesday, January 1, 2008

Botanic Garden

விடுமுறை என்று அதுவும் இரண்டு நாட்கள் சேர்ந்தால் போல் வந்தால் மிகவும் திணற வேண்டிவரும் இங்கே,அதுவும் எனக்கு.வெளியில் சுற்றுவதில் அவ்வளவு நாட்டம் இல்லை ஏனென்றால் தேவையில்லாமல் செலவு செய்யவேண்டும் என்பது முதல் காரணம் அடுத்ததாக தேவையில்லாமல் நம்மை அதில் ஈடுபடுத்திக்கொள்வது.

எது எப்படியோ, போன பதிவில் சிங்கையை சுற்றியதைப்பற்றி எழுதிய போது நமது பதிவர் துளசி பொட்டானிகல் கார்டன் போகவில்லையா? என்று கேட்டிருந்தார்.வந்த 13 வருடங்களில் அந்த பக்கம் போய் பார்க்கவில்லை.

சரி இப்போது இவ்வளவு நாள் விடுமுறை கிடைத்திருக்கும் நேரத்தில் அங்கு போய்வரலாம் என்று இன்று மதியம் 2.30 மணிக்கு கிளம்பி ஆர்சட் MRT எனும் ரயில் சேவை நிலையத்துக்கு போய் சேர்ந்தேன்.அங்கிருக்கும் வழிகாட்டியில் எந்த இடத்துக்கு எப்படி போக வேண்டும் என்று விரிவாக இருந்ததால் அவர்கள் சொல்லியபடி "B" வெளியேறும் வழியாக வந்தேன்.பேருந்து நிலைய எண் 3 சாலையின் மறுபக்கம் இருந்ததால் சாலை விளக்கு சிகப்புக்கு மாறும் வரை காத்திருந்தேன்.அப்போது தான் பார்த்தேன் அந்த ரயில் சேவை நிலையத்துக்கு மேல் பெரிய ஸ்டீல் தூண்கள் நிறுத்தப்பட்டு கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்தது.இது Top Down முறையில் நடைபெறுவதாக தோனுகிறது.படம் கீழே.



தடம் எண் 123 யில் ஏறி 6 வது நிறுத்ததில் இறங்கினால் எதிர்புறம் தான் இந்த தோட்டம் இருக்கிறது.அதிக வெயில் இல்லாமல் கொஞ்சம் மேக மூட்டம் மற்றும் சுகமான காற்றும் இருந்ததால் அவ்வளவு களைப்பு ஏற்படவில்லை.



பலவிதமான செடிகள்/பூக்கள்/மரங்கள் இருந்ததன.ஒவ்வொன்றுக்கும் அதன் உண்மை பெயரும் வழக்கு பெயரும் கொடுத்திருந்தார்கள்.இது பாம் மரமாம்.மலேசியாவில் இது அதிகம்.



முழுவதும் நடந்தே காணவேண்டியிருப்பதால் அங்கங்கு நிறைய வழிகாட்டி படங்கள் மற்றும் கழிப்பறைகளும் உள்ளன.

கீழே உள்ள இடத்துக்கு மேல் ஏறி வரும் போது இந்த வியூவில் அழகாக இருந்தது.CVR பார்த்தால் இன்னும் மெருகேற்றி கொடுப்பார்.அதற்கு இப்போது நேரம் இல்லாததால் அப்படியே பாருங்கள்.



இன்னும் சில படங்கள் இருப்பதால் அதை அடுத்த பதிவில் போடுகிறேன்.

Friday, December 21, 2007

ராஜ்புரா

போன பதிவில் என் பாஸ் சொன்னதை கேட்டு கோபம் வந்ததை சொன்னேன்.அதற்கு காரணம் அவர் போகச்சொன்ன இடம் பஞ்சாப்பில் உள்ள ராஜ்புரா என்ற இடம்.

கடந்த 2.5 வருடங்கள் குடும்பத்தை பிரிந்து மலேசியாவில் இருந்தேன் மறுபடியும் குடும்பம் இல்லாமல் அங்கு போவதை கேள்விப்பட்டவுடன் கோபம் வந்தது.நானும் வேறு எங்காவது கொடுங்களேன் என்றதற்கு உன் மலேசியா அனுபவம் ராஜ்பூராவில் தேவைப்படும் என்றார்.அது எவ்வளவு பொய் என்பது பிற்பாடுதான் தெரிந்தது.இந்த கம்பெனியில் இப்படித்தான் பொய் சொல்லி பல சமயங்களில் ஏதோ ஒரு ஆளை அனுப்பிவைத்துவிடுவார்கள்.சரி இன்னும் எவ்வளவு நாள் ஒப்பேத்தாலாம் என்று நினைத்து அவரிடம் என்னுடைய மலேசியாவில் இருந்து வரவேண்டிய ஷிப்மெண்ட் இன்னும் வரவில்லை அது வந்தவுடன் போகிறேன் என்றேன்.சரி என்று ஒரு வாரம் கால தாமதம் ஆனது.அப்படியும் ஷிப்மெண்ட் வரவில்லை.அதற்குள் பாஸ் நீ முதலில் ராஜ்பூரா போய்விடு ஷிப்மெண்ட் வந்தவுடன் நீ திரும்பி வந்து எடுத்துக்கொள் என்றார்.

இதற்கிடையில் ஒரு விஷயம் சொல்லவிட்டுப்போய்விட்டது. சிங்கப்பூரில் இருந்து கிளம்பும் போது என்னுடைய உறவினர் அந்த நேர்காணல் கம்பெனி முதலாளியை கூப்பிட்டு நீ வந்து போன விபரம் சொல்கிறேன்,அதற்குப் பிறகு பார்ப்போம் என்றார்.அதுவும் சரி என்று தோனியது அதற்குப் பிறகு அதை மறந்துபோய்விட்டேன்.

இந்த விஷயம் வேறு ஞாபகம் வந்ததால்,சரி ஷிப்மெண்ட் தேதியும் சிங்கப்பூர் விபரமும் தெரியவந்தால் அப்படியே இங்கிருந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன்.

டெல்லி வந்து சித்தப்பா பையனிடம் விபரம் கேட்டு ராஜ்பூரா பஸ்ஸில் ஏறினேன்.சுமார் 3.5 மணி நேரப்பயணம் என்று நினைக்கிறேன்.தலைப்பாகை கட்டியவர்களுடன் சுமார் 4 மணி நேர பயணத்தில் ராஜ்பூரா வந்து இறங்கினேன்.ஒரு ரிக் ஷா வைத்துக்கொண்டு விஜாரித்து அவர்கள் கெஸ்ட் ஹவுஸ் சென்றேன்.

மறு நாள் காலை மெஸ்ஸில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு சைட்க்கு போனால் இப்போது தான் வேலை ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது.தற்காலிக கட்டங்கள் கட்டும் வேலை மட்டும் நடந்துகொண்டிருந்தது.



இப்படியே ஒரு வாரம் போனது.வேலை இடத்தில் பகல் நேரத்திலேயே கொசு ஆளை தூக்கிப்போய்விடும் நிலையில் இருந்தது.வேலை இடத்துக்கு பக்கத்தில் ஒரு தாபா,டீ/பஜ்ஜி சாப்பிட மற்றபடி சாலையில் இரு பக்கங்களிலும் யூகலிப்டஸ் மரங்கள்.

மேலும் தொடரும்.

Tuesday, December 18, 2007

மீண்டும் இந்தியாவுக்கு

ஒரு வார கால அவகாசத்தில் சிங்கை வந்திருந்தால் வந்த உடனே குளித்து அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு அந்த பெரியவரிடம் தேவையா விபரங்கள் வாங்கிக்கொண்டு வெளியில் கிளம்பினோம்.

சோற்றால் அடித்த ஆட்கள் நாம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக என் பையன் வீட்டு சாப்பாடு சாப்பிட்ட பிறகு தான் அவன் முகத்தில் தெளிவு வந்தது.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம் என்று சுழன்று பார்த்துக்கொண்டு இருந்தோம் அதோடில்லாமல் இனிமேல் இங்கு எங்கு வரப்போகிறோம் என்ற நினைப்புடன் சாமான்களும் வாங்கிக் குமித்தோம்.

இதற்கிடையில் கோலாலம்பூரில் விட்டுப்போன நேர்காணல் நிறுவனத்துக்கு போய் நான் நேர்காணலை தவற விட்ட சேதியை சொல்லி இங்கு செய்ய முடியுமா? என்றேன்.வாசலில் உட்கார்ந்திருந்த பெண் "நாங்கள் வெளியூர்காரர்களை" வேலைக்கு எடுப்பதில்லை என்று சொன்னார்.ஒன்றும் கெட்டுவிடவில்லை எப்படியும் வேலை இருக்கிறது என்ற நினைப்புடன் நன்றி சொல்லி வெளியில் வந்தேன்.

அப்போது நாங்கள் பார்த்த இடங்கள்.
பறவை பூங்கா (கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்)- ஒரு பெரிய வலைக்கூண்டுக்குள் பல பறவைகளை சுதந்திரமாக பறக்கவிட்டபடியால் நமக்கு அருகே பல பறவைகள் பறப்பது ஏதோ காட்டின் உள்ளே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.பறவைகளை வைத்து பல நிகழ்ச்சிகளும் இருக்கும்.ஒரு நாள் நிம்மதியாக செலவு செய்யலாம்.

செந்தோஷா- இது ஒரு குட்டித்தீவு.நான் போன போது பலவகை மீன்களை பெரிய கண்ணாடி தொட்டியில் விட்டு குகை மாதிரி வழியில் நகரும் மேடையை அமைத்து தண்ணீரில் நனையாமல் எல்லா மீன்களையும் பார்க்கலாம்.இது எனக்கு மிகவும் பிடித்த இடம்.ஆனால் என்ன நுழைவுக்கட்டணம் தான் கொஞ்சம் பயமுடுத்தும்.புதிதாக வருபவர்களுக்கு அவ்வளவாக தெரியாது இங்குள்ளவர்களுக்கு "இவ்வளவா?" என்று அயர்சியாக இருக்கும்.இங்கும் முழு நாளை செலவு செய்ய பல நிகழ்ச்சிகள்/பல இடங்கள் உள்ளது. இப்போது இன்னும் ஏதேதோ வந்துவிட்டது.தினம் மேம்பாட்டு பணிகள் நடந்துவருகிறது.

உயிரியல் பூங்கா: எல்லா ஊர்களில் உள்ள மாதிரி பல விதமான மிருகங்களை பார்க்கலாம்.கொஞ்சம் சுதந்திரமாக விட்டுவைத்திருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் இது.
ஒரு வேளை "நாகை சிவாக்கு" உதவும்.மலைப்பாம்பை கையில் வைத்துக்கொள்ளலாம்,ஊரங் குட்டனுடன் சாப்பிடலாம் என்று பல நிகழ்ச்சிகள் உள்ளன.இங்கும் ஒரு நாள் செலவழிக்க முடியும்.



சயின்ஸ் சென்டர்:(அறிவியல் பூங்கா): குழந்தைகள் அறிவை வளர்க்கும் பல புதுமையான வழிகளில் அறிவியல் விளக்கும் இடம்.

ஐஸ் சிட்டி: சுமார் 2~5 சென்னிகிரேட் வெப்பம் உள்ள ஒரு அறையில் பனியை வைத்து சறுக்கி விளையாடலாம்.

சிரங்கூன் சாலை: பல சாமான்கள் வாங்க/கோவிலுக்கு போக என்று ஒரு நாள் ஒதுக்கினாலும் போதாது.பிரபல முஸ்தாபா கடைத்தொகுதி இங்கு தான் இருக்கு.1995 யில் பார்த்ததற்கும் இப்போதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் தெரிகிறது.




பல இடங்கள் இருந்தாலும் செலவழிக்கும் திறனை வைத்து தேவையான நாட்கள் இருக்கலாம்.

ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து ஊர் திரும்பினோம்.விடுமுறை இன்னும் 1 வாரம் இருந்ததால் சில விருந்தினர் வீட்டுக்கு போய் அவர்களை பார்த்துவிட்டு வந்தோம்.

கம்பெனியில் திரும்ப சேரும் நாளும் வந்தது. போனேன்.. முகமன் முடிந்து வேலை பற்றிய விஜாரிப்புகள் தொடங்கின.தற்போது சென்னையில் வேலை எதுவும் இல்லை அதனால் நீ அங்கு போ என்றார்.

செம கோபம். மீதி அடுத்த பதிவில்.

Saturday, December 8, 2007

தீபாவளி விழா

சிங்கையில் தீபாவளி முடிந்த பிறகும் அதை ஒவ்வொரு தொகுதியிலும் விதம் விதமாக கொண்டாடுவார்கள்.சில இடங்களில் இந்தியாவில் இருந்து சில கலைஞர்களை கொண்டு வந்து நிகழ்ச்சி படைப்பார்கள்.

அப்படி நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பை கீழே காணலாம்.





ஒரு மலாய்காரர் எப்படி விசில் அடிப்பது என்று சொல்லித்தருகிறார் பாருங்கள்.வவ்வாலுக்கு உதவும். :-)

நன்றி; வசந்தம் சென்ரல்

Friday, December 7, 2007

இளமையில் திருமணம்

சில நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் இந்த ரிப்போர்ட் இடம் பெற்றது.
பார்க்க முடியாதவர்கள்/தவறவிட்டவர்களுக்காக...

இப்படி நடப்பது நமது "தமிழகத்தில்".

இப்படி நடைபெற என்ன காரணம் என்று தெரியுமா? அவர்களே சொல்கிறார்கள்.ஆம்பளைங்க சரியான வேலைக்கு போய் பணம் கொண்டுவருவதில்லை.பஞ்சம்/வறுமை/கல்வியின்மை இப்படி பல இல்லாமை.

அவர்கள் சொல்வதை இங்கு எழுதுவதைக்காட்டிலும் நீங்களே படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

படிக்கனும் என்று ஆசைப்படும் குழந்தைகளுக்கு திருமணமாம்!!!



நன்றி: சன் தொலைக்காட்சி.

Thursday, December 6, 2007

பொட்டி தூக்க வேண்டாம்.

ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டுக்கு பயணப்படும் போது இந்த மூட்டை முடிச்சு நம்மளை ஒரு வழி பண்ணிவிடும்.அதை ஏற்றி,இறக்கி அவர்கள் டேக் போடும் வரை பிரச்சனை தான்.

இங்கு சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் அவர்கள் தங்கள் மூட்டையை முதலிலெயே இணையம் மூலம் புக் செய்துவிடலாம்.இதனால் விமான நிலையம் போனவுடன் குடியேற்ற வேலை மட்டுமே பாக்கி இருக்கும்.இப்போது அதை இன்னும் மேம் படுத்த எண்ணி நம் முடிச்சுகளை விடுதியிலேயே வாங்கிக்கொண்டு உங்களுக்கு விமானம் ஏறும் வேலை மாத்திரம் பாக்கி வைக்கப்போகிறார்களாம்.

கீழே உள்ள சலனப்படம் பாருங்க.




நன்றி: வசந்தம் சென்ரல்.